அது ரஷ்யப் புரட்சி நடந்து சில ஆண்டுகளான 1924 ஆம் ஆண்டு. ரஷ்ய ஜார் மன்னராட்சியின் கீழ் ஏழ்மையிலும் , கல்வியுரிமை மறுக்கப்பட்டு அறியாமையிலும் அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்காக போராடிக் கொண்டிருந்த மக்களை விடுவித்த கையோடு அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தது சோவியத் பாட்டாளிகளின் அரசு.
அப்போதைய சோவியத் நாட்டின் கிர்கீசிய பகுதியில் ஒரு மலையடிவாரத்தில், பரந்த பீடபூமியில், பல்வேறு கனவாய்களிலிருந்து சலசலவென்று ஒலியெழுப்பியபடி மலையாறுகள் வந்து குவியும் இடத்தில் இருந்தது குர்கூரெவு கிராமம். இதன் கீழே மஞ்சள் சமவெளி எனப்படும் பிரமாண்டமான கஸாக் ஸ்டெப்பி புல்வெளி நிலம் பரந்து கிடக்கிறது.
இந்த கிராமத்துப் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பெற்று அங்கு வருகிற கல்வித் துறை அறிஞர் அல்தினாய் என்னும் பெண்மணி விழாவிலிருந்து திடீரென குழப்பமும், தடுமாற்றமும் மிக்க மனநிலையுடன் வெளியேறிப் போய் ரயிலேறி விடுகிறார். அதே விழாவிற்கு வந்திருக்கிற பிரபல ஓவிய ஆசிரியரும், இலக்கியப் படைப்பாளியுமான ஒரு இளைஞர் , அல்தினாயின் பதற்றத்திற்கான காரணத்தை அறியத் துடிக்கிறார். நகரத்திற்குத் திரும்பிச் சென்ற சில நாட்களில் அல்டினாய் இந்த இளைஞருக்கு எழுதுகிற தன் வரலாற்றுக் கடிதத்தின் வழியாக இந்த முதல் ஆசிரியர் என்னும் இக்குறுநாவல் வளர்ந்து முடிவடைகிறது.
1924 ஆம் ஆண்டுகளில் சோவியத் அரசால் இந்தக் கிராமத்தின் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்க அனுப்பப்பட்ட இளைஞன் தூய்ஷன். இவனும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவன்தான், ஆனால் இவன் தந்தைக் காலத்திலேயே வேலை தேடி ஊரைவிட்டு வெளியேறியவர்கள். தூய்ஷன் தன் நோக்கம் பற்றி கிராமத்து மக்களிடம் தெரிவிக்க, அதுவரை கல்வியைப் பற்றி அறியாத அந்த கிராமத்தினர் “படிப்பா? பள்ளிக்கூடமா? எங்களுக்கு எதுக்கு இதெல்லாம்?” - என துக்கி எறிந்து போகிறார்கள். ஆனால் இதைக்கண்டு சோர்ந்து போய்விடவில்லை தூய்ஷன்.
அந்த கிராமத்தின் மலை மேல் புரட்சியின் காரணமாக பணக்காரன் ஒருவன் விட்டுச்சென்ற குதிரைக்கொட்டகை ஒன்றை சீரமைக்கும் பணியில் பல நாட்கள் காலை முதல் மாலை வரை தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். பின் கிராமத்து மக்களிடம் அரசின் ஆணையினைக் காட்டி பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைக்கிறான். அதுவரை ஸ்டெப்பி புல்வெளியில் கால்நடைகளின் எருக்களைச் சேகரித்துக்கொண்டிருந்த அக்கிராமக் குழந்தைகள் மேல் கல்வியின் வாசம் படர்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனையும் சாதித்துக் கொண்டிருக்கும் தூய்ஷன் முறையாக கல்வி பயின்றவரில்லை, குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் கல்வி உளவியலும் அறிந்தவரில்லை. ஓரளவுக்கே எழுத்துக் கூட்டி படிக்க அறிந்தவர், ஆனால் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் தன்னிடம் உள்ள குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து அவர்களை உயர்த்துவதற்கு பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டுக் கொண்டிருந்தார் தூய்ஷன். தங்களிடம் அன்பு காட்டிய தனது ஆசிரியரிடம் மாணவர்களும் மிகவும் ஒட்டுதலுடன் இருந்தனர்.
அவர்களில் அல்தினாய் சுலைமானாவ் என்ற தாய் தந்தையை இழந்த, தன் சித்தி வீட்டில் வளரும் மாணவி முக்கியமானவர். கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வமும், வேகமும் மற்றும் அப்பள்ளியிலேயே வயதில் மூத்த மாணவியும் அவராவார். இவ்வாறு நாள்கள் சென்று கொண்டிருக்கையில் அனாதைப் பெண்ணுக்கு படிப்பெதற்கு என அல்தினாயின் சித்தி ஒரு வயதானவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறாள். இதனை அறிந்த ஆசிரியர் தூய்ஷன் அல்தினாயையை அவளின் சித்தியிடம் இருந்து காக்கும் முயற்சியில் கடுமையாக தாக்கப்படுகிறார். உடைந்த கையுடன் இரத்தம் வழிய கடத்திச் செல்லப்படும் அல்தினாயிடம் “ஐயோ சிறு பெண்ணே இந்தக் கழுகுகளிடம் இருந்து உன்னைக் காப்பாற்ற முடியவில்லையே” என மனதால் குமுறும் அவரது சோகம் மனதைப் பிசைகிறது.
பின் சில நாட்கள் கழித்து சோவியத் செம்படையுடன் சென்று அந்தக் கழுகுகளிடமிருந்து சீரழிக்கப்பட்ட அல்தினாய் சுலைமானாவை மீட்டு வருகிறார் தூய்ஷன். பின் நகரத்திற்கு கல்வி பயில அனுப்பி வைக்கிறார். ரயிலில் வழியனுப்பும் காட்சி ஒரு காவியம்.
நகரத்திற்குச் செல்லும் மாணவியான அல்தினாய்க்கு மிகச்சிறந்த கல்வி தந்து வளர்த்தெடுக்கிறது சோவியத் பாட்டாளி வர்க்க அரசு. விடாமுயற்சியுடன் உழைத்து கல்வி பயின்று பல்கலைக்கழகப் பட்டம் பெற்று, பின் பேராசிரியரும், துறையின் தலைவரும் ஆகிறார் அல்தினாய்.
இவ்வாறு அவள் நகரத்தில் கல்வி பெறும்போது கடிதம் மூலம் தனது முதல் ஆசிரியனைத் தொடர்பு கொள்ள முயல்கிறாள்.ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
பிறகுதான் ஒருநாள் நாவலின் தொடக்கத்தில் உள்ளது போல அல்தினாயின் இளமைக்கால கிராமமான குர்கூரெவுக்கு புதிய பள்ளிக்கட்டிடத் திறப்பு விழாவுக்கு அவள் அழைக்கப்படுகிறாள். இப்போது அந்த கிராமத்தில் கல்வி செழித்து வளர்ந்து பல பட்டதாரிகள் உருவாகி இருந்தனர். இந்தக் கல்வி வளர்ச்சிக்கெல்லாம் விதை தூவிய தனது முதல் ஆசிரியர் தூய்ஷன் பற்றிய நினைவுகளில் ரயிலில் செல்லும்போது குழந்தைப் பருவத்தில் தானும் தனது ஆசிரியர் தூய்ஷனும் சேர்ந்து நட்ட பாப்ளர் மரங்களை நினைத்துப் பார்த்து மனமுருகுகிறாள்.
பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் மேடையில் அல்தினாய் அமர்ந்திருக்கிறாள். அப்போது இந்தப் பள்ளியின் திறப்பு விழாவிற்காக பழைய மாணவர்கள் அனுப்பிய தந்திகளை முதியவர் ஒருவர் குதிரையில் விரைவாக வந்து தந்துவிட்டு தனது அடுத்த பணியை கவனிக்கச் செல்கிறார். அவரைப் பற்றிய பேச்சு அங்கு எழுகிறது. அதிலிருந்து வந்து சென்றவர் இங்கே இத்தனை படித்தவர்கள் உருவாகவும், பிரமாண்டமாக இப்பள்ளிக்கூடம் எழும்பவும் காரணமான தனது முதல் ஆசிரியர் தூய்ஷன் என்பதை உணர்ந்து துடித்துப் போகிறாள்.
கல்வியின் கதவுகளை குர்கூரெவு கிராமத்திற்குத் திறந்து புதிய உலகத்தைக் காட்டிய தூய்ஷன் , அதே கிராமத்தில் கடமை தவறாத தபால்காரராகப் பணியாற்றி வருவதையும், அவர் இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு முதல் மரியாதை செய்யப்படாததையும் குறித்து மிகுந்த மன வருத்தம் அடைந்துதான் பள்ளி திறப்பு விழா நிகழ்விலிருந்து பாதியிலேயே அல்தினாய் வெளியேறுகிறாள். சீரழிக்கப்பட்ட தன் வாழ்வை மீட்டு நகரத்தில் கல்வி அளித்து புதிய வாழ்வை அளித்த தன் முதல் ஆசிரியன் தூய்ஷனின் நினைவுகளைப் பற்றி அல்தினாய் எழுதும் கடிதமாக நாவல் வளர்ந்து முடிவடைகிறது.
அதிகம் படிக்காத அந்த இளைஞன் , தானே சொற்களை அசை கூட்டிப் படித்தவன்,கையில் ஒரு பாடநூல் கூட இல்லாமல், ஏன் சாதாரண அரிச்சுவடி கூட இல்லாமல் இப்படிப்பட்டதொரு மகத்தான காரியத்தைச் செய்ய எப்படித் துணிந்தானோ? பரம்பரை பரம்பரையாகக் கல்வியறிவே இல்லாத குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தருவதென்பது விளையாட்டல்ல. பாடத்திட்டம், பாடம் சொல்லித்தரும் முறை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் தூய்ஷனுக்கு ஒன்றுமே தெரியாது. சரியாகச் சொன்னால் , இவையெல்லாம் இருக்கக் கூடும் என்று கூட அவர் எண்ணவில்லை. தூய்ஷன் தன்னால் இயன்ற முறையில், தனக்கு அவசியம் என்று பட்ட முறையில் , உள்ளுணர்வு என்கிறோமே அதன்படி படிப்புச் சொல்லித் தந்தார். தனக்கே தெரியாமல் வீரச்செயல் புரிந்தார். ஆம்,அது ஒரு வீரச்செயல்தான்,ஏனெனில் அந்நாள்களில் தம் கிராமத்தை விட்டு வெளியில் எங்குமே செல்லாத மாணவர்களுக்கு தூய்ஷனின் குதிரைக் கொட்டகைப் பள்ளிக் கூடம் முன்பின் கேட்டறியாத ஓர் உலகத்தைத் திடீரெனத் திறந்து காட்டியது.
மனிதர்கள் தனது உயர்ந்த பண்புகளால் உயர்ந்து நிற்கிறார்கள். அதிலும் பொருளாதாரச் சிக்கல், சமூகச் சிக்கல், உளச்சிக்கல் மிகுந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு பலவித தடைகளைத் தாண்டி கல்வி அளித்துவரும் நமது ஆசிரியப் பெருமக்கள் அல்தினாய் மனதில் நிற்கும் அவளின் முதல் ஆசிரியரான தூய்ஷன் போல் எப்பொழுதும் மிக உயர்ந்து நிற்பவர்களே.
இந்நாவலை ரஷ்ய மொழியில் எழுதியவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சிங்கிஸ் ஜத்மாத்தவ். தமிழில் இதனை மொழிபெயர்த்துள்ளவர் பூ.சோமசுந்தரம் என்பார். இது எழுபது பக்கங்களே ஆன குறு நாவல், ஆனால் இதைப் படித்து முடித்தும் என் மனதில் எழுந்த எண்ண அலைகள் அடங்க வெகுநாட்களானது. நீங்களும் படித்துப் பாருங்களேன் என் அனுபவம் பொய்யில்லை என்பதை உணர்வீர்கள்!