இரத்தம் இன்னும் உறைந்திடாத நிலையில் கழுத்தறுபட்டு கிடக்கும் இரு ஒட்டகத்தின் தலைகளை அட்டைப்படமாகவும், விரல்களை நறுக்கியும் பற்களையும் தலை முடியையும் பிடுங்கிக்கொண்டும் நாக்கை வெட்டியும் மூக்கை அறுப்பவனுமாக, தனது அங்கங்களைத் துண்டித்துக்கொள்ளும் பழக்கம் உடையவன் எனும் வரிகளையுடைய பின்னட்டைக் குறிப்பும் கொண்ட நாவல் ரமேஷ் பிரேதனின் ‘அவன் பெயர் சொல்’. மகாகவி பாரதியின் வரிகளோடு ஆரம்பமாகும் ‘அவன் பெயர் சொல்’லில், இல்லாத மகளோட உரையாடுகிறார் அன்பிற்காக ஏங்கும் தந்தை. ஒட்டகக்குட்டியை மகளுக்கு பரிசளிக்க ஆசைப்படுகிறார். மகளுக்கு பாலூட்ட தனது மார்பு சுரக்கவில்லை என்ற இயலாமையில் கண்ணீர் உகுக்கிறார். மழை, மரம், செடி, கொடி, தமிழ், கடல் என அன்பு ததும்புகிறது. அதற்கு நிகராக வன்முறை நிரம்பிய சொற்களும். தனது கவிதைகளிலும் புனைவுகளிலும் பிரதான பேசுபொருளாக ஈழமும் இருக்கின்றது. வன்முறையும் அதீத அன்பும் கலந்ததாகவே ரமேஷ் பிரேதனின் கவிதைகளும் புனைவுகளும் இருக்கின்றன.
ரமேஷ் பிரேதனின் ‘ஐந்தவித்தான்’ நாவலும் ‘அவன் பெயர் சொல்’லின் நீட்சியே! மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனே ஐந்தவித்தான். ஆக, இந்நூற்றாண்டின் ‘ஐந்தவித்தான்’ பைத்தியமாகத்தானே இருக்க முடியும்! ‘மனநோயின் தோற்றமும் வளர்ச்சியும்’ மற்றும் ‘மனநோயின் வளர்சிதை மாற்றம்’ என இரண்டு பகுதிகளாக இந்நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நூற்றாண்டுகளாக உயிரோடு வாழ்வதாகச் சொல்லிக்கொள்வதும், தனக்கு மரணமில்லை என்று தேவகியிடம் உரையாடுவதும், பூமிக்கடியில் தோண்டி எடுத்த தாழியிலிருந்து மகளைப் பெற்றெடுத்து வளர்ப்பதும், ஈழத்திற்காக குரல் கொடுப்பதும் என மாதவனின் பைத்திய உலகத்தைக் கொண்டிருக்கிறது இரண்டாம் பாகம். அவனது மனநோய்க்கான வித்து விழுவதும் தளிர் விடுவதும் முதல் பாகம்.
மாதவன். பைத்தியம் பிடித்த அக்கா மழையில் நனைந்து உடல் விரைத்து இறந்து போகிறாள். தனது தீட்டுத்துணியுடன் தெருவில் விளையாடி அசிங்கப்படுத்திய பூனையின் தலையில் அம்மிக்கல்லை எறிந்து கொன்றுவிடும் உக்கிரமுடைய அம்மா. மனநலம் பிறழ்ந்த மகளோடு உறவு கொண்ட ரிக்ஷாக்காரனின் குறியை அறுத்து கொன்றுவிடுகிறாள். வன்னிய ஜாதி அம்மா, நாவித அப்பா. தாயின் முறைகேடானப் போக்கினைக் கண்டுகொள்ளாமலிருக்கும் தந்தை. மனம் பிறழ்ந்த அக்காவின் சாவுக்கு தாயும் தந்தையின் இயலாமையும் காரணமாகும் சூழலும், கண்டவனோடு உறவாடும் தாயினைக் கண்டும், காதலித்த பெண் தற்கொலை செய்வதாலும், இன்ன பிற காரணங்களாலும் மனப்பிறழ்விற்கு ஆளாகிறான் மாதவன். சிறிது சிறிதாக மனச்சிதைவின் வளரச்சி ஒவ்வொரு பக்கங்களிலும் நிகழ்கிறது. மண்ணுக்குள் அழுகிக் கொண்டிருக்கும் தன் காதலியைத் தோண்டியெடுத்து தின்னத் துடிக்கிறான். தனது வயிற்றில் வேறொருவன் கருவைத் தந்ததால் தற்கொலை செய்துகொள்கிறாள் காதலி. தாயோ கருவைச் சுமந்ததற்காக தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவனை மணம்முடிக்கிறாள். அம்மாவைப் போன்ற கொலைகாரியும் தாமரை போன்ற தற்கொலைக்காரியும் அவன் வாழ்வில் எதிர்கொண்ட இருதுருவங்கள். ஒரு கட்டத்தில் தாய்க்கும் பைத்தியக்களை வந்துவிடுகிறது.
பூமிக்குள் இருக்கும் தாழியினுளிருந்து தொப்பூழ்க் கொடியில்லாத மகளைப் பெற்றெடுக்கிறான் மாதவன்.
‘உள்ளே தாழி அளவு பனிக்குடம். அதனுள் கை நுழைத்து தொப்பூழ்க் கொடியில்லாத பெண் குழவியை வெளியே உருவினான். நிணத்தின் கொழகொழப்போடு குழந்தை முதலில் சுவாசத்தில் அழுதது. தாழிக்குள்ளிருந்து தன் அக்காவே தோன்றியிருப்பதாக மாதவன் மகிழ்ச்சியில் அழுதான். ஏவாளுக்குப் பிறகு பூமியில் தோன்றிய தொப்பூழ் இல்லாத இரண்டாவது பெண் தன் மகள் பூமிதா என மாதவன் நண்பர்களிடம் பெருமையோடு சொல்லிச் சிலிர்ப்பான்.’ [பக். 57]
மனச்சிதைவு இங்கே தீவிரமடைகிறது. தாமரைக்கு பின் தேவகியும் வேறொருவரோடு மணம்முடித்துக் கொள்கிறாள். காமம் பொய்த்த மனம் பைத்தியமாகிறது.
‘மனநோயின் வளர்சிதை மாற்றம்’ எனும் இரண்டாம் பாகம் முழுவதும் தர்க்கங்களால் நிரம்பியிருக்கின்றது. மனச்சிதைவு என்று வகைப்படுத்தியிருப்பதால், இதை மனச்சிதைவிற்கு ஆளான மாதவனின் பிதற்றலாகவும் இல்லாத மகளுடனும் இல்லாத தேவகியுடனும் உரையாடுவதாகவும் உறவாடுவதாகவும் நான் கற்பிதம் செய்துகொள்கிறேன். இப்படியான வாசிப்பு, திடீரெனச் சிரிக்கும் திடீரென அலறும் காற்றில் கைகளையாட்டிப் பேசும் ஒரு பைத்தியக்காரனின் உலகைத் தரிசிப்பதாக இருக்கின்றது.
‘தேவகி, ஆண் ஒருவன் தன் வாழ்நாளில் மூன்று தருணங்களில் கடவுளை எதிர்கொள்கிறான். பிறக்கும்போது பெற்றவளையும் போகத்தின்போது உற்றவளையும் இருவரின் வினையால் தனக்குப் பிறந்ததையும்; ஆக, மூன்று தருணங்களில் ஓர் ஆண் கடவுளை எதிர்கொள்கிறான். அப்படி நீ கடவுளை எதிர்கொண்ட தருணங்கள் உண்டா?’
‘உண்டு. என்னைப் பெற்றவளையும் நான் பெற்றபோது என்னையும் என்னைப் புணர்ந்தபோது உன்னையும்.’
‘நீ உன்னையே கடவுளாகக் கண்ட தருணம் போல் ஆணுக்கு வாய்ப்பதில்லை. கடவுளின் நிலையிலிருந்து பெண் இறங்கி வருவதே இல்லை. ஆண் கடவுளாக இயல்வதில்லை. அவனுக்கு அடைகாக்கத் தெரியாது. அடைகாக்க முடிந்தால் கடவுளாகிவிடுவான். இறைமை என்பது அடைகாத்தலில் இருக்கிறது.’ [பக். 105]
O
‘இந்தியத் தமிழர்க்குத் தனிநாடு அமையாதவரை ஈழத் தமிழர்க்குத் தனிநாடு சாத்தியமில்லை. தனி ஈழத்திற்காக இங்கிருந்து குரல் கொடுக்கும் தமிழர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. ஈ.வெ.ரா. சொன்னதைத்தான் அன்று பாரீசில் பேசினேன்; ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படிக் குரல்கொடுப்பான்?’ [பக். 126]
O
‘யோனியில் அழுகிய குருதி கசியும் மாதத்தில் மூன்று நாட்களுக்கு எனக்குப் பைத்தியம் பிடிக்கும். பைத்தியத்திலிருந்து வெளிவரும்போது, பகலில் தூங்கி இரவில் விழித்தது போல இருக்கும். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது போல உடம்பில் சிலுவையிலிருந்து பெயரத்தெடுத்த அசதி.’ [பக். 130]
O
குறியீடுகளால் நிரம்பிய ‘ஐந்தவித்தான்’ நாவலின் பல்வேறு பகுதிகள் கவிதைகளாக மிளிர்கின்றன. முதல் பாகம் கிட்டத்தட்ட நேர்கோட்டு எதார்த்த கதைக்களம்; இது வெறுமனே உணர்ச்சியை மட்டும் தூண்டி விடுவதாக இல்லாமலும் இரண்டாம் பாகத்தில் மதம், கடவுள், தமிழ், ஈழம், கடல், நிலா என பைத்திய உலகம் தர்க்கமாக மட்டும் நின்றுவிடாமலும் கலையாக மாறும் சூட்சமம் ரமேஷ் பிரேதனின் மொழியிலும் அம்மொழியில் தர்க்கத்தைக் கையாள்வதிலும் ஒளிந்திருக்கின்றது. காமத்தை அறியும் உடலைப்போல ரமேஷ் பிரேதன் மொழியில் நிகழ்த்தும் மாயத்தை நம்மால் இயல்பாக உணர முடிகிறது.
O
(தினகரன் வாரமஞ்சரியின் ‘பிரதிபிம்பம்’ பகுதியில் 2017 ஏப்ரல் 30 அன்று பிரசுரமான கட்டுரை)
(நன்றி: சாபக்காடு)