கோவை கலவரத்தைப் பற்றிய நூலுக்கு அறிமுகமே தேவையில்லைதான். இரத்தமும் சதையுமாய் இன்னும் கண்களில் வலியுடன் வாழும் ஜனங்களை தினமும் கடக்கும் நிலையில், இந்த புதினத்தின் தாக்கம் மிகவுமே துளைத்தெடுக்கின்றது. இரு வருடங்களாய் என் நூலக அலமாரியில் கிடந்திருந்தும், ஒரு தடவையேனும் திறந்து வாசித்திடும் வாய்ப்பு கிட்டாமலே போன இந்தப் புதினத்தை கடைசியில் இரவலாகத்தான் வாசிக்க முடிந்தது.
நாசரின் எகிப்திய சிறைச்சாலைகளும். அதன் கொடுமைகளும், அவர்களின் கண்ணீரும், அதில் சிக்கிக்கொண்ட சாமான்யன் ஒருவரின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட ‘வதைச்சிறை’க்கும் இந்தப் புதினத்திற்கும் அதிக பட்சம் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை என்பதுதான் வலியிலும் அதீத வலி. ஒரு வேளை அடக்குமுறையாளர்களெல்லோரும் ஒரே பள்ளியில் பாடம் பயின்றவர்களோ என்னும் கேள்வியை எழுப்பாமல் கடப்பதில்லை பக்கங்கள்.
கோவையின் குண்டு வெடிப்பினைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம், வாசித்திருக்கலாம், செய்திகளை நுனி விரலில் இப்போதும் தோய்த்துக்கொண்டிருக்கலாம். இந்தப் புதினம், செய்திச்சுருள் அல்ல. மத்ஹபையும் அறியாத மார்க்ஸியமும் புரியாத ஒரு சாமான்யனின் வாழ்வு கண் முன்னே நசுங்குவதையும், தன்னையொத்த பையன்கள் காதலிலும் பாலின ஈர்ப்பிலும் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கும்போது, எதற்காக, எதற்கெதிராக, எதைத் தேடி, எதன் பொருட்டு ஓடுகின்றோம் என்ற எந்தக் கேள்விக்கும் விடை காண இயலா இயந்திர கதியில் கண் மண் தெரியாமல் ஓடிக்கொண்டேயிருக்கும் ஒருவனின் வலியை நம் கால்களில் ஒற்றிச்செல்கிறது இந்தப் புதினம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் தொய்வாக ஆரம்பித்தாலும், சில நாழிகைகளிலேயே யாசரரின் விடலைத்தனத்துடனும், ஆசிப்பின் சினேகிதத்துடனும், ஆயிஷாவின் சீண்டல்களுடனும், வைஷ்ணவியின் உக்கிரத்துடனும் நாமும் சைக்கிள் மிதிக்கப் பழகிக்கொள்கிறோம். கொஞ்சமும் குறைவிலாது செல்லாத்தாளுடனும், செந்திலுடனும் மாற்றி மாற்றி சண்டையிடவும், நியாயம் பேசவும் நம்மையும் இழுத்துச் செல்கிறார், ஆசிரியர் சம்சுதீன் ஹீறா.
உண்மைதான்... அன்றைய கோவை இன்னும் பசுமையாய் கண் முன் திளைக்கின்றது.... கோவையை அடைந்து விட்டோம் என்றதுமே பஸ்ஸிலிருந்து எட்டிப்பார்த்து என் அப்பா நலம் விசாரித்தது எண்டைஸ் தோழர்களைத்தான்.... ஷோபாவில் துணி வாங்குவது என்பது பெருநாட்களின் ஒரு வாஜிபாகவே மாறியிருந்தது.... ஒறம்பரைங்க எல்லாமே அய்யாக்களும் அம்மணிக்களுமாக நிறைந்திருந்த வாழ்வுதான்.... இன்னும் அந்தக் கோவையைத் தேடியபடியே வாழ்க்கை நகர்கின்றது. அல்லாஹ்வின் அடியார்களே அல்லாஹ்வின் பாதையில் ஓடி வாருங்கள் என்று நிமிடத்திற்கொருதரம் அலறிக்கொண்டிருந்த ஸ்பீக்கர் ஒலியும், எரிந்து கொண்டிருந்த ஷோபாவின் புகையும் செவியிலும் பார்வையிலும் இன்னும் பிரகாசமாய் நிறைந்திருக்கின்றன. என் மண்ணின் மீது நடந்த அந்த உக்கிரத் தாண்டவத்தை மீண்டும் நினைவிலிருந்து நிஜத்திற்கு கொண்டு வர இந்தப் புதினம் ஒரு படகானது.
மதப்பசிக்களுக்கு மனிதம் தெரியுமா, மலர்களைத்தான் தெரியுமா... லட்சுமியுடைய, ராசாத்தியுடைய கனவுகள் கரிவதைப் போலவே என் வீட்டருகில் வாழ்ந்த பாலகனை கட்டிவைத்து உயிரோடு எரித்த அந்த நிமிடம் இன்னும் இன்னும் ஆழத்தில்தான் பதிந்துகொள்கிறது தன்னை. மிகவும் கர்மசிரத்தையோடு, நடுநிலை கொஞ்சமும் நழுவாமல், சம்பந்தப்பட்ட அத்தனை சமூகத்தின் நரிகளையும் அடையாளம் காட்டுகின்றது இந்நூல். ஜீவகாருண்யத்தையே உயிரினும் மேலாய் மதித்து அடைக்கலம் தேடி வந்தவர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்களைப் பற்றியும் மறக்காமல் பேசுகின்றது. உண்மையில் இந்தப் புதினத்தின் பலம், அதன் நடுநிலைத்தன்மைதான். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கதைக்கருவில், ஒரு சொல் தவறான புரிதலைத் தந்தாலும் மீண்டும் பூகம்பம் வெடிக்குமோ என்றுணர்ந்த நிகழ்வுகளில், மிகவும் ஜாக்கிரதையாக நியாயம் வழுவாமல் புதினத்தை கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது.
நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பாதித்த ஒரு விடயம், நாவலின் கதாநாயகன், இப்போதிருக்கும் தலைமுறையை சாட்சாத் உள்வாங்கியுள்ளார் என்பதே. தன்னை, தன் வாழ்வை, தன் பாதுகாப்பை மட்டுமே எண்ணும் ஓரு ஆன்மாவாக, எதிர்த்துப் பேசும் துணிவேயற்ற ஒரு சமூகத்தின் மொத்த உருவமாகவே யாசரின் கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் ஒவ்வொருவரும் யாசரின் வாழ்வின் ஒரு சில தருணங்களையாவது நிச்சயம் எதிர்கொண்டிருப்பர், கொள்வர் என்பதே நாவலின் அடித்தளம். இத்தனை நடந்தும் என்ன மாற்றம் வந்து விட்டது உங்கள் உள்ளத்தில்? பால்ய கால சினேகிதனின் கண்கள் எரியும் உடலிலிருந்து வீழ்ந்து உருளும்போது கூட இம்மி கூட ந்கராத கால்கள், யாசருடையது அல்ல. நம் அனைவருடையதும்தான். ஆயிஷாவின் நெஞ்சினில் காவலரின் கைகள் நாட்டியமாடும் போது காரித்துப்பக்கூட துணிவில்லாத நாக்கு, நம் நாக்குகள்தான். யாசர், வேறு யாருமல்ல, நம்மில் ஒவ்வொருவரும்தான் என்பதை அட்சரசுத்தமாக புரிந்து கொள்ள நேரும்போது சுயம் சேற்றை அள்ளிப்பூசிக்கொள்கிறது.
எதுவுமறியா ஒரு சாமான்யனுக்கு சகுனியின் தந்திரங்களை பிட்டுப் பிட்டு வைப்பது போல் தெளிவான விவரங்களுடன் நூல் பயணித்தாலும், ஆங்காங்கே இலை மறை காயாக கருவை விட்டிருக்கலாம் எனத் தோன்றிய தருணங்களும் உண்டு. சாராம்சத்தை பிடித்துத் தொங்க வேண்டிய சில இடங்களில், சுற்றியிருக்கும் பொருட்களின் மீதான் வர்ணனை, சூழலைப் பற்றிய, அதன் பின்னணியைப் பற்றிய வர்ணனை என எல்லாவற்றையுமே தெளிவாக முன் வைத்திடும் நடை சிறிது தொய்வையும் ஆங்காங்கே தருகின்றது. இவை தவிர குறைகள் எனச் சொல்ல எதுவுமில்லை. ஒன்றுமறியா அப்பாவிகளின் வாழ்வு எல்லாத் தரப்பிலிருந்தும் பாழாய்ப்போன நிஜத்தைச் சொன்னதைத் தவிர.
மனதை ரணமாக்கிடும் கரு. அதன் வலியை அணு அணுவாய் நகக்கண்களில் ஏற்றிடும் புதினம். அசைக்க இயலாத ஆவணம் என்பதைத் தவிர வேறு பதிலில்லை. மிகவும் மெனக்கெட்டு இதற்காக உழைத்திட்ட ஆசிரியருக்கு, நன்றிகள் ஆயிரம்.