நூற்றுக்கணக்கான கோயில்கள்; ஆயிரக்கணக்கான அற்புதமான சிற்பங்கள். எனினும் என்ன? நம் கலாச்சாரப் பெருமைகளில் நமக்குப் பெருமித மும் இல்லை; அறிவார்ந்த புரிதலும் இல்லை. கல்லிலும், உலோகத்திலும் நம் சிற்பிகள் படைத்தளித்திருக்கும் சிற்பங்கள் பற்றி ஓர் அடிப்படைப் புரிதலைத் தரும் புத்தகங்கள் மிகவும் குறைவு. வரலாறு, சமூகம் பற்றி படிப்பவர் கூட சிற்பம் பற்றி படிக்கும் வாய்ப்பை பல்கலைக்கழகங்கள் தருவதில்லை.
என்றாலும் என்ன? செந்தீ நடராசன் என்னும் சிற்பக் கலை புரிந்த அறிஞர் ‘சிற்பம் தொன்மம்’ எனும் பெயரில், மிகவும் பொருள் அடர்த்திகொண்ட புத்தகம் ஒன்றைத் தந்துள்ளார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
பரவலாக நாடு முழுக்க 28 சிற்பங்களை எடுத்துக்கொண்டு, அந்தச் சிற்பங்கள் பற்றிய விளக்கங்களைத் தந்திருக்கிறார் செந்தீ நடராசன். அந்தச் சிற்பம் எந்த ஊரில், எந்தக் கோயிலில் இருக்கிறது என்ற விவரம், அச்சிற்பத்தின் பின்னணியான புராண விளக்கம், சிற்பம் கொண்டுள்ள சிற்ப லட்சணம், எதனால் அச்சிற்பம் சிறக்கிறது போன்ற தகவல், அச்சிற்பம் எம்மதம் சார்ந்தது போன்ற அனைத்து தகவல் களையும் மிக எளிமையான மொழியில் எழுதி விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
“கடின உழைப்பில் உருவான இந்த நூல், பொது வாசகனுக்காக எழுதப்பட்டது” என்று நாட்டுப்புறவியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் சரியாகவே சொல்லியிருக்கிறார்.
நரசிம்மர் காதலி வேட்டுவத்தி பற்றியது முதல் கட்டுரை. நரசிம்ம அவதாரம் நமக்குத் தெரியும். முழுக்க ரவுத்திரம், ஆவேசம் கொண்ட அவதாரம். இரண்யகசிபு எனும் அரக்கன் கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் பெறுகிறான். அவனைக் கொல்ல எடுத்த அவதாரம். கோரவடிவம். மனிதனும் சிங்கமும் சேர்ந்த வடிவம். இந்த நரசிம்மர் ஆந்திராவின் தெற்கு மேற்கு மலைத்தொடரில் வாழும் ‘செஞ்சுகள்’ எனும் இனக்குழுவைச் சேர்ந்த ஒரு செஞ்சுப் பெண்ணைக் காதலித்து வசப்படுத்திவிடுகிறார். அன்று முதல் செஞ்சுகள் நரசிம்மரை, தங்கள் மருமகன் என்று கருதுகிறார்கள். நரசிம்மரும் செஞ்சுப் பெண்ணும் தெலுங்கில் பாடிய காதல் பாடல் இது:
‘தங்கப்பெண்ணே வடிவழகே
உன்போல் இங்கே யாருண்டு?
மயக்கும் உனது முகவடிவில்
கல்லாய் சமைந்து நிற்கிறேன்
பெண்ணே, நீயெனை ஏற்காமல்
ஏனோ விலகிச் செல்கின்றாய்?’
‘யார் நீ எனக்கு? விலகிச் செல்
என்னிடம் மரியாதை காட்டு நீ
அன்றேல் எந்தன் கூர் அம்பின்
ருசியை அறியப் போகிறாய்...
முண்டக் கண்ணா, சடை முடியா
கோரப் பல்லா, குண்டையா
உன்னைக் கண்டு பயமில்லை
ஓடிப் போவாய் இக்கணமே...’
நரசிம்மர், கருணை காட்டு என் மீது என்று கெஞ்சுகிறார். ஒரு கட்டத்தில் இரக்கப்பட்டு, தொலைந்துபோகிறார் என்று ஒப்புக்கொள்கிறாள் செஞ்சுப் பெண். சமூகம் திருமணம் செய்துவைக்கிறது.
நாட்டார் பெருமிதங்களில் இதுவும் ஒன்று. இந்தச் சிற்பம் ஆந்திர மாநிலம் அஹோபிலம் கோயிலில் உள்ளது. செஞ்சு வேட்டுவப் பெண் வில்லேந்தி விரைப்பாக நிற்கிறாள். அவளது வலப்புறம் நரசிம்மன் கெஞ்சுகிறார்.
நான்காவது சிற்பக் கட்டுரை, சரஸ்வதி பற்றியது. இவள் நாட்டிய சரஸ்வதி. பிரசித்திபெற்ற ஹளபேடு சிற்பங்களில் ஒன்று. எட்டுக் கைகள். அதில் ஒன்று ஏடுகள் தாங்கியது. தேவியின் வலப்புறம் பீடத்தின் அடியில் மத்தளம் கொட்டுபவன்.
சிற்பம் பற்றி, சரஸ்வதி தொன்மம் பற்றி செந்தீ நடராசன் பின்வருமாறு எழுதுகிறார்: ‘கலைகளின் தேவியாக சரஸ்வதி கருதப்படுகிறாள். அவள் கைகளில் ஏந்தும் பொருட்களாக வீணை, வாள், அக்கமாலை, வில், ஏடு, கெதை, கலப்பை, சங்கு, சக்கரம், மணி, ஈட்டி, கமண்டலம்.. இவை சிற்பநூல் குறிப்பிடுபவை. வாகனங்கள் அன்னம், கிளி, மயில், செம்மறி ஆடு. பிற்காலத்தில் வேதக் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்படும் இவள், பவுத்த, சமண சமய தெய்வமாகப் போற்றப்படுகிறாள். பவுத்தர்கள் இவளை ‘வாக்தேவி’ என்று அழைக்கிறார்கள். சமண, பவுத்தர்கள் நூல் அறிந்தோர். எனவே சரஸ்வதிக்கு முக்கியத்துவம்.
பிரம்மாவின் இரு மனைவியருள் ஒருவர் என்று சரஸ்வதியைக் குறிப்பிடுவது உண்டு. சரஸ்வதி, விஷ்ணுவின் மனைவியாகவும் குறிப்பிடுவது உண்டு. வங்காளத்தில் அவளது வாகனம் செம்மறி ஆடு. நவராத்திரி பூஜையின் முக்கிய தெய்வம் இவள்.
நவராத்திரி விழாவின் மற்றொரு பரிமாணம், இது ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுவதாகும். உழைக்கும் மக்களின் விழாவாகப் பரிணமிக்கும் நிலை இது. தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்குப் பயன்படுத்தும் கருவிகளை பூஜையில் வைத்து வழிபடுவார்கள்.
கல்வி என்றால் ஏட்டுக் கல்வியும், சமய, அறக்கல்வியும் மட்டுமே அல்ல. ஆனால் உலக இயக்கத்துக்கு ஆதாரமான கைவினைஞரின் கல்வியும் போற்றப்பட்ட காலம் இருந்தது எனக் கொண்டால், ஆயுத பூஜை என்ற வழிபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல், ‘நாடிப்புலன்கள் உழுவார் கரமும், நயவுரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும்’ எனத் தொடங்குவது, ஆயுத பூஜை கருத்துருவுக்கு அணி சேர்ப்பதாக அமையக் காண்கிறோம். சரஸ்வதி வழிபாட்டின் தொடக்கம், பிற பெண் தெய்வங்களைப் போல் நாட்டார் மரபில் இனங்காண இயலும்.’
சரஸ்வதியின் சிற்பத்தை முன்வைத்து, செந்தீ நடராசன் எவ்வளவு பூட்டுகளைத் திறக்கிறார் என்று கவனிக்க வேண்டும். விஷயம், சாமானியர்களுக்கு முழுமையாகச் சென்று சேரவேண்டும் என்கிற கவலையே இத்தனை பாடுக்குக் காரணம். புத்தகம் 212 பக்கம் கொண்டது. அத்தனை பக்கமும் இந்த அக்கறை நீடிக்கிறது.
***
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள ஒரு சிறுமலை. கல்வெட்டில் இது திருச்சாரணத்து மலை என்றும் அறியப்படுகிறது. சிதறால் என்று வழங்கப்படுகிறது. இதன் உச்சியில் சமணக்கோயில். நிறைய புடைப்புச் சிற்பங்கள். அதில் நின்றகோலத்துச் சிற்பம். அது அம்பிகா இயக்கி. அம்பிகா யட்சி என்றும் சொல்கிறார்கள். 22-வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி அம்பிகா. இயக்கன் சர்வாண்ண தேவன். ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் காவல் தெய்வங்களாக ஒரு இயக்கனும், ஒரு இயக்கியும் குறிப்பிடப்படுகிறார்கள்.
தமிழகத்தில் பிரபலமான தீர்த்தங்கரர் சிற்பங்கள் ஆதிநாதரான ரிஷப தேவர், நேமிநாதர், பார்சுவ நாதர், மகாவீர வர்த்தமானர் ஆகியோர் சிற்பங்களே ஆகும். சமணப் பிரிவுகளில் திகம்பரமே பிரபலம். திசையை ஆடையாக அணிபவர்கள். அதாவது நிர்வாணிகள்.
அம்பிகா யட்சியைப் பத்மாவதி என்று இனம்கண்டார் ஆய்வாளர் கோபிநாத ராவ். செந்தீ நடரசன், அது அம்பிகா என்று கண்டுபிடித்தார். அம்பிகாவே நீடித்தது.
அம்பிகா யட்சிக்கும் நம் காரைக்கால் அம்மையாருக்கும் ஒன்றுபோலவே வாழ்க்கை. இருவருமே இறைவன் அருள் பெற்றவர்கள். அம்பிகா தன்னைவிடவும் பெரிய ஆன்மிகச் சாதனையாளர், இறைவனுக்கு நெருங்கியவர் என்பதை உணர்ந்ததும் அவரது கணவன் பிரிந்துசெல்கிறார். இதுபோலத்தான், காரைக்கால் அம்மையான புனிதவதியின் கணவரும் செய்கிறார். அம்பிகா, தர்மதேவதை ஆகிறாள். புனிதவதி, துறவு கொள்கிறாள். தம்மினும் மேம்பாடாகத் தம் மனைவிமார்கள் விளங்குவதை அந்தக் காலத்துக் கணவன்மார்கள்கூட விரும்பவில்லை போலும்!
இருபத்தோராவது கட்டுரை குன்றக் குறவன் பற்றியது. நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோயிலின் அற்புதமான சிலை (நான் இந்தச் சிலையைப் பார்த்துள்ளேன்). குறவன் நடக்கும் நிலையில் அமைந்த சிலை. அழகிய மீசையும், கொண்டையும், இடக்கையில் கொம்பும், குறவன் அடை யாளங்கள். தென் தமிழக கோயில்களில் குறவன் - குறத்தி சிற்பங்கள் தவறாமல் இடம்பெறுகின்றன. 15-ம் நூற்றாண்டு நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் இது. வைதீக ஆகம இறுக்கம் தளர்ந்து, நாட்டார்கலை அடையாளங்கள் கோயில்களுக்குள் சென்றது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியே ஆகும். தமிழ் மண்ணின் வாழ்க்கை முறை குறிஞ்சி, முல்லை என்றே தொடக்கம் கொள்கிறது. குன்றத்தில் வாழ்ந்தவர்கள் குறவர்கள். இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே குறவன் - குறத்தி சிலைகள் கோயில்களுக்குள் வந்துள்ளன.
செந்தீ நடராசனின் ‘சிற்பம் தொன்மம்’ போல நிறைய நூல்கள் வெளிவர வேண்டும். மாவட்டத் தலைநகர்கள், முக்கிய கோயில்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் எல்லாம் சிற்பம் குறித்த நூல்கள், விளக்கங்கள், புகைப்படங்கள் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். சிற்பங்கள், கோயில்கள், நூல்கள் எல்லாம் மக்களுக்கானவைதானே.
‘சிற்பம் தொன்மம்’ நூலைப் படித்து முடிக்கும்போது, சிற்பச் சுற்றுலா சென்றுவந்த உணர்வைப் பெற முடிந்தது.
(நன்றி: தி இந்து)