“பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும், பாலியல் தொழிலாளியும், குறும்பட இயக்குனரும், பெண்ணியவாதியும், எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல்” (பின் அட்டை) என்று நூலை அறிமுகப்படுத்துகிறார் குளச்சல் மு.யூசுப். ‘நளினி ஜமீலாவின் இந்தச் சுயசரிதை திருத்தி எழுதப்பட்ட மறுபதிப்பு’ என்றும் இச்சுயசரிதை திருத்தி எழுதப்பட்ட தற்கான காரணங்களையும் “மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை” யில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஏழு அத்தியாயங்களில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறியிருக்கும் நளினி ஜமீலா இச்சமூகத்தின் மீது வைத்திருக்கும் விமர்சனங்கள் ஏராளம்.
பொருளாதார நிலையில் சிறப்புற்றிருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நளினி, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வறுமையின் காரணமாகக் கூலி வேலைக்குச் செல்கி றார். ஒன்பது வயதில் ‘மண்மடை’யில் முதன்முதலாக வேலைக்குச் செல்லும் போதிருந்தே தொடங்குகிறது ஒரு பெண் மீதான பாலியல் சார்ந்த பிரச்சினைகள். அந்த வயதிலிருந்தே ஆபத்தை எதிரில் கண்டு பயந்து ஓடத் தொடங்குகிறார். கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த நளினி பின்பு வீட்டு வேலைக்குச் செல்கிறார்.
பதினெட்டு வயதில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் தந்தை, அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியதால் தன்னுடைய காதலனைத் திருமணம் செய்யலாம் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறுகிறார் நளினி. ஆனால் காதலனைத் திருமணம் செய்ய முடியாமல் அவனோடு தொழில் செய்து வந்த வேறொரு நபரை மணக்க நேரிடுகிறது. மது, மாது ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டதால் மிகக் குறுகிய காலத்திலேயே நளினியையும் இரண்டு குழந்தை களையும் விட்டு விட்டு கணவன் இறந்து விடுகிறான்.
கணவன் இறந்த பிறகு குழந்தைகளைப் பாதுகாக்க தனக்கு ஐந்து ரூபாய் தினமும் தந்து விட வேண்டும் என்று மாமியார் கூறுகிறார். நளினிக்கு அப்போது கிடைக்கும் அதிகபட்சக் கூலி நாலரை ரூபாய் மட்டுமே. ‘பிள்ளை களைப் பாதுகாக்க பெரிய தொகையைச் செலவுக்குத் தரவேண்டுமென்று மாமியார் கூறியதைத் தொடர்ந்து தான் நான் பாலியல் தொழிலுக்கு வந்தேன்’ என்று கூறும் நளினி, தொடர்ந்து ‘நளினி ஜமீலா’ வாக மாறியதையும், தன்னுடைய பாலியல் தொழிலில் தான் பெற்ற அனுபவங்களையும், வேதனைகளையும், பலவிதமான ஆண்களின் மனநிலைகளையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தொடக்கத்தில் பாலியல் தொழிலாளியாக இருந்தவர் பின்பு ‘ஜூவாலாமுகி’ என்ற அமைப்பில் சேர்ந்து பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், அவர்களின் மறுவாழ்விற்காகவும் தொடர்ந்து போராடு தல், ஆவணப்படங்கள் தயாரித்துப் பாலியல் தொழிலாளர்களின் மனவுணர்வுகளைப் பிறருக்கு வெளிப்படுத்துதல், தொடர்ந்து வந்த ஊடகத் தொடர்புகள் ஆகியவற்றின் மூலமாகப் ‘பாலியல் தொழிலாளி’ (sex worker) என்ற நிலையிலிருந்து ‘சமூக சேவகி’ (social worker) என்ற நிலைக்கு மாறுகிறார்.
சமூகத்தில் வாழ்வதற்கான வழிகள் இல்லாமல் இருக்கும்போது தன்னையும், தன்னுடைய குழந்தை களையும் காப்பாற்றுவதற்காகப் பாலியல் தொழிலைத் தேர்ந்தெடுத்த நளினி ஜமீலா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்ததன் வழியாக இந்த சமூகத்தின் நிலை என்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண பெண்கள் அனுபவிக்கும் துயரங்களிலிருந்து பன்மடங்குத் துயரங்களைப் பாலியல் தொழிலாளர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். காவல்துறையினராலும், ரவுடிகளாலும் துன்புறுத்தப்படுதல், கொலை செய்யப்ப டுதல், செய்யாத தவறுகளும் அவர்கள் மேல் சுமத்தப்படுதல் எனப் பல கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
பெண் பாலியல் தொழிலாளர்களைத் தரம் குறைந்த வர்களாகப் பார்க்கும் இச்சமூகமானது, அவர்களோடு தொடர்பு கொண்ட ஆண்களைக் குற்றமற்றவர்களாகப் பார்க்கிறது. ‘நீங்கள் இத்தொழிலைக் கைவிட்டால் உங்களுக்கு வேறு வேலை தருகிறோம்’ என்று கூறும் இச்சமூகத்தை, “என்ன வேலை தருவார்கள் எங்களுக்கு? கல்வியும் ஆரோக்கியமும் உள்ள ஆட்கள் வரிசையாக வந்து நிற்கும்போது வேலைதர முடியாதவர்கள்தான் எங்களுக்கு வேலை தருவதாக உறுதி தருகிறார்கள்” என்று எள்ளி நகையாடுகிறார்.
‘எங்களுக்கு மற்றவர்களது பரிதாபமோ, தயவோ தேவையில்லை. எங்களுக்கு அங்கீகாரம்தான் வேண்டும்’ என்று அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இந்தச் சமூகம் வைத்திருக்கும் பதில் கேள்விக்குரியது.