தமிழுக்கு லத்தின் அமெரிக்க எழுத்தை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவரான அமரந்தா வெவ்வேறு காலகட்டத்தில் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்பு. புத்தகத்தின் தொடக்கத்தில், அமரந்தாவும் ஆர்.சிவக்குமாரும் எழுதியிருக்கும் கட்டுரைகள், லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்த அரசியல் நிலைகளையும், மக்களின் கொதி நிலைகளையும் விரிவாகப் பேசுகின்றன. அரசியல் மரபைக் கதைகள் உருவாக்கியிருப்பதன் வரலாற்றை நுண்மையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன அக்கட்டுரைகள். ஒவ்வொரு சிறுகதைகளின் ஆரம்பத்திலும் எழுத்தாளர்கள் குறித்த குறிப்பும், அக்கதை ஏற்படுத்திய தாக்கம் பற்றிய குறிப்பும் கதைகளுக்கு வேறொரு பரிமாணத்தைத் தருகின்றன.சாமுவேல் ஃபெய்ஹோவின் ‘சாதெரோவின் கடைசி ஒட்டகம்’ சிறுகதையில் சாதெரோ ஒரு விவசாயி. அவனுக்கு மூன்று ஒட்டகங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அதை வைத்துப் பிழைக்க நினைக்கிறான்.
அவற்றில் இரண்டு இறந்துபோகவே ஒன்றை மட்டும் வளர்க்கிறான். அதை த்ரினிடாட் எடுத்துச் சென்றால் யாரேனும் நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வார்கள் என்று கேள்விப்படவே ஓட்டிச்செல்கிறான். அங்கு காந்தெரோ, இஸ்னாகா என இரு செல்வந்தர் கள் இருக்கின்றனர். இருவரும் ஆடம்பரத்திற்காக ஒருவரை எதிர்த்து ஒருவர் எனச் செலவழிப்பவர்கள்.இந்நிலையில், காந்தெரோவிடம் ஒட்டகத்தை விற்கிறான். அதன் மீது ஒய்யாரமாகச் சவாரி செல்வதை மக்கள் வியந்து பார்க்கிறார்கள். இஸ்னாகா அதைவிடச் சிறந்த மிருகம் வேண்டுமென்று நீர்யானையை வரவழைக்கிறான். அதைக் கண்டு இஸ்னாகாவே அச்சம் கொள்கிறான்.எந்தச் செயல்பாடுகளிலும் இஸ்னாகா இறங்காமையால் காந்தெரோ வெற்றி கொண்டதாக எண்ணிப் பெரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். அப்போது நீர்யானையை அனுப்பி அவ்விருந்தை நாசப்படுத்துகிறான் இஸ்னாகா. இதற்குக் காரணம் ஒட்டகம் வந்த நேரம்தான் என்றெண்ணி அதன் தலையை எஜமானனான சாதெரோவின் முன்னிலையிலேயே வெட்டுகிறான் காந்தெரோ. மேலும், சாதெரோவிற்கும் முப்பது கசையடிகள் கிடைக்கின்றன. உடல் மெலிந்து மீண்டும் ஊர் திரும்புகிறான்.அப்போது சென்று திரும்பிய நாட்டின் சமகால நிலையை நண்பன் கூறுகிறான். காந்தெரோவும் இஸ்னாகாவும் ஆயுத வியாபாரிகளின் துணைகொண்டு, மக்களைக் கொன்று தங்களின் ஆடம்பரத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால், உயிர் பிழைத்திருக்கும் உன் நிலை தேவலை என்கிறான். தானும் ஆயுத வியாபாரத்தில் இறங்கலாமோ என்றெண்ணும் சாதெரோவின் சிந்தனையில் கதை முடிகிற காந்தெரோ, இஸ்னாகா எனும் இடங்களில் எந்த அரசை வைத்தாலும் இக்கதை அரசியல் பகடியாக மாறிவிடும். சாமானியன் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை அதிகாரம் முடிவெடுக்கிறது. சாமானியனின் இன்பம் அதிகாரத்தின் சிரிப்பில் அடங்கியிருக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது. எவ்வளவு அடிபட்டாலும் அதிகாரத்தின் அடைக்கலம் சாமானியனுக்குத் தேவைப்படுகிறது.இப்படி தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பல உள் மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் குரூரம், அதன் மீது சாமானியன் கொள்ளக்கூடிய கோபம், வன் முறையின் வழியில் ஆயுதமாகும் முறையற்ற காமம், குடும்பத்துக்குள் நிலவும் நுண்மையான வன்முறை, போர்க்கால வாழ்க்கை முறையும் அதன் அவலங்களும் என நீளும் பட்டியல் வேறு நிலத்தின் வாழ்க்கையைத் தமிழ் வாசகர் களுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.70-களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட லத்தின் அமெரிக்கக் கதைகள் நமது படைப்பாளர்களிடம் மிகப்பெருமளவில் தாக்கம் செலுத்தின. மீட்சி, கொல்லிப்பாவை, பிரக்ஞை, கசடதபற முதலிய இதழ்களில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் தனி நூல்களாக உருவாகவில்லை. உருவானவைகளும் மறுபதிப்பு காணவில்லை. இந்நிலையில் ‘சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்’ சமகால வாசகர் களுக்கு லத்தின் அமெரிக்கக் கதைகளை மறுஅறிமுகப்ப டுத்துவதாக அமைகிறது. 29 லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களின் 33 சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழை மேலும் செழுமைப்படுத்தும் நல்நூல் இது.சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் கதை சொல்கிறான். அதன்வழி சமூகத்தோடு இயைந்த வாழ்க்கையைப் பரிசீலிக்கக் கற்றுக் கொடுக்கிறான்.
(நன்றி: தி இந்து)