மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது எப்போதுமே புதுவகை அனுபவமாக அமைகிறது. அவரது மொழி ஆளுமையும் கதை சொல்லும் முறையும் வியக்க வைக்கிறது. 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி ‘சிறுகதைத் திருமூலர்’ எனக் கொண்டாடப்படும் ஆளுமையாக விளங்குகிறார் மௌனி!
1907-ல் தஞ்சாவூர் மாவட்டத்தின் செம்மங்குடியில் பிறந்தவர் மௌனி. 1929-ல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் கும்பகோணத்திலும் பிறகு சிதம்பரத்திலும் வசித்தார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட மௌனி மணிக்கொடியில் எழுதியவர். எஸ்.மணி என்ற இயற்பெயரை ‘மௌனி’ ஆக்கியவர் எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. கல்லூரி காலத்தில் மௌனியை நண்பர்கள் ‘மைல்மணி’ என்று அழைப்பார்களாம். காரணம், ரன்னிங் ரேஸில் நன்றாக ஒடுவார்.
‘மௌனியோடு கொஞ்ச தூரம்’ என்று எழுத்தாளர் திலீப்குமார் இலக்கியச் சிந்தனைக்காக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது மௌனியின் புனைக் கதைகளைப் புரிந்துகொள்ளத் துணை செய்கிறது என்றால், ஜே.வி.நாதன் எழுதியுள்ள ‘மௌனியின் மறுபக்கம்’ அவரது வாழ்க்கையை, இலக்கிய ரசனையை, சிறுகதைகள் எழுதிய விதத்தைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. இந்நூலை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.
மௌனியோடு 16 வருடங்கள் நெருங்கிப் பழகியவர் எழுத்தாளர் ஜே.வி.நாதன். ஆகவே இந்த நூலின் மூலம் மௌனியின் வாழ்க்கையையும் படைப்பு அனுபவத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மௌனியின் ‘தவறு’, ‘அத்துவான வெளி’ ஆகிய சிறுகதைகளும் ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்களும், இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
மௌனிக்கும் தனக்குமான நட்பு எப்படித் தொடங்கியது என்பதை நினைவுகொள்ளும் ஜேவிநாதன், அந்த நட்பு நாளடைவில் மிகவும் நெருக்கமாகி தினமும் மௌனியைத் தேடிப் போய்ச் சந்தித்து வந்ததையும், சில நாட்கள் மௌனியே அவரைத் தேடி வந்து உரையாடியதையும் நெகிழ்வோடு விவரித்துள்ளார்.
மௌனி அன்றாடம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றுவரக்கூடியவர். ஆனால், கோயிலில் அவர் சாமி கும்பிடுவதில்லை. இது பற்றி ஜே.வி.நாதன் கேட்டதற்கு மௌனி சொன்ன பதில்:
“நான் ஒருநாள் வரலேன்னாலும் நடராஜரும் மத்த சாமிகளும் ‘ஏன் இன்னிக்கு வரலே’ன்னு கேட்டுக் கோவிச்சுப்பாங்கப்பா. அதனாலதான் நான் நாள் தவறாம அட்டெண்டன்ஸ் கொடுக்கறேன்!”
கடவுளையும் நண்பனாகக் கருதிய மனதே மௌனியிடம் இருந்தது. மௌனி தான் எழுதும் கதைகள் எதற்கும் தலைப்பு வைத்ததில்லை. ஒவ்வொரு கதையையும் திரும்பத் திரும்பப் பலமுறை எழுதக்கூடியவர்.
இந்தப் புத்தகத்தில் அப்படி ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் ஜே.வி.நாதன்:
‘மௌனியின் சிறுகதை ஒன்றை படியெடுக்க உதவியபோது, ஒவ்வொரு பக்கத்தையும் மௌனி மீண்டும் மீண்டும் திருத்திக் கொண்டேயிருந்தார். இரவெல்லாம் கண்விழித்துப் படி எடுத்தேன். அவரோ திருத்திய பக்கங்களில் மீண்டும் புதிதாகத் திருத்தம் போட்டுக் கொண்டேயிருந்தார். இதனால் எனக்கு எரிச்சலாக வந்தது. எனக்கு வயது அப்போது 22; மௌனிக்கு 64 வயது. அவர் மீதுள்ள மரியாதையால் கதையைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நள்ளிரவில் என்னிடம் வந்து நீ கரெக் ஷன் செய்து முடிச்சதும், அப்படியே என்கிட்ட காட்டமாக் கிளம்பி போய்த் தபாலில் சேர்த்துடு. இல்லாவிட்டால் நான் மறுபடியும் கரெக் ஷன் போட ஆரம்பிச்சிடுவேன் என்றார்’. மௌனியின் கதைகள் வடிவரீதியாகவும் மொழியிலும் கச்சிதமாக உருப்பெற்றதற்கு இதுவே காரணம்.
‘‘மௌனி தான் எழுதிய கதைகளைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர். நிறையப் படிப்பார். அவர் படித்த புத்தகங்களில் தத்துவம் குறித்த நூல்கள் அதிகமாக இருந்தன. அவரது உறவினர்களுக்குக் கூட அவர் ஓர் எழுத்தாளர் என்பது தெரியவே தெரியாது’’ என்கிறார் மௌனியின் சிறுகதைகளைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்த எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தம்.
மௌனிக்கு வயலின் வாசிக்கத் தெரியும். அவரது வீட்டில் ஒரு வயலின் வைத்திருந்தார். அதில் ஒரு அதிசயம் உண்டு. இசை எழுப்பும் கம்பிகளுக்குப் பதிலாகத் தேங்காய் நாரைப் பதப்படுத்தி, பழுப்பு சணல் போன்ற மெலிதான இழைக் கயிறுகளை அதில் இழுத்துக் கட்டியிருப்பார். வில்லை அந்த நரம்பு போன்ற இழைக் கயிற்றின் மீது வைத்து இழுத்தால் இசை மிகவும் சன்னமாகக் கீச்சுக் குரல் போல வெளிவரும். வீட்டுக்குள்ளிருக்கும் மனைவிக்குத் தன் வயலின் இசை தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்கு அவர் கண்டுபிடித்த ஐடியா அது.
மௌனிக்கு நான்கு மகன்கள் ஒரு மகள். முதல் மகன் சென்னையில் டிராம் விபத்தில் உயிரிழந்து போனார். இன்ஜினீயராகப் பணியாற்றிய இரண்டாவது மகனும் எதிர்பாராதபடி குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இளவயதில் இறந்து போனார். மூன்றாவது மகன் தத்துவம் படித்தவர். ஆனால், மனநிலை சரியற்று வீட்டிலேயே இருந்தார். அந்த மகனைப் பற்றிய கவலை மௌனிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து வந்ததாம். நான்காவது மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
‘‘அனுபவ வெளியீட்டை அழகாகச் செய்தால் கலை ஆகும். அனுபவம் என்பது வார்த்தையற்றது. உணர்வால் பெறப்படுவது. உண்மையான கலைஞனுக்கு அனுபவம் வெளியீடு ஆகும்போது வார்த்தைகள் தாமாகவே வந்து விழுகின்றன. நாயைக் கட்டி இழுப்பதைப் போல வார்த்தைகளைக் கட்டி இழுப்பதெல்லாம் காலத்தில் அடிபட்டு போய்விடக்கூடியவை. ஒர் எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகளை வலிந்து அடுக்கி சுழற்றி மேற்பூச்சு நகாசு வேலை செய்பவன் ஒருபோதும் சிறந்த கலைஞன் ஆக மாட்டான்’’ எனக் கூறுகிறார் மௌனி.
ஆல்ப்ர்ட் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிஞர் மௌனியிடம் ‘‘நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?’’ எனக் கேட்டபோது, ‘‘என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை; அதனால் எழுதுகிறேன்’’ எனப் பதில் சொன்னார் மௌனி.
பெயரவில்தான் அவர் மௌனி. ஆனால், நிறையப் பேசக்கூடியவர். ‘‘பேசுவது என்பது வார்த்தைகள் மூலமாகத் தன்னைத்தானே தெளிவு படுத்திக் கொள்வது. ஆகவே, நிறையப் பேசுகிறேன். நான் பேசுவது எதிரில் இருப்பவர்களுக்காக அல்ல’’ என்கிறார் மௌனி.
எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு ‘‘நல்ல சிறுகதை என்பது ஒரு கவிதை. என் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையே’’ எனப் பதில் அளித்திருக்கிறார் அவர்.
டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, இப்சன், அனடோல் பிரான்ஸ், ஆன்டன் செகாவ் இவர்களின் படைப்புகளைத் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறும் மௌனி, ராபர்ட் ம்யூசில் எழுதிய ‘The Man Without Qualities’ நாவலை தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார்.
ஜே.வி.நாதன் தனது எழுத்தின் வழியே மௌனியை நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகிறார். நாமும் மௌனி அருகே அமர்ந்து உரையாடுவது போலவும் உடன் நடந்து செல்வது போலவும் நெருக்கமாக எழுதப்பட்டிருப்பதே இந்த நூலின் சிறப்பு.
‘மௌனியின் கதைகள் புரிவதில்லை’ என்பவர்கள் ஒருமுறை இதைப் படித்தால் மௌனியைப் புரிந்துகொள்வதோடு, அவரது கதைகளையும் புரிந்துகொள்ள முடியும்.
(நன்றி: தி இந்து)