வரலாற்றை அறிந்துகொள்வது ஏன் அவசியமாகிறது? நம் வாழ்வை அது எவ்விதத்தில் பாதிக்கிறது? வரலாறு என்பது கடந்த காலத்தின் நடந்து முடிந்த சம்பவங்கள் மட்டும் தானா? கடந்த காலத்தின் நினைவுகளாகவோ பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களாகவோ மட்டும் வரலாறு இருந்திருந்தால் அது, அச்சம்பவங்களில் தொடர்புடையோருக்கு பெருமைப்படும் விஷயமாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் சமூகத்தின் ஒவ்வொரு மாற்றத்திற்கு பின்பும் பெரும் வரலாறு இருக்கிறது. இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு நமது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. வரலாறு ஓர் அங்கீகாரமாக மதிக்கப்படுகிறது; ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொருவருக்கும்.
வரலாற்றைப் புனைவுகளாக்கும் வழக்கம் அவ்வப்போது தமிழ் இலக்கியப்பரப்பில் நிகழ்வதுண்டு. இவ்வகைப் புனைவுகள் பொதுவாக ஒரு வரலாற்று சம்பவத்தையோ ஒரு கதாபாத்திரத்தையோ எடுத்துக்கொண்டு அதன் சாயலில் நிகழும் விஷயங்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும். இவ்வகைமையில் தேவிபாரதி ஒரு சூட்சமத்தை கையாள்கிறார்; ‘வரலாறு இன்றைய நாளில் எப்படியெல்லாம் கேலிக்குள்ளாகிறது?’ இந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்தே அவரது புனைவுகள் பயணமாகின்றன. இதுவே தேவிபாரதியின் தனித்துவமும் கூட. தேவிபாரதியின் சில கதைகளும் அவரது இரண்டாவது நாவலான ‘நட்ராஜ் மகராஜ்’ம் அவ்வகையே. வரலாறு கேலிக்குள்ளாகும் அவலம் தான் இந்நாவலின் வேர். கண்களால் காண இயலாத வேர்களைப் போலவே இந்த அவலமும் நாவலின் பக்கங்களுக்குள் மறைந்திருக்கின்றது. ‘பிறகொரு இரவு’ கதையில் நிஜக் காந்தியை வேஷமிட்டவரென உதாசீனப்படுத்தும் அவலத்தைத் தேவிபாரதி தனது படைப்புகளின் உயிர்நாடியாகப் பிடித்துக்கொள்கிறார். இதுவரையிலும் மிகச்சிறிய அளவில் அவரது படைப்புகளில் நிகழ்த்தியவற்றை எள்ளலான நடையில் அற்புதமான மொழியில் ஒரு விரிவான தளத்தில் புதினமாக்கியிருக்கிறார்.
எளிமையான ஊர், ‘ந’ எனும் ஓர் எளிமையான நாயகன், குறைந்த ஊதியத்தில் சத்துணவு ஆய்வாளர் எனும் ஓர் எளிமையான வேலை அவனுக்கு, அடிக்கடி பாம்புகள் உலவும் புதர்கள் மண்டிய சிதைந்து போன அரண்மனையின் மிகப்பெரிய காவல்கூண்டில் தான் குடியிருப்பு. நாவல் முழுக்க நிரம்பியிருக்கும் இத்தகைய எளிமைகள் ஒன்று சேர்ந்து பிரம்மாண்டமாக உருவெடுத்து பிரம்மிக்க வைக்கிறது.
இந்நாவலை மூன்று அடுக்குகளாக பிரிக்கலாம். முதலாவது, வெறும் ‘ந’, அவனது சத்துணவு ஆய்வாளர் வேலை, 164 சதுரஅடியில் ஒரு வீடு கட்டிக் குடியேறும் ஆசை, அதற்கான அவனது முயற்சிகள். இரண்டாவது, தானொரு அரச குடும்பத்தின் எஞ்சிய வாரிசு என தன்னை அறிதல், இந்த அறிதலை விடவும் மிக முக்கியமானதொரு தருணம் தன்னை அவன் காளிங்க மகாராஜாவின் வாரிசென உணர்தல். மூன்றாவதாக, அரண்மனையின் வாரிசென ‘ந’வை இவ்வுலகம் அறிதல் – அதன் பின்னர் நடக்கும் ‘காளிங்க மகாராஜாவின் வரலாற்றை மீட்டெடுக்கும்’ நிகழ்வுகள்.
அங்கதத்தை தனியே பிரித்தறிய முடியாத அளவிற்கு ஊடுபாவான மொழி. ‘ந’வின் பல உள்ளுணர்வுகளையும் அங்கதமாகத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார். சத்துணவு ஆய்வாளராக பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பின்பு அவன் காணும் ஆசிரியர்களையும், மனிதர்களையும், பள்ளியின் ‘சிஸ்டத்’தையும் அனாயசயமான மொழியில் பகடி செய்கிறார். உதாரணமாக இவன் வேலைக்கு சேர்ந்ததும் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை சரியாகக் குறிப்பிட்டு அதன் மூலம் உணவின் தரத்தை உயர்த்த முற்படுவதும் அதற்கு சக ஊழியர்களிடம் இருந்து மறைமுகமாக கிடைக்கும் எதிர்ப்பும். ‘ந’ இலவசத்தொகுப்பு வீட்டிற்காக அலையும்போதும் வீடுகட்ட சொந்தமாக இடம் இருந்தால்தான் கிடைக்கும் என்றறிந்த பிறகு 164 சதுரஅடி இடத்திற்காக அலையும்போதும் இதே பகடி ஏக்கமாக வெளிப்படுகிறது. முதலமைச்சரிடம் இருந்து கடிதம் வந்த பிறகும், மாவட்ட ஆட்சியரைப் பார்த்த பிறகும் கூட பஞ்சாயத்து தலைவரிடம் வந்து நிற்கும்போது அவர் சொல்லும் வார்த்தைகள் ‘நீ எங்க போனாலும் கடைசியில இங்கதான் வந்து நிக்க வேண்டி இருக்கு பாத்தியா?’ என ஒரு சில இடங்களில் ‘ந’வின் நம்பிக்கையையும் பகடியாக்கியிருக்கிறார். ‘ந’ தன்னை ஒரு அரண்மனை வாரிசாக உணரும் தருணங்களில் பகடி பெருமிதமாக வெளிப்படுகிறது. இதே பகடி நாவலின் இறுதியில் தன்னை ‘ந’ என்று காவல்துறை ஆய்வாளனிடம் சொல்லும்போதும், நாவலின் முடிவிலும் அவலத்தின் ஆழமாக எழுகிறது.
தான் வேலை செய்யும் இடத்தையும் சூழலையும் பகடி செய்வதொன்றும் தமிழ் சூழலுக்குப் புதிதில்லைதான். நாவலின் முதல் இரண்டு பாகங்கள் – ‘ந’ சத்துணவு ஆய்வாளராவதும் பள்ளி நிகழ்வுகளும் கோபிகிருஷ்ணனின் ‘இடாகினிப் பேய்களும் நடைபிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும்’ குறுநாவலையும், ‘ராஸலீலா’வின் கண்ணாயிரம் பெருமாளையும் நினைவூட்டுகின்றன. மூன்றிலும் சமூக அமைப்பிலிருக்கும் அவலமும் அதனால் தனி மனிதனின் மனதளவிலான போராட்டமும் தான் அடிநாதம். சூழல் வேறே தவிர, மாந்தர்களின் மன ஓட்டமும் நிகழ்வுகளும் கிட்டத்தட்ட அருகருகிலேயே இருக்கின்றன. இவர்கள் முடிந்தது என்று நிறுத்திய இடத்தில் தான் ‘நட்ராஜ் மகராஜ்’ ஆரம்பமாகின்றது.
ஒரு சாமான்யனுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அவன் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறான், விரக்தி அடைகிறான் என்பதெல்லாம் எள்ளலாக நாவலில் விரிகின்றது. எள்ளலும் அரசியலும் தான் இந்நாவலின் முக்கியக் கூறுகள். தான் நட்ராஜ் மகராஜ் என்று அறியும் வரையிலான ‘ந’வின் வாழ்க்கை மிக மிக எளிமையானது. போகும் எல்லா இடங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் அவன் ஏமாற்றப்படுகிறான். அரசு வேலைக்காக செலவு செய்கிறவனுக்கு கிடைப்பதென்னவோ சிறியதாக சத்துணவு ஆய்வாளர் வேலைதான். கிடைத்ததை வைத்து திருப்தி அடைபவனாக இருக்கிறான். எப்படியும் சத்துணவு ஆய்வாளர் வேலையை அரசு நிரந்தரம் செய்துவிடும் என்று கனவு காண்பவனாக இருக்கிறான். அனைத்தையும் விட ஒரு சாமானியனைப் போல நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் பேசுபவர்களை நம்புகிறவனாக இருக்கிறான்.
ஒரு சாமான்யனின் வாழ்விலிருந்து நாவல் அடுத்த கட்டத்திற்கு நகர்வதென்பது நாளிதழில் ‘ந’வைப் பற்றிய செய்தி வந்ததாக அவன் அறிந்த பின்னர்தான். தன்னை ஒரு ராஜவாரிசு என்றறிந்த பின்னரும் கூட அவனுக்கு அவனைச்சுற்றி நடப்பவைகளெல்லாம் ஒரு தெளிவின்மையைத் தான் கொடுக்கின்றன. தன்னைப்பற்றிய செய்தியைக் கண்ணால் கண்டறிந்த பின்னரே ‘ந’ அவனுக்குள் தன்னை ஒரு ராஜகுமாரனாக உணர ஆரம்பிக்கிறான். அதுவரையிலும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வியலைப் பேசிய நாவல் வேறொரு களத்திற்கு நகர்கிறது. அப்போதும் கூட ‘ந’வுக்கு ஒரு செருக்கோ தானொரு ராஜ வாரிசு எனும் அகந்தையோ ஏற்படவில்லை. தன்னிலை அறிந்தவனாகத்தான் இருக்கிறான். அவனது நம்பிக்கை ‘வரலாறு எப்படியும் சரி செய்யப்பட்டுவிடும்’. இந்நாவலில் ‘வரலாறு எப்படியும் சரிசெய்யப்பட்டுவிடும்’ என்பது பெரும் மறைபொருளாக கையாளப்படுகிறது. ‘ந’வின் பங்களிப்பு என்ன என்பதும், இதனால் ‘ந’விற்கு நிகழ்ந்தது என்ன என்பதும்தான் அது.
‘ந’ என்பவன் வெறும் ‘ந’ அல்ல, அவன் காளிங்க மகாராஜாவின் வாரிசு என்பதை அறிவிக்க வரும் பேராசியருக்கு வரலாறை மீட்டெடுக்க வேண்டுமென்ற போராடும் குணமெல்லாம் இல்லை என்பதை அவனது முதல் வருகையிலேயே சுட்டிக்காட்டுகிறார். முதலில் ராஜாவிற்கான மரியாதையுடன் பேசும் பேராசிரியர், பேரழகி கரையானால் கடிபட்டு அவதிப்படவும் கீழ்த்தரமாக ‘ந’வுடன் உரையாடுகிறார். அது மரியாதையெல்லாம் அல்ல வெறும் பாசாங்கு தான் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் இடம். இது தான் ‘ந’வின் முடிவும் கூட. பேராசியர் வருகை தரும் முதல் அத்தியாயத்தின் இறுதியில் இனி நாவலின் பயணம் என்னவாக இருக்கப்போகிறது என்பதை உணர்த்தும் இடம் இது. இதே போல வெளிப்படையாக அல்லாமல் சூசகமாகவே ஆங்காங்கே உணர்த்திக் செல்கிறார்.
‘ந’ வெறும் சத்துணவு ஆய்வாளர் மட்டுமல்ல மகாராஜாவின் நேரடி வாரிசு ‘நட்ராஜ் மகராஜ்’ எனவும் அவன் வீடு கட்டத் தொடங்கும் வேளையில் அவனைச் சந்தித்து இந்த உண்மையைக் கூற பேராசிரியரும் ஒரு பேரழகியும் வருகை தர இருக்கிறார்கள் எனவும் முதல் ஒன்றரை பக்கங்களில் சொல்லியிருப்பது ஒரு கட்டுடைப்பு. ஆக, கதை பேராசிரியரின் வருகையில் திருப்பம் காண இருக்கிறது என முன்முடிவிற்கு வாசகன் தள்ளப்படுகிறான். அவரது வருகைக்காக காத்திருக்கவும் தொடங்குகிறான். சொல்லப்போனால் நாவலும் அங்கிருந்து தான் ஆரம்பமாகின்றது. இப்படி ஒரு கட்டுடைப்பிற்கு பின்பாக நூற்றி நாற்பது பக்கங்கள் அவன் சத்துணவு ஆய்வாளராக அவன் அனுபவிக்கும் அவலத்தையும், வீடு கட்ட அவன் போராடுவதையும் பேசியிருப்பது சலிப்பைத் தருகின்றது. இந்தச் சலிப்பு அக்கட்டுடைப்பினால் நிகழ்வது. பின்னால் வாசகனுக்கு கிட்டவிருக்கும் மகானுபவத்தின் ‘ஸ்பாயிலரா’க முதல் ஒன்றரை பக்கங்கள் இருக்கின்றன. இதைத் தவிர்த்திருந்தால் வாசகனுக்கு மாபெரும் தரிசனத்தை பேராசிரியரின் வருகை கொடுத்திருக்கக்கூடும். இல்லாவிட்டாலும் பேராசிரியரின் வருகைக்காக காத்திராமல் எவ்வித எதிர்பார்ப்புமின்றி புதினத்தை அணுகியிருக்கக் கூடும். இந்த முதல் ஒன்றரை பக்கங்கள் வேறொருவர் நாவலை வாசித்து அதிலுள்ள முக்கிய தருணமொன்றைக் குறிப்பிட்டு வாசகனின் வாசிப்பின்பத்தை சிதைப்பது போல தான். அதை ஆசிரியரே செய்தது தான் விந்தை.
தன்னை ஒரு ராஜவாரிசு என்றறிந்த பின்னர் ‘ந’ அவனை அதற்கு உரியவனாக மாற்றிக் கொள்கிறான். சாமானியர்கள் மட்டுமே இதைச் செய்ய விரும்புகிறார்கள். தங்களுக்கு கிடைக்கவேண்டியவைகளுக்கு தங்களை நேர்மையுடன் தயாராக வைத்துக் கொள்கிறார்கள். தன்னை ராஜ வாரிசு என்றறிந்த பின்னர் ‘ந’ கனவுகளின் சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறான். இதனால் அவன் மனம் வேண்டுவது அந்தஸ்த்தோ புகழோ அல்ல. ஒரு அங்கீகாரம் அல்லது சுயமரியாதை. கீழ்நிலை ஊழியன் என்பதற்காக தான் அவமானப்படுத்தப்படும் இடத்தில் தானொரு ராஜ வாரிசு என்று நிரூபிப்பதன் மூலம் தனக்கு குறைந்தபட்ச மரியாதையேனும் கிடைக்கும் என்பதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான்.
நாவலின் இறுதி பாகம் ஒரு அவல தரிசனத்தின் உச்சம். தன்னை ‘ந’ என்று காவல்துறை அதிகாரியிடம் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது பிறகொரு இரவின் மகாத்மா வந்து புன்னகைத்துச் செல்கிறார்.
O
(காலச்சுவடு இதழில் (208, ஏப்ரல் 2017) வெளியான கட்டுரை)
(நன்றி: சாபக்காடு)