கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், பார்வைகள் வேறுபட்டிருந்தாலும், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பல்வேறு இடர்பாடுகளுக்கிடையிலும் வாழ்ந்து கனிவது என்பது எல்லோரும் விரும்பும் கனவாகவே இருக்கிறது. உராய்வுகள், கசப்புகள், விரிசல்கள், துரோகங்களைத் தாண்டி நீடிக்கும் தாம்பத்தியத்துக்குள் இருக்கும் அமரத்தன்மையையும் இனிப்பையும் இந்தச் சிறிய படைப்பு மௌனமாக நமக்குள் படரவிடுகிறது.
தற்போது 71 வயதாகும் பெண் நாவலாசிரியர் டயன் ப்ரோகோவன் ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இப்படைப்பின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு மட்டுமே ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.
முதுமையைக் கடந்துகொண்டிருக்கும் ஆலிஸ், வழக்கமாகத் தன் கணவர் ஜூல்ஸ் சமையலறையில் தயார் செய்யும் காபியின் நறுமணத்தில் கண் விழிக்கிறாள். ஆனால், காபித் தூளை வடிகட்டியில் தயார் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்தபடியே ஜூல்ஸ் இந்த உலகைத் துறந்துவிட்டதை எழுந்த பிறகே ஆலிஸ் பார்க்கிறாள். காலையில் நம் எல்லாரையும் போலவே எழுவதற்குச் சோம்பி, சுகமாய் ஆலிஸ் உறங்கும் அற்புத அரை மணி நேரத்தில், ஜூல்ஸ் மரணமடைந்துவிட்டதை முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குப் பிறகு அவளுக்குள் அந்த உண்மை இறங்கு கிறது.
ஒரு மனிதரின் இறப்பு அவரைத் தொகுத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உடன் இருப்பவர்களுக்கு வழங்குகிறது. அந்தத் துல்லியமான வாய்ப்பை அதனுடன் முதன்மையாகச் சம்பந்தப்பட்டவர் பகிர்ந்துகொள்ள முடியாது என்பது மட்டுமே கொஞ்சம் சங்கடமானது. ஆலிஸ் இந்தச் சங்கடத்தைக் கடக்க முயற்சிக்கிறாள். ஒரு முடிவை அவள் எடுக்கிறாள். ஒரு நாள் தன் கணவருடன் யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும்; அடுத்த நாள் இந்த உலகுக்கு அவருடைய மரணத்தை அறிவிக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறாள். இதுதான் ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ குறுநாவல்.
ஆலிஸ், ஜூல்ஸின் மரணத்தை மட்டுமே அன்றைய எதிர்பாராத நிகழ்ச்சியாக நினைத்திருந்த நிலையில் இன்னொரு எதிர்பாராமையாக ஒரு ஆட்டிஸ சிறுவனான டேவிட்டுடன் அந்த நாளை முழுவதுமாகக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் எழுகிறது. அந்தத் தம்பதியர் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மாடியில் தனியாக வசிக்கும் ஒரு பெண்ணின் மகன். தினசரி காலை ஒன்பதரை மணிக்கு ஜூல்ஸுடன் செஸ் விளையாடுவதற்காக வருபவன். மரணமடைந்த ஒருவரின் இருப்பை இரண்டு பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மிகவும் சிக்கனமாகவும் அதேவேளையில் ஆழமாகவும் சொல்லியிருக்கும் படைப்பு இது.
ஐம்பது ஆண்டுகள் வாழ்க்கைக்குப் பின்னர், அவர்தான் தனது முதல் காதலர் என்பதை உணர்கிறாள். ஆலிஸ், இறந்த ஜூல்ஸுக்கு இதமாக இருக்க வேண்டுமென்று அவருக்குச் செருப்புகளை அணிவிக்கிறாள். அவருடன் இத்தனை நாட்கள் பேசாமல் இருந்த, பேச இயலாமல் இருந்த விஷயங்களை எல்லாம் சகஜமாகப் பேசுகிறாள். வெறுத்தது, நேசித்தது, விட்டுவிட்டுப் போக நினைத்தது என எல்லாவற்றையும் ஜூல்ஸின் அண்மையில் அவள் நினைவுகூர்கிறாள். ஜூல்ஸ் கடைசியாகப் போட்டுக் கொடுத்த காபியை அவருடன் அமர்ந்து பருகுகிறாள்.
ஆட்டிஸ சிறுவன் டேவிட் எந்த மாற்றத்தையும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆடுகிறான். ஜூல்ஸ் காய்களை நகர்த்த முடியாத நிலையில் ஜூல்ஸின் தரப்பிலும் ஆடுகிறான். அவனுக்கு நீடித்த நினைவோட்டம் இல்லை. ஆனால், அவன் ஜூல்ஸ் இறந்துவிட்டதைக் கண்டுபிடித்துவிடுகிறான். ஆனால் அதை அவன், பாட்டி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை யிலிருந்து நடுவில் வந்த அம்மாவிடம் தெரிவிக்க முடியவில்லை. டேவிட் கச்சிதமாகச் சில அவதானிப்புகளையும் செய்கிறான். ஆட்டிசம் அவனை மெய்ஞானியாக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. “மிஸ்டர் ஜூல்ஸ் போய்விட்டார். இது மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம்தான்,” என்று ஒரு சந்தர்ப்பத்தில் ஆலிஸிடம் கூறுகிறான்.
ஆலிஸ் தன் கணவன் ஜூல்ஸின் மரணம் மட்டுமின்றி, ஒரு இன்மையின் சகல உணர்வுகளையும் அடைகிறாள். ஒரு மரணம் மெதுவாக உடலில் இறங்கி அது ஒரு எதார்த்தமாக மாறும் அனுபவத்தை வாசகர்களிடமும் ஏற்படுத்திவிடுகிறார். ஒரு நாளுக்குள் டேவிட், ஜூல்ஸை இடம்பெயர்த்து விடுகிறான்.
தகவல்தொடர்பு சாதனங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படுவதுதான் அன்பு; பேசுவதுதான்உரையாடல் என்பது பொது நம்பிக்கையாக ஆகிவிட்ட காலம் இது. ஆலிஸ், பேச முடியாத கணவருடன் பேசுகிறாள். சொற்களால் மட்டுமே உரையாடல் நிகழ்வதில்லை என்பதை இந்தச் சிறிய நாவல் அத்தனை அழுத்தமாகச் சொல்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பு என்பதே கிட்டத்தட்ட வாசகர் மீதான வன்முறையாக மாறிவரும் நம் சூழலில் நாவலாசிரியரின் உத்தேசங்களையும் த்வனியையும் கடத்தியுள்ள மொழிபெயர்ப்பாளர் ஆனந்தின் பணி நன்றிக்குரியது.
(நன்றி: தி இந்து)