டாக்டர் முஹம்மத் ஹுஸைன் ஹைகல் எழுதிய ‘ஹயாத் முஹம்மத்’ நூலின் உலக அளவிலான அங்கீகாரத்தைக் குறிப்பிடும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்கம் தொடர்பான ஒரு தகவல்.
‘ஹயாத் முஹம்ம’தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது தொடர்பாக, 1940 களில் சிகாகோ பல்கலைக்கழகம், பல்வேறு அறிஞர்களுடன் கலந்தாலோசனை செய்யத் தொடங்கியது இந்த ஆலோசனை 1964 வரை நீடித்தது. ஃபிலடெல்ஃபியா விலுள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பேராசிரியரான இஸ்மாயீல் ராஜி ஃபாரூக்கி, 1968 இல் ‘ஹயாத் முஹம்ம’தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முடித்தார். கெய்ரோவிலுள்ள மத விவகாரங்களுக்கான உயர்மட்ட கமிட்டியும் சிகாகோ பதிப்புத் துறையும் இம்மொழிபெயர்ப்பிற்கு அங்கீகாரம் வழங்கியதுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி, மொழிபெயர்ப்பாளருடன் ஒப்பந்தமும் செய்துகொண்டது. இந் நிலையில் சில மறைமுக சக்திகள் தலையிடவே சிகாகோ பல்கலைக்கழகம் தனது ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்தது.
பின்னர், 1969 இல் இதன் வெளியீடு தொடர்பாக டெம்பிள் பல்கலைக்கழக பதிப்புத் துறைக்கும் மொழிபெயர்ப்பாளருக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இம் முறையும் சில மறைமுக சக்திகள் தலையிட்டன. இதன் விளைவாக, தனது திட்டத்தை ஐந்து வருடங்கள் கிடப்பில் போட்ட டெம்பிள் பல்கலைக்கழகமும் முடிவில் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மொழிபெயர்ப்பாளர் சோர்ந்து விடவில்லை. அவருக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள முஸ்லிம் மாணவர் அமைப்பு தங்களுடைய வட அமெரிக்கா டிரஸ்ட் பப்ளிகேஷன் மூலம் வெளியிட முன்வந்தது. ரியாதிலுள்ள வேர்ல்ட் அசெம்ப்ளி ஆஃப் முஸ்லிம் யூத் அமைப்பின் பொருளாதார உதவியுடன் ‘த லைஃப் ஆஃப் முஹம்மத்’ என்னும் தலைப்பில் 1976 இல் இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது.
டாக்டர் ஹுஸைன் ஹைகல் தனது ’ஹயாத் முஹம்மத்’ நூலின் முதல் பதிப்பில் எழுதிய முன்னுரை குறித்த ஒரு தகவலையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய முஹம்மத் முஸ்தஃபா அல் மராகி, “ஒரு ஆய்வைப் பொறுத்தவரை அதற்கான கருதுகோள்கள் குறித்த அனைத்து நம்பிக்கைகள் மற்றும் முன் முடிவுகளை விட்டு ஆய்வாளர் விலகியிருக்க வேண்டும்” என்கிறார். நூலாசிரியரும் ஒரு இடத்தில் இதை வலியுறுத்துகிறார். நூலை ஆழமாக வாசித்துப் புரிந்துகொள்வதும் ஆய்வுக்கு நிகரான ஒரு செயல்பாடுதான். நூலாசிரியரின் முன்னுரை இதற்கு மாறாக இருப்பது போல் உணர்ந்தேன். மேலும், நீளமான அந்த முன்னுரை, நூல் எழுதப்பட்ட காலகட்டமும் சமூகச் சூழலும் சார்ந்து தேவையான அல்லது தவிர்க்கத் தேவையற்ற ஒன்றாக இருக்கலாம். தற்போதைய சமூகம் மற்றும் வாழ்வியலில், காலத்தையும் இடத்தையும் கணக்கில் கொள்ளாமல் பொருத்திப் பார்க்க நினைக்கும் மனவோட்டங்களை அது உருவாக்கக்கூடும். மொழிபெயர்ப்பாளன் என்ற நிலையில் நூலின் முக்கிய அம்சமாக நான் முன்னிறுத்த விழைந்தது நபிகளாரின் வாழ்க்கை வரலாறு. இதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் முன்னுரையில் மட்டும் சற்று சுதந்திரமாகச் செயல்பட்டேன். அதாவது, முன்னுரையைச் சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்.