பொதுவாக தான் எழுதும் புத்தகங்களில் ராமச்சந்திர குஹா ஆதாரமாக ஒருவரது மேற்கோள்களை, ஒருவரைப் பற்றிய மேற்கோள்களைச் சான்றாக எடுத்துக்காட்டி, அதனையொட்டிய நிகழ்வுகளை விளக்கும் ஒரு வரலாற்று ஆசிரியராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கிறார்.
நவீன இந்தியாவின் சிற்பிகள் புத்தகத்தைப் பொறுத்தவரை அவரது இந்த எழுத்து வடிவத்தை வேறு வகையில் செயல்படுத்தி ஒரு தொகுப்பாசிரியரைப் போலவும், தொகுப்பாசிரியரோடு கூடிய சுருக்கமான அறிமுகம் செய்துவைக்கும் ஒரு வர்ணனையாளராகவும் செயல்பட்டிருக்கிறார்.
நவீன இந்தியாவின் சிற்பிகள் புத்தகத்தின் தலைப்பில் உள்ள நவீன இந்தியா என்ற பதத்தைப் புரிந்து கொள்ள வரலாற்றியல் துறை தொடர்பில்லாத, பத்தாம் வகுப்போடு ஆண்டுகளை மனப்பாடம் செய்யும் தொல்லையை விட்டொழித்தவர்களும் புரிந்து கொள்வதற்காக பின் வரும் ஒரே ஒரு பத்தியை எழுதியிருக்கிறேன்.
இந்திய வரலாற்றைப் பொதுவாக மூன்று கால கட்டங்கள் கொண்டதாக வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றியல் ஆராய்ச்சி மன்றம் சுதர்சன ராவின் தலைமையில் செயல்படுவதால் பண்டைக்கால வரலாறு இந்து மதத் துவக்கக் காலத்தில் இருந்து துவங்கி கஜினி முகமதுவின் படையெடுப்பு வரை கொண்டதாக சொல்கிறார்கள். (இடதுசாரி மார்க்சிய வரலாற்றாய்வாளர்களும் பிறரும் பண்டைய இந்திய வரலாற்றுக் கட்டத்தை சிந்துசமவெளி நாகரிகக் காலத்திலிருந்து இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி தோன்றிய நாளுக்கு முந்தைய நாள் வரை குறிப்பிடுகிறார்கள்.) இடைக்கால இந்திய வரலாற்றுக் காலகட்டம் இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆட்சிக்காலம் தோன்றிய நாள் முதல் பிளாசிப் போரிலிருந்து துவங்கிய ஆங்கிலேய ஆட்சிக்காலம் வரை குறிக்கிறார்கள். அது முதல் இந்தியா விடுதலை அடைந்த காலகட்டம் வரையும் சில மாதங்கள் நீட்டி காந்தியின் படுகொலை வரையுமான காலகட்டத்தை நவீன இந்திய வரலாறாகக் குறிக்கிறார்கள். (நவீன இந்தியாவின் வரலாறு ஏன் காந்தியின் படுகொலையோடு முடிய வேண்டும் என்ற கேள்வியோடே ‘இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு – India After Gandhi’ என்ற புத்தகத்தை ராமச்சந்திர குஹா எழுதினார்.)
மாற்றத்தை விரும்பி இந்திய மக்கள் தற்போது ஏற்படுத்தியிருக்கும் ஆட்சிக்கு முன்பு வரை நவீன இந்திய வரலாற்றின் அம்சங்களாக விளங்கிய பல கொள்கைகளின் மற்றும் விளங்கிக்கொண்டிருக்கும் சில கொள்கைகளின் அடித்தளங்களை உருவாக்கியவர்களின் வார்த்தைகள் வழியாகவே நவீன இந்தியா இப்படித்தான் உருவாகியது என்பதை குஹா தொகுத்தளித்திருக்கிறார்.
புத்தகத்தை நாம் காலவரிசைப்படி படிக்க வேண்டும் என்றாலும், குறிப்பிட்ட சில முக்கிய சங்கதிகள் தொடர்புடையவையாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் சரி, புத்தகத்தின் வரிசையை அப்படியே நாம் பின்தொடரலாம். தான் ஒரு சிறந்த தொகுப்பாசிரியர் என்பதை குஹா நிரூபிக்கிறார்.
புத்தகம் முழுக்க ஒரே குரலில் இதுதான் இந்தியா என்பதை பறைசாற்றும் தீவிர விளம்பர நெடி புத்தகத்தில் கிடையாது. குரல்களும் எதிர்க்குரல்களும், குரல்களுக்கும் எதிர்க்குரல்களுக்குமான விவாதங்களாகவும் உரையாடல்களாகவும் அமையும்படியான எழுத்துகள் தொகுக்கப்பட்டிருப்பது நமக்குப் புத்தகம் பேசும் பொருள் குறித்த முழுமையான பார்வையைத் தருகிறது.
தந்தை பெரியாரை பெண்ணுரிமைப் போராளியாகக் காட்டும் மூன்று கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறார். ஒரு வகையில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும் அவரின் பன்முகத்தன்மை பதிவு செய்யப்படவில்லையோ என்று தோன்றுகிறது. பெரியாரைப் பற்றிய அறிமுக உரையில் அவருடைய பன்முகத்தன்மையை ஒரு பத்தியில் அடக்குகிறார் குஹா. ஆனால், ‘அவரது இளமைக்காலம் பற்றி நாம் அறிய முடியவில்லை’, ‘அங்கு சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது’ என்பது போன்ற அறிமுகங்களாக இருக்கிறது. நாம் பெரியாரை இன்னும் தமிழ் உலகத்தை விட்டு பிறமொழிப் பிராந்தியங்களுக்குக் கொண்டு செல்லாமையின் போதாமையைத்தான் இது காட்டுகிறது.
பெரியாருக்கு மட்டுமல்ல இன்னும் சிலருக்கும் கூட அவர்கள் ஒரே துறையில் முடக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஒரு வகையில் தேடல் உள்ள வாசகன் மேலும் தேடிச் சென்று இந்தச் சிற்பிகளின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்வான் என்றால் மகிழ்ச்சியே.
அறிவியல் துறையில் இந்தியாவின் முகம் வடிவமைக்கப்பட்டதைப் பற்றிய உரையாடல்களும் அதற்கான சிற்பிகளும் இங்கு வெகுவாகத் தெளிவுபடுத்தப்படாதது நூலின் போதாமையாகவே எனக்குப் படுகிறது. புத்தகத்தின் முன்னுரையிலேயே, ‘இந்தப் புத்தகம் அரசியல், சமூக சீர்திருத்தம் ஆகிய விஷயங்களை மட்டுமே பேசப்போகிறது’ என்றும் குஹாவே குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிய அறிஞர்களையோ, மார்க்சிய படிநிலையின் ஓர் அங்கமாக கம்யூனிச சித்தாந்த வாதிகளையோ, தொழிற்சங்கங்களையோ கட்டியமைத்த இயக்கவாதிகளையோ, மார்க்சியத்தின் வழி நின்ற மார்க்சிய ஆய்வாளர்களையோ அவர்களது சிந்தனைகளையோ இப்புத்தகத்தில் குஹா கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஒரு குறைபாடே, அதற்கு அவர் நீண்ட பெரிய விளக்கவுரையை முன்னுரையில் அளித்திருந்தாலும் கூட.
“இந்தியாவை கார்ல் மார்க்சின் பாதையில் கொண்டு செல்லவேண்டுமென்றுதான் விரும்புகிறார்களே தவிர, மார்க்சிஸ்ட் கொள்கைகளை இந்தியாவுக்கேற்ப திருத்தியமைக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பவில்லை!” என்று குஹா குறிப்பிட்டு, அவர்கள் சிந்தனைகள் பெரிதும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, அதனால் மார்க்சிய சிந்தனையாளர்களைக் குறிப்பிடவில்லை என்கிறார். இந்தக் குற்றச்சாட்டு அனேகமாக கட்சி சாரா மார்க்சியர்கள் அத்தனை பேரும் வைக்கக்கூடிய ஒன்றுதான்.
“மார்க்சியத்தை ஒரு தானியங்கி இயந்திரத்தின் உபயோகிப்புக் குறிப்புகளாகவோ அல்லது ஒரு பொன்மொழிகளின் கஜானாவாகவோ மாற்றிவிடக் கூடாது. மார்க்சியம் சிந்தனைக்கு மாற்று அல்ல; அது பகுப்பாய்வுக்கானதொரு சாதனமே” என்று கூறி மார்க்சியத்தை ஒரு பகுப்பாய்வுக் கருவியாக மட்டுமே உபயோகித்து உலகளவில் மார்க்சிய அடிப்படையிலான வரலாற்றியல் துறைக்கு பங்களித்த ‘தாமோதர் தர்மானந்தா கோசாம்பி – டி.டி.கோசாம்பி’ அவர்களையும் மார்க்சிய முத்திரையின் கீழ் கழித்துக்கட்டியது பெரும் குறைபாடாகவே படுகிறது. டி.டி.கோசாம்பியையும் அவரது சிந்தனைகளையும் புறக்கணிப்பது நவீன இந்தியா வரலாற்றியல் துறையை முழுமையாகப் புறக்கணிப்பதற்குச் சமம்.
நவீன இந்தியாவில் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிப்போக்கை புரிந்துகொள்ள உதவும் ஒரு சிந்தனை முறையைப் புரிந்துகொள்ளத் தவறுவதற்கும் சமமாகும். முழுக்க முழுக்க இது அறிவுசார் புலத்தோடு தொடர்புடையது என்பதால், வெகுமக்களுக்கான புத்தகத்தில் இடம்பெறாததற்காக பெரிதாக வருந்தவும் தேவையில்லை என்று ஒரு குரல் என் காதுகளில் கேட்கிறது. குஹா வேறு சிலரை புத்தகத்தில் சேர்க்காததற்கான காரணமாகக் கூறும் ‘ஒரு பிரிவு மக்களிடம் மட்டும் தாக்கம் செலுத்தினார்கள்’ என்ற காரணம் டி.டி.கோசாம்பிக்கும் பொருந்தும் என ஏற்றுக்கொள்ளலாம்.
நான் மேலே புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கும் பகுதியில் ‘மார்க்சிஸ்டுகள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சொல் மார்க்சியர்கள் என்றதொரு கனியான சொல் இருக்க மார்க்சிஸ்டுகள் என்ற காய்ச்சொல்லை மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது சரியான போக்கு அல்ல. புத்தகத்தில் வேறு சில வார்த்தைகளும் இப்படி கனியிருப்பக் காய் கவர்ந்தற்றுதான் இருக்கிறது. நவீன உரைநடைப்போக்கே இப்படியிருக்க மொழிபெயர்ப்பைக் கடிந்துகொள்வதிலும் பயனில்லைதான். ஆனால், புத்தகத்தில் மிகுந்திருக்கும் எழுத்துப்பிழைகளையும் ( உதாரணத்துக்கு பெரியார் மட்டுமே இ.வெ.ரா, ஈ.வெ.ரா, ராஜினா, ராமசாமி என்றெல்லாம் குறிக்கப்படுகிறார்.) அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நல்ல தமிழை அறிவுப்புலத்தினரான புத்தக அருகாமையாளர்கள் வளர்க்காமல் வேறு யார் வளர்ப்பது?
(நன்றி: மதிப்புரை.காம்)