‘ஊர்மிளா பவார்’ மகர் எனும் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயல்பாட்டாளர், பெண்ணியப் போராளி. குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர், தலித் பெண்ணிய வரலாற்றாளர், மத அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். ஊர்மிளா பவாரின் ஆய்தம் என்ற சுயசரிதையை ‘த லீவ் ஆப் மை லைப்’ என்னும் பெயரில் மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாயாபண்டிட்டும், தமிழில் ‘முடையும் வாழ்வு’ என போப்பும் மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர். மராத்தியில் முதன்முதலாக எழுதப்பட்ட தலித் பெண்ணின் சுயசரிதை இது. இந்நூல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தொடரும் மரபுக்களத்தில் புதிய உடைப்பு.
விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனைகளும், சமூக உட்கூறுகள் பலவும் இந்நூலில் பொதிந்திருப்பதால் வாசிப்பு வெளியில் முதன்மையான இடத்தை பெற்றுள்ளன. மராத்தி தலித் எழுத்து வரலாற்றில் நல்லதொரு வழிகாட்டியாக விளங்கும் இந்நூல், மிகுதியான விமர்சனத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மேலும், தலித் பெண்கள் எதார்த்த வாழ்விலிருந்து இயக்கத்திற்கு எப்படித் தாமாகவே செயலூக்கம் பெறுகிறார்கள் எனவும், தலித் பெண்கள் குறித்து வெளிப்படையாக கருத்துரைக்கும் இவரின் ஆற்றலும், பெண்ணிய நோக்கில் தலித் குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்க நிலைப்பாடுகள் பலவற்றையும் இவர் ஆவணப்படுத்தியுள்ளார். இவரது செயல்பாடுகள் எப்பொழுதும் தனித்துவமானவை. குறிப்பாக, அம்பேத்கரின் இயக்கத்தில் பெண்கள் பங்கேற்பு பற்றி இவர் எடுத்துரைத்த வரலாறு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
தொடக்ககால தலித் படைப்புகளைப் போலவே ஊர்மிளா பவாரும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளார். அவரது இச்சுயசரிதை ஆண், பெண் எழுத்து முறைக்கு புதிய வரவாகவும், முக்கியமான நீட்சியாகவும் அமைந்துள்ளது. சமூகம் முழுவதும் எல்லா நிலையிலும் உயர்சாதியினரின் சுரண்டல் நிலை நீடிப்பதால், அடித்தள மக்களின் வாழ்வு நசுக்கப்பட்டு மிகவும் பின்தள்ளப்படுவதை தனது படைப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். தலித் மக்களின் வசிப்பிடம் பெரும்பாலும் கிராமத்தின் நடுவில் அமைந்திருப்பதன் நோக்கம் மேல்சாதியினரின் அனைத்து விதமான வேலைப்பாடுகளுக்கு அவர்களை பணிப்பதற்கும், பிரச்சனையின் போது நாலாபக்கமிருந்தும் அவர்களைத் தாக்குவதற்கும் வசதியாக இருக்கும் என்ற காரணமே எனத் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், ஒரு சிறிய கிராமப் புறத்திலிருந்து பெரு நகரத்திற்கு இடம் பெயரும் நெடிய பயணத்தில் ஒரு தலித் பெண் எதிர் கொள்ளும் போராட்டத்தையும், அது அவரை அறிவுஜீவியாகவும், எழுத்தாளராகவும் மாற்றிய அனுபவித்தையும் ஊர்மிளா பவார் நினைவுகளாக நம்முன் பதிவு செய்துள்ளார். ஒரு தலித் பெண்ணியவாதியின் கனவான நீதி, சமத்துவம், விடுதலை, புரட்சிகரம், குடிமைத்துவம், முன்னேற்றம், ஜனநாயகம் ஆகிய மதிப்பீடுகளில் தனது ஒருங்கிணைந்த பங்கை தமது எழுத்தின் மூலம் உருவாக்கவும் முயன்றுள்ளார். இம்முயற்சிதான், தலித் பெண்ணிய, புரட்சிகர போராட்டப் பாரம்பரியத்தில் இதுவரை எழுதப்பட்ட மற்ற நூல்களில் இருந்து அவரையும், அவரது படைப்பையும் தனித்துவம் வாய்ந்ததாக மாற்றியிருக்கிறது. எனவேதான், ஊர்மிளா பவாரின் இந்நூலை மொழிபெயர்த்து வழங்கிய போப் அசாதாரண அனுபவத்தை அளித்தது எனக் கூறியுள்ளார்.
முதலாளித்துவப் போக்கில் சுயசரிதை என்பது தனிமனிதனை அடையாள உணர்வில் இருந்து துவங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சுயசரிதை என்பது தனியொருவனைச் சார்ந்தது அல்ல, மாறாக அவனது ஒட்டு மொத்த சமூகமும் தனது மகரிய நினைவுகளைப் பெருமையுடன் பேசுவது, மகாராஷ்ட்ரா கிராமங்களில் உள்ள அனைத்து தலித் சமூகங்களும் முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டெழுவதை பெருமையுடன் எடுத்துரைக்கிறது இந்நூல்.
தலித் பெண்கள் அடுத்தடுத்த நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையிலும் பொதுத்தளத்திலும் அதிகரித்து வரும் வறுமை, வேலையின்மை, சாதிய மோதல் ஆகியவற்றின் தாக்கத்தால் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். சாதியப் போராட்டத்தில் பலர் சமஅளவில் பங்கேற்றனர். தலித்தியப் போராட்டங்களில் துவக்கத்தில் இருந்து இன்றுவரை பெருந்திரளாகத் திரண்டனர். பயங்கரமான தாக்குதலைச் சந்தித்த போதிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தனர். பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடிவதில்லை. உள்ளுர் பஞ்சாயத்துகளில் போட்டியிட்டு தேர்வு பெற்ற பின்னும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஆதிக்க சாதியினரின் ஒட்டுமொத்த சகிப்பற்ற அரசியலால் பாலியல் வன்முறைகள் அதிகரித்தன. ஆதிக்கச் சாதியினர் தலித்துகளை அடக்கு முறையின் மூலமாக பயங்கரமாக தண்டித்து அழிக்க முயன்றனர். ஊர்மிளா தனது நினைவுகளில் இருந்து வர்ணிப்பது போல தலித் மக்களுக்கு கிராமங்களில் மராத்வாடாக்களில் மனிதரில் கேவலமான நிலை நீடிக்கிறதென்றால், நகர்ப்புறத்து சேரிகளிலும், சாக்கடைக் கரைகளிலும் எலிகள் கால்களைச் சுரண்டும் வளைகளிலும் வசித்து வருகின்றனர் என்பார்.
இதுபோன்ற தன் வாழ்வனுபவங்களை தன் வரலாறாக எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஊர்மிளா பவார் தனது நூலின் தொடக்கத்தில் விளக்கியுள்ளார். ‘நெடுநாட்களாகத் தொடரும் பெருங்கடன் ஒன்று எனக்கிருப்பதை நான் இங்கே முதலில் கூறியாக வேண்டும். எனது கிராமத்தின் துயரப்படும் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் தினசரித் தேவையை சமாளிக்க பயங்கரமான தலைச்சுமையுடன் அன்றாடம் மலைமீது ஏறி இறங்குகிறார்கள். தங்களது பயணத்தின் போது என்னையும் தங்கள் தோள்களில் சுமந்து சென்றார்கள். எனது குழந்தைப் பருவத்தில் என்மீது மிகவும் பரிவு காட்டினார்கள். அத்தனை எளிதில் தீர்ந்து விடக்கூடியதல்ல என்றாலும் அதனை திருப்பிச் செலுத்த முயன்றேன். அதற்காகவே எனது குழந்தைப் பருவம் முதல் எழுதத் தொடங்கினேன்’ எனத் தன் வரலாற்றினை பதிவுசெய்துள்ளார் ஊர்மிளா பவார். இவரது படைப்பும் வாழ்வும் முதிர்ந்த எழுத்தளாரின் பக்குவத்தை வெளிப்படுத்;துவதாக அமைந்திருந்தது என்பது மட்டும் ஆச்சரியம் கலந்த உண்மையாகும்.
(நன்றி: இண்டங்காற்று)