புனிதமானவை, மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவை என்று நாம் எண்ணும் சில நிறுவனங்களின் உண்மை முகங்கள், அவற்றின் உள்ளே இருந்து வெளிப்படும் மனசாட்சிக் குரல்களால் எவ்வளவு போலியானவை என அம்பலமாகிவிடுகின்றன; மனித சமூகம் இப்படிப்பட்ட குரல்களால் அதிர்ந்து போகிறது, அல்லது ஒன்றும் செய்ய இயலாத அசதி நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. அண்மைக் காலத்தில் இப்படி வெளிப்பட்ட குரல்களின் ஆவணப் பதிவுகள்தான் ‘ஆமென்’, ‘நளினி ஜமீலா’, ‘ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்’, ‘நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி’ முதலிய நூல்களாகும். இவை அனைத்துமே குளச்சல் மு.யூசுப்’பால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
‘நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி’ என்னும் இந்த நூலைத் தன் வரலாற்று நூல் என்பதைவிட, ‘குற்றம் செய்த சாதாரண போலீஸ்காரனின் சுய ஒப்புதல் வாக்குமூலம்’ எனக் குறிப்பதே பொருத்தமானதாகும். 1970 பிப்ரவரி 18ஆம் தேதி மாலை நக்சலைட் புரட்சியாளர் ஏ.வர்க்கீசைத் தன் மனசாட்சிக்குப் புறம்பாக, மேலதிகாரிகளின் கட்டளையால், சுட்டுக் கொல்கிறார் ராமச்சந்திரன் நாயர் என்னும் சாதாரணக் காவலர். ஏறக்குறைய 34 ஆண்டுகளாக அவர் உள்ளத்தில் புழுங்கிக் கிடந்த இந்த உண்மையையும் மக்களின் பாதுகாப்பிற்காக இருப்பதாக மக்களால் கருதப்படும், நம்பப்படும் காவல் துறையின் மக்கள் விரோதச் செயல்களையும், அவற்றில் தானும் கூச்சமற்றுப் பங்கேற்ற நிகழ்ச்சிகளையும் நீதிபதியின் முன் அளிக்கப்படும் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் போல இந்த நூலில் எழுதி இருக்கிறார் ராமச்சந்திரன் நாயர்.
தனது 16ஆவது வயதில் ரப்பர் தோட்டமொன்றில் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய ராமச்சந்திரன் நாயர் பின்னர் சி.ஆர்.பி.’யிலும், கேரள எம்.எஸ்.பி.யிலும், ரிசர்வ் லோக்கல் போலீஸிலுமாக 34 ஆண்டுகள் ஒரு காவலராக, குறிப்பாக ஆயுதப் புரட்சியாளர்களை ஒடுக்கும் பிரிவில் கேரளா, ஆந்திரா, நாகலாந்து, மேற்கு வங்காளம் முதலிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.
“இவனை நாங்கள் உயிருடனல்லவா பிடித்தோம்? இவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லையே? இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர் படுத்த வேண்டும்” – இது ராமச்சந்திரன் நாயர் வர்க்கீசைப் பிடித்ததும் கூறியது.
“இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும், அல்லது நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்” – என எச்சரிக்கிறார் மாவட்ட எஸ்.பி., லட்சுமணா.
“அவர்களே இதைச் செய்துவிட்டு இதற்கு உடன்படாத காரணத்தால் என்னையும் கொன்றுவிடுவார்கள். குடும்பம், வாழ்க்கை என எல்லாமே என் கண் முன் விரிந்தன. அந்த ஒரு நிமிடம் நான் கோழையானேன். சுயநலமியானேன். தன்னுயிரைப் பாதுகாக்க வேண்டும். குடும்பத்துக்கு வேறுயாருமில்லை” என்று தன் உயிர் மற்றும் குடும்பத்திற்காகப் பயந்து வர்க்கீசைச் சுட்டுக் கொன்றார் ராமச்சந்திரன் நாயர். அன்று முதல் இறுதியாகத் தான் ஓய்வு பெறும்வரை, காவல்துறை என்ற அடக்குமுறை நிறுவனத்திற்குள் தானும் ஓர் உறுப்பாக ஆகிவிட்டதை எந்தவிதக் கூச்சமுமின்றி, மன உறுத்தலும் இன்றி இந்த நூலில் விவரித்துள்ளார் ராமச்சந்திரன் நாயர்.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களிடம் போலீஸ் செய்யும் ஊழல் முதலாகப் போலீஸ் சாதாரண மக்களிடமிருந்து எப்படியெல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை விரிவாக எழுதியுள்ளார். “தேவைகளின் நிர்பந்தம் காரணமாகவோ, என்னவோ அடுத்தவர்களின் கையில் இருந்து பணம் வாங்கும்போது குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை” என்று கூறும் ராமச்சந்திரன் நாயர், “சீரழிந்துபோன அரசியல் தலையீடுகளையும் ஆளும் கட்சியின் அரசியல் பகை தீர்ப்பையும் முழுச்சுமையுடன் தோளிலேந்திச் செல்லவேண்டியவர்கள், பாவம் இந்தக் காவலர்கள்தான்” என்கிறார்.
இந்த நூல் பல்வேறுவிதமான வினாக்களையும், ஐயங்களையும், பிரச்சினைகளையும் முன்வைக்கிறது. வேலியே பயிரை மேய்ந்தால், பின், பயிருக்குப் பாதுகாப்பு எது? ஏது? எல்லாத் தீங்குகளையும் – குடி, சீட்டாட்டம், தனி மனித மோசடி, லஞ்சம், மட்டமான குடும்பத் தலைவன் – கூச்சமறச் செய்துவிட்டு இறுதிக் காலத்தில் இப்படி ஒரு நூலெழுதுவது பாவ விமோசனமா, பாவங்களின் மன உறுத்தலா, சாவதற்கு முன் உண்மைகளைக் கூறிவிடவேண்டும் என்ற மரண வாக்கு மூல உணர்வா என்பதை ராமச்சந்திரன் நாயரோ, வாசகர்களோதான் கூறவேண்டும்.
வர்க்கீசைப் படுகொலை செய்தது தன் மன அந்தரங்கத்தில் உறுத்திக்கொண்டே இருக்கிறது எனக் கூறும் ஆசிரியர் வாழ்வின் எந்தத் திருப்பத்திலும் நல்லவனாக நடந்துகொள்ள முயற்சிகூட செய்யவில்லை. குடும்பத்தில் மனைவி தவிர பிறர், குறிப்பாக மகன்கூட அன்பு காட்டவில்லை. ஒரு குற்ற உணர்ச்சி எல்லாக் குற்றங்களையும் நியாயமாக்க முடியாது.
நிறுவனங்களுக்குள் பணியாற்றும் தனி மனிதர்கள், நிறுவனப் பற்சக்கரங்களின் ஒரு பல்லாக மாறிவிட வேண்டும்; மனசாட்சி இழந்து சுயநலத்திற்காக அமைதியாகி விடவேண்டும்; மனசாட்சி சார்ந்து எதிர்ப்பது என்றால் வாழ்க்கையை இழக்கத் தயாராக வேண்டும். இதுதான் இந்த நூல் கூறும் நீதியென்றால் அது சமூக அநீதியின் அறிவிப்பே ஆகும். குற்றங்கள் செய்தவனுக்குப் பாவமன்னிப்புக் கிடைத்துவிடலாம், ஆனால் அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இழந்த வாழ்க்கையை – அமைதியைப் பெறமுடியாது.
“எல்லா மோசமான அம்சங்களும் என்னிடம் இருந்தன. ஏதோ பெரும் கோபத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை என்னை இப்படியெல்லாம் நடந்துகொள்ளத் தூண்டியது, நான் செய்யவேண்டியிருந்த கொலைபாதகம் என்னிடம் உருவாக்கிய மனச்சிக்கலும் ஒரு காரணமாக இருக்கலாம். மதுப் பழக்கம், சீட்டாட்டம், லஞ்சம் என எந்தத் துர்ப்பழக்கம்தான் என்னிடம் இல்லாமலிருந்தது? எனது இளம் பருவமா? குடும்ப அமைப்பா? காவல்துறை வாழ்க்கை முறையா? மேலதிகாரிகளா? இவர்களில் யார் என்னை இப்படியாக்கி இருப்பார்கள்? ஒருவேளை இதுவெல்லாம் சேர்ந்துதானோ?
இப்படிப்பட்ட கேள்விகளால் யாரும் புண்ணியவானாகிவிட முடியாது. ஒழுக்கக் கேட்டின் ‘சிறு பொறி’ உள்ளே இருந்தாலே போதும்; வெளி உலகம் அதை ஊதித் தீப்பந்தமாக்கிவிடும்.