கஷ்மீரின் பல்வேறு முகங்கள் கொண்ட தேசியத்தை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்தநூல் கஷ்மீரிகளை, கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுபூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது.
ஜம்மு கஷ்மீர் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய மாநில அரசு ஊழயர் சம்மேளனத்தின் (AISGEF) வடக்கு மண்டல செயலாளராகவும் இருந்த சம்பத் பிரகாஷ், திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்ட அஃப்ஸல் குரு ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பின்னிப்பிணைந்துள்ள இந்தநூல் பல்வேறு நிகழ்வுகளை விவரித்து நம்மை திகைப்பிலும், கவலைகளிலும் ஆழ்த்துகிறது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளராகவும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளராகவும் இருந்த எனக்கு, சம்பத் பிரகாஷின் தொழிற்சங்க உணர்வும், இயக்க ஞானமும், அரசு ஊழியர்-ஆசிரியர் இயக்கங்களில் செயல்படும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ள அனுபவங்களைத் தரும் என்று தோன்றுகிறது .இந்திய நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகளில் போதிய ஞானமின்றி செயல்பட்டுவரும் அரசு ஊழயர்=ஆசிரியர் இயக்கங்களால் இந்த நாட்டுக்கோ அல்லது அவர்களது உறுப்பினர்களுக்கோ எந்தவிதப்பயனும் இல்லை. ‘அரசியல் இல்லாத சங்கம்’ என்று கூறிக்கொள்வதிலும்கூட ஒரு அரசியல் – பிற்போக்கு அரசியல் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை சம்பத் பிரகாஷின் கதை நமக்கு கூறுகிறது.
அஃப்ஸல் குருவின் கதை உணர்வுபூர்வமாக இந்த நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு டாக்டர் ஆகி தனது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கனவுகண்ட ஒரு மாணவனின் வாழ்வு, கனவு எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதை நாம் அறியும்போது விம்முகிறோம். குறிப்பாக அஃப்ஸல் குரு – தபஸ்ஸும் காதலும், வாழ்வும் கவித்துவம் மிக்கதாக நம்முன் விரிகிறது இந்தப்பகுதியில் நந்திதா ஹக்ஸரின் எழுத்து நடையும் கவிதாவடிவம் கொள்கிறது. அஃப்ஸல் குருவின் எதிர்பாராத, தூக்கிலிடப்படும் முடிவு நம்மை உறைய வைக்கிறது.
இந்திய-கஷ்மீர் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கின்ற மதவெறி உணர்வுகள் இந்தத் துணைக்கண்டத்தையே நிம்மதியிழக்கச் செய்து வருகின்றன. மதவெறியும், தீவிரவாதமும் – அது பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையோ மக்களின் ஒற்றுமைக்கு எல்லையில்லா தீங்குகளை ஏற்படுத்தி வருகின்றன. இவை அனைத்தையும் தனக்கே உரிய அனுபவத்தோடும், லாவகத்தோடும் விவரிக்கிறார் நந்திதா ஹக்ஸர்,
தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைகளில் கஷ்மீர் பிரச்சனை பற்றிய புதிய புரிதல்களை உருவாக்கவுள்ள இந்த நூலை தமிழாக்கம் செய்ய வாய்ப்பளித்த நந்திதா ஹக்ஸர், இந்த நூலின் ஆங்கிலப்பதிப்பை படித்தவுடன் தமிழாக்கம் செய்ய ஊக்கமளித்த TNGEA முன்னாள் பொதுச்செயலாளரும், AISGEFன் இன்றைய அகில இந்தியத்தலைவருமான தோழர்.இரா.முத்துசுந்தரம், இந்த நூலை அழகுற வடிவமைத்து அச்சிட்டுள்ள தோழர் அனுஷ், எதிர் வெளியீடு ஆகியோருக்கு எனது நன்றி.
(நன்றி: கீற்று)