“மதங்களின் மீதான விமர்சனம்தான் எல்லா விமர்சனங்களுக்கும் முன்னுரை”- மார்க்ஸ்.
இந்தியாவுக்கு யாகூப் மேமன்களை கொல்ல வேண்டியிருக்கிறது, அவர்கள் இசுலாமியர்களாக இருப்பதால்! கொல்லப்படும்போது குரல் கொடுப்பதைத் தவிர்த்து நம்மிடம் கொலைகளைத் தடுக்க என்ன இருக்கிறது?
நேற்றைய கோகுல்ராஜ் படுகொலை,இதற்குமுன் இளவரசன். சாதிமறுப்பு திருமணத்திற்காக நத்தம் கிராமம் எரிப்பு, கற்பனையாக பெண் கடத்தல் நாடகமாடி ஆம்பூர் இஸ்லாமிய சமூகம்மீது அடக்குமுறை, ஷமில் அகமது சாவுயென உடனடி சமூக கொடுமைகளையே ஒரு ஓய்வுநேர திரைக்காட்சிகளாக பார்த்துவிட்டு மறந்துபோகும் சராசரி தமிழ் மனத்தை இந்த நாவல் ஒன்றும் செய்யப்போவதில்லை. அடுத்தவேளை உணவு உத்தரவாதமென்ற சீர்த்திருத்த பொருளாதார வாழ்க்கைமுறை தமிழக மக்களை எல்லா கொடுமைகளையும் தாங்கிக்கொள்ளப் பயிற்றுவித்திருக்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறோம், அரசியல் செய்கிறோமென சொல்லிக்கொள்கிற கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சம்சுதீன் ஹீராவின் “மௌனத்தின் சாட்சியங்கள்” நாவலை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது.
1998 பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெடித்து சிதறிய கோவையின் கொடூரத்தைத்தான் வலியோடு பதிவுச் செய்திருக்கிறது நாவல். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட கோவைகலவரம் குறித்து, தமிழில் வெளிவந்த முழுமையான நாவல் இதுவாகவே இருக்கும். நாவல் கூறுவதுபோல “மீனாட்சிப்புரத்துல தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்குல குடும்பம், குடும்பமா இசுலாத்துக்கு மாறுனாங்க. பெரிய, பெரிய அரசியல் தலைவர்களெல்லாம் பேசியும் மக்களோட மனச மாத்த முடியல. இத வடக்கத்திய மதவாத இயக்கம் சரியாப் பயன்படுத்த தொடங்கிச்சு. அதுவரைக்கும் பெரியாரோட சுயமரியாதை இயக்கங்கள், பிராமணிய எதிர்ப்பு இயக்கங்களால தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமலிருந்த அந்த மதவாத அமைப்பு செயல்பட ஆரம்பிச்சிச்சு. தமிழ் பெயர்களில் ஒண்ணுக்குப் பின்னால் ஒண்ணுன்னு மதவாத இயக்கங்கள் தோன்றிச்சு.” இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றிய இந்து மத அடிப்படைவாத அமைப்புகளும், இதற்கு எதிர்வினையாக தோன்றிய இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளும் கோவையை குண்டுவெடிப்பால் சிதைத்துப்போட்டன.
அந்த குண்டு வெடிப்போடு மத அடிப்படைவாத அமைப்புகள் செயலிழந்து விட்டனவா? இல்லையே! இந்துமத அடிப்படைவாத அமைப்புகள் மத்தியில் ஆட்சியோடு செழிப்படைந்திருக்கின்றன. கோவையைப் போலவே தமிழ்நாடெங்கும் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியெங்கும் போலீஸ் கண்காணிப்பு வளையங்களும், அதிகார முற்றுகையும் நீடிக்கிறது. பிரதமருக்கு ஆபத்து, இராணுவ முகாமுக்கு ஆபத்து, இந்தியாவுக்கு ஆபத்தென இஸ்லாமிய இளைஞர்கள் பலிகடாவாக்கப்படுகின்றனர். கோவையில் மட்டுமல்ல, கோவையைப்போல் மட்டுமல்ல, குஜராத்தைப்போலவும் தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இனியொரு மதக்கலவரம் நடக்காதென யாராலும் சொல்ல முடியுமா? ஆகவேதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறோம், அரசியல் செய்கிறோமென சொல்லிக்கொள்கிற கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சம்சுதீன் ஹீராவின் “மௌனத்தின் சாட்சியங்கள்” நாவலை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது.
இந்துத்துவ பயங்கரவாதத்திற்குப் பலியாகும் வகையில் இஸ்லாமிய மக்கள் வலைக்குள் சிக்கவைக்கப் பட்டிருக்கின்றனர். இஸ்லாமியரிடத்தும் அடிப்படைவாத அமைப்புகளே செல்வாக்கு செலுத்துகின்றன. முஸ்லீம் லீக் மாதிரியான சனநாயக அமைப்புகளிடம்கூட அடிப்படைவாதம் ஊடுருவியுள்ளது. இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் தங்கள் மக்கள் மீதான தாக்குதலை தங்களின் பண்பாட்டின் மீதான தாக்குதலாகவேப் பார்க்கின்றன. விஷயம் வெறும் பண்பாட்டுப் பிரச்சினையா?
உலகமயமாக்கல், சோவியத் யூனியன் தகர்வு, அமெரிக்க வல்லாதிக்கம் எனசமூக அரசியல் பொருளாதாரமாற்றங்கள் மற்றும் நெருக்கடிகளால் 1990-களில் உலகமே கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்நிலையானது வல்லரசுகளின் நிழலில் பதுங்கியிருந்த இந்தியாவை இயல்பாகவே பாதித்தது. புதியப் பொருளாதாரக் கொள்கையும், அந்த கொள்கைக்கு இடையூறில்லாமல் மக்களை தயாரிப்பதற்கான சாதி – மத – இன அடையாள அரசியலும் உலகெங்கும் முன்னுக்கு வந்தன. இது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பரவியிருந்த மதவெறி பாசிசத்திற்கு தனதுசெயல்திட்டங்களை முடுக்கிவிடுவதற்கான அதிக வாய்ப்பை வளர்த்துவிட்டது. இதன்படி, ஏகாதிபத்திய அத்துமீறலும், இந்திய பெருமுதலாளிகளின் கஜானாவும், சங்பரிவாரின் மதவெறி பாசிஸமும் கைகோர்த்துக் கொண்டன.
இந்த சங்க்பரிவாரங்களின் துணையோடு சிறுதொழில்கள், விவசாயம், கிராமப் பொருளாதாரம், உற்பத்தி, விற்பனை போன்ற அனைத்துவணிகச் செயல்பாடுகளிலும் இந்து பார்ப்பன – பனியா வல்லாதிக்க சக்திகள் ஆதிக்கம் செலுத்தத்துடித்தன. சாகாவகுப்பு, விநாயகர் ஊர்வலம், பசுபாதுகாப்பு இயக்கம், இரத யாத்திரைகள், இராம ஜென்மபூமி போன்ற மதவெறி முழக்கங்கள் மேலெழுந்தன. மும்பைகலவரம், கோவை கலவரம் என்றுநீண்டதொரு பட்டியலில் கலவரச் சூழலைஉருவாக்கி ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றமுயற்சித்தன இந்து பாசிச சக்திகள்.இதன் எதிரொலிப்பாக இந்திய மக்களின்வாழ்வும், வளமும், அமைதியும் பலியிடப்பட்டன. இப்படித்தான் கோவையில் மதக்கலவரத்தின் மூலம் இசுலாமியர்களின் சில்லரை வியாபாரமும், வாழ்வாதாரமும் இந்துத்துவப் பயங்கரவாதத்த்தால் பறிக்கப்பட்டதென்பதை வலியோடு சொல்கிறது நாவல்.
இந்திய மக்களின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுவதில் இந்துத்துவம் செழிப்படைந்துக் கொண்டிருக்கிறது. இதை இஸ்லாமிய அடிப்படைவாதமா மீட்டெடுக்கும்? அப்படியானால் மீட்டெடுப்பதாக சொல்லிக்கொள்ளும் இயக்கங்கள் என்ன செய்யப் போகின்றன? என்பதே நாவல் எழுப்பும் கேள்வி.
கடந்தகால வரலாறுகள் மற்றும் நிகழ்கால அறிவை இழந்த மூளைகளில் மதவெறி திணிக்கப்பட்ட, சக மனிதர்கள் மீது எப்போதும் வன்மத்தை நிகழ்த்துவதை மட்டுமே அறிவாகக்கொண்ட ஒரு கூட்டத்தை மதவெறி அமைப்புகள் உருவாக்குகின்றன. வன்மத்தின் கொடுங்கரங்கள், தங்களுடன் பிறந்து வாழும் இஸ்லாமிய,கிறிஸ்தவ மக்களின் குரல்வளையை நெரிப்பதையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலை அடிப்படையாகக் கொண்டஒரு அமைப்பின் கீழ் இயங்கும்அதிகாரவர்க்கமும் ஆட்சிப் பீடமும் இதற்குத் துணையாக கிடைத்திருப்பது ஜனநாயக அவலங்களில் மிகமோசமானது.
இந்நிலையில் இஸ்லாமியரிடத்தும், மத சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளிடத்தும் முற்போக்கு இயக்கங்கள் செல்வாக்கிழந்து கிடப்பது அச்சமூட்டுகிறது.
கொடுமை என்னவெனில் சாதி மேலாதிக்கத்தையும், அதன் மூலம் தலித் மக்கள் மீது வன்கொடுமைகளையும் நீடிக்கச் செய்யும் இந்துத்துவ அடிப்படை அரசியலில் தலித் மக்கள் அமைப்பாகி வருவதுதான். அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட அதே 90-களில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை தனது அடியாள்படையாக இந்துத்துவம் பயன்படுத்திக் கொண்டதென்பதை மறந்துவிட வேண்டாம். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருபோதும் சாத்தியமில்லாத, சங்பரிவார்களின் அகண்ட தேசக் கனவுகளுக்காக, தங்கள் சொந்தமக்களையே எதிரிகளாகப் பாவிக்க ஆரம்பித்த காலமிது. அகண்டதேசக்கனவு, பாசிஸம், மதத்துவேஷம்இம்மூன்றும் ஹிட்லரின் வரலாற்றோடு இணைந்துவிட்ட ஒன்று. இந்திய ஹிட்லரிசத்தின் கீழ் அமைப்பாக்கப்பட்ட தலித் மக்களைக் கொண்டுதான் இந்து அடிப்படிவாதம் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலையும், மதக்கலவரங்களையும் நடத்துகிறது. கோவையிலும் இதுதான் நடந்தது.
இதே காலத்தில்தான் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்கள் புதிதாகத் தோன்றி செயல்படத்தொடங்கின. இந்து மதவெறியை, அதே முறையில் எதிர்கொள்ளத் தொடங்கிய இவர்களின் போக்கு, சங் பரிவார் அமைப்புகளின்பணியை மேலும் துரிதப்படுத்தின. கோவை வெடித்தது.
நாவலில் ஏக்கமாய் பிரதிபலிப்பதுபோல் “அந்த காலத்துல தி.க-வுல, தி.மு.க-வுல,அ.தி.மு.க-வுல, காங்கிரசுல,கம்யூனிஸ்ட் கட்சியிலன்னு முசுலீம்கள் எல்லாக் கட்சியிலயும் இருந்தாங்க. தனி இசுலாமிய அடையாளத்துக்குள்ள அவங்க அடைஞ்சு கிடக்கல. தி.மு.க-வுல இருக்கிற முசுலீமுக்கு ஒரு பிரச்சினையின்னா அந்த கட்சிக்காரங்க வருவாங்க. அதுல இந்துவும் இருப்பான். அப்போ அத இந்து – முசுலீம் பிரச்சினையா திசைமாற்றம் பண்ண முடியாது.” அந்த காலம் என்னவானது?இதைப்பற்றி தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் கவலைப்பட வேண்டியதில்லை. பெரும்பான்மையாக இருந்து ஆதிக்கம் செலுத்தும் சாதிகளையும், மதங்களையும் சார்ந்தவர்களையே வட்டம், மாவட்டம்,மாநில நிர்வாகிகளாகக் கொண்டு வாக்குவங்கி அரசியல் செய்யும் அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் கவலைப்படாமல் இருப்பதெப்படி? முற்போக்கு இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதெப்படி?அடிப்படைவாதத்திற்கும், அடையாள அரசியலுக்கும் அம்மக்கள் பலியாகிவிட்டனர் என்று மக்கள் மீது பழிப்போட்டு தப்பிக்க முடியாதே. அடிப்படைவாதத்திற்கும், அடையாள அரசியலுக்கும் அம்மக்கள் பலியாகும்வரையும், பலியாகிக்கொண்டிருக்கும்போதும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வி கூடவே எழுந்து விடுகிறதே!
நாவலின் முன்னுரையில் இரா.முருகவேள் கூறுவதுபோல, “கோவையில் பிளேக் நோயில் சாக கிடந்த மக்களையும், ஆலைகளில் பிரம்பு அடியும், சித்திரவதையும் அனுபவித்துக் கொண்டிருந்த மக்களையும் காப்பாற்றிப் பாதுகாத்த கம்யூனிஸ்ட் கட்சி” என்னவானது? ஒரு காலத்தில் பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று ஒடுக்கப்பட்டவர்களின் கட்சியாக பெருமையோடுப் பேசப்பட்ட கட்சி இன்று எந்த நிலையில் உள்ளது? என்கிற தார்மீக கேள்விகளை நாவல் நமக்குள் எழுப்பி விடுகிறது. இந்த தார்மீக கேள்விகளுக்குஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறோம், அரசியல் செய்கிறோமென சொல்லிக்கொள்கிற கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும்.
மௌனத்தின் சாட்சியங்கள் எழுப்புகிற அரசியல் பிரச்சினை கோவையின் பிரச்சினை மட்டுமல்லவே! உலகமயமாக்கல் பொருளாதாரப் பின்புலத்தோடு மேலெழுந்திருக்கிற ஆண்ட பரம்பரையெனும் சாதிவாதம், மதவாதம், இனவாதம் போன்ற அடையாள அரசியல் செல்வாக்கு செலுத்துகிற இத்துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினை அல்லவா?இவற்றை எதிர்கொள்ள வேண்டிய நமதுப் பிரச்சினையால்லவா?மனப்பிறழ்வு முற்றி நிற்கும் இன்றையநிலையில், பெரியார் பக்குவப்படுத்தியபூமி, மார்க்சியம் தளைத்த மண் என்று வெற்றுப்பெருமிதங்களோடு இருந்துவிடுவோமோ என்பதுதான் எல்லோருடைய கவலையும்.
நாவலின் சிறப்பு இதுதான், அது பேச வேண்டிய அரசியலை தழும்பத்தழும்பப் பேசுகிறது. எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுவது இலக்கியமல்ல என்று கூறிவிட்டு,வெளிப்ப்டையாகப் பேச வேண்டாத படுக்கையறை சங்கதிகளை வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கும் அருவெறுப்புகளின் மத்தியில் மக்களுக்கானதை மக்கள் மொழியில் இயல்பாகப் பேசுகிறது.
பாலீஷ் போடப்பட்ட பூட்சுகளுக்குக் கீழே
நசுங்கிக் கிடக்கிறது எங்களுக்கான நீதி
லத்திகளும் சில நேரங்களில்
திரிசூலங்களாய் மாறிப்போகையில்
கேள்விக்குறியாகிறதுஎங்களுக்கான நீதி
நான் குற்றமற்றவன் என்பதைமுடிவு செய்ய
நீதிக்கு பன்னிரண்டு ஆண்டுகள்தேவைப்பட்டது
அதிகார வர்க்கத்தால் திணிக்கப்பட்ட பொய் வழக்கில் தனது வாழ்க்கையின்மிக முக்கியமான ஒரு காலப்பகுதியை கடும் மன உளைச்சல்களுடனும் இன்னல்களுடனும் காராக்கிரகத்தில் தொலைத்துவிட்டு விடுதலையாகி வரும் யாசரின் இக்கவிதை வரிகளுடன்ஆரம்பமாகிறது நாவல். சிறை மாறவும்நீதிமன்றத்திற்குச் செல்லவும் மூடப்பட்டவாகனத் தில் சென்றது மட்டுமே, இந்த 12வருடகாலமாக யாசருக்கும் அவனதுதமிழ் மண்ணுக்குமான தொடர்பு.
யாசர் ஏன் சிறையிலடைக்கப்பட்டான்? அவன் யாசராக –இஸ்லாமியனாக– பிறந்து விட்டான். அதுதான் அவன்செய்த குற்றம்.
இளமையைச் சிறையில்தொலைத்துவிட்ட யாசர் வெளியேவருகிறான். கோவையில் மிகப் பெரியமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.சீறிப்பாயும் வாகனங்கள், நீக்கமறநிறைந்திருக்கும் மதுக்கடைகள், அதில், வரிசை கட்டி நிற்கும் தமிழ் குடிமகன்கள், புகைப்பிடிக்கும் சின்னஞ்சிறார்கள். இது, தான் பார்த்து வளர்ந்த தன்னுடையகோவை நகரமல்லவே! சரியாகவோதவறாகவோ சூழல்களில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில் ஒரு இசுலாமிய அமைப்பின் சார்பில் புதிதாக ஒட்டப்பட்டசுவரொட்டியின் ‘விவாதத்திற்குத்தயாரா?’ என்ற முழக்கமானது கோவை இன்னமும் முழுமையாக மாறிவிடவில்லை என்ற உண்மையை அவனுக்குள் உணர்த்துகிறது.
சிறையிருந்து நேராக, அக்காவையும்அக்காவுடன் இருக்கும் தனது தாயையும்பார்க்கச் செல்கிறான். தீவிரவாதியைவீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்அக்காவின் கணவர். தனக்கு நெருக்கமான இடதுசாரி அமைப்பிலுள்ளதோழர்கள் உதவியுடன், ரயிலில்கோவையிலிருந்து சென்னைக்குப்புறப்படுகிறான். அவனது எதிர்இருக்கையில் அமர்ந்திருக்கும் புதியதலைமுறை இளைஞனோடு தண்ணீர்பரிமாறிக்கொள்வதன் ஊடாக பாத்திரங்கள் பேசுத் தொடங்குகின்றன. கேள்விக்குப் பதிலாகவும், மனதைஅழுத்திக்கொண்டிருக்கும் துயரத்தின்வெளிப்பாடாகவும், சமூகத்தைப் பற்றிய, அதன் கொடூரம் தன்மீது செலுத்தியஆதிக்கத்தைப் பற்றிய உண்மைகளைச்சொல்ல ஆரம்பிக்கிறான் யாசர்.
குடும்பம், நண்பர்கள், கனவுகள், காதல்என தொடங்கி, கோவை கலவரம், அதன்பின்னணிகள், மதவெறி அமைப்புகளின்தோற்றம், அதன் போஷகர்கள், யார்யாரோ தீட்டிய திட்டங்களை நேர்த்தியுடன்முன்நின்று நடத்திய தன்னுடைய தமிழ்ச்சகோதரர்கள், வெடித்த குண்டுகள்அனைத்தும் தன்னுடையதன்னைப்போன்ற, அப்பாவிகள்பலருடைய வாழ்க்கையை எப்படித்தலைகீழாகப் புரட்டிப்போட்டனஎன்பதையும் விவரிக்கிறான்.
கதாநாயகனின் வேதனைகளினூடேகோவையில் அரங்கேற்றம் செய்யப்பட்ட, கேவலமான அரசியல் திட்டசெயல்வடிவங்களை நாவலாசிரியர்வெளிப்படுத்துகிறார். பொய் சாட்சி, சிறைவாழ்க்கை, பிணை மறுப்பு, காவல்துறையின் வழக்கமானஅத்துமீறல்கள் என கோவையின்துயரங்கள் தோய்ந்த நாட்கள்கதாநாயகனினூடே நம் கண்முன்படர்கின்றன. நாவலுடன் சேர்ந்து, சிரிக்கிறோம், அழுகிறோம், உண்ணுகிறோம், அருந்துகிறோம், பயணிக்கிறோம். திடீரென்று ஒருநாள், துப்பாக்கிகள் நம்மைக் குறிவைக்கின்றன, ஓடுகிறோம். பூட்ஸ்கால்கள் துரத்துகின்றன, ஒளிந்துகொள்கிறோம், பிடி படுகிறோம், லத்திகள்உடலைப் பதம் பார்க்கின்றன. யாசராக நம்மையும் பயணம் செய்ய வைக்கிறது நாவல்.
உண்மை என்னவெனில், அவனது சகபயணிகள் எனும் நிலையில் குற்றவுணர்வின்றி யாரும் பயணித்துவிடஇயலாது என்பதுதான். தமிழ்நாட்டையேபுரட்டிப் போட்ட இந்தக் கோவைகலவரத்துக்குக் காரணம், ஒருபோலீஸ்காரர் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டது மட்டும்தானா? இதற்குமுன்போ பின்போ, யாரும்கொல்லப்பட்டதில்லையா? கொலையைச்செய்தவர்களின் இனத்தையேகொன்றொழிக்கும் நடைமுறை அதற்குமுன்போ பின்போ நிகழ்ந்திருக்கிறதா? என்பதை எல்லாம்கவனத்தில்கொண்டால், இதுபோன்றகலவரங்களின் பின்னணியில்செயல்படும் திட்டங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புரிதலுடன்நாவலுக்குள் நுழைபவர்கள்குற்றவுணர்வுகளின்றி இதைக் கடந்துசென்றுவிட இயலாது.
அதேநேரத்தில் நாவலைப் படித்துவிட்டு குரலெழுப்பாமல் இருந்து விடக்கூடாது. மற்றவர்களுக்காக குரல்கொடுக்க இயலாதவனுக்குக் குரல் கொடுக்கயாரும் இருக்க மாட்டார்கள் என்ற பாலஸ்தீன கவிஞர் ஒருவரின் கவிதைவரிகள் நினைவுக்கு வருகின்றனதானே! பர்மா முதல் இலங்கை வரைக்கும், தமிழர்கள் அனுபவிக்க நேர்ந்தத்து யரங்கள் இதற்கான நல்லஉதாரணங்கள். முதலில் தமிழர்கள், பிறகு முஸ்லிம்கள். மும்பையில்பால்தாக்கரே கூட இதேஅணுகுமுறையைத்தான் கையாண்டார்.
தமிழகத்தில் இந்துத்துவா அமைப்புகள்வேரூன்றிய காலகட்டங்களினூடேபார்வையை விசாலப்படுத்தி நாவலைஅரசியல் பின்னணிகளுடன்புரிந்துகொள்ள முனையும்போது, நாவல்விவரிக்கும் கோவையைமையப்படுத்திய, அரசியல்செயல்திட்டங்களின் பல்வேறுகனபரிமாணங்கள் வெளிப்படுகின்றன.
நாவலைப் படிக்கும்போது நமக்கு தமிழ்நாட்டை உலுக்கிய இன்னொரு கலவரமும், அதன் பின்னணியும் நினைவுக்கு வந்தேயாக வேண்டும்.
1963ஆம் ஆண்டு, குமரிக் கடலில் கிறிஸ்தவமீனவர்களின் பயன்பாட்டிலிருந்த பாறையில் விவேகானந்தா மணிமண்டபம் அமைக்க திட்டமிடுகிறது வடஇந்திய மத அடிப்படைவாதக்குழு.70களில் அதை நிறைவேற்றவும் செய்கிறது. அதன் பிறகு 1980-இல் உருவான இந்து முன்னணி, 1981-இல்மீனாட்சிபுரம் மதமாற்றத்தைத் தொடர்ந்துவெறுப்பை விதைக்கும் தொடர்பிரச்சாரங்கள், 1982இல் நாகர்கோவில்இந்து எழுச்சி மாநாடு, மண்டைக்காடுகலவரம் என ஒரு பெருந்துயரமும், அதன் ஆணி வேரும் நம் கண் முன் ஆடும்.
தமிழ்நாட்டில் கோவையும், குமரியும் வணிகம் சார்ந்தும் அரசியல் பின்னணிகள் சார்ந்தும் மதஅடிப்படைவாதத்தின் விளைநிலமாக மாறியதற்கு, குறிப்பிட்ட சில அம்சங்கள்ஆபத்தான துணைக்கருவிகளாக அமைந்துள்ளனவோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
தமிழைத்தாய்மொழியாகக் கொள்ளாத மக்கள், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைவிடவும் இம்மாவட்டங்களில் அதிகம்வாழ்கின்றனர். ‘வந்தாரை வாழ வாக்கும் தமிழ்நாடு’ என்ற இனவாத முழக்கம் மற்றெல்லாப் பகுதியை விடவும் இங்கு செல்வாக்கு செலுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள பிரதான அரசியல்கட்சிகள் அனைத்தும் இம்முழக்கத்தை தங்களது ஓட்டு வாங்கிப் பிழைப்புக்காக இம்முழக்கத்தை தாராளமாகப் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், மொழிசிறுபான்மையினரான அம்மக்கள்தங்களை அன்னியமானவர்களாககருதிக் கொள்கின்றனர். இதுஇயல்பானதும் மிகவும் ஆபத்தானதும்கூட! இந்நிலைமையானது தங்களது இன்னொரு அடையாளமான மத அடையாளத்தை வெளிப்படுத்துகிற இயக்கங்களுக்குப் பலியாக வாய்ப்பளித்து விடுகிறது. இயக்கங்களுக்குதான் எவ்வளவு வேலையிருக்கிறது! ஆனாலும் எல்லோரும் சும்மாயிருக்கிறோம்.
சம்சுதீன் ஹீரா,‘மௌனத்தின்சாட்சியங்கள்’ என்ற புனைவின் மூலம், வெளிப்படுத்தும் யதார்த்தங்கள், இந்தியாவிலுள்ள அனைத்து சம்சுதீன்களுடைய மௌனத்தின் சாட்சியங்களாகவே புரிந்து கொள்ளப்படவேண்டும். குறிப்பாக, பெரியாரின்மண்ணில் இனி மண்டைக்காடுகளும், கோவைகளும் மீண்டும் நிகழாதிருக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? என்று விடை காண வேண்டும்.