தெருவில் இறங்கி இரு பக்கமும் பாருங்களேன். எத்தனை மனிதர்கள், என்ன என்னவோ செய்துகொண்டு! இவர்கள் அத்தனை பேரும் வாழத் தகுதியான மனிதர்கள்தானா? ஆனால், வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ‘வாழத் தகுதிபெற்ற மனிதர்கள் இவர்கள்’ என்று ஒரு பட்டியலைச் சமூகம் கையில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அண்மைக் காலத்தில் ஒரு சிலரை அப்படிப் பட்டியல் போடுகிறது ஒரு புத்தகக் கம்பெனி.
அவை, லூயி பிஷர் எழுதிய காந்தி வாழ்க்கை, தி.சே.சௌ.ராஜன் எழுதிய ‘நினைவு அலைகள்’, திரு.வி.கவின் தன் வரலாறு, பெரியார் வரலாறு போன்றவையாகும். தன் பொருட்டு இல்லாமல், பிறர்பொருட்டுத் தம் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவரே வாழத் தகுதியானர் என்றே பெரியோர்கள் வகுத்துரைத்தனர்.
ராஜன் (திருநெய்த்தானம் சௌந்தர்ராஜன்) இரண்டு பள்ளிக்கூடங்களில் ஆரம்ப வகுப்புகள் வாசித்திருக்கிறார். சட்டை போடாத ஆசிரியர்கள். மாசம் ஒரு அணா சம்பளம். படிப்பு சூப்பராகத்தான் இருந்திருக்கும். பள்ளி, நாலடி பாட்டு ஒன்றையும் கற்றுக் கொடுத்து அனுப்பி இருக்கிறது.
‘நெருமால் திரு மருகா
நித்த நித்தம் இந்த இழவா
வாத்தியார் சாகானா
வயிற்றெரிச்சல் தீராதா?’
எனக்கு அப்போது சுமார் 15 வயசு இருக்கும். ‘பையனுக்கோ வயசாகிக் கொண்டு போகிறது. நெடுநெடுவென்று உயர்ந்துகொண்டே போகிறான். யாராவது பெண் கொடுக்க வந்தால், வெறும் காலும், வெறும் கையுமாக நின்றால் யார் கொடுப்பார்கள்? என்று சொல்லி எனக்கு ஒரு ஜோடி தங்கக்காப்பு செய்து என் தாய் போட்டுவிட்டாள் (எனக்கு வயது 15). கல்யாண மார்க்கெட்டில் விலை போக யோக்யதை பெற்றுவிட்டேன். எனக்கும் தங்கக் காப்பு வந்துவிட்டதே...’ என்று தன் பால்ய கால மகிழ்ச்சியைப் பகிர்கிறார் டாக்டர் ராஜன்.
என் சிறுவயதில் எனக்கு அடிக்கடி கடுமையான வயிற்றுவலி வரும். தர்ம ஆஸ்பத்திரியில் மணிக்கணக்காக மருந்து பாட்டிலோடு காத்துக் கிடப்பேன். பீஸ் கொடுத்து வீட்டிலேயே போய் வாங்கிக்கொண்டு வரும் யோக்யதை இல்லை. பல மாதங்கள் நோய் என்னைத் தாக்கிக் கொண்டே இருந்தது. அப்பாவிடம் சொன்னேன். சம்பளம் வாங்கிய மறுநாள் காலை அப்பாவுடன் சென்று ஐந்து ரூபாய் கொடுத்து என் நோய் பற்றிக் கூறினேன். ஐந்து நிமிஷத்தில் மருந்து சீட்டு கைக்கு வந்துவிட்டது. என் அனுபவம், பிறர் அனுபவம் எல்லாம் சேர்ந்து இந்த முடிவை, நோக்கி வந்தேன். மருத்துவம் படிப்பது என்பது.
ஆனால், அப்பா சொன்னார். ‘இது நம் போன்ற பிராமணர்கள் செய்யக்கூடிய தொழில் அல்ல. பிணத்தை அறுக்க வேண்டும். ஜாதி வேற்றுமை இல்லாமல் எல்லோரையும் தொட வேண்டும்....’
எல்லாவற்றையும் மீறினார் ராஜன். உபகாரச் சம்பளம் பெற்றுப் படிக்கும் முயற்சியில் இறங்கினார். 4 ஆண்டுகளில் டாக்டர் ராஜன் ஆனார். உபகாரம் பெற்றுப் படித்ததால், அதன் பலனாக ரங்கூன் சென்று வேலையில் அமர்ந்துவிட்டார்.
சுமார் ஒரு வருஷத்துக்கு மேல், இந்திய அவுசில் தங்கி இருக்கிறேன். யோசித்துப் பார்க்கையில், எப்போதும் நான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன் என்பதாக நான் உணர்ந்தேன். ஆனால் இதுக்குப் பதிலாக, வ.வே.சு.ஐயரும், சாவர்க்கரும் வேறு விதமான பதில்களையே சொல்வார்கள். ‘ஓய்வு எதற்காக?’ என்பார் ஐயர். என் கருத்து வேறு. படிப்பில் முதலாவது வரவேண்டும். அதற்கு கடும் உழைப்பு. மற்ற தேசப் பிரச்சினை தொடர்பான உழைப்பில் மென்மையான உழைப்பு என்பது என் நிலை என்பார் டாக்டர்.
நான் சீமையை விட்டு புறப்பட்டபொழுது ஸெளதாம்டன் துறைமுகத்தில் கப்பல் ஏறினேன். லண்டனில் இருந்து என்னோடு வந்து, ஸெளதாம்டனில் ஒருநாள் தங்கி, மறுநாள் என்னை கப்பலேற்றிச் சென்றாள், அந்த ஆங்கிலப் பெண். கப்பல் புறப்படுவதற்கு முன்னால் அவளை அறியாமல் கண்ணில் நீர் தாரை தாரையாகப் பெருகியது. கடைசியாக ஒரு வார்த்தை என் காதில் ரகசியமாகச் சொன்னாள்.
‘ராஜன் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. குழந்தைகளும் இருக்கின்றன. எனக்கும் மணம் முடிந்து அன்பிற்குரிய கணவனைப் பெற்றிருக்கிறேன். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடந்திராவிட்டால் நான் உங்களை பின்பற்றியே வந்திருப்பேன்’ என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
சுமார் 28 நாள் பிரயாணம் செய்தப் பிறகு கொழும்பு மார்க்கமாகத் தூத்துக்குடித் துறைமுகத்தில் ஒருநாள் காலை நேரத்தில் வந்து இறங்கினேன். என்னை எதிர்கொண்டு அழைத்தவர்கள் ஒரு கூட்டம் உளவுப்போலீஸ் அதிகாரிகள். என்னை எவ்வளவோ கேவலமாகச் சோதனை செய்தார்கள் என்ற கதையை விவரிக்க எனக்கு மனம் இல்லை. எழுதுவதற்குக் கூட கூசுகிறது. என் உடைகளைக் கழற்றி, வாய், தொண்டை, மலத்துவாரம் முதல் சோதனை செய்து நான் கொண்டுவந்த புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கடிதங்கள், படங்கள் எல்லாவற்றையும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு குதூகலத்துடன் பக்கம் பக்கமாகப் பரிசீலனை செய்தார்கள். இந்தக் கேவல நிலையில் என் மனம் பட்டபாடு சொல்லி முடியாது. கோபம் வந்தது. பயன் என்ன?
1914-ம் வருஷத்தில் காந்திஜி சென்னைக்கு வந்தார். தென்ஆப்பிரிக்காவில், ஜெர்மனியுடன் நடந்த மகாயுத்தத்தில் ஆங்கில அரசாங்கத்துக்கு உதவிபுரிந்தார். காயம்பட்டவர்களுக்கு உடன் உதவிசெய்யும் இந்தியப் படையொன்றைத் திரட்டி, அதில் தாமும் பங்கெடுத்து உதவி, இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே நோய்வாய்ப்பட்டு படையில் சேர முடியாமல், அங்கிருக்கும் டாக்டர்கள் அபிப்பிராயத்துக்கு இணங்க, அந்த குளிர்தேசத்தை விட்டு இந்தியா வந்து சேர்ந்தார். உடல்நிலை குணமடைந்தவுடன் தம் அரசியல் குருவாகிய கோபாலகிருஷ்ண கோகலேயின் ஸ்தாபனமாகிய ‘இந்திய வங்கி ஊழியர்கள் சங்க’த்துக்குச் சென்று பார்வையிட்டு விவரம் தெரிந்தவுடன், அந்த ஊழியத்தின் நிபந்தனைகளுக்கும் தம் மனப்பான்மைக்கும் நீக்க முடியாத அடிப்படையான மாறுபாடுகள் இருக்கக் கண்டு, அதில் சேராமல் தமது விருப்பத்துக்கும் தத்துவங்களுக்கும் இடையூறு இல்லாமல் வேலைசெய்ய ஒரு தனி ஸ்தாபனம் நிறுவ முடிவுசெய்து, இந்தியாவின் பல பாகங்களையும் சுற்றிப் பார்க்க புறப்பட்டார்.
இந்தச் சுற்றுப் பிரயாணத்தின்பொழுது அவர் தம் மனைவியோடு சென்னை வந்து சேர்ந்தார். அப்போது அவர் ‘மகாத்மா’ ஆகவில்லை. தென் ஆப்பிரிக்காவில் சத்தியாகிரகம் செய்து, தலைவர் ஸ்மட்ஸ் துரையுடன் அங்கே குடியேறியுள்ள இந்தியர் விஷயமாக உடன்படிக்கை செய்துகொண்ட தேசபக்தர் அவர் என்பது, அயல்நாட்டில் உள்ள இந்தியரின் விஷயங்களை கவனித்து வரும் சிலருக்கே தெரியும். நம் நாட்டுப் பொதுமக்களுக்கு அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. சென்னையில் அவரை அறிந்த நண்பர்கள் வெகுசிலர். அவற்றுள் ஸ்ரீமான் ஜி.ஏ. நடேசன் காந்திக்கு நண்பர். அப்போது சேலத்தில் வக்கீலாக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரியரைப் பெயரளவில் கடிதப் போக்குவரத்து மூலம் காந்திஜிக்கு தெரியும். அவ்வளவுதான்.
சென்னையில் ஜி.ஏ.நடேசனும் அவரது நண்பர்கள் சிலரும், பத்திரிகை நிருபர்கள் சிலரும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் அவரை வரவேற்பதற்காகச் சென்றிருந்தனர். ஆங்கில உடைதரித்து, உயர்தர வகுப்பு வண்டிகளில் பிரயாணம் செய்யக்கூடிய பெரிய மனிதர் என்ற உணர்ச்சியினால், இச்சிறிய வரவேற்புக்கூட்டம் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகள் நிற்க வேண்டிய இடத்தில் பிளாட்பாரத்தில் மாலையும் கையுமாக காத்திருந்தது.
வண்டி வந்து நின்றதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். காந்திஜியைக் காணவில்லை. ஆகையால் வண்டிகளில் இருந்து இறங்கும் பிரயாணிகளை உற்றுக் கவனிக்க அங்கும் இங்கும் ஓடினார்கள். கடைசியாக மூன்றாவது வகுப்பில் அடைந்துகிடந்த பிரயாணிகளுடன் , மூட்டை முடிச்சுமாக, தாமும் தம் கஸ்தூரிபாயும் இறங்கியதைக் கண்டு முதலில் திடுக்கிட்டார்கள். பிறகு வியப்படைந்தார்கள். தமது இனிய சிரித்த முகத்துடன் காந்திஜி அவர்களுடன் சற்றுநேரம் பேசிவிட்டு, நடேசனுடைய காரில் வீடு சேர்ந்தார். ஆங்கில உடை இல்லை. அசல் குஜராத்தி பனியா தலைப் பாகை, பொத்தனில்லாத நாடாக்கட்டி முடியும் பழைய காலத்து ஜிப்பா ஒன்று, அரையில் கச்சம் வைத்துக் கட்டிய வேஷ்டியுடன் காட்சி அளித்தார். தம் சாமான்களை யார் உதவியில்லாமலேயே இறக்கினார். அன்று சாயங்காலம் சென்னைப் பத்திரிகைகளில் காந்திஜி வந்து இறங்கின விநோதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
1932-ம் வருஷத்தில் மகாத்மா காந்தி ஹரிஜன இயக்கம் தொடங்கினார். தமிழ் மாகாணத்தில் ஹரிஜன இயக்கத்துக்கு நான் தலைவனாக இருக்க வேண்டுமென ஸ்ரீராஜாஜி கொடுத்த உத்தரவின்படி அப்பதவியை நான் ஏற்றேன். தீண்டாமையை ஒழிப்பது, கோயில்களை ஹரிஜனங்களுக்குத் திறந்துவிடுவது, ஹரிஜன நிதி சேர்ப்பது முதலிய முயற்சிகளில் ஈடுபட்டேன். நான் ஏற்றுச் செய்துவந்த தொண்டு என் நண்பராகிய அகோபில மடம் சுவாமிகளுக்குப் பிடிக்கவில்லை. அதைப் பற்றித் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்தது தவிர அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அன்று முதல் எனக்கும் அவருக்கும் உள்ள சிநேகம் குறைந்துவிட்டது. என் பேரப் பிள்ளைக்கு உபநயனம் செய்ய முயன்றபொழுது, வைதிகர்களைக் கொண்டு எவ்வளவு இடையூறு செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தார்.
என் வீட்டில் நடக்கும் வைதீக கர்மங்களுக்கு கோஷ்டியாரும் மற்றவரும் வராமல் தடைசெய்துவிட்டார். நான் இந்தியச் சட்டசபைக்கு அங்கத்தினனாக இருக்க விரும்பித் தேர்தல் நடந்த காலத்தில், ஆஸ்திக வைதிகர்கள் எல்லோரும் ஐதராபாத் ராஜாபகதூர் கிருஷ்ணமாசாரியருக்கு வாக்குக் கொடுக்க எல்லோரும் வாக்கு எடுக்கும் தினத்தன்று ஸ்ரீரங்கத்தில் எனக்கு விரோதமாக வேலைசெய்தனர். இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான் மிகுந்திருந்த வைதிகப்பற்றும் என்னைவிட்டு ஒழிந்தது. பொருள் புரியாத சடங்குகள், உயிரில்லாத பல அநுஷ்டானங்கள், பரிகசிக்கக் கூடிய பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கைவிட்டேன் என்கிறார் டாக்டர் ராஜன்.
காந்திஜி தமிழகத்திற்கு வந்தபோது, அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும், ராஜாஜி அமைச்சரவையில் அங்கம் பெற்றிருந்த அமைச்சர்களில் ஒருவராகவும் திகழ்ந்த டாக்டர் ராஜன், ராஜாஜி ஆட்சி குறித்தும் தமது சுயசரிதையில் அரிய தகவல்களை கூறியுள்ளார்.
எப்போதும் மிகப்பெரிய மனிதர்கள், மிக இயல்பாக, சாதாரணமாக இருந்தார்கள். அவர்கள் மனதளவிலும் சாதாரணமாக இருப்பார்கள். ஆனால், அசாத்தியமான மனிதர்களாக அவர்கள் இருப்பார்கள். இந்தியப் பழமையும் நவீனமும் உருவான காலத்தில் காந்தியோடு உருவான மிகப்பெரும் மனிதர் டாக்டர் ராஜன்.
(நன்றி: தி இந்து)