“Learning from conflicts” என்ற நூலின் ஆசிரியரான முனைவர்.கிருஷ்ணகுமார் அவர்கள் நாடறிந்த கல்வியாளர், டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றியவர். NCERT என்னும் தேசிய கல்வி ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் இருந்தவர். இந்நூலை தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் “எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க” என்னும் நூலின் மொழிபெயர்ப்பாளரும் ஆசிரியருமான ஐயா ஜே.ஷாஜகான் ஆவார்.
நூலின் மூல ஆசிரியரான பேரா.கிருஷ்ணகுமார் அவர்கள் ஒரு சுற்றுலாப் பயணமாக சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையின் பிரமாண்டமான தயாரிப்புக் கூடத்தைப் பார்த்துத் திரும்பும்போது, அந்த ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி பேராசிரியர் கிருஷ்ணகுமாரிடம் அவரின் பணி பற்றி கேட்கிறார். “கல்வியியலைக் கற்பிக்கிறேன்” என பேராசிரியர் கூறியதும் , அந்த ரயில்வே அதிகாரி ‘ஏன் நமது சமூகத்திற்குப் பொருத்தமான மாற்றங்களுடன் கல்வியைக் கற்பிக்கக் கூடாது?’ என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வியே கல்வியியல் சிக்கல்கள் குறித்து ஒரு விழிப்பை தனக்கு ஏற்படுத்தியதாகக் கூறும் பேராசிரியர் கிருஷ்ணகுமார் இந்த நூலிற்கு அடிப்படையாகவும் இந்த கேள்வியையே எடுத்துக் கொள்கிறார்.
இந்தக் கேள்விக்கான விடையை இரண்டு கோணங்களில் பெறலாம் என்கிறார் நூலாசிரியர். ஒன்று கல்வி முறைகள் பற்றியது, மற்றொன்று கல்வியின் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்குகள் பற்றியது. இரண்டாம் இலக்கு தெளிவானால் மட்டுமே முதல் இலக்கை எட்ட முடியும் என்கிறார். கல்வி எதிர்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்த பார்வையை, புரிந்துணர்வை விடவும் முரண்பாடுகள் தெளிவாக்குகின்றன என்பதன் அடிப்படையில் பேரா.கிருஷ்ணகுமார் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது.
முதலாவது கட்டுரை, “முரண்பாட்டை முன் வைத்தல்” என்பதாகும். இந்த கட்டுரையின் தொடக்கம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு சீக்கியர்கள் மீதான டெல்லி கலவரம் பற்றியது. இக்கலவரத்தால் அடைக்கப்பட்ட பள்ளிகள் பல நாட்களுக்குப் பின் திறக்கப்படுகின்றன. டெல்லி கலவரம் பற்றி வகுப்பில் விவாதிக்கக் கூடாதென ஆசிரியர்களுக்கு நிபந்தனை விதிக்கப் படுகிறது. இந்நிலையில் பயிற்சி ஆங்கில ஆசிரியர் ஒருவர் arrived என்னும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு வாக்கியம் அமைக்கச் சொல்கிறார். மாணவர்கள் அமைத்த வாக்கியம், “When a sikh arrived at Delhi, he was killed by hindus”. இலக்கணப்படி மிகச் சரியான வாக்கிய அமைப்பு. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் அதன் இலக்கணத்தைப் பார்ப்பாரா? அல்லது அதிலுள்ள கருத்துக்களைப் பார்ப்பாரா? சமூக முரண்பாடுகளைப் பற்றி ஆழமாக அறிந்துள்ள குழந்தைகள் எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். ஆனால் அதனை வெளிப்படுத்த மிக அரிதாகவே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்னும் நூலாசிரியர் “நம் கல்வி நிறுவனங்கள் முரண்பாடுகளுடைய பிரச்சினைகளை முற்றிலுமாகத் தவிர்க்க முயல்கின்றன” என்பதை சுட்டிக் காட்டுகிறார். மேலும் காந்தியின் படுகொலை பற்றிப் பேசும் NCERT யின் புத்தகங்கள் “இந்து முஸ்லிம் மக்களிடையே அன்பையும், சகோதரத்துவத்தையும் போதித்தார். அவர் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார்” என்பதுதான். மதவெறி பற்றி எஙகும் விளக்கப்படவில்லை என்கிறார் நூலாசிரியர்.
மேலும் “இந்து முஸ்லிம் மோதல்கள் பற்றிய தகவல்களை நமது பாடப்புத்தகம் தவிர்த்திருப்பது , அவசரத்தின் பொருட்டல்ல, அருவருப்பின் பொருட்டேயாகும். விளக்கிக் கூற விரும்பினால் இந்து முஸ்லிம் மோதல்கள், இந்துத்துவா எழுச்சியின் அரசியல், மகாத்மா காந்தியின் இறுதி நாட்களில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையின்மை ஆகியவையும் விளக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் இறுதியில் சம்பிரதாயமாக , ஒவ்வொருவரின் கண்ணீரையும் துடைத்த நீண்ட கரம் ஓய்ந்துவிட்டது என்று புத்தகத்தில் கூறியுள்ளதை குறை கூறுகிறார். குழந்தை உளவியல், பள்ளியின் நிலை, கல்வியில் சமூக எதிர்பார்ப்பு, சாத்தியம் ஆகியவையே NCERT பாடத்திட்ட வடிவமைப்பின் முக்கியமான காரணிகளாகும். அவற்றின் அடிப்படையில் காந்தியடிகளின் படுகொலை ஒற்றைப் பத்தியில் முடிந்து போகக் கூடியதல்ல. நல்ல ஒரு வரலாற்றாசிரியர் அதனை விவாதித்துப் புரியவைக்க ஒரு வாரமோ, அதற்கு மேலுமோகூட கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.
மேற்குறிப்பிட்ட பிரச்சினையின் சிக்கலினைப் புரிந்து கொள்ள நம் பாடம் தவறி விட்டது. குழந்தையின் கோணத்தில் நிகழ்வுகளைப் பார்க்க முற்படாத இத்துடன் இன்னும் பலப்பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. கற்றலில் குழந்தையின் பங்கினை உணர மறுப்பதன் மூலம் உண்மைக் கருத்தாக்கங்களைப் புரிய வைக்கும் பொன்னான வாய்ப்பை வரலாற்றாசிரியர்கள் இழக்கிறார்கள். அதனாலேயே இந்து முஸ்லீம் பகையுணர்வு இந்திய படித்த வர்க்கத்தினரிடையே மென்மேலும் ஆழமாக வேரூன்றி விடுகிறது. இந்த காலகாலமாகத் தொடர்ந்து வரும் இந்து முஸ்லீம் பகையுணர்வின் மூலத்தை, வரலாறை எவ்வாறு சரியான முறையில் இளம் தலைமுறையினரை அணுக வைப்பதன் மூலம் மாற்ற முடியும் என இக்கட்டுரையில் பேரா.கிருஷ்ணகுமார் விளக்குகிறார். மேலும் “வரலாற்றில் மிகையான தகவல்களைத் தந்து முரண்பாடுகளை முற்றிலும் தவிர்க்கும் முந்தைய பழையமுறை, தொழிலியல் திறனைக் கற்றலில் அதிகரிக்க இடையூறு செய்வதோடு இளம் தலைமுறையினரின் அறிவுத் தேவையை நிறைவு செய்யவும் தடையாகிறது” என்கிறார் நூலாசிரியர். மேலும் “குழந்தைக் கல்வியாளர்களின் பார்வையில், முரண்பாடுகளை முன் வைத்து நுட்பமான கேள்விகளால், உணர்வுப் பூர்வமாக விவாதிக்கும் போக்கு மிகுந்த பயனுடையது எனக் கூறப்படுகிறது. அனைத்து கல்வியியல் நடவடிக்கைகளும் ஒரு வகையில் ஏதேனும் தத்துவம் மற்றும் அரசியல் சார்புடையவைதான்” என்கிறார்.
இரண்டாவது கட்டுரையின் தலைப்பு, குழந்தைகளும் வரலாறும் என்பதாகும். இக்கட்டுரையில் கணிதத்தையும் , இயற்கை அறிவியல் பாடத்தையும்விட வரலாற்றைப் புரிவது கடினமானதாகும் என ஆய்வாளர்களின் கருத்துக்களைக் கூறி காலம் காலமாக நாம் நினைப்பதுபோல வரலாற்றுப்பாடம் அவ்வளவு எளிதல்ல என்கிறார். வரலாற்றுப்பாடம் நவீன காலத்திலிருந்து பண்டைய காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிறார். ஆனால் தற்போது நமது பாடப்புத்தகத்தில் ஆறாம் வகுப்பில் பண்டைய கால இந்தியா பற்றியும், ஏழாம் வகுப்பில் இடைக்கால இந்தியா பற்றியும், எட்டாம் வகுப்பில் நவீன கால இந்தியா பற்றியும் படிக்கின்றனர். குழந்தைகளின் கால அறிவோடு இந்த வரலாற்று வரிசை முறை மிகுந்து முரண்பட்டு குழப்பம் விளைவிக்கும்; சிரமம் தரும் என்கிறார் பேரா.கிருஷ்ணகுமார். கடந்த காலங்கள் குறித்த அணுகுமுறை மற்றும் புரிதல் என்பது குழந்தைகளுக்கு வயது அதிகமாவதற்கு ஏற்ப உருவாகிறது என்பதே பொதுவான குழந்தைகள் கற்றல் குறித்த தேற்றமாகும் என்கிறார். வரலாற்றுப் பாடப்புத்தகங்களை வடிவமைக்கும்போது இரண்டு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அவை 1.வரலாறு நீண்ட நிகழ்வுகளின் சங்கிலியாய் தொடர்ச்சியாகக் காட்டப்பட வேண்டியதில்லை. 2.பள்ளிகளில் வரலாற்றுப் பாடங்களைக் கற்கும் மாணவர்கள் ஆதாரங்களின் மூலம் சில நிகழ்வுகளையாவது தம் சொந்தச் சிந்தனையால் ஆராய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்கிறார் மேலும் “ நமது பாரம்பரிய வரலாறு சொல்லுதல் என்னும் நிலையிலிருந்து வரலாற்றை கண்டறிதல் என்னும் நிலைக்கு உயர்த்தினால் பாடத்திட்டம் பெரும் மாற்றங்களுக்குள்ளாகும்.” என்கிறார்.
மூன்றாவது கட்டுரை “அறிவியலும் சமூகமயமாக்கலும்” என்பதாகும். தொடக்க வகுப்புகளில் அறிவியலை சூழ்நிலையியல் என்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழலியல் பற்றி கற்பித்தபோதும் அறிவியல் கற்றலின் தன்மைகள் மாற்றமில்லாதிருப்பதை இக்கட்டுரை அலசுகிறது. குழந்தைகள் கோணத்திலிருந்த ‘சூழ்நிலையியல்’ பாடம் மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாட்டுப் புரிதலின் துவக்கத்தினை நிகழ்த்துகிறது. பள்ளி அறிவியல் பாடங்கள் இயற்கையை வெற்றி கொண்ட மனநிலையை உருவாக்கித் தந்தபோது, சமூகவியலையும் உள்ளடக்கிய சூழலியல் இயற்கை அழிவு குறித்த அக்கறையோடு பேசுகிறது. விலங்குகள், தாவரங்கள் மட்டுமின்றி ஆறுகள், மலைகள், கடல்கள் எனும் மொத்த இயற்கையுடனான அணுசரணையை மனிதனிடம் திறம்பட ஏற்படுத்தவே சூழ்நிலையியல் பாடநூல்கள் முயற்சிக்கின்றன என்கிறார். முரண்பாடுகளுடன் பல்வேறு விஷயங்களை அணுகும் குழந்தைகளிடம் மேலும் முரண்படுத்தும் வகையில் பூமியின் வளத்தை மேலும் மேலும் பயன் படுத்தி பொருளாதார வளர்ச்சி பெறுவதை அறிவியல் பாடநூலும், அதனால் ஏற்படும் சமூக, சூழலியல் சிக்கல்களை மற்றொரு சூழலியல் பாடநூலும் தரும்போது இருவேறுவிதமான புரிதல்கள் மாணவர்களுக்கு ஏற்படுகின்றன என்கிறார் நூலாசிரியர்.
நான்காவது மற்றும் கடைசி கட்டுரை, “ இரண்டு உலைகள்” என்பதாகும். இதில் ஆங்கில வழிக் கல்விக்கும் தாய்மொழி வழிக்கல்விக்கும் இடையே சிக்கித் தவிக்கும் நமது இந்தியக் கல்விநிலையைப் பற்றி விவரித்துள்ளார். இந்திய மொழிகளின் அழிவின் மீதுதான் ஆங்கில மொழியின் வளர்ச்சியும் விரிவாக்கமும் நம் நாட்டில் நடைபெறுகிறது என்றும் தாய்மொழி அதன் பண்பாடு ஆகியவற்றின் உறவிலிருந்து கத்தரித்து அனாதையாக்கப்பட்டவர்களாகவே ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் உருவாகி வருகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறார் நூலாசிரியர். ஆங்கிலப் பள்ளியில் பயிலாததாலேயே பல மாணவர்கள் தாங்கள் சமூகத்திற்குப் பங்களிக்கக் கூடிய பொறுப்புகளுக்கும் பணிகளுக்கும் வர முடியாமல் போகிறது. மாறாக நமது தவறான சமூகத் தேர்வு முறைகளால் ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் பலர் தகுதியற்ற பொறுப்புகளிலும் பணிகளிலும் அமர முடிகிறது. இத்தகைய இருவேறு பிரிவினைக்குட்பட்ட மாணவர்களால் சமூகத்தில் ஆழமான சமச்சீரின்மை ஏற் படுவதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
இவ்வாறு நான்கு கட்டுரைகளாக எழுதப்பட்ட இந்நூல் 64 பக்கங்களேயான சிறு நூலெனினும் நமது ஆழமான, பொறுமையான, கவனத்துடன் கூடிய வாசிப்பினை கோரக்கூடியது. ஆனால் வாசித்து முடிக்கும் போது கல்வியியல் கோட்பாடுகளில் பலவற்றை தெரிந்து கொண்ட திருப்தி ஏற்படுகிறது. இந்நூல் கல்வி நூல் வரிசையில் விரிவும் ஆழமும் தேடிய பயணம். நல்ல நூலைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்த ஐயா ஷாஜகானுக்கு நன்றிகள் பல.