1967 மே மாதம் மேற்கு வங்காளத்தின் நக்சல்பரி கிராமத்தில் உருவான புரட்சியின் இடிமுழக்கம் இந்தியா முழுக்க எதிரொலித்தது. ஜனநாயகத்தின் பெயராலும் புரட்சியின் பெயராலும் ஆட்சிக்குவந்த எல்லாக் கட்சிகளுமே உண்மையான புரட்சியாளர்களை அடக்கின, ஒடுக்கின, சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்தன. சித்தாந்தப் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத ஆட்சியாளர்கள், கட்சி வேறுபாடின்றி, ‘மார்க்சிய, லென்னிய, மாவோ சே துங்’ தத்துவத்தால் அறிவொளி பெற்று ஆயுதமேந்திப் புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்களை, முதியோரை, தொழிலாளிகளை, விவசாயிகளை, ஆதிவாசிகளை அழித்தொழிப்பதன் மூலம், ‘ஜனநாயகத்தைக் காப்பது’ என்ற பெயரால் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். கேரள வயநாட்டின் மலைக்காடுகள் முதல் இமயத்தின் அடிவாரங்கள் வரை கேட்ட ‘வசந்தத்தின் இடி முழக்கத்தால்’ வீறு கொண்டெழுந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் ஒருத்திதான் அஜிதா.
“மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டதும் அந்த இளைஞர்கள் புரட்சிக்குள் நேரடியாக இறங்கினார்கள். புரட்சியின் ஆச்சாரியார்கள் ஆயுத பலத்தால் அவர்களை ஒடுக்க முன்வந்தார்கள். இந்தியப் புரட்சி இங்கேயும் தடுமாறி நின்றது. அப்போது, அனைத்தையும் துறந்து களத்தில் இறங்கியவர்தான் தோழர் அஜிதா” என அஜிதாவை அறிமுகப்படுத்துகிறார் மொழிபெயர்ப்பு ஆசிரியர்.
1967 ஜூன் மாதத்தில் கேரளாவின் ப்ரீடிகிரி (Pre-degree) இரண்டாம் ஆண்டிலிருந்த அஜிதா, தான் படித்த கல்லூரியில் நிகழ்ந்த அவலங்களை எதிர்க்கவோ மாற்றவோ இயலாத நிலையில் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் தீவிரமாக அரசியலுக்குள் நுழைகிறார். அன்றுமுதல் ஏறக்குறைய பத்தாண்டுகள் அவருடைய வாழ்க்கை, பொதுவாழ்க்கையாகப் போராட்ட வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. மார்க்சியச் சித்தாந்த நூல்களைப் படிப்பது, படிப்பிப்பது, தோழர்களோடு விவாதிப்பது, மார்க்சிய நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது, அதற்கான வெளியீட்டு நிறுவனத்தை உருவாக்குவது, புத்தகக் கடை வைப்பது, புத்தகம், சிறுபிரசுரம், துண்டறிக்கை முதலியவற்றை விநியோகிப்பது என அவருடைய இளம்பருவ அரசியல் வாழ்க்கை தொடங்கியது.
அஜிதா’வின் கூற்றுப்படி அவருக்கு எல்லா இளம்பெண்களுக்குமிருந்த ஆபரணங்கள், பட்டுச்சேலைகள், அலங்காரங்கள் மீதான விருப்பங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் மாவோவின் கட்டுரைகள், தொடர்ந்த மார்க்சியப் படிப்பு, கண்முன் நடைபெறும் அரசியல் அவலங்கள் அவரை வெறும் சித்தாந்தவாதியாக மட்டும் மாற்றாமல், செயல்படும் புரட்சிக்காரியாக மாற்றின.
அஜிதா’வின் இந்த நினைவுக்குறிப்புகள் 1967 முதல் 1977 வரையிலான பொதுவான நக்சல்பரி வழியிலான ஆயுதப் போராட்டங்களையும் குறிப்பாகக் கேரளாவின் ‘தலசேரி – புல்பள்ளி’யில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களையும் பற்றிய விரிவான, விமர்சனத்துக்கு உட்படுத்திய வரலாற்று ஆவணமாகும்.
அஜிதா’வின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத போராளிகளில் முதலிடம் பெறுபவர் அவருடைய பெற்றோர்களே ஆவர். தந்தை குன்னிக்கல் நாராயணனும், தாய் மந்தாகினியும் அஜிதாவுக்கு அறிவொளியும், துணிவும், செயல்படும் திறனும், கொடுமைகளைத் தாங்கும் மனவலிமையையும் ஊட்டிய, அவரை நெறிப்படுத்திய புரட்சியாளர்கள் ஆவர். “1967 ஜனவரியில் அப்பா கைது செய்யப்பட்ட சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு திருப்பமாக அமைந்தது. நான் படிப்படியாக அரசியலுக்குள் நகர்ந்தேன். இது அம்மாவுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்தது. சமூகத்தின் இந்த முடைநாற்றம் வீசும் சூழலிலிருந்து நான் மெல்ல விடுபடுகிறேன் என்பது அம்மாவுக்குப் புரிந்தது” என்கிறார் அஜிதா. ‘அப்பா கைதாகிறார்; மகள் அரசியலுக்குள் நுழைகிறார்; அம்மா மகிழ்கிறார்’ – இழப்புகளும் கொடுமைகளும் மட்டுமே எஞ்சுவன என நன்கு அறிந்திருந்தாலும், சக மனிதனிடமிருந்த நேசம், உழைப்பாளருடன் இருந்த தோழமை, ஒடுக்கப்பட்ட எல்லா மக்களின் விடுதலைக்குமான போராட்ட உணர்வு முதலியவற்றால் இறுகப் பிணைக்கப்பட்ட குடும்பமாக இருந்ததால் இது சாத்தியமாயிற்று. தமிழிலக்கிய வரலாற்றில் புறநானூற்று வீரத்தாயைப் படித்த வாசகர்கள் இங்கு ஒரு வீரக் குடும்பத்தையே காண்கிறார்கள்.
நக்சல்பரி வழிப் போராட்டத்தின் அனைத்திந்திய முக்கிய எதிரொலி இடங்களாகக் கல்கத்தா, பட்னா, போஜ்பூர், ஸ்ரீகாகுளம், தர்மபுரி முதலியன அமைந்தன; இந்த வரலாற்றில் கேரளாவில் முத்திரை பதித்த இடங்களாக அமைந்தவை தலச்சேரி, புல்பள்ளி ஆகியனவாகும். இவை இரண்டு இடங்களாகப் பிரிக்கப்பெறாமல் தலச்சேரி – புல்பள்ளி ஆயுதப் போராட்டம் என ஒன்றாகவே வரலாற்றில் பேசப்படுகிறது.
புரட்சிகரப் பிரசுரங்களாலும், பிரச்சாரங்களாலும், குழுக்கூட்டங்களாலும் கேரளா முழுக்க ஒரு புரட்சிப் போக்குத் தலைதூக்கியது. இந்நிலையில் புரட்சிப் படிப்பினைகளும் உள்ளார்ந்த வாழ்க்கை வேதனைகளும் நிர்ப்பந்திக்க, தலச்சேரியைச் சார்ந்த கூலி விவசாயிகள், ‘உங்கள் எழுத்து வீரங்களை எங்கள் பகுதிக்கு வந்து நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள்’ எனக் கடிதம் அனுப்புகின்றனர். கேரளப் புரட்சியாளர் இணைப்புக்குழு, தலச்சேரியிலும், வயநாட்டுப் புல்பள்ளியிலும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது என முடிவு செய்தது. தலச்சேரி காவல் நிலையத்தைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்துகொண்டு ஓர் அணியினர் வயநாட்டுக் காடுகளுக்குள் புகுந்து திருநெல்லியைச் சென்று சேரவேண்டும்; இன்னொரு அணியினர் இதற்கு முன்பாகவே வயநாட்டுக் காட்டுப் பிரதேசத்திற்குச் சென்று தயாராக இருப்பது; தலச்சேரி காவல் நிலைய முகாமைத் தாக்கி அழிப்பது, ஆயுதங்களைப் பறிப்பது, பின்பு இக்குழுவும் திருநெல்லிக்குச் சென்று புல்பள்ளிப் புரட்சியாளர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் புல்பள்ளிப் புரட்சிக் குழுவில் ஓர் உறுப்பினராக அஜிதாவும் செல்கிறார். வயநாட்டு மலைகளும் காடுகளும் புரட்சியாளர்களின் கால்களுக்கும் மனத்திண்மைக்கும் சவாலாக அமைகின்றன. ஒரு பெண் என்பதால் எந்தச் சலுகையும் பெறாமல் ஒரு போராளியாக நடக்கிறார் அஜிதா. கானக வழிக் கொடுமை, பசிக் கொடுமை, எதிர்பார்த்தது போலத் தலச்சேரிப் புரட்சியைப் பற்றி எந்தச் செய்தியும் வராததால் ஏற்பட்ட தவிப்பு ஆகியனவற்றைத் தாங்கிக் கொண்டு தோழர்கள் முன்னேறுகின்றனர். ஆதிவாசிகள் இவர்கள்பால் காட்டிய அன்பும், வழிகாட்டும் திறமும், அவ்வப்போது மாவோ’வின் சிந்தனைகளைக் கூட்டாகப் படிப்பதால் பெறும் மன உரமும் சேர்ந்து இவர்களைப் புல்பள்ளிக்கு அருகே கொண்டு வந்து சேர்க்கிறது. தலச்சேரி காவல் நிலையத் தாக்குதல் செய்தி வானொலி மூலம் வந்து சேர்கிறது.
திட்டமிட்டபடி புல்பள்ளி காவல் முகாம், தகவல் தொடர்புக் கருவிகள், காவலர்கள் தாக்கப்படுகின்றனர்; அழிக்கப்படுகின்றனர். புரட்சிக்குழு அப்பகுதியைச் சேர்ந்த ஜமீன்களின் வீடுகளைத் தாக்குகிறது. பணம், தானியங்கள், பத்திரங்கள் பறிமுதலாகின்றன. பத்திரங்கள் எரிக்கப்படுகின்றன. தானியங்கள் மக்களுக்குப் பிரித்தளிக்கப்படுகின்றன. வெற்றியுடன் திரும்பும் புல்பள்ளிக் குழு திருநெல்லியை அடைந்ததும் தலச்சேரியில் இருந்து ஒருவர் கூட வந்துசேராததைக் கண்டு வியக்கிறது. காவல் நிலையம் தாக்கப்பட்டாலும் தலச்சேரிப் புரட்சி தோல்வி அடைந்திருக்கிறது. புல்பள்ளிக் குழுவும் தனிப்பட்ட அச்சம், தத்துவத்தில் உறுதியின்மை – இப்படிப் பல காரணங்களால் சிதறுகிறது. ஏதோவொரு கட்டத்தில் அனைவரும் கைதாகிறார்கள்.
வழக்கு, சிறை, சிறைக்கொடுமைகள், சிறை அனுபவங்கள், உள்துரோகம், தலைமையின் அலட்சியம், சித்தாந்த முரண்கள், போராட்டங்கள், தண்டனை, நெருக்கடிக்காலக் கொடுமை, சிறைப்பட்ட தோழர் சிலரின் துரோகம், ஆளும் சி.பி.ஐ(எம்) கட்சியின் ஒடுக்குமுறை, சி.பி.ஐ.யின் அனுதாபப் பேச்சுகள், இறுதியில் விடுதலை என அஜிதாவின் நினைவுக் குறிப்புகள் கனல்கின்றன.
இந்த நூலின் சிறப்புகள் அல்லது அவசியம் என்னவென்றால், இது ஒரு பத்தாண்டுக்காலப் புரட்சி நடவடிக்கைகளின் ஆவணம். இதில் கூறப்பட்டுள்ள எந்தவொரு நிகழ்ச்சியிலும் அஜிதா ஏதோவொரு நிலையில் பங்கெடுத்துள்ளார். ஆனால், அவர் இதைத் ‘தன் நினைவுக் குறிப்புகள்’ என்று கூறியிருந்தாலும் எந்தவொரு இடத்திலும் தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொள்ளாத பெருந்தன்மை. இது ஓர் உண்மையான புரட்சியாளனுக்குள்ள, தன்னகங்காரமற்ற தனிக் குணம். அது மட்டுமல்ல, அஜிதாவின் இந்த நூல் முற்றிலும் புறவயத்தன்மை வாய்ந்த ஒரு வரலாற்று நூல். அவருடைய அப்பா, அம்மா, அவரைப் பெரிதும் பாதித்த டி.வி.அப்பு, கிஸான் தொம்மன், தோழர் வர்கீஸ் என யாரைப் பற்றி எழுதினாலும் புரட்சி என்ற ஒரு சக்கரத்தின் தவிர்க்கமுடியாத ஓர் ஆரம் என்ற நிலையில் எழுதியிருக்கிறாரே தவிர, குறைத்தோ மிகுத்தோ எழுதவில்லை. ஒரு தையல் தொழிலாளியான அப்பு 1935 – 39 காலகட்டங்களில் கோழிக்கோட்டில் கட்சியை வளர்த்தவர்; தலச்சேரி போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர். 1971இல் சிறையில் இருந்து வெளிவந்ததும் இரத்த அழுத்த நோயால் இறந்து போனார் .
“புரட்சியைக் குறித்துப் பேசுவதும் வாய்மூடாமல் வசனமழை பொழிவதும் மேடைகள் தோறும் சொற்பெருக்காற்றுவதும் சுலபமான வேலைகள்தான். ஆனால் இரத்தத்தையும், நீரையும், கொழுப்பையும், தசையையும் கொடையாகத் தந்து அந்த இலட்சியத்தைப் போற்றுவது; அதற்காகச் சுய வாழ்க்கையை அர்ப்பணம் செய்வதெல்லாம் துயரம் மிகுந்த தியாகம் என்பதைச் சில நாட்களில் கிடைத்த எங்களது அனுபவம், குறிப்பாகக் கிஸான் தொம்மனின் ஆத்மார்ப்பணம் எங்களுக்குக் கற்றுத் தந்தது” என்கிறார் அஜிதா.
இந்த நூல் புரட்சி நிகழ்ச்சிகளை மட்டும் பேசவில்லை; மூலத் தத்துவ ஆசிரியர்களையும் விமர்சிக்கிறது. சிறைக் கொடுமைகள் என்றால் வெறும் அஜிதா மட்டும் அங்கில்லை; எல்லாப் பெண்களின் ஒன்றுதிரண்ட மன ஓலமே கேட்கிறது. உட்கட்சித் துரோகங்களைப் பற்றிக் கடுமையாக விமர்சிக்கிறது. புரட்சி பேசிய இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, ஏ.கே.கோபாலன், அச்சுதமேனன் ஆகிய அனைவரையும் சந்திக்கு இழுத்திருக்கிறது. ஆனால் பக்குவப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் சார்பிலா விமர்சனங்களாக அமைந்துள்ளனவே தவிர, தனிமனிதக் காழ்ப்புச் சொற்களை எங்குமே காணமுடியாது.
நூறு ஆண்டுகளுக்குப் பின்பு இது படிக்கப்பெற்றால் இது ஒரு சரித்திர நாவல். சமகாலத்தில் படிக்கப்பட்டு ஆராயப்பெற்றால் புரட்சியின் பாடத்திட்டம். பிற புரட்சி எழுத்தாளர்களின் எந்தப் படைப்புக்கும் குறையாத அழகுணர்ச்சியோடு இந்த நூல் வெளிவந்திருக்கிறது.
“அஜிதா” என்ற பெயர் 1970களில் பெரும்பான்மைப் பெண்குழந்தைகளின் பெயராக இருந்தது. காரணம் அஜிதாவின் வாழ்க்கையும் செயல்களும் பலருக்கும் துணிவூட்டுவனவாக அமைந்திருந்தன. அஜிதாவின் அசாத்தியமான – அசாதாரணமான மனத்துணிவைக் கண்ட இன்ஸ்பெக்டர் ஒருவன், அஜிதாவின் சேலையையும், மேல்கோட்டையும் அவிழ்க்கச் செய்து வெறும் உள்ளாடைகளோடு, காவல் நிலைய முகப்பில் ஒரு நாற்காலியின் மீது நிற்கச் செய்த காட்சி உலக மனசாட்சியை உலுக்கியது.
அஜிதா’வின் விடுதலை தினம். வெறும் நன்னடத்தைக் காகிதத்தில், ஒரு சம்பிரதாயத்திற்காகக் கையெழுத்திடக் கோருகிறார் ஐ.ஜி.
“எந்தப் பேப்பரிலும் என்னால் கையெழுத்துப் போட்டுத் தர இயலாது. இதற்காக இன்னும் சிறையில் கிடக்க வேண்டும் என்றாலும்கூட பரவாயில்லை. ஆகவே, என்னிடம் கையெழுத்து வாங்கலாம் என்னும் உங்களுடைய நோக்கம் நிறைவேறாது” என்கிறார் அஜிதா. – இவர்தான் அஜிதா. ஆழ்ந்த தத்துவ அறிவு, சுயதீர்மானம் எடுக்கும் திறன், பெண் எதற்கும் சளைத்தவளல்ல என்ற நடைமுறை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் செயலில் காட்டும் தீவிரம் – இவர்தான் அஜிதா.
“ஆயுதம் தாங்கிய மக்கள் எழுச்சியெனும் மகத்துவம் மிக்க அந்தப் புரட்சியை, ஒரு இரகசிய அமைப்புச் செய்யும் அழித்தொழித்தல் வேலையாக வெறுமனே அபவாதம் பேசித் திரிந்தவர்கள், எந்தவொரு மகத்தான இலட்சியத்திற்காகப் புறப்பட்டார்களோ அதன் மீது களங்கத்தை அள்ளிப் பூசுகிற பணியை மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள்” என்றும் விமர்சிக்கிறார் அஜிதா.
(நன்றி: குளச்சல் மு. யூசுப்)