இன்று உலகம் முழுக்க முஸ்லிம்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும், எல்லா வகையிலும் தங்களை வலுப்படுத்திக்கொள்ளவும் 'இஸ்லாமிய வெறுப்பை' உற்பத்தி செய்துவருகின்றன. இந்நடவடிக்கை, முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக, சிறுபான்மையினராய் வாழும் நாடுகளில், இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதில் தொடங்கி, அரசியல் ரீதியிலும் பல நெருக்கடிகளை முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர்.
உலகளவில் கட்டமைக்கப்படும் இஸ்லாமிய வெறுப்பை, உள்நாட்டு வலதுசாரி பாசிச அரசியல் கட்சிகள் அறுவடை செய்கின்றன. நம் இந்தியாவின் நிலையும் இதுதான். இந்த சூழலில், நீதிக்காக போராடுவோர் காத்திரமாக எதிர்வினையாற்ற வேண்டியது அவசியமாகிறது. முஸ்லிம்கள் தரப்பிலிருந்து வலுவான எதிர்வினை என்பது போதுமான அளவு இல்லை என்றே தோன்றுகிறது. எனினும், இடதுசாரி அறிவுஜீவிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் வலுவாகவும் முறையாகவும் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். தமிழ் சூழலில் இயங்கும் அறிவுஜீவிகளில் அ.மார்க்ஸ் குறிப்பிடத்தக்கவர்.
பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் கடந்த ஆறேழு ஆண்டுகளில், பல்வேறு தருணங்களில் முஸ்லிம்கள் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'முஸ்லிம்கள்' எனும் நூலாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பேராசிரியர் அ. மார்க்ஸ் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக மனித உரிமைக் களங்களில் இயங்கி வருபவர். சமூக, பொருளாதார, அரசியல், தத்துவம் தொடர்பாக ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 'முஸ்லிம்கள்' நூல் நான்கு பகுதிகளாக உள்ளது. கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், டி.எம். உமர் ஃபாருக், டாக்டர் அப்துல்லாஹ் முதலான ஆளுமைகள் குறித்தும், நூலாசிரியர் சந்தித்த சில முஸ்லிம்களின் வலிகளையும் துயரங்களையும் குறித்தும் 'முஸ்லிம்கள்' எனும் முதல் பகுதியில் பதிவு செய்துள்ளார். இப்பகுதியில், குஜராத் இனப்படுகொலைகளின்போது பாதிப்புக்குள்ளான ஜஹீரா ஷேக் பற்றி கூறும்போது, முஸ்லிம் சமூகம் மார்க்கம் சார்ந்த விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளை, பாசிசத்தின் அபாயம், அவற்றை எதிர்கொள்ளும் மனநிலை முதலான அரசியலுணர்வு ஊட்டப்படுவதன் அவசியத்தையும் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.
டி.எம். உமர் ஃபாருக் அவர்களின் புத்தகத்திற்கு அ.மார்க்ஸ் எழுதிய விமர்சனமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சாதி முறையின் கொடுங்கைகளிலிருந்து எந்தவொரு மதமும் தப்பாத நிலையில், இஸ்லாம் எவ்வாறு சாதியை வீழ்த்துகிறது? என்பது பற்றி அதில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. வட இந்தியாவில் முஸ்லிம்களுக்குள் சாதி மற்றும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக சொல்லப்படுவது குறித்து ஓரிடத்தில் மிகுந்த கரிசனத்தோடு நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார்: ''இஸ்லாம் தனது அழைப்புப் பணியில் இந்த இரு அம்சங்களையும், அதாவது ஏகத்துவம், சமத்துவம் என்கிற இரு கூறுகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்து முன்வைப்பது அவசியம். இந்தியச் சூழலில் இது மிகவும் முக்கியம். இதன் முதல் அம்சத்தை மட்டும் உயர்த்திப் பிடித்து, இரண்டாம் அம்சத்தை சற்றே புறக்கணித்ததன் விளைவே இன்று வட இந்தியாவில் உருவாகியுள்ள அஸ்ரப், அஜ்லப், அர்சல் என்கிற வேறுபாடுகள்.''
'முஸ்லிம் சமூகம்' என்கிற இரண்டாவது பகுதியில் இந்திய முஸ்லிம்களின் பின்தங்கிய நிலை மற்றும் அடித்தள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் கொடுமைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அரசாங்கமும் காவல்துறையும் ஊடகங்களும் எவ்வாறு முஸ்லிம்களுக்கு விரோதமான மனோநிலையையும் செயல்பாடுகளையும் கொண்டிருக்கிறது என்பதை இதனூடாக புரிந்துகொள்ள முடிகிறது.
இதே பகுதியில், 'ஆட்சி மற்றும் அரசுத் துறைகளில் முஸ்லிம் பெண்கள்' எனும் கட்டுரை கவனம் கொள்ளத்தக்க ஒன்று. எல்லாச் சமூக பெண்களும் பின்தங்கியே இருக்கின்றனர். எனினும், ஒப்பீட்டளவில் முஸ்லிம் பெண்கள் மிக மிக பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதால், அவர்களது முன்னேற்றத்திற்கான தேவைகளைக் குறிப்பிடுகிறது. அத்தோடு, முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவற்றையும் சுட்டிக்காட்டி, அதைத் தகர்த்து முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கான வழிகளையும் காட்டித்தருகிறது.
இந்நூலின் மூன்றாவது பகுதியில் முஸ்லிம் சமூகத்தில் நடைபெறும் உரையாடல்கள் பற்றி மிக விரிவாக அலசப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் எல்லாரும் ஒரே விதமாக சிந்திப்பதோ செயல்படுவதோ இல்லை. என்றாலும், எல்லா முஸ்லிம்களும் ஒரே மாதிரிதான் என்றொரு பிம்பத்தை ஊடகங்கள் கட்டமைக்கின்றன. இதன் மூலம், எங்காவது முஸ்லிம் அடையாளத்தோடு ஒரு தவறு நடந்தாலும், அதை எல்லா முஸ்லிம்கள் மீதும் சுமத்திவிடும் போக்கு இருந்துவருகிறது. ஆகவே, முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை பொதுச் சமூகத்திடம் ஏற்படுத்தவேண்டிய கட்டாயமிருக்கிறது.
மெத்தப் படித்தவர்களும் களப் பணியாற்றுபவர்களும்கூட முஸ்லிம்கள் குறித்து முறையான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் இந்நூலின் முன்னுரையில் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம் சமூகம் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் தராத மூடுண்ட சமூகமல்ல. பல்வேறு கருத்தாடலுக்கும் இடம் தருவதே அதன் இயல்பு என்பதை பல தரவுகளின் மூலம் தெளிவுபடுத்துகிறார். மவுலானா மௌதூதி, ரஷீத் அஹ்மத் கங்கோஹி, ஜியாவுதீன் சர்தார், சையத் அஹ்மத் கான், தாரிக் ரமளான் போன்ற புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகளைச் சுட்டிக்காட்டியே இவற்றை நிறுவுகிறார்.
இறுதியாக, 'கருத்துச் சுதந்திரமும் முஸ்லிம்களும்' எனும் நான்காவது பகுதி இடம் பெற்றுள்ளது. கருத்துச் சுதந்திரத்தை முஸ்லிம்கள் எதிர்கொள்கிற விதம் பற்றி இங்கு பேசப்படுகிறது.
டென்மார்க் இதழ் வெளியிட்ட கார்ட்டூன் விவகாரம் தொடங்கி விஸ்வரூபம் விவகாரம் வரை இந்த இறுதி பகுதியில் விவாதிக்கப்படுகின்றன. இங்கே முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பதை வேதனையோடு அ. மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். கருத்துச் சுதந்திரம் விஷயத்தில் மேற்குலகின் இரட்டை நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்துகிறார். முஸ்லிம்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் என கட்டமைக்கப்படுவதற்கு தோதுவான சில சந்தர்ப்பங்களின்போது அவர் எழுதிய ஆக்கங்கள் மிக முக்கியமானவை.
இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போது, எந்த அளவு ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகளையும் உளவியலையும் புரிந்துகொண்டு அவை எழுதப்பட்டுள்ளன என்பதை உணர முடிகிறது. "ஒரு தலித் அனுபவிக்கும் இழிவையும், ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் இந்த வெறுப்பையும், ஒரு தலித்தாகவும், முஸ்லிமாகவும் இருந்துதான் புரிந்துகொள்ள இயலும்" என்று ஓரிடத்தில் அ.மார்க்ஸ் கூறுகிறார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து அவர் பேசுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
அ. மார்க்ஸ் அவர்களை முஸ்லிம் சமூகத்தோடு நெருக்கமானவர் என சொல்வதைவிட, முஸ்லிம்களோடு வாழ்பவர் என்று சொல்வதே சரியாக இருக்கும். இந்தியச் சமூகத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் குறித்தும் ஆழமாக விளங்கிக்கொண்டுள்ள அ.மார்க்ஸின் இப்புத்தகத்தை, முஸ்லிம்கள் தொடர்பாக தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்களிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.