உன்னத இலக்கியங்கள் நமது கல்விக் கூடங்களில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. பள்ளிகளிலேயே சிலப்பதிகாரத்தையும் ஷேக்ஸ்பியரையும் ஊட்டிவிடுகிறார்கள். ஆனால் ஓவியங்களைப் பற்றி யாரும் பேசுவதேயில்லை. படங்களைக் காட்டுவதில்லை. நான் பட்டப் படிப்பிற்குச் சென்னைக்கு வந்த ஆண்டுதான் ஓவியம் என்றால் என்ன என்று ராஜாஜி மண்டபத்தில் அலையான்ஸ் பிரான்சேயால் நடத்தப்பட்ட ஒரு பிரஞ்சு ஓவியக் கண்காட்சியின் மூலம் தெரிந்துகொண்டேன்.
பிக்காஸோ, ச்சகால் இவர்களின் படைப்புகளை இங்கு கண்டு மூச்சடைத்துப்போனேன். ஒவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்டுத்துகிறார்.
பாறை ஓவியங்கள் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியங்கள்வரை இந்நூலில் பேசப்படுகின்றன. ஆனால் பாறை ஓவியங்கள் இந்தத் தொகுப்பிற்குப் பொருத்தமா எனச் சந்தேகம் எழுகின்றது.
ஐரோப்பிய ஓவியங்கள் உருவாக்கப்பட்ட பின்புலம், அவற்றின் பேசுபொருள், வடிவமைப்பு, ஓவியம் தீட்டும் செய்முறை இந்தியப் பாரம்பரிய ஓவியங்களினின்றும் வேறுபட்டவை. இன்று நம்மிடையே எஞ்சியிருக்கும் அரிதான இந்திய ஓவியங்கள் சமயம் சார்ந்தவை. அதிலும் ஆலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும் தீட்டப்பட்ட சுவரோவியங்கள். ஆனால் மேற்கத்திய ஓவியங்களில் பல மதசார்பற்றவை. மாளிகைகளையும் வீடுகளையும் அலங்கரிக்கக் கித்தானில் தீட்டப்பட்ட தைல ஓவியங்கள், புரவலர்களின் உருவப் படங்கள் எனப் பல செல்வந்தர்கள் இந்த ஓவியர்களை ஆதரித்தனர்.
ஆகவே அவர்களது குடும்பத்தினர் ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக நம் கவனத்தை ஈர்க்கும் வேறுபாடு மேற்கத்திய ஓவியங்கள், சிற்பங்கள் உருவ நியதிகளால் (iconography) கட்டுப்படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் சமயம் சார்ந்த கட்டுப்பாடுகள் இவர்களுக்கு இல்லை. இதனால் ஓவியர்கள் எல்லையற்ற சுதந்திரத்தில் இயங்கினார்கள். புரவலர்களும் கலைஞர்களுக்கு மிகுந்த சுதந்திரத்தை அளித்திருந்தனர்
ஒவியங்களைப் பற்றி எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. கண்ணால் காணும் ஒரு கட்புலக் கலையைச் சொற்களால் நாம் எவ்வாறு விளக்குவது? சொற்களால் விளக்க முடியாததைத்தானே ஓவியர் வரைகிறார். இந்த சிரமமான பணியை கிருஷ்ணன் செவ்வனே செய்திருக்கிறார். நூலாசிரியர் பொதுவாகக் கலைஞர்கள் மூலம் அவர்களது படைப்புக்களை அணுகுகின்றார். டச்சு ஓவியர் வெர்மீர் தீட்டிய முத்துக் காதணி அணிந்த பெண் என்று தலைப்பிட்ட புகழ்பெற்ற ஓவியம் தீட்டப்பட்ட பின்புலத்தையும் அதன் தனித்துவத்தையும் அழகாக ஆசிரியர் விளக்குகிறார்.
இந்த ஓவியத்தைப் பின்புலமாக வைத்து டிரேசி செவலியரால் நாவலாக எழுதப்பட்ட கதை பீட்டெர்வெபர் இயக்கத்தில் ஒரு எழிலார்ந்த திரைப்படமாக 2003-ல் ஆக்கப்பட்டு The Girl with the Pearl Earring என்ற தலைப்பில் வெளிவந்தது. (ஓவியர் பெயர் நூலாசிரியர் எழுதியிருப்பதுபோல் ஜான் வெர்மீர் அல்ல யோஹானஸ் அல்லது யான் வெர்மீர். இம்மாதிரி உச்சரிப்புக் குழப்பம் சில பெயர்களில் தலைதூக்குகிறது.) கலைப் படைப்புக்களில் வரலாற்றுப் பின்னணியையும் ஆசிரியர் விளக்குகிறார். மறுமலர்ச்சிக் காலம் பற்றிய பகுதி அருமையாக இருக்கிறது.
சென்னை போன்ற நகரங்களில் ஓவியக் கண்காட்சிகள் நடந்தாலும், அந்த நிகழ்வைப் பற்றி நாளிதழ்களில் செய்தி வருகிறது. ஆனால், அவற்றைத் தமிழில் விமர்சிக்க ஆளில்லை. எழுதும் சிலரும் இக்கலைக்கேற்ற துறைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை. இந்தியச் சிற்பக் கலை வரலாறு பற்றிய சில நூல்களில் உபயோகிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர்கள் இந்தத் துறையிலும் கைகொடுக்கும்.
எடுத்துக்காட்டாக bas relief என்பதற்குப் புடைப்புச் சிற்பம் என்ற சொற்றொடர் புழக்கத்திலுள்ளது. மாமல்லபுரத்து அர்ஜுனன் தபசு ஒரு புடைப்புச் சிற்பம். composition, Perspective போன்ற கருதுகோள்களுக்கு என்ன சொற்றொடர்களை நாம் பயன்படுத்தலாம்? சாலை ஒன்றைச் சித்திரிக்கும் மஸாச்சியோவின் ஓவியத்தை விவரிக்கும்போது ஆசிரியர் இந்த உத்தியைப் பற்றி (perspective) எழுதுகிறார் என்றாலும் அதற்கேற்ற தமிழ்ச் சொற்றொடர் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.
எழுபதுகளில் ஓவியம் பற்றிக் கட்டுரைகளை கசடதபற சிறுபத்திரிகைகளில் எழுதிவந்த வி. ஜெயராமன் இந்தப் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறார். வெங்கட்சாமிநாதன் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளும் இலங்கை ஒவியர் சநாதனின் எழுத்துக்களும் இத்தருணத்தில் என் நினைவிற்கு வருகின்றன. ஓவியக் கலையையும் அதன் பல பரிமாணங்களையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த இவர்கள் முயன்றார்கள்.,
ஜீசஸ் என்ற பெயரை ஏசு என்று குறிப்பிடும் நூலாசிரியர் ஜேம்ஸ் என்ற பெயரைத் தமிழில் யாக்கோபு என்று எழுதவில்லை. அதேபோல் தாமஸ், தமிழில் தோமா என்றும், டேவிட் தாவீது என்றும் மேரி, மரியாள் என்றும் இருக்க வேண்டும். விவிலியத்தில் வரும் பெயர்கள் யாவுமே தமிழ்ப்படுத்தப்பட்டுப் புழக்கத்தில் இருக்கின்றன. நம்மூர்களில் பல தமிழ்க் கிறிஸ்தவர்கள் அந்தப் பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின்போது ஐரோப்பிய ஓவியங்களின் தாக்கம் ஏற்பட்டது. பிந்தைய நாயக்க சுவரோவியங்களில் இந்தத் தாக்கத்தைப் பார்க்கலாம். ரவிவர்மா உட்படப் பல கலைஞர்களின் படைப்புகளில் ஐரோப்பிய ஓவியங்களின் பாதிப்பைக் காணலாம். இந்தியக் குறுநில மன்னர்கள் ஐரோப்பிய ஓவியங்களை வாங்கிப் பெருமையுடன் காட்சிப்படுத்தியிருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஒரு முன்னாள் மன்னரின் அரண்மனையில் ஒரு நாள் தங்கியபோது (அவர் ஒரு பறவை ஆர்வலர்) அவரது வரவேற்பறையில் ஆங்கில ஓவியர் ஜார்ஜ் ஸ்டப்ஸ் தீட்டிய குதிரை ஓவியம் ஒன்றைப் பார்த்தேன். மும்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் போன்ற சில அருங்காட்சியகங்களில் ஐரோப்பிய ஓவியங்களைப் பார்க்கலாம்.
ஓவியர்களின் பட்டியலும், கலை வரலாற்றில் பிரபலமாயுள்ள ஓவியங்களும் அவை இன்றிருக்கும் இடங்களின் பட்டியலும், பயன்படுத்தப்பட்ட நூல்களின் பட்டியலும் மிகவும் பயனுள்ளவை. ஆனால் சொல்லடைவு இல்லாதது பெரிய குறை. தமிழுக்குப் புதிதான ஒரு பொருளைப் பற்றிப் பேசும்போது சொல்லடைவின் தேவை அதிகமாகிறது. ஒரு நூலின் பயன்பாட்டை இந்த அங்கம் அதிகமாக்குகிறது.
நாற்பதுகளில் வெளிவந்த மயிலை சீனி வெங்கடசாமியின் நூல்களில்கூடச் சொல்லடைவு கச்சிதமாக இருந்தது. இப்போது கணிணியின் உதவியுடன் சொல்லடைவு தயாரிப்பது அவ்வளவு சிரமமானது அல்ல. இருந்தாலும் தமிழ்ப் பதிப்புலகின் இதன் அவசியம் இன்னும் உணரப்படவில்லை.
புத்தகத்தைக் கண்ணும் கருத்துமாக, நூலின் பேசுபொருளை மனதில் கொண்டு முரளி வடிவமைத்துள்ளார். அருமையான கட்டமைப்புடன், சிரத்தையுடன் உருவாக்கப்பட்டிருகிறது. கரவாஜியோவின் புகழ்பெற்ற படைப்பு அட்டையை அலங்கரிக்கிறது. வண்ண ஓவியங்களும் கோட்டோவியங்களும் துல்லியமாக அச்சிடப்பட்டிருக்கின்றன.
புத்தகத்தைப் புரட்டும்போது ஒரு கவின்மிகு ஓவியக் கண்காட்சியைக் காணும் அனுபவம் கிடைக்கிறது. உரிய அனுமதி பெற்று இந்த ஓவியங்களை இந்நூலில் பதிப்பிக்க ஆசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சியைப் பாராட்ட வேண்டும். ஆனால் ஓவியங்கள் மேலேயே அந்த எண்ணை அச்சிடுவதைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் அழகை இது சிதைக்கிறது. தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கச் செய்கிறது இந்நூல். பரிசாக அளிக்க உகந்த புத்தகம்.
(நன்றி: தி இந்து)