நீயு பெட்போர்ட், ஒர் துறைமுக நகரம். நகரம் குளிர் காலத்தின் பனி வீச்சில் ஆழ்ந்திருக்கிறது. பனி வீச்சைப் பொருட்படுத்தாது நகர மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து ஒர் புள்ளியாக வெளிப்படுகிறான் இஸ்மாய்ல்.
நண்டுக்கெட் எனும் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் கப்பல்களை அவன் நீயு பெட்போர்ட் துறைமுகத்தில் தேடுகிறான். அத்துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் ஏற்கனவே கிளம்பிச் சென்று விட்டது என்பதை அறியும் அவன், நகரத்தில் தங்குவதற்கு ஒர் இடம் தேடி அலைகிறான்.
கடுமையான குளிரில் துவண்டு ஒர் தங்கும் விடுதியை அடையும் இஸ்மாய்ல், அதன் உரிமையாளன் ஜோனாஸிடம் தான் தங்குவதற்கு அங்கு இடமிருக்கிறதா என வினவுகிறான்.
தென் கடலை நோக்கி பல கப்பல்கள் புறப்படத் தயாராக இருப்பதால் அவனிற்கு நகரத்தில் தங்குவதற்கு இடம் கிடைப்பது கடினம் என்கிறான் ஜோனாஸ். இஸ்மாய்லிற்கு இஷ்டம் எனில் அவன், விடுதியில் தங்கியிருக்கும் ஒர் திமிங்கல வேட்டையனுடன் அறையொன்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்கிறான் ஜோனாஸ். இஸ்மாய்ல் வேறு வழியின்றி சம்மதிக்கிறான். விடுதியில் குடித்துக் கொண்டிருக்கும் நபர்கள் திமிங்கல வேட்டையனுடன் உறங்குவதை விட ஒர் குரங்குடன் உறங்கலாம் எனவும், அவன் ஒர் மிருகம் எனவும் கிண்டல் பண்ணுகிறார்கள்.mo2
குடிப்பவர்களின் பேச்சிற்கு காது கொடுக்காதே என இஸ்மாய்லிடம் கூறும் ஜோனாஸ் அவனிற்கு மதுவும், பின் உணவும் பரிமாறுகிறான். அதன் பின் இஸ்மாய்லை அவன் அறைக்கு அழைத்து செல்கிறான் ஜோனாஸ். கையில் ஒர் லாந்தர் விளக்குடன் படிகளில் ஏறும் ஜோனாஸிடம் நண்டுக்கெட்டில் கப்பல் ஏதாவதில் தனக்கு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என விசாரிக்கும் இஸ்மாய்லிற்கு, அது முன் போல் ஒர் சுறுசுறுப்பான துறைமுகம் இல்லை எனத் தெரிவிக்கிறான் ஜோனாஸ்.
விடுதியின் ஒர் அறையில் இஸ்மாய்லை விட்டுச் செல்கிறான் ஜோனாஸ். அறையை சுற்றிப் பார்க்கும் இஸ்மாய்ல், அறையின் ஜன்னலருகே ஒர் சிறிய, கரிய சிலை இருப்பதை அவதானிக்கிறான்.ஜன்னலின் வழியாக உள்ளே வரும் தெரு விளக்குகளின் பிரகாசத்தில், அமர்ந்த நிலையில் உள்ள, ஒர் வழுக்கைத் தலை மனிதன் போன்ற தோற்றம் கொண்ட அச் சிலையை வியப்புடன் நோக்கும் இஸ்மாய்ல், உன் எஜமான் பற்றி சிறிது எனக்கு சொல்வாயா என்கிறான். பின்பு கட்டிலில் படுக்கும் அவன் உறங்கிப் போகிறான்.
இரவில் அறையில் தூக்கம் கலைந்து எழும் இஸ்மாய்ல், கரிய சிலையின் முன்பாக உயர்ந்த ஒர் மனிதன் நிற்பதைக் காண்கிறான். சிலையின் முன் சிறிய மரச்சீவல்களை எரிய விட்டு சிலையை வணங்குகிறான் முகமெல்லாம் வினோதமான பச்சை குத்தப்பட்டுள்ள அம் மனிதன். பின்பு கட்டிலை நெருங்கும் அவன் தன் ஆடைகளை களைய ஆரம்பிக்கிறான். ஒர் நீண்ட சுங்கானை வாயில் வைத்து புகைக்க தொடங்குகிறான். புகையின் நெடி தாளாது தும்மும் இஸ்மாய்லைக் கண்டு கொள்ளும் அம்மனிதன் தன் கோடாரி ஒன்றினால் இஸ்மாய்லை தாக்க வருகிறான், பயந்து போய், ஜோனாஸ் எனக் கூவுகிறான் இஸ்மாய்ல்.
அறைக்கு ஓடி வரும் ஜோனாஸ், திமிங்கல வேட்டையனை அமைதிப் படுத்தி, இருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறான். அதன் பின் அமைதியாகும் வேட்டையன் இஸ்மாய்லை நிம்மதியாக உறங்கச் சொல்கிறான். சிறிது நேரத்தின் பின்பு கட்டிலில் ஏறும் வேட்டையன் இஸ்மாய்லை அணைத்த படியே தூங்கிப் போகிறான்.
காலையில் கண் விழிக்கும் இஸ்மாய்ல், திமிங்கல வேட்டையன் நிர்வாணமாக நின்றபடி, திமிங்கலம் குத்தும் ஈட்டியால் சவரம் செய்து கொள்வதைக் கண்டு கொள்கிறான். தான் வசித்த தென் பசுபிக் தீவின் இதமான காலநிலையை எண்ணி ஏங்கும் வேட்டையனிடம் அவன் பெயர் என்ன என வினவுகிறான் இஸ்மாய்ல். தன் பெயர் குவிகெக் எனக் கூறும் வேட்டையன், தன் பூட்ஸ்களை அணிவதற்காக கட்டிலின் அடியில் புகுந்து கொள்கிறான். இதனைக் கண்டு வியக்கும் இஸ்மாய்ல், தாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஒர் கப்பலை தேடலாமா என குவிகெக்கிடம் வினவுகிறான்.mo4
ஒர் ஞாயிறு அன்று நகரத்தின் திமிங்கல வேட்டையர்களின் ஆலயத்திற்கு செல்கிறார்கள் இருவரும். செல்லும் வழியில் தங்கள் உழைப்பில் கொழுக்கும் மனிதர்கள் தங்களை மதியாத தன்மை பற்றி குவிகெக்கிடம் பேசுகிறான் இஸ்மாய்ல். ஆலயத்தை அடையும் நண்பர்கள் அதன் உள்ளே நுழைகிறார்கள். சிறு கப்பல் போன்ற தோற்றம் கொண்ட பீடத்தில் இருந்து போதித்துக் கொண்டிருக்கிறார் குரு. ஆலயத்தின் சுவர்களில் கடலில் திமிங்கல வேட்டையில் பலியானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மத குரு, திமிங்கலம் ஒன்றால் விழுங்கப்பட்டு பின் கரை ஒன்றில் உயிருடன் உமிழப்பட்ட புனிதரின் கதையைச் சுற்றிப் போதிக்கிறார். தங்கள் தீவுகளில் மனிதன் திமிங்கிலத்தினால் விழுங்கப் பட்டால் அவன் இறந்து விடுவான் என்கிறான் குவிகெக். உங்கள் ஊரில் அற்புதங்களை நம்புவது கிடையாதா எனக் கூறிச் சிரிக்கிறான் இஸ்மாய்ல்.
குவிகெக் தன் தீவில் இருந்து எடுத்து வந்த பாடம் செய்யப்பட்ட மனிதத் தலையொன்றை நகரத்தில் விற்பதற்கு முயல்கிறான், இம் மனிதனின் தலையை ஏன் பாடம் செய்திருக்கிறாய் என அவனிடம் கேட்கிறான் இஸ்மாய்ல். அம் மனிதன் ஒர் பெரிய வீரன் என்றும், அவன் உடலை, அவன் சக்தியைப் பெற தாங்கள் உண்டு விட்டதாகவும் எஞ்சியது தலை என்றும் பதிலளிக்கும் குவிகெக்கிடம், உன் வீடு, குடும்பம் என்பதை நீ இழந்ததாக உணரவில்லையா என்கிறான் குவிகெக். ஒர் நாள் தான் தன் தீவிற்கு திரும்புவேன் எனக் கூறும் குவிகெக், அதற்கு முன் உங்களிடமிருந்து நல்ல விடயங்களை என் மக்களிற்காக தான் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்கிறான். இஸ்மாய்லோ தான் இதற்கு எதிர் மாறாக எண்ணுவதாக கூறுகிறான்.
நகரில் இருந்த சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் பாடம் செய்யப் பட்ட மனிதத் தலையை, இஸ்மாய்லின் ஆலோசனையைக் கேட்டு விற்று விடுகிறான் குவிகெக். பின் நண்டுக்கெட் துறைமுகம் நோக்கி செல்லும் ஒர் கப்பலில் ஏறிக் கொள்கிறார்கள் நண்பர்கள். கப்பலில் இருந்த ஒர் நபர் குவிகெக்கை குரங்கு என்று கூறி நகைக்க அவனை அடித்துவிடுகிறான் குவிகெக். பயணத்தின் போது பாய் மரம் தலையில் மோதி கடலில் விழும் ஒருவனை தன் உயிரையும் மதியாது பாய்ந்து காப்பாற்றுகிறான் குவிகெக். அவனைக் குரங்கெனப் பழித்த நபர் அவனிடம் தான் நடந்து கொண்ட விதத்திற்காக உண்மையில் மனம் வருந்துவதாக தெரிவிக்கிறான். கப்பல் நண்டுக்கெட் துறைமுகத்தை அடைகிறது.
mo5 மணல் திட்டாக காட்சியளிக்கும் நண்டுக்கெட் நகரத்தில் மனிதர்கள் எப்படித்தான் வாழ்கிறார்களோ என வியக்கிறான் இஸ்மாய்ல். பயணத்தினால் களைப்படைந்திருக்கும் நண்பர்கள் அன்றிரவு விடுதி ஒன்றில் தங்கிக் கொள்கிறார்கள். மறு நாள் துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களினை பார்வையிடும் இஸ்மாய்ல், பெக்கொட் எனப்படும் ஒர் பழைய கப்பல் ஒன்றில் வேலை கேட்க தீர்மானிக்கிறான். குவிகெக்கும், இஸ்மாய்லும் கப்பலில் ஏறுகிறார்கள். கப்பலின் மேல் தளத்தில் திமிங்கிலத் தாடை எலும்பால் ஒர் கூடாரம் அமைகப்பட்டிருக்கிறது. அதனுள் இருந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கும் பெலெக் என்பவனிடம் இக் கப்பலில் தங்கள் இருவரிற்கும் வேலை கிடைக்குமா எனக் கேட்கிறான் இஸ்மாய்ல்.
சில விசாரிப்புகளின் பின் இஸ்மாய்லை கப்பல் ஊழியனாகவும், குவிகெக்கை திமிங்கல வேட்டையனாகவும், பெக்கொட் கப்பலில் மூன்று வருடங்களிற்கு வேலையில் ஒப்பந்தம் செய்கிறான் பெலெக். பெக்கொட்டின் காப்டனான ஆஹாப்பை அவர்கள் விரைவில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் எனவும், அவனை அவன் ஒற்றைக் காலை வைத்து அடையாளம் கண்டு பிடிப்பது சுலபம் எனவும் கூறுகிறான் மற்றுமொரு மாலுமியான வில்டாட். காப்டன் ஆஹாப் ஒர் மிகச் சிறந்த கடலோடி என்றும், ஒர் திமிங்கல வேட்டையின் போது அவன் ஒரு காலை திமிங்கலம் ஒன்று கடித்து துண்டாக்கி விட்டது என்றும் கூறுகிறான் வில்டாட்.
பெக்கொட்டில் பயணத்திற்கு தேவையான பொருட்கள் ஏற்றப்படுகின்றன, பின் கப்பலில் பணியாற்றும் ஊழியர்களின் உடமைகள் ஏற்றப்படுகின்றது. யாவும் தயார் என்ற நிலையில் திமிங்கல வேட்டைக்கு புறப்படுகிறது கப்பல். வில்டாட்டும், பெலெக்கும் கப்பலை வழியனுப்பி இன்னும் மூன்று வருடங்களில் திமிங்கில எண்ணெய் நிரம்பி வழியும் கப்பலாகக் கொண்டு வாருங்கள் எனக் கூறிப் பிரிகிறார்கள். இந்நிலையில் கூட கப்பல் காப்டன் ஆஹாப் தன் அறையை விட்டு வெளிவராது இருப்பது கப்பல் ஒட்டுபவர்களிற்கு வியப்பை அளிக்கிறது.
இஸ்மாய்ல், காப்டன் ஆஹாப்பை பார்ப்பதற்கு ஆவல் கொள்கிறான். கப்பலின் கீழ் தளத்திளுள்ள அறையொன்றில் உரையாடும் ஊழியர்கள் காப்டன் ஆஹாப்பின் திமிங்கல என்பிலான கால் அவன் அறையில் ஊண்டி ஓசை எழுப்புவதை இஸ்மாய்லிற்கு சுட்டிக் காட்டுகிறார்கள். காப்டன் தன் அறையை விட்டு வெளியே வருவதற்கான அறிகுறி அது. ஆஹாப் குற்றவாளியைத் தேடுகிறான் என்கிறான் ஒர் ஊழியன்.
யார் அந்தக் குற்றவாளி என வினவும் இஸ்மாய்லிற்கு, கடலில் உலவும் கொடிய பற்களை உடைய ஒர் வெண் திமிங்கலமே அக் குற்றவாளி எனவும், அது காப்டன் ஆஹாப்புடனான முன்னைய ஒர் சந்திப்பில் அவன் கால் ஒன்றைக் கடித்து எடுத்தது தான் அது செய்த குற்றம் எனவும், அத் திமிங்கலத்தின் பெயர் மொபி டிக் எனவும் கூறுகிறான் அவன். ஆவல் உந்த மேல் தளத்திற்கு ஏறி காப்டன் ஆஹாப்பை மறைந்திருந்து பார்க்கிறான் இஸ்மாய்ல்.mo7
கப்பலின் பயணம் தென் கடலை நோக்கி தொடர்கிறது. ஒர் நாள் கப்பலின் மேற்தளத்திலிருந்த மணி ஒலிக்கப்படுகிறது. கப்பலின் ஊழியர்கள் யாவரும் மேற்தளத்தில் ஒன்று கூடுகிறார்கள். காப்டன் ஆஹாப் அவர்கள் மத்தியில் பேச ஆரம்பிக்கின்றான். அவன் கையில் ஒர் தங்க நாணயம் இருக்கிறது. கடலில் வெண் திமிங்கலத்தைக் தனக்கு முதல் காட்டும் நபரிற்கு அத் தங்க நாணயம் சொந்தமாகும் என்கிறான் ஆஹாப். பின்பு கப்பலின் பாய் மரமொன்றில் அத் தங்க நாணயத்தை ஆணியால் பொருத்துகிறான். திமிங்கல வேட்டை ஆரம்பமாகப் போவதும், தங்க நாணயத்தின் மீதான ஆசையும் சேர்ந்து கப்பல் ஊழியர்களை உற்சாகம் ஆக்குகிறது. தன் அறைக்கு திரும்பும் ஆஹாப், மொபி டிக், நீயும் என்னை இப்போது தேடிக் கொண்டிருப்பாய் என தன் மனதினுள் கூறிக் கொள்கிறான்.mo9
பெக்கொட் கப்பல் கடலில் வாழும் நுண்ணுயிர்க் கூட்டங்களான பிளாங்டன்கள் நிறைந்த கடல் பகுதியை அடைகிறது. திமிங்கலங்களின் பிரதான உணவு இந் நுண்ணுயிர்களே. கப்பலின் உச்சியில் கடலைக் கண்காணிக்கும் பணியில் இருக்கும் இஸ்மாய்ல், தூரத்தில் திமிங்கலக் கூட்டமொன்றைக் காண்கிறான். உரக்கக் கத்தி இதனை மற்றவர்களிற்கு தெரிவிக்கிறான் இஸ்மாய்ல். கப்பல் பரபரப்பாகிறது. சிறிய படகுகளில் ஆட்கள் ஏறிக் கொள்ள அவை கடலினுள் இறக்கப் படுகிறது தூரத்தில் நீரில் மூழ்குவதும், எழுவதுமாய், நகரும் பெரும் பாறைகள் போல் வந்து கொண்டிருக்கின்றன திமிங்கலங்கள்.
கடலில் இறக்கப்பட்ட சிறு படகுகளில் இருந்தவர்கள் தங்கள் முழுப்பலத்துடன் துடுப்பு போடுகிறார்கள், அலைகள் அவர்களை தம் கரங்களால் தள்ளுகின்றன, நெருங்கி வரும் திமிங்கலமொன்றின் முதுகில் தன் ஈட்டியால் குத்துகிறான் குவிகெக், ஆனால் படகினை நோக்கி பாயும் அத்திமிங்கலம் படகைக் கவிழ்த்து விடுகிறது. படகில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்டவர்கள் கவிழ்ந்த படைகை மிதப்பாக கொண்டு மிதக்கிறார்கள். பனிப் புகார் கடலில் சூழ்ந்திருப்பதால், பெக்கொட் கப்பல் அச் சிறிய படகின் மீது மோதி அதனை உடைக்கிறது. கடலில் வீழ்ந்தவர்கள் கயிறுகள் மூலம் பெக்கொட் கப்பலிற்கு ஏற்றப் படுகிறார்கள். சில நாட்கள் கழிகின்றன, இம்முறை கடலில் தெரியும் வெள்ளை நிற ராட்சத கணவாய் ஒன்றை மொபி டிக் என தவறாக அடையாளம் கண்டு அதனை துரத்தி ஏமாறுகிறான் ஆஹாப். அவன் வாழ்வின் லட்சியம் மொபி டிக்கின் கதையை முடிப்பது என்பதாக இருக்கிறது.
தொடரும் நாட்களில் அவர்கள் வெற்றிகரமாக திமிங்கல வேட்டையை நிகழ்த்துகிறார்கள். திமிங்கலக் கூட்டங்களை சிறுபடகுகளில் நெருங்கும் அவர்கள் , திமிங்கலங்களின் முதுகில் ஈட்டியால் குத்துகிறார்கள். காயத்தினாலும் போராட்டத்தாலும் களைப்படைந்து விட்ட திமிங்கலம், ஈட்டிகளில் இணைக்கப்பட்டுள்ள கயிறுகள் மூலம் கப்பலை நோக்கி இழுத்து வரப்படுகின்றது. கப்பலின் அருகில் வைத்து பிணைக்கப்படும் திமிங்கலத்தின் கொழுப்பு நிறைந்த மேல் தோல் பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது. இப்பகுதிகள் உடனடியாக கப்பலிலுள்ள பெரும் அண்டாக்களில் கொதிக்க வைக்கப்பட்டு திமிங்கல எண்ணெய் காய்ச்சப்படுகிறது. உயிரோடு வைத்து வெட்டப்படும் திமிங்கலத்தின் ரத்தம் கடலில் கலக்கிறது, அவ்வாடையினால் கவரப்படும் சுறாமீன்கள்,திமிங்கலத்தின் மீது பாய்ந்து தாக்குகின்றன. மனிதர்களுக்கும் சுறாக்களிற்குமிடையிலான மோதலில் சுறாக்கள் விரட்டி அடிக்கப்படுகின்றன.
இன்னுமொரு வேட்டையின் போது, ஆஹாப்பின் அவசரத்தை புரிந்து கொள்ளாது, கயிறுகளால் கப்பலில் பிணைக்கப் பட்டுள்ள திமிங்கலம் ஒன்றின் தலையில் உள்ள துவாரம் வழி திமிங்கலத்தின் உள்ளிறங்குகிறான் தெஸ்தாகோ எனும் வேட்டையன், அச் சமயத்தில் திமிங்கலத்தை பிணைத்திருந்த கயிறுகள் தளர்ந்து விட திமிங்கலத்துடன் கடலினுள் மூழ்குகிறான் தெஸ்தாகோ. தன் உயிரைக் கூட பொருட்படுத்தாது கடலினுள் பாய்ந்து விடுகிறான் குவிகெக். மாலுமிகள் கடலின் ஆழத்தில் இருவரும் மூழ்கி இறந்திருப்பார்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் எண்ணங்களை தகர்க்கும் வண்ணம் திறமையாகச் சுழி ஓடி திமிங்கலத்தின் உடலிலிருந்து தெஸ்தாகோவை மீட்கிறான் குவிகெக். ஆனால் ஆஹாப்பின் மனம் மட்டும் மொபி டிக்கை தேடிக் கொண்டிருக்கிறது. கடலில் அரிதாக குறுக்கிடும் கப்பல்களில் மொபி டிக்கை பற்றியே விசாரிகிறான் அவன்.
தொடரும் கடற்பயணத்தில் குவிகெக் சுகவீனம் அடைகிறான். தான் இறந்து விட்டால் தன்னை கடலில் மிதக்கவிட சவப்பெட்டி வடிவான சிறு தோணியொன்றை தயாரிக்க சொல்கிறான் அவன். குவிகெக் இறந்து விடுவான் என யாவரும் எதிர்பார்த்திருக்க, அவன் நோயிலிருந்து மீண்டு விடுகிறான். ஒர் நாள் கப்பலின் உச்சியில், இஸ்மாய்லும், குவிகெக்கும் இணைந்து கடலைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். கடலின் கரும் ஆழத்திலிருந்து, மின்னல் போல் பிரகாசமாக ஒன்று நீந்திச் சென்று கொண்டிருப்பதை இருவரும் கண்டு விடுகிறார்கள். தங்க காசு தங்களிற்கே என்ற உவகையில் மொபி டிக் எனக் கத்துகிறார்கள் இருவரும்.
படகுகள் கடலில் இறக்கப்படுகின்றன, ஆஹாப் வெறிபிடித்தவன் ஆகிறான். திரண்ட பனிமலை போன்று நகர்கிறது மொபி டிக், படகுகளை விலத்தி அது நீந்திச் செல்கிறது. அதனை நெருங்க படகுகளை விரைவாக ஓட்டச் சொல்லி கத்துகிறான் ஆஹாப். ஒர் கணத்தில் நெருங்கும் படகுகளை உணர்ந்தாற் போல் கடலில் மூழ்குகிறது மொபி டிக். அலைகள் படகை தட்டும் சத்தம், மனித இதயஙகளின் துடிப்போடு கை கோர்த்துக் கொள்கிறது.
ஆஹாப்பின் கண்கள் கடலின் ஆழத்தை கிழித்து விடுவது போல் நோக்குகின்றன, அவன் கையில் உள்ள ஈட்டிக்கு உயிர் வந்தாற் போல் தோன்றுகிறது. அவன் படகை குறிவைத்தால் போல் ஆழத்திலிருந்து அலையாய் எழுகிறது மொபி டிக். வெறி கொண்டு கத்தியவாறே தன் ஈட்டியை அதன் மீது வீசுகிறான் ஆஹாப். ஈட்டி மொபி டிக்கின் கண்களின் அருகில் பாய்கிறது, ஈட்டியுடன் விலகி நீந்தும் மொபி டிக், சிறிது தூரம் நீந்திய பின் ஆஹாப்பின் படகை நோக்கி தன் வாயைத் திறந்தவாறே பாய்கிறது. இரண்டாவது ஈட்டியை கையில் எடுத்துக் காத்திருக்கிறான் ஆஹாப், ஆனால் திமிங்கலத்தின் வேகத்தின் முன்னால் அவன் படகின் வேகம் தோற்று விட, படகை நேரே தாக்குகிறது மொபி டிக். உடைந்து நொருங்கும் படகில் இருந்து கடலில் வீழ்கிறான் ஆஹாப். அவன் திமிங்கல என்புக் காலின் பாரம், அவனை கடலின் படுக்கைக்கு மீளாத் துயிலுக்கு அழைத்து செல்கின்றது.
தன்னை சீண்டிய எவரும் உயிருடன் திரும்பல் ஆகாது என்பது போல் ஏனைய படகுகளையும் தாக்கி நொருக்குகிறது மொபி டிக், பெக்கொட் கப்பலுடன் சென்று வேகமாக மோதுகிறது அது, அந்த அதிர்ச்சியில் ஒர் கணம் மேல் தூக்கப்படும் பெக்கொட், அனைவரின் நம்பிக்கைகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு கடலின் ஆழம் நோக்கி இறங்குகிறது.
சில நாட்களின் பின் கடலில் ஒர் மிதப்பில் மிதந்து வரும் இஸ்மாய்ல், மாலுமிகளால் காப்பாற்றப்படுகிறான். பெக்கொட்டில் இருந்து உயிருடன் மீண்டது அவன் மட்டுமே. குவிகெக் இறந்து விட்டான். அவன் இறந்த உடலின் பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டி வடிவத் தோணியே இஸ்மாய்லை உயிருடன் நரகத்திலிருந்து மீட்டு வந்தது. கப்பலில் ஏறும் இஸ்மாய்ல் வெறித்த பார்வையால் கடலில் எழும் வெண் அலைகளை நோக்குகிறான். அவன் வாய் மட்டும் மொபி டிக் எனும் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது.
ஆங்கில செவ்விலக்கிய நாவல்களில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படும் மொபி டிக் எனும் நாவல் ஹெர்மன் மெல்வில் எனும் அமெரிக்க எழுத்தாளாரால் எழுதப்பட்டது. 1851ம் ஆண்டு இந் நாவல் பிரசுரிக்கப்பட்டது. மொபி டிக், ஆஹாப், இஸ்மாய்ல், குவிகெக் எனும் பாத்திரங்கள் உலகப் பிரசித்தம் பெற்றவை. மொபி டிக், மனிதனால் ஜெயிக்கப் பட முடியாத ஒர் சக்தியாக நாவலில் உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
இச் சித்திர நாவலில் மெல்வில்லின் நாவலில் கணிசமான பகுதிகள் நீக்கப்பட்டு, காமிக்ஸ் வாசகர்களின் வேகத்திற்கமைய தொய்வில்லாது கதை அமைக்கப் பட்டிருக்கிறது. இஸ்மாய்லிற்கும், குவிகெக்கும் இடையில் மலரும் நட்பு, குவிகெக் வழியாக இன்னொரு கலாச்சாரத்தை மதிக்க ஆரம்பிக்கும் இஸ்மாய்ல், குவிகெக்கின் வீர தீரச் செயல்கள், வேறுபட்ட மத நம்பிக்கைகள், திமிங்கல வேட்டை என நகரும் கதையில் கதையின் முக்கிய பாத்திரமான காப்டன் ஆஹாப்பினதும், மொபி டிக்கினதும் பாத்திரங்கள் முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. குவிகெக்கே மனதில் நிற்பவனாகிறான். கதையின் மிக முக்கிய பகுதியான மொபி டிக்குடனான மோதலின் பக்கங்கள் உணர்ச்சிகள் குறைந்த நிலையில் காணப்படுகின்றன. கதையும் திடீரென முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. இச்சித்திர நாவலிற்கான கதையை அமைத்திருப்பவர் JEAN ROUAUD எனும் பிரெஞ்சுக்காரர். மெல்வில்லின் கதையை முழுமையான அதன் சுவையுடன் காமிக்ஸ் ஒன்றில் தர முடியாது என்பது உண்மை. 500 பக்கங்களிற்கு மேல் கொண்ட நாவல் அது. 100 பக்க சித்திர நாவலிற்குள் அதனைச் சுருக்குவது என்பது முடியாத காரியம். நாவலை ஏற்கனவே படித்த வாசகர்கள் நாவலின் முன் இக் காமிக்ஸ் தூசு எனலாம், ஆனால் இச் சித்திர நாவலை தோளில் தாங்கி நிற்கின்றன கதையில் இடம்பெறும் சித்திரங்கள்.
நீயு பெட்போர்ட் நகரில் பனி விழும் காட்சியில் ஆரம்பித்து, துறைமுக நகர்களின் வேதனையான இருளையும், குளிரையும் எம்மில் புகுத்துகின்றன சித்திரங்கள். மங்கிய ஒளியில் நகரும் பக்கங்களில், தூரிகையால் உணர்ச்சிகளை பாத்திரங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார் ஓவியர். தென் பசுபிக் கடலை நெருங்கும் போது சற்று ஒளி பெறும் பக்கங்களில் மின்னலென தோன்றி மறைவது மொபி டிக் மாத்திரமே. திமிங்கல வேட்டைத் தருணங்களில் கடல் செங்கடலாக மாறிவிடுகிறது. கதையின் ஒர் தருணத்தில் கூட மனதை மயக்கும் சூரிய உதயமோ, அஸ்தமனமோ கிடையாது. சிதைவுற்ற சித்திரங்களாக பாத்திரங்களையும், காட்சிகளையும் மனதில் நுரைக்க வைக்கிறார் ஒவியர் DENIS DEPREZ, இவர் பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஆவார். கதையில் இடம்பெறும் சித்திரங்கள் முதல் பார்வைக்கு நண்பர்களிற்கு பிடிக்காது போகலாம். ஆனால் மொபி டிக் எனும் இலக்கிய மாளிகைக்கு அழகான வாசல் வைத்து வரவேற்று இருக்கிறது இச் சித்திர நாவல். மொபி டிக் எனும் இலக்கிய நாவலை காமிக்ஸ் காதலர்களையும் படிக்க தூண்டுவதற்கான உந்துதலை தவறாமல் தந்து விடுவது தான் ஆசிரியரினதும், ஓவியரினதும் பெரிய வெற்றி. நண்பர்களும் நேரம் கிடைத்தால் மெல்வில்லின் நாவலைப் படியுங்களேன்.
(நன்றி: கனவுகளின் காதலன்)