“முகிலினி” தோழர் இரா.முருகவேளுக்கு இரண்டாவது நாவல்.
வெள்ளி நீர் ஓடும் பவானியும், அடர்ந்த தெங்குமராட்டா காடுகளிடையே ஓடிவரும் தீயைப் போன்ற செக்கச்சிவந்த நிறம் கொண்ட மோயார் நதியும் ஒன்றிணையும் கூடுதுறைக்குக் கிழக்கே எழுகிறது ஒரு மாபெரும் அணை. அந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதியை ஒட்டி இத்தாலியின் உதவியோடு ஒரு ராட்சஸ ஆலை உருவாகிறது. இந்த ஆலை உருவான வரலாறு, அதன் வளர்ச்சி, வீழ்ச்சியின் பின்னணியில் கோவையின் அறுபதாண்டு வாழ்க்கையை ஒரு மர்ம நாவல் போன்ற விறுவிறுப்புடன் பேசுகிறது முகிலினி.
சுதந்திரத்துக்கு முன் நிலவிய கடும் உணவுப் பஞ்சத்தைப் போக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகவே பவானி சாகரம் அணை கட்டப்படுகிறது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பு பருத்தி விளையும் பகுதிகள் பாகிஸ்தானிலும், மில்கள் இந்தியாவிலும் சிக்கிக்கொள்கின்றன. இந்திய மில்கள் கடும் பஞ்சுத் தட்டுப்பாட்டால் தள்ளாடுகின்றன. பாகிஸ்தான் ஆடைத் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்குள்ளாகிறது.
இந்த சூழலில்தான் நாவல் தொடங்குகிறது. இந்திய மில்கள் சந்திக்கும் நெருக்கடியைத் தெரிந்து கொண்ட செயற்கை இழை தயாரிக்கும் இத்தாலிய நிறுவனமான இத்தாலியானா விஸ்கோஸா (உண்மையில் ஸ்னியா விஸ்கோஸா) கோவையில் கூட்டு முதலீட்டில் ஒரு செயற்கை இழை ஆலை தொடங்க முன்வருகிறது. பழைய பாணியில் இனி வாழ முடியாது என்பதைப் புரிந்து கொண்ட தொழிலதிபர் கஸ்தூரிசாமி நாயுடுவும், அவர் மனைவி சௌதாமினியும் இதற்கான முன்முயற்சி எடுத்து சாதிக்கவும் செய்கின்றனர். மரத்துண்டுகளை கந்தக அமிலத்தில் கழுவி மென்மையாக்கி செயற்கைப் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இந்த ஆலைக்கு ஏராளமான நீர் தேவைப்படும் என்பதால் பவானி நதியோரம் அணை அருகே ஆலையை அமைக்கின்றனர்.
முகிலினியின் தனித்தன்மை எதுவென்றால் எந்த நிகழ்வுமே ஒரு தனிமனிதனின் அறிவு, நேர்மை, திறமை மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல, ஒவ்வொரு சாதனைக்குப் பின்பும் வென்றே ஆக வேண்டிய சமூகத்தேவை இருக்கிறது என்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறது. பஞ்சுத் தட்டுப்பாட்டால் ஆலைகளும், அவற்றின் முதலாளிகளும் அழிய வேண்டும், அல்லது துணிந்து முன்னேறி மாற்றுவழி காணவேண்டும். இதுதான் கஸ்தூரிசாமி முன்னே இருக்கும் நெருக்கடி. அதிகம் பேசாத சாகசவாதியான கஸ்தூரிசாமி இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கிறார்.
அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஒரு சிறிய பாத்திரமாக வருகிறார். அவருடனான சந்திப்பு, அவரது பின்னணி, ராஜதந்திரம் மிக அழகாக வருணிக்கப்படுகின்றன. நேருவுக்கு ஜெனரல் கரியப்பாவின் வளர்ச்சியும், புகழும் தந்த சங்கடங்கள் அவ்வளவாகப் பதிவு செய்யப்படாதது. நாவல் இதுகுறித்து நமக்கு சில அரசியல் தந்திரங்களை தெரியப்படுத்துகிறது. கரியாப்பாவை வெளிநாட்டுக்குத் தூதராக அனுப்பி இந்தச் சங்கடத்தை காங்கிரஸ் கட்சி கடக்கிறது. கட்சித் தலைவர் என்ற முறையில் காமராஜர் நேருவை ஆதரிக்கிறார். இதுபோன்ற அரிய தகவல்கள் உறுத்தாமல் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
நாட்டின் தொழில் வளத்தை ஊக்குவிப்பது காமராஜரின் விருப்பம் அல்ல. அக்கால தமிழகத்தின் தேவை. வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற நிலையிலேயே நாட்டை ஆளமுடியாது. இந்த நிலைமையைக் கையாளும் காமராஜர் எளிமையானவராகக் காட்டப்படுகிறார் என்பதைவிட நிலைமை புரிந்த அறிவு ஜீவியாகக் காட்டப்படுகிறார் என்பதே உண்மை.
ஒருவிதத்தில் பார்த்தால் நாவலில் நான்குவிதமான அரசியல் போக்குகள் முட்டி மோதிக் கொள்கின்றன.
முதல்பாகத்தின் நாயகனான ராஜு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகக் காட்டப்படுகிறார். தியாகராஜ பாகவதரின் ரசிகர். தியாகராஜ பாகவதரைத் தேடிய ஒரு பயணத்தில் ஒரு கோவிலில் படுத்துக்கிடக்கும்போது ‘நாலாஞ்சாதிக்காரனெல்லாம் என் கோவில்ல படுக்கறாண்டா’ என்று சாமி வந்த ஒருவர் பேசுவதைக் கேட்டு சாமி இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறான். தமிழ் படிக்கிறான். இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும் ராணுவத்தில் சேர்கிறான். போர் முடிந்து வந்து டெக்கான் ரேயானின் வேலைக்கு அமர்கிறான். திமுகவின் அனுதாபியாகிறான். கம்யூனிஸ்டுகள் கலகம் செய்பவர்கள், எதிரியை மதித்து போரிடுவதை அறியாதவர்கள் என்று கருதுகிறான். திமுகவின் வளர்ச்சி அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
திருவள்ளுவர் வழியில் வாழ்க்கை நடத்தும் ராஜு சுத்த சைவன். சண்டையிட்டுச் சென்ற மனைவியை அழைத்து வர குதிரைவண்டியின் முன்னால் செல்கிறான். உயிரினங்கள் இழுக்கும் வாகனத்தில்
ஏற மாட்டேனென்கிறான். எழுதப்படிக்கத்தெரியாத முரட்டு கிராமத்து மாமனாரிடம் இரவில் சென்று ‘ஐயன்மீர், எமது இல்லாள் உம் அகத்தே இருக்கிறாள் அவளை வெளியே அனுப்பும்’ என்கிறான். புன்னகையை வரவழைக்கும் காட்சிகள் இவை.
ஆரான் ராஜுவின் நண்பன். உக்கடத்தில் ஒரு சந்தில் வாழும் ஆரானின் குடும்பம் பிளேக் நோயால் சின்னாபின்னமாகிறது. ஆரானும் அவன் அம்மாவும் மட்டுமே மிஞ்சுகின்றனர். ஆரான் பனிரெண்டு வயதில் மில் வேலைக்குச் செல்கிறான். அதுதான் வயதாம்.
பிளேக் நோயால் கோவை சூறையாடப்படும் காட்சிகள்… கொத்துக் கொத்தாகப் பிணங்கள் விழுவதை வருணிக்கும் காட்சிகள்… சிறுவர்கள் பிரம்பால் அடிக்கப்பட்டு விரட்டி விரட்டி வேலை வாங்கப்படும் காட்சிகள்… தூக்கத்தை விரட்டக் கூடியவை. இவை நாவலை வேறு தளத்துக்குத் தூக்கியடிக்கின்றன. ஆரான் ஒன்றுபட்ட பொதுவுடமைக் கட்சியின் ஊழியன். ரத்தத்தால் நனைந்த போராட்டங்கள் வழியே பாட்டாளிவர்க்கம் முன்னேறும்போது ஆரானும் சேர்ந்து வளர்கிறான். ஆரானின் பார்வையில் சில கூர்மையான கேள்விகள் வைக்கப்படுகின்றன.
பாப்பான் கட்சி என்று கம்யூனிஸ்ட் கட்சியைப் பேசும் ராஜுவிடம் உன்னையும், என்னையும் கோழிக்குஞ்சு போல கூடைக்குள் முதலாளிகள் போட்டு மூடியபோது பாப்பாங்கட்சிதானே வந்தது என்று கேட்கிறான். கூடவே, அருகே மலைகளில், தெருக்களில் பிணங்கள் கிடந்தபோது; தஞ்சையில் சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுக்கப்பட்டபோது பாப்பாங்கட்சிதானே வந்தது என்றும் ஆசிரியர் சேர்த்துக் கேட்டிருக்கலாம். நாமே தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார் போலும்.
ஒன்று இரண்டு மூன்று என்று ஆரானின் கண் முன்னே ரத்தம் சிந்தி வளர்த்தெடுத்த கட்சி உடைந்து பலவீனமடைகிறது. நக்ஸல்பாரி இயக்கத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் கோவை நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தப் பிளவின் தாக்கம் கோவையில் அதிகமாகத் தெரிந்தது போலும்.
திமுகவின் வளர்ச்சியை ஆரான் கையறு நிலையில் பார்க்கிறார். ‘நம்மாளுக ஒண்ணு லண்டனுக்குப் போய் ஒலகத்துல இருக்கற எல்லாத்தையும் படிச்சவனா இருக்கான். இல்லாட்டி கத்தி கப்டாவத் தவிர ஒண்ணும் தெரியாத தற்குறியா இருக்கான். அண்ணாத்துர ஆளுக எடைல இருக்கற எல்லாப் பசங்களையும் அள்ளிட்டாங்க’ இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும், மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் தவறாக முற்றுகையிடப்படும் போதும் ஒரு தொழிலாளி சொல்லும் வார்த்தைகள் அனைத்தையும் விளக்கும். ஆரான் சகலத்தையும் இழந்து, நம்பிக்கையையும் இழந்து ஒரு கைவிடப்பட்ட கிராமத்தில் மரணத்தை எதிர் நோக்கி இருப்பதாக அவரது கதை முடிகிறது. ஆனால் அந்த நேரத்திலும் எங்க நொய்யலைக் கொன்ன மாதிரி உங்க பவானியக் கொல்ல விட்டுடாதீங்க’ என்று ராஜுவின் பேரன் கௌதமிடம் சொல்கிறார். அதுதான் பாட்டாளிவர்க்கப் பிரதிநிதியான ஆரான்.
சௌந்தரராஜன், கஸ்தூரிசாமி நாயுடுவின் மாமனார். மிக அழகான அறிவுபூர்வமான பாத்திரமான சௌதாமினியின் அப்பா. நவீனமான தாகூருக்கும், கிராமப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் காந்திக்கும் இடையே ஊசலாடுபவர். அகிம்சை ஒரு வழி மட்டும்தான் அந்த வழியில் எங்கே போகப் போகிறீர்கள் என்று காந்திய வாதிகளிடம் கேட்கிறார். காந்திய வாதிகள் குறட்டையை பதிலாக அளிக்கின்றனராம். நாவல் முழுவதும் காந்தியவாதிகள், கம்யூனிஸ்டுகள், திமுக, எம்பெருமான் முருகன் யாரும் முருகவேளின் மெல்லிய வலிக்காத கிண்டலுக்குத் தப்பவில்லை. அவரச நிலைக் காலத்தின்போது காந்தியவாதிகள் ஜெபி ஆதரவாளர்களாகவும் இந்திராகாந்தியை ஆதரித்த வினோபா ஆதரவாளர்களாகவும் உடைகின்றனர். பின்பு குடால் கமிஷன் அமைக்கப்பட்டு ஜெபி ஆதரவாளர்கள் வேட்டையாடப்படுகின்றனர்.
சௌந்திரராஜனின் பரிசோதனை முயற்சிகள் செயலிழக்கின்றன. அவர் வெறுமையில் மூழ்குகிறார். அவரது காந்திய அமைப்பை அவரது பேரன் என்.ஜி.ஓ.வாக மாற்றுகிறான்.
சுத்தமான முதலாளித்துவவாதிகளான கஸ்தூரிசாமியும், சௌதாமினியும் கூட பன்னாட்டு முதலாளிகளிடம் ஆலையைப் பறிகொடுக்கின்றனர். அதெல்லாம் அற்புதமான இடங்கள். முருகவேள் ஒரு வழக்குரைஞர் என்பதால் கம்பெனிச்சட்டத்தை ஒரு நாவலாக்கி இருக்கிறார். ஒரு ஆலை எப்படி துபாயிலிருந்து விழுங்கப்படுகிறது என்பது அணுவணுவாக விவரிக்கப்படுகிறது. பங்குச் சந்தை விளையாட்டு… ஆலைக்குள் நடக்கும் அதிகாரப்போட்டி… ஆலையை ஏறக்குறைய கைப்பற்றியவுடன் கஸ்தூரிசாமியைப் பார்க்க வரும் புதிய முதலாளி கேண்டி ‘நான் வெற்றி பெற்றவன் அல்ல – நீங்கள் தோல்வியுற்றவர்கள் அல்ல. இந்த முறையில் இந்த மாலை நாம் எதிர்காலம் குறித்து உரையாடலாம்’ என்கிறார்.
‘ஒரு பிரச்சினையைத் தீர்க்கப் பல வழிகள் உள்ளன’ என்று கஸ்தூரிசாமி சௌதாவின் கரம் பற்றிப் புன்னகைக்கிறார். மிக அழகான காட்சி அது. நினைத்தே பார்க்காத பெரும் தொகை பெறும் கஸ்தூரிசாமி அடுத்த முதலீடு பற்றிச் சிந்திக்கிறார். புலம்பல் இல்லை. உணர்ச்சிமயமான காட்சிகள் இல்லை. கண்ணீர் இல்லை. மெல்லப் படரும் மெல்லிய வெறுமையும் உடனே நீங்குகிறது. மனதால் அல்ல அறிவால் வாழும் ஆள்பவர்கள் சிந்திக்கும் முறையைக் கண்முன் காட்டும் சித்திரம் இது.
இந்த நான்குவிதமான ஆட்களுமே தோல்வியடைகிறார்கள் என்பதுதான் நாவல். புதியவர்கள் புதிய வழிகளில் தீர்வுகளைத் தேடுவதாக முடிகிறது கதை.
புதிய நிர்வாகம் ஆலையை ஐந்து மடங்கு பெருக்குகிறது. விளைவாக பவானி ஆறும், அணையும் பேரழிவுக்குள்ளாகின்றன. பெரும் போராட்டம் வெடிக்கிறது. கொஞ்சம் பலத்தையும் நிறைய அறிவையும் பயன்படுத்தி வெற்றியை ஈட்டும் அந்தப் போராட்டக் காட்சிகள் மெய்சிலிர்க்கக் கூடியவை.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போராட்டத்தை சமரசமின்றி நடத்தியவர்கள் எளிதில் கண்டுகொள்ளும் படியான புனைபெயர்களில் சுட்டப்படுகின்றனர். ஈரோடு டாக்டர் (டாக்டர் ஜீவா), மீசை இல்லாத தலைவர் (தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர்களில் ஒருவரான மோகன்குமார்), செல்லச்சாமி (செல்லப்பன்) இதில் கடுகளவும் கற்பனை இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. கண்முன்னே நமது நிலங்களும் ஆறுகளும், ஏரிகளும், ஏன் கடலு மே கூட நாசமாவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு இந்த வெற்றி பற்றிய பதிவு ஒரு படிப்பினையையும், நம்பிக்கையையும் தரும்.
ஆலை மூடப்பட்டதும் நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட ராஜுவின் பேரனான கௌதமும், திருநாவுக்கரசு போன்ற இளைஞர்களும் கழிவைக் கலப்பது மட்டும் அழிவு அல்ல. உரம், பூச்சி மருந்து மயமாகிவிட்ட விவசாயமும்கூட இயற்கையை அழிக்கத்தான் செய்கிறது என்று இயற்கை வேளாண்மையில் இறங்குகின்றனர்.
ஆலைக்கு மரம் வெட்டச் சென்று முடமாகிப்போன மாரிமுத்துவின் பேரன் சந்துருவும், ஆலையால் வாழ்க்கை இழந்த பல்லாயிரம் மக்களும் ஆலையை இரவும் பகலும் கொள்ளையடிக்கின்றனர். இரவில் நட்சத்திர ஒளியில் ஏராளமான பரிசல்கள் ஆற்றைக்கடந்து வரும் காட்சி, யானைகள்… இரவும் பகலும் ஆலையில் தங்கி மெஷின்களைக் கழற்றும் திருடர்கள் அவர்களின் கேளிக்கைகள்… இன்னொரு தளம்.
சகலத்தையும் தியாகம் செய்து நிலத்துக்குத் திரும்பி விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் பெருமுதலாளிகளும் புதிதாக உருவான சாமியார்களும் (ஆஸ்மான் சாமியார் ஒரு ரசனையான கலக்கலான பாத்திரம்) இயற்கை வேளாண்மையின் பலன்களைக் கைப்பற்றுவதைப் பார்க்கின்றனர். ‘நமது நோக்கம் இயற்கை வேளாண்மை எனப்படும் தொழில்நுட்பமா அல்லது அதன் வழியாக கிராமப் பொருளாதாரத்தை மீட்டெடுத்து இயற்கை பேரழிவுகளை வெல்வதா என்பது பற்றிய கூர்மையான விவாதங்கள் இடம்பெறுகின்றன. போராடி அரசை வலியுறுத்துவதா தன்னைத்தானே திருத்திக்கொள்வதன் மூலம் சாதிப்பதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இயற்கை வேளாண்மை என்பது வெறும் ஆரோக்கியமான உணவு, மண்வளத்தைக் காத்தல் மட்டுமல்ல. அது ஒரு மாற்று வாழ்க்கை முறை. இயற்கைச் செல்வங்களை உறிஞ்சி எடுக்காமல் இயற்கையோடு இனைந்து வலிக்காமல் வாழும் மாற்றும் வாழ்க்கைமுறை என்று சொல்லப்படுகிறது. முருகவேள் தானாக இந்த விவாதங்களை எழுதியிருக்க முடியாது. அப்படி அவர் கற்பனையில் எழுதக்கூடியவர் அல்ல. முன்னுரையில் கூறப்படும் நன்றிகள் பல இயற்கை விவசாயிகள் இந்நூலின் ஆக்கத்தில் தொடர்பு கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. எனவே இவ்வளவு கூர்மையான, செறிவான விவாதங்கள் பிரமிக்க வைக்கும் அளவுக்கு நடந்து வருகின்றன என்றே கொள்ள வேண்டும். அற்புதம்.
பவானிசாகர் அணையின் உட்பகுதிகளில் நடக்கும் வாழ்க்கை தமிழில் இதுவரை வராத ஒன்று. நீரில் மிதந்து கொண்டே விதைப்பது. டணக்குக் கட்டைகள், காடுகளில் இருந்து மோயார் அடித்துக் கொண்டுவரும் மரங்களை எடுக்க கரையோர மக்கள் நடத்தும் மரம் ஒதுக்கும் திருவிழாக்கள்… அணை கட்டப்பட்டதும் பவானிப் படுகை அடையும் மாற்றங்கள் மணல்வெளிப் பிரதேச புதர் மண்டிப் போவது… ஆற்றுடன் இரண்டறக் கலந்த மக்கள் வாழ்க்கை பவானி இறால்கள்… முதலை வேட்டை…
இறுதியில் வரும் மிக மிக நுட்பமாக விவரிக்கப்படும் நீதிமன்றக் காட்சியும், கவித்துவமான கௌதம் வர்ஷினி சந்திப்பும் இந்த இரண்டு தளங்களையும் ஒன்றாக்குகின்றன. ஆசிரியர் எல்லாப் பாத்திரங்களையும் அவரவர் போக்கில் செல்ல அனுமதிக்கிறார், எந்த ஒரு பாதையும் சரி, தவறு என்று சொல்வதில்லை. நாவலின் பலம் அதுதான். பல தளங்களில் இயங்கும் நாவலில் விரிவாக விவரிக்க முடியாத ஆனால் தவிர்க்க முடியாத காட்சிகள் உள்ளன.
1. எம்.எல் இயக்கத்திலிருந்து வீடுதிரும்புபவர்கள் அவர்களின் பல்வேறு வகை மாதிரிகள் தமிழுக்குப் புதியது. இதில் செல்ல சாமி வேணு தலைமையிலான சிஆர்சி என்ற அமைப்பில் இருந்தார். அந்த அமைப்பு ஆயுதப் போரட்டப் பாதையைக் கைவிட்டதும் வீடு திரும்பினார் என்பது போன்ற விவரணைகள் இந்த மாதிரி மனிதர்கள் தமிழ்நாட்டில்தான் இருகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
2. வங்கிக் கடனின் மூழ்கி போண்டியாகும் விவசாயி
3. மயில்களால் நாசமாகும் விவசாயம்
4. மகள்களை மிரட்டி சொத்துக்களை மகன் பெயருக்கு எழுதி வைக்கும் கிராமப்புற அப்பா அம்மா
5. சாதியைக் கேட்டதும் காணாமல் போகும் தெய்வீகக் காதல்
6. பஞ்சகாலத்தில் செல்வச்செழிப்புடன் நடக்கும் விருந்து
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். வர்ஷினி அழகிதான். ஆனால் நீல மலைகளில் இருந்து பாய்ந்தோடிவரும் முகிலினிதான் பேரழகி. மாற்றிச் சொன்ன ஆசிரியருக்குக் கண்டனங்கள்.
(நன்றி: புத்தகம் பேசுது)