மனிதனின் முதல் விலங்கு நண்பனாக நாய் அறியப்பட்டாலும் தமிழ் நிலத்தில் ‘நாய்’ என்பது வசைச் சொல்லாகவே அறியப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டில் மனிதர்களுடன் நாய் எத்தனை நெருக்கமாக இருந்திருக்கிறதோ, அதே அளவுக்கு நாய்கள் பெரிதாக மதிக்கப்படவுமில்லை.
‘ஜல்லிக்கட்டு எழுச்சி’ நடந்த பிறகுதான் நாம் இழந்த நாட்டு மாட்டினங்களின் பெயராவது தெரியவந்திருக்கிறது. இதைப் போலவே நாம் இழந்த நாட்டு நாயினங்கள் ஏராளம். தமிழகம் மட்டுமில்லாமல், நாடெங்கிலுமே இது நடந்துள்ளது. காட்டுயிர்கள் பற்றி மட்டுமல்லாமல் வளர்ப்பு உயிரினங்கள், குறிப்பாக நாய் வளர்ப்பு பற்றிய முக்கியமான கருத்துகளை நீண்டகாலமாக முன்வைத்து வருபவர், மூத்த காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன். இவர் எழுதிய ‘இந்திய நாயினங்கள்’ நூல் சமீபத்தில் வெளிவந்துள்ளது.
நாய் நம்முடன் நெடுங்காலமாக வாழ்ந்துவந்தாலும்கூட வரலாற்றுப் பதிவுகளில் உரிய கவனத்தைப் பெறவில்லை. இந்தப் புறக்கணிப்பைத் தாண்டி, பண்டைய நாகரிகமாக அறியப்படும் மொகஞ்சதாரோவில் கிடைத்த நாய் சுடுமண் சிற்பம் தொடங்கி நடுகற்கள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாடு ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியப் பின்னணியில் நாயைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. அதிகம் பகிரப்படும் செவிவழிச் செய்திகள், கட்டுக்கதைகளின் அடிப்படையில் அல்லாமல், ஆதாரபூர்வ தகவல்களின் அடிப்படையில் 25 நாட்டு நாயினங்களைப் பற்றிய அறிமுகத்தை பாஸ்கரன் தந்திருக்கிறார். இந்த நாயினங்கள் அனைத்துக்கும் படங்களைத் தந்திருப்பது புத்தகத்தை முழுமையானதாக மாற்றுகிறது.
உள்நாட்டு நாயினங்களை உருவாக்கியதிலும் பராமரித்ததிலும் நாடோடிகள், ஆங்கிலேயர் கால சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். நம் நாட்டு நாய்கள் சிறப்பான மோப்பத் திறனைக் கொண்டிருந்தன. அவற்றின் பார்வைத் திறனும் கூடுதல் கூர்மையானது. வேட்டையிலும் காவலிலும் இது முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது. இமாலய மேய்ப்பு நாய், காரவான், முதோல், ராம்பூர், தமிழக நாயினங்களான கோம்பை, கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட முக்கிய மான நாயினங்கள் நூலில் பேசப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகே உள்நாட்டு நாயினங்களைப் பற்றிய கவனமும் அறிவியல்பூர்வ அணுகுமுறையும் தொடங்கியுள்ளது. விடுதலைக்குப் பிறகு மத்திய-மாநில அரசுகள், உள்நாட்டு நாயினங்களின் பாதுகாப்புக்கும் இனவிருத்திக்கும் தொடர் நடவடிக்கைகளை எடுக்காதது, பல இனங்களின் அழிவுக்கு முக்கியக் காரணமாகிவிட்டது. கலைகளையும் மரபுச் சின்னங்களையும் பண்பாட்டுப் பெருமையாகப் போற்றும் நாம், உயிரினங்களைப் பண்பாட்டுப் பெருமையாகக் கருதாமல் போவதால் ஏற்பட்ட பிரச்சினைகளில் ஒன்று இது. இந்தப் புத்தகத்தில் நாட்டு நாயினங்களின் பெருமைகளைப் போற்றியுள்ள அதேநேரம், லட்சக்கணக்கான ஏழை எளியோரும் குழந்தைகளும் தெருநாய்க் கடியால் பாதிக்கப்படுவதைப் பற்றி அக்கறையுடனும் அறிவியல் தரவுகளுடனும் பாஸ்கரன் விளக்கியுள்ளார். தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் தன்னார்வ அமைப்புகள் எப்படித் தவறாக வழிகாட்டுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மரக்கறி உணவை வலியுறுத்தும் விலங்குநேய அமைப்புகள் (பீட்டா, புளூ கிராஸ்) தெருநாய்களின் பெருக்கத்துக்கு எப்படிக் காரணமாக இருக்கின்றன என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
அறிவியல்பூர்வமான தரவுகள், வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் சுற்றுச்சூழல் நூல்கள் தமிழில் எழுதப்படுவது அரிது. தமிழ் பசுமை எழுத்திலும் விவாதங்களிலும் மேம்போக்கான புரிதலும் வெற்றுக் கோஷங்களும் ஒரு போக்காகவே மாறிவருகின்றன. இந்தப் பின்னணியில் சுற்றுச்சூழல் கரிசனம், அது சார்ந்த புரிதல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.
(நன்றி: தி இந்து)