பிரஸாந்த் மோரே எனப்படும் ஜே.பி.பி.மோரே தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு பற்றிய ஆய்வாக இந்நூலை எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம் வரலாறு என்றால் அது தென்னிந்திய முஸ்லிம்களை மையப்படுத்தாமல், வட இந்திய முஸ்லிம்களின் வரலாற்று நிழலாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதிலிருந்து மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்க முயற்சி செய்கிறது. முனைவர் பட்டத்திற்கான அவருடைய ஆய்வுதான் முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி - தமிழ்நாடு மற்றும் சென்னை 1930 - 1947 எனப்படும் இந்நூல்.
தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை மிக இயல்பாகவும் அரசியல் குறித்த சிந்தனைகளை அலட்சியப்படுத்தியதாகவுமே இருந்துள்ளது. இப்போதைய அரசியல் விழிப்புணர்வு வரை முஸ்லிம்களுடைய நிலையைக் கவனித்தால், அவர்களாகவே எழுச்சிபெற்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்ததில்லை என்பது தெரியவரும். இஸ்லாமிய வாழ்க்கையே போதும் என்கிற எண்ணமே மேலோங்கியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். முஸ்லிம்களுக்குள்ளேயே பலமாக வேரூன்றிய தப்லீக் இயக்கம் இப்போதும் அரசியலை வெறுக்கின்றது. அரசியல் எழுச்சி இஸ்லாமிய உணர்வுகளை மழுங்கடித்துவிடும் என்று அது கற்பிதம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் அரசியல் விழிப்பை அடையவிடாமல் தடுப்பதிலும் அது முனைந்து செயல்பட்டு வருவதைக் காணமுடியும்.
உலகத் தலைவர்களைப் படுகொலை செய்வதைத் தங்களின் ஏகாதிபத்திய உரிமையாகவே கருதும் அமெரிக்க சி.ஐ.ஏ.யினுடைய முன்னாள் அதிகாரிகளில் ஒருவராக கிரகாம் இ புல்லர் தன்னுடைய இஸ்லாமின் எதிர்காலம் என்ற நூலில் தப்லீக் ஜமாத்தைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார் : “அமைதியான அரசியல் கலப்பில்லாத இயக்கம்”. அதே போல கலிபோர்னியா பல்கலைக் கழக அறிஞரான பார்பரா மெட்காஃப் தெற்காசிய இஸ்லாம் குறித்த தனது ஆய்வில், “அரசியல் கலப்பில்லாத மத அடிப்படை மறுமலர்ச்சிக்கான அமைதியான இயக்கம்” என்று கூறுகிறார். இந்த இரண்டு மேற்கோள்களிலும் “அமைதி” என்ற சொல் “அரசியல் கலப்பில்லாத” என்ற சொற்றொடரும் இணைக்கப்பட்டிருப்பதைக் கூர்ந்து நோக்குவது அவசியம் (ஆதாரம் : த சண்டே இந்தியன் - 11, ஜனவரி, 2009.) அரசியலை எண்ணாத சமூகம் கல்வி வளர்ச்சியையும் இயல்பாகவே கைவிட்டுவிடும். அப்படித்தான் இந்திய முஸ்லிம்களின் நிலை பரிதாபகரமாகவே இருந்து வந்துள்ளது; இப்போதும் கூட இதில் தலைகீழ் மாற்றங்கள் எதுவும் உண்டாகிவிடவில்லைதான் - சச்சார் குழு அறிக்கை சாட்சியாக! இது மாதிரியான ஆய்வுகளை எவரேனும் முயற்சி செய்தால் அவர்களுக்கான முன்னெடுப்புகளை இந்தநூல் எடுத்துக் கொடுக்கும்.
Book Reviewஆசிரியர் எடுத்துக்கொண்டிருக்கிற இந்தக் கால கட்டம், இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கிய உச்சத்தைக் கொண்டிருப்பது, பிரிட்டிஷாருககு எதிரான விடுதலைப் போராட்டங்கள் பேரளவில் நிகழ்ந்து, அவர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடித்து வெற்றி பெற்ற கட்டமாகும். இந்தச் சமயத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்பதை ஆய்வு செய்துள்ளது இந்நூல். ஆதலால் அதற்க முந்திய நிலை என்ன என்பதையும் ஆசிரியர் ஆய்வு செய்திருக்கிறார். அவற்றுள் புதிய தகவல்களும் அடங்கியுள்ளன.
தென்னிந்திய முஸ்லிம்கள் வணிகத்தில் ஈடுபட்டு, சோனகர்களுடனும் இதர பிரிவினருடனும் அவற்றைக் கையாண்டு வாழ்ந்திருப்பது ஒரு வகை. இஸ்லாமிய நடைமுறைகள் மேலெழும்போது இதர சமூகத்தாருடன் கொள்கிற பிணக்குகள் அல்லது இணக்கங்கள் பிறிதொரு வகை. ஆனாலும் வணிகத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள் அரசியல் ஆதரவைப் பெற முனையாமல், வருங்காலம் குறித்த சிந்தனைகளில்லாமல் இருந்தது பெரிய வேடிக்கையாகவே இருந்துள்ளது. வணிகத்தை மேம்படுத்துபவர்கள் அந்தந்த நாட்டின் அல்லது பகுதியின் தலைநகரங்களிலோ, வியாபார மேம்பாட்டுப் பகுதிகளிலோ தங்கள் நிறுவனங்களை விஸ்தரித்துக் கொள்வதே இயல்பானது. ஆனால் தமிழ் முஸ்லிம்கள் வெளி நாட்டினருடன் தொழில் தொடர்புகளை வைத்துக் கொண்டிருந்தாலும் சென்னையில் வந்து காலூன்றவில்லை. அவர்களுடைய அதிகபட்சத் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்து முஸ்லிம்கள் மாத்திரம் இராமநாதபுரம் இராஜாவுடன் உறவுகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். கடலூருக்கு அருகிலுள்ள பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர் மற்றும் பிரபல வணிகரான மஹ்மூது ரெய்னா உள்ளிட்ட கப்பலோட்டிய வேறு பல முஸ்லிம்களும் சென்னையில் வந்து குடியேறவில்லை, இங்கிருந்தபடியே வர்த்தகம் புரியவும் இல்லை. (பக்.29)
சென்னை ராஜதானியில் மூன்று சதவிகிதம் மாத்திரமே இருந்த பிராமணர்கள் படுவேகமாக வளர்ச்சி யடைந்து கல்வித் துறையிலும் அரசுப் பணிகளிலும் ஆதிக்கம் பெற்றார்கள். இதன் பின்னர்தான் முஸ்லிம் களிடையிலும் நவீன கல்வி குறித்த எண்ணம் தோன்றியது. 1902- ஆம் ஆண்டில் தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து வந்த சூழல்களில் முஸ்லிம்களின் மேட்டுக்குடிப் பிரிவும் உண்டானது. இவவ்ளவு முக்கியச் சூழல்கள் நிகழ்ந்தும் கூட முஸ்லிம்களின் அரசியல் எண்ணம் பலமடைய வில்லை. பிராமணர் - பிராமணரல்லாதார் போன்ற பிளவுகள் அதைப் பிரதிபலித்த நீதிக்கட்சித் தோற்றம், பின்னர் சுயமரியாதை இயக்கம் ஆகியன தோன்றவும் இவற்றினால் அதிர்வலைகள் தோன்றின. இவைதான் முஸ்லிம் சமூகத்தை இலேசாக அசைத்தும் பார்க்கின்றன. அதுவரையிலும் உருது முஸ்லிம்களுடன் மார்க்க ரீதியான ஒருங்கிணைப்பைத் தமிழ் முஸ்லிம்களும் கொண்டிருந்தார்கள்.
சுயமரியாதை இயக்கம் திராவிட உணர்வுகளை முன்மொழியும் போது திராவிடத் தன்மைக்கு அப்பாற்பட்ட உருது முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் முஸ்லிம்கள் இனரீதியாகப் பிளவுபடும் தன்மை உண்டானது. ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் சென்னை ராஜதானியில் உருவாக முடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் என்று தோன்றுகிறது. அகில இந்திய அளவில் கிலாபத் இயக்கமும் இதே காலத்தில்தான் நடந்தது. வட இந்திய முஸ்லிம்கள் பெற்றிருந்த அரசியல் உணர்வின் வீரியத்தை தென்னிந்திய முஸ்லிம்கள் பெறவில்லை; என்றாலும் தேக்க நிலையும் இல்லை. வெளிப்புறத் தாக்குதல்களினால் முஸ்லிம்களும் முடங்கிவிட முடியாமல் போயிற்று. ஒரு வகையான நிர்பந்தச் சூழல்தான். முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு என யூகிக்கலாம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான சச்சரவுகள் குறித்து மோரே குறிப்பிடும்போது, இஸ்லாம் தென்னிந்தியாவில் கால் வைத்ததில் இருந்தே இதற்கான காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என்கிறார் (பக் 105) இதைக் குறித்து மேலும் ஆய்வு செய்தலே நல்லது. இது ஆசிரியர் ஜே.பி.பி.மோரேயின் சொந்தக் கருத்துதான்.
ஆயிரக்கணக்கிற்கும் மேலான குறிப்புகளும் நூற்களுமாக அவருடைய இந்த ஆராய்ச்சி நூலுக்கு உதவியுள்ளன. ஆனால் அவருடைய சொந்தக் கருத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் எந்த மேற்கோள்களும் இல்லை அவரிடம். முதலில் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இஸ்லாம் அதன் ஆரம்பக் காலத்திலேயே உணரப்பட்டது. இங்கு முகலாயர் களின் வருகை தேவைப்படவில்லை. சோனகர்கள் எனப்படும் அரேபிய வணிகர்களின் மூலமே அது நிகழ்ந்தது. முத்துக்கள், ரத்தினங்கள், ஏலக்காய், குதிரைகள் என்று பரஸ்பர பரிமாற்றங்கள் மூலம் நிகழ்ந்த உன்னதமான வியாபார உறவுகளும். சூப்பிகளின் ஞானப் பிரச்சாரம் - சேவைகளும் இஸ்லாம் பரவுதலுக்கான உந்துசக்திகள். அப்போது வணிகம் சுமூகமான மதமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.
ஆசிரியர் மோரே இந்து - முஸ்லிம் சச்சரவுகளைக் குறிப்பிடும் போது ஆர்.எஸ்.எஸ். தோன்றுவதற்கு முன் மிகச் சிலவற்றையே சொல்கிறார். அனால் அவர் பட்டியலிடும் பெரும்பாலான வகுப்பு மோதல்களின் காலகட்டம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிறப்புக்குப் பின்னர்தான் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. இந்தியாவில் வகுப்பு மோதல்கள் உக்கிரமாய் வெளிப்பட்டபோது அவற்றின் அலையடிப்புகளே தமிழ்நாட்டிலும் நேர்ந்துள்ளன. மேலும் இஸ்லாம் இந்திய மண்ணில் நுழைந்தபோது ஒன்றுபட்ட இந்து மதம் என்பதும் கிடையாது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் மட்டுமே இருந்தன. இந்து என்ற நாமத்தையே பின்னர் அரேபியர்கள்தான் வழங்கினர். கி.பி. 632-ல் முகம்மது நபியின் மறைவுக்குப் பின் கி.பி. 700-ம் ஆண்டியலேயே நபித் தோழர்களை மிகவும் நெருங்கியிருந்த ஹஸரத் நபி இப்னே சபி என்பவர் குஜராத்தின் பாட்புட் கிராமத்திற்கு வந்து சூஃபித்துவ நெறிமுறையின் கீழ் இஸ்லாத்தைப் பரப்பியுள்ளார். காஷ்மீரும் சூஃபித்துவப் பண்பாட்டில் மலர்ந்ததுதான் என்பதையும் பல வரலாற்று ஆசிரியர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாகவே இருவேறு விதமான கலாச்சாரங்கள் ஒரே மண்ணில் இடம் பெறுகையில் சிறுசிறு சச்சரவுகள் முதல் பெரும் மோதல்கள் வரை ஏற்படுவது இயற்கையே. ஆனால் அப்படிப்பட்ட மோதல்களுக்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், நம் வாழ்க்கை அனுபவங்கள் அவற்றிற்கிடையே நல்லுறவுகளை மேம்படுத்த வழிவகுக்கின்றன. இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஒரு நடைமுறை வழியாகப் பார்க்காமல் நமது பாரம்பரியப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவும் பார்த்திருக்கும் ஹக்கீம் அஜ்மல்கான் (1863 - 1928) போன்ற ஆளுமைகளும் நம்மிடையே உள்ளனர். (இந்தியாவும் இஸ்லாமும் - டி.ஞானையா பக்.135) முஸ்லிம்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியதால். அவர்கள் தம் வணிக நலனின் பொருட்டாக சமய ஒற்றுமையை விரும்புபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். சூஃபிகளின் வருகையும் அவர்களின் பணியும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே சுமுக நிலைகளை உருவாக்கத் தவறவில்லை.
முகம்மது அலி ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்குத் தமிழ் முஸ்லிம்களின் ஆதரவு எப்படி இருந்தது? அவர்களும் அதை விரும்பியே இருக்கிறார்கள். எனினும் சிறு தயக்கமும் ஊசலாட்டமும் கூடவே இருந்துள்ளன. இதனோடு இயைந்ததாக பெரியார் திராவிட நாடு கோரிக்கையையும் எழுப்பியிருந்தார். அவர் அதற்கு முஸ்லிம்களின் ஆதரவை எதிர்பார்த்தது இயல்பானதே. ஆனால் திராவிட நாடு கோரிக்கையை விடவும் பாகிஸ்தானுக்கான கோரிக்கையே முஸ்லிம்களிடம் அதிகம். முஸ்லிம்களின் வாழ்க்கையில் இஸ்லாத்தின் மைய மதிப்பீடுகளின் வரலாறு சார்ந்த தொடர்ச்சியே பாகிஸ்தான் கோரிக்கை என்று மோரே கூறுகிறார். இதை பிரிட்டிஷ்காரர்கள் துரிதப்படுத்தியது வரலாற்று உண்மை. தங்களின் காலனி நாடுகள் வளர்ச்சி பெறுவதை எந்த ஏகாதிபத்தியமும் விரும்பாது. எதிரும் புதிருமாக இருந்த பெரியாரும் ராஜாஜியும் முஸ்லிம்களின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது சுவாரசியமான செய்தியாகும். இந்தியா ஒரு ராமராஜ்யமாக இருக்கும் என்பது காந்தியடிகளின் விருப்பமாக இருந்தது. மகாத்மா காந்தியின் இந்தப் பேச்சு முஸ்லிம்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது. மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதிய ஸ்டேன்லி ஜோன்ஸ் அவ்வாறு கூறியுள்ளார்.
விடுதலைப் போரில் முஸ்லிம்களின் மீது மகாத்மா காந்தி, இராஜாஜி ஆகியோருக்கும் மதரீதியான விமர்சனங்கள் இருந்தன. காங்கிரசிற்குள் இருந்த மதன்மோகன் மாளவியா போன்றவர்களின் செயல்பாடுகள் முஸ்லிம்களின் அச்சத்தைப் பெருகிட வைத்தன என்பதை காந்தியின் கூற்றுக்கான பதிலாக முகம்மது அலி ஜின்னா முன்வைத்தார். காந்தி மேலும் கடுமையான அறிக்கையை வெளியிட இது போன்ற சிக்கல்கள் உதவின. எனவே விடுதலைப்போர் ஒரு முகமாக நடைபெற்றாலும் இந்து - முஸ்லிம் என்ற கசப்புப் பிரிவினைகள் பாகிஸ்தான் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தின. காந்தியைப் போலவே ராஜாஜிக்கும் கடுமையான விமர்சனங்கள் முஸ்லிம் களின் மீது இருந்தது. இதை பிரிட்டிஷார் மேலும் மேலும் ஊதி வளர்த்தார்கள். இந்தியா விடுதலையை நோக்கி முன்னேற, பிரிட்டிஷார் அதை பிரிவினையை நோக்கி நகர்த்தினார்கள். தலைவர்களின் மனக் கசப்புகள் அதற்கு நன்றாக உதவின. ஆனால் இந்துக்களுக் கும் முஸ்லிம்களுக்குமான தனித்தனித் தேசங்களை, பாகிஸ்தானியக் கோரிக்கைக்கும் முன்னரே வைத்தவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோல்வால்கர்தான். அவருடைய ‘சிந்தனைக் கொத்து’ நூலில் இதைக் காணலாம்.
பாகிஸ்தான் கோரிக்கை எழுப்பப்பட்டதைப் போலவே, மலபார் முஸ்லிம்களுக்காக மாப்ளஸ்தான் கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆனால் ஜின்னா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் கோரிய திராவிட நாடு கோரிக்கையையும் ஜின்னா ஏற்றுப் போராடவில்லை. முஸ்லிம்களின் ஆதரவும் இல்லை. தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியற் பரிணாமம் வகுப்பு மோதல்களையும் கசப்புணர்வுகளையும் விட்டு விலகியே இருந்தது குறிப்பிடத்தக்கது. உருது முஸ்லிம்களுடன் இனரீதியான வேறுபாடு இருந்தாலும், அவர்கள் அரசியலில் எதிர்ப்புகளைக் கொள்ளவில்லை. முஸ்லிம்லீக் தலைவராயிருந்த முஹம்மது இஸ்மாயில் சாகிப் உருது முஸ்லிம்களுடன் நல்லுறவையே வளர்த்துக் கொண்டார். தமிழ் முஸ்லிம்களுக்கே உரிய நிலப்பரப்பாக இருந்தாலும், உருது முஸ்லிம்களை விட தமிழ் முஸ்லிம்கள் வர்த்தக ரீதியாகப் பெரும் பங்கு வகித்ததும், ஆர்க்காடு நவாப் செல்வாக்கிழந்து பிரிட்டிஷாரை அண்டியிருந்ததும் என உருது முஸ்லிம்களின் ஆதிக்கம் சென்னை ராஜதானியில் எடுபடாமல் போனது. சுயமரியாதை இயக்கம் வீறு பெற்று இருந்ததால் அதனோடு இணைந்த திராவிட உணர்வு தமிழ் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு வாய்ப்பளித்தது. என்ன இருந்தாலும், இவையெல்லாம் இயல்பான வளர்ச்சிப் போக்குகளாகவே பரிணமித்தன. முரட்டுத்தனமான ஆதிக்க மோதல்களும், கண்ணுக்கு மறைவான அதிகாரத்தை இழப்பதில் பதற்றங்களும் உருது முஸ்லிம்களிடத்தில் நிகழவில்லை.
பிரிவினைக்குப் பின் தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட தென்னிந்திய முஸ்லிம்களைப் புதியநிலைக்கு அழைத்துச் சென்றதில் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப்பிற்குப் பெரும் பங்கு இருந்தது. சுதந்திரநாளைக் கொண்டாடும்படி அவர் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார். பிரிவினைக் கோரிக்கையின் மிச்ச சொச்சங்களைக் கைவிட்டு இந்திய விடுதலைக்கான போராட்ட உணர்வுகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு, யூனியன் முஸ்லிம் லீகையும் இஸ்மாயில் சாகிப் வழிநடத்திச் சென்றதன் மூலம் பாகிஸ்தானை மனதளவில் துறந்துவிட இந்திய முஸ்லிம்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது.
ஏராளம் ஏராளமான நூல்கள், குறிப்புகள், நேர்காணல்கள், அரசு அறிக்கைகள், நாளிதழ்கள் உள்ளிட்டவை இந்த நூலின் ஆக்கத்திற்கு உதவியுள்ளன. சில மாற்றுக் கருததுக்களும் உள்ளன. பெரம்பூரில் உள்ள ஜமாலியா மதரசாவின் தோற்றம், முஸ்லிம்களின் கல்வி - பொருளாதார நிலை குறித்த நிறைய தகவல்களும், அரசியல் நிகழ்வுகளும் தலைப்பின் உடன்போக்காக வந்துள்ளன. வாசிக்கத் தோதான, நெருடலில்லாத மொழிபெயர்ப் பாக இது இருக்கின்றது. இதனை மொழி பெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. அரிய பணி அவருடையது.
(நன்றி: கீற்று)