‘மிளிர் கல்’ சொல்லும் அரசியல்

‘மிளிர் கல்’ சொல்லும் அரசியல்

“நம்மைச் சுற்றி நிகழும் அரசியல்களை உன்னிப்பாகக் கவனிக்கத் தவறுவோமெனில் எதேச்சதிகாரம் நம்மீது உறுதியாகக் கவியும்.” – தோழர் லெனின்

இதைச் சொல்ல கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது! அரசியல் என்றாலே ஏதோ வறட்சியானது என பொருள் கொள்ளப்பட்டு விடுகிறது. இந்த தவறான புரிதலை நாவல் அடியோடு மாற்றிவிட்டது. ஆசிரியர் இரா.முருகவேளின் உரையில், நடையில் அத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது. எடுத்தவர்கள் அனைவரும் படித்து முடித்துவிட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.

கண்ணகியின் வரலாற்றை ஆவணப்படமாக்க விரும்பும் ஓர் இளம்பெண்ணும், அவளுக்குத் துணையாக (ஒளிப்பதிவாளராக) ஒரு இளைஞனும் பயணத்தைத் தொடங்கும்போது இதுவும் ஒரு காதல் கதை தானோ என்றே நினைக்கத் தோன்றும். விஷயம் அவ்வளவு எளிதானதல்ல என்று நம்மை பிரமிக்க வைத்து விடுகிறார் நூலாசிரியர். கதை திரில்லர் தன்மையுடன் விறுவிறுப்பாக போகும் விதம் வாசகர்களை கட்டிப்போட்டு விடுகிறது என்பது மிகையில்லை.

நமக்குத் தெரிந்த சிலப்பதிகாரம் என்ன?

கண்ணகி யார்?

மீனவர் சமுதாயத்தின் கண்ணகி தெய்வம் – பழங்குடிகளின் கொங்கர்செல்வியான கண்ணகி – கொடுங்கலூர் பகவதி – கொற்றவை – காளி – பெருஞ்செல்வந்தர் மகள் கண்ணகி…

மாதவி – கணிகையர் – பரத்தையர் – தாசிகள்… வரலாறு என்ன? இன்றைக்கும் அங்கீகரிக்கப்பட்டும், படாமலும் பாலியல் தொழில்களில் பாதிக்கப்படும் பெண்களின் நிலையென்ன?

நரபலி? மகுடங்களை காக்கும் நரபலிகளுக்கு இரையான வறியவர் – பெண்கள் – குழந்தைகள் – பின்பு தலித்துகள்…?

மன்னர்களின் தமிழ்ப்பற்று! எதன்மீதான பற்றால் நடந்தன போர்கள்?

கழுவேற்றலும், கூட்டமாக எரித்தும் கொலை செய்தமை நடந்தனவா?

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் – அவன் மகன் செங்குட்டுவன் – பசும்பூன் பாண்டியன் – அதியமான் நெடுமிடல் அஞ்சி – நன்னன் – மிஞிலி… யார் இவர்கள்?

ஆட்கொல்லிப் போர்களால் சாதிக்க முடியாததை அசோகன் மதமாற்றத்தின் (சமண – பவுத்த) மூலம் சாதித்ததெப்படி?

ஊழ்வினை, மறுபிறவி கோட்பாடுகள் ஏன்? துறவிகளின் வாழ்வும் – யோகாவும் எப்படி?

செங்குட்டுவன் – நார்முடி சேரல் – ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் – இளங்கோவடிகளுக்கு என்ன உறவு?

மோகூர் தமிழ் மன்னன் பழையனைக் கொன்று அவன் வீட்டு தமிழ்ப்பெண்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய சேரன் செங்குட்டுவனின் தமிழ்ப்பற்று என்ன?

கொங்குநாட்டின் இரத்தினம் – தந்தம் – மிளகு – தேக்கு… வளங்கள். இதனைக் கைப்பற்ற சேர – சோழ – பாண்டியப் போர்கள்!

அரேபிய தீபகற்பம், எகிப்து, ரோம் என கடல் கடந்து பரவிய இரத்தின வணிகம்!

இன்றும் இந்த வணிகத்தில் செல்வாக்கு செலுத்தும் சில்லறை வியாபாரிகள், மாஃபியாக்கள், கார்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கிடையிலான போட்டிகள்; மோதல்கள்…கூடவே நாக மாணிக்கக்கல் போன்ற இல்லாத விலையுயர்ந்தப் பொருட்களின் பேரால் ஏமாற்றப்படும் அப்பாவிகள்….

இரத்தினக்கற்கள் – அங்கோலா – ஜிம்பாவே… அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையிலான அரசியல் விளையாட்டுகள்…

இரத்தினக்கற்கள் பட்டைத்தீட்டும் தொழிலாளர்களின் உயிரைக் குடிக்கும் சிலிக்கான் நோய்…

இரத்தினக்கற்களுக்காக ஆக்கிரமிக்கப்படும் விவசாயிகளின் நிலங்கள்…

பாதிக்கப்படும் மக்களுக்காகப் போராடும் இயக்கங்களின் மீதான போலீசு மற்றும் இராணுவ வெறியாட்டம்…

இயக்கங்களை அழிப்பதில் ஆளும்வர்க்கங்களின் கொடூர வளர்ச்சி…

இவைகளை எதிர்கொள்ள இயக்கங்கள் என்ன செய்கின்றன என்று நம்மைச் சுற்றி நடப்பவைகளை வெறும் 288 பக்கங்களில் அரசியலோடு பார்க்க வைக்கிறார் தோழர் இரா. முருகவேள்.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் மண்டைக்கனத்தை இறக்கிவைத்து விட்டு, வாசகர்களை விழிப்பிதுங்கச் செய்து, படிப்பவர்களை பஜனைக்கூட்டங்களாக மாற்றி வைத்திருக்கும் துருப்பிடித்த எழுத்தாளர்களுக்கு மத்தியில் இவர் வித்தியாசமானவர்தான்.

“மிளிர்கல்” நாவல் இரத்தினக்கற்களின் பின்னாலிருக்கும் அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளபோதும், நமக்கு அது தாதுமணல் கொள்ளை, மீத்தேன் ஆக்கிரமிப்பு, கனிமங்களுக்காக காடுகள் மற்றும் பழங்குடிகளை அழித்தல் என சமகாலப் பிரச்சினைகள் அனைத்தோடும் இணைப்பைத் தந்துவிடுகிறது.

கண்ணகி மீது தீராத ஆர்வம்கொண்டவளும் இந்திய தலைநகரில் வாழ்கிற தமிழ்ப்பெண்ணுமான முல்லை; அவளது நண்பனும், தமிழக புரட்சிகர இடதுசாரி இயக்கமொன்றின் செயல்பாட்டாளனான நவீன்; தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீகுமார்; சாந்தலிங்கன் மற்றும் நவீன் சார்ந்திருக்கும் புரட்சிகர இயக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளன் கண்ணன் ஆகியோர் நம்மோடு அவ்வளவு பேசிய பின்னும் அவர்கள் ஏன் நிறுத்திவிட்டார்கள் என்று ஏக்கம்கொள்ளச் செய்கிறது நாவல்.

தங்கள் பயணத்தினிடையிலான அவர்களது உரையாடல்களிலிருந்தும் நிகழ்கால பிரச்சினைகளின் வழியாகவும் கனிம வளங்களை சூறையாடுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆளும்வர்க்கங்கள் துணைபோவது; அதற்காக இராணுவமயமாக்கப்பட்ட காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள்; போராடும் இயக்கத்தைச் சார்ந்தவர்களின் மீது பொய் வழக்கு புனைதல்; பூர்வீக வாழ்விடங்கள் விட்டு பழங்குடி இனமக்கள் விரட்டப்படுதல்; புரட்சிகர இயக்கங்களின் வலிமையின்மை; அதனால் ஏற்படும் விளைவுகள் என அனைத்தும் பேசப்பட்டு, கடந்த காலம் முதல் சமகாலம் வரை… சிலப்பதிகார காலம் முதல் தற்போது வரையிலான மாணிக்கக்கல் மரகதக்கல்லைப் போன்ற விலையுயர்ந்த கற்களை வைத்து நடக்கும் அரசியலையும் கொடுங்கரங்கள் நிகழ்த்தும் அழிவின் பக்கங்களையும் நம் கண்முன் விரிக்கிறது நாவல்.

கிட்டதட்ட நாவலின் 15 பக்கங்கள் தாண்டியவுடன் அடர்ந்த கருப்பு நிற மேற்கோள் எழுத்துக்களின் மூலமாக நாம் எந்த மாதிரியான சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்பது நமக்குப் புரிந்து விடுகிறது.

‘1991 – ல் தமிழக காவல்துறை கம்ப்யூட்டர் பிரிவைத் தொடங்கியது. அதே ஆண்டில் தான் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த குற்ற விசாரணைத் துறையில் ஒரு சிறப்புப் பிரிவும் தொடங்கப்பட்டது. இதுவே பின்பு, கியூ பிரிவு என்று அழைக்கப்பட்டது. முதலில் இடதுசாரிப் புரட்சியாளார்களை இலக்காக வைத்து தொடங்கப்பட்ட இப்பிரிவு, பின்பு ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட தனித்தமிழ் இயக்கங்களையும் இசுலாமிய இயக்கங்களையும் குறி வைத்து விரிவுபடுத்தப்பட்டது. மற்ற மாநிலங்கள் மக்கள் இயக்கங்களின் ஆயுதப் போராட்டங்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் அனைத்துப் போராளி இயக்கங்களும் முளையிலேயே கிள்ளி நசுக்கப்பட்டது. நூற்றைம்பது ஆண்டுகளாக அனுபவம் வாய்ந்த காவல்துறையையும் போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் சரியாகப் பயன்படுத்தி இந்தியாவிலேயே மிகவும் இராணுவ மயமான மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.’
– பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை அறிக்கையிலிருந்து (நாவலில் மேற்கோள் காட்டப்பட்டது)

தற்போது 150 ஆண்டுகளுக்கும் மேலான காவல்துறை மற்றும் உளவுத்துறைகளின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது போராடும் அமைப்புகளைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல, அவர்கள் சந்தேகிக்கும் அனைவரின் தொலைபேசி உரையாடல்களும் சமூக வலைத்தளக் கணக்குகளும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன; பதிவு செய்யப்படுகின்றன. நாம் எப்போதோ பேசிய, பகிர்ந்த கருத்துக்களுக்காக இன்று கைது செய்யப்படலாம். நம் ஒவ்வொரு அசைவுகளும் கவனிக்கப்படுகின்றன; கண்காணிக்கப்படுகின்றன. இராணுவம், காவல்துறை, சிறப்புப்படைகள், அதிரடிப்படைகள், சிறை, நீதிமன்றம், மோதல் படுகொலைகள் என அனைத்தும் தனது நடவடிக்கைகளின் மூலம் நமக்கு இதைத் தான் சொல்கிறது; உறுதிப்படுத்துகிறது. ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும் சூழ்ச்சியும் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றது. அது விரும்பும் அரசியலையே நம்மைப் பேச வைக்க முயற்சிக்கிறது. அதற்கு ஊடகங்களையும் பெருமளவில் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது போன்ற அபாயங்களை நாவல் உணர்த்திச் செல்வது அருமை.

ரூபாயின் மதிப்பு வீழ்வதால் தங்கம் இறக்குமதி குறைவதாலும், வைர உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நாடுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருவதாலும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் காங்கேயம் ஊரில் கிடைக்கும் வைரத்தை விட அரிதான Facet grade Rubi வகையைச் சார்ந்த மாணிக்கம், மரகதம் போன்ற விலையுயர்ந்த கற்களில் அதிகளவில் முதலீடு செய்து கொள்ளையடிக்க வரும் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக சிறு துரும்பும் அசையக்கூடாது என்று காவல்துறை புரட்சிகர இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள்மீது தொடுக்கும் பொய் வழக்குகள், அடக்குமுறைகள் பற்றி நாவலில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கனிமவளத்தைக் கொள்ளையடிக்க வரும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சேவை செய்ய ஆளும் வர்க்கங்கள் பச்சை வேட்டை, காட்டு வேட்டை, மாவோயிஸ்டுகள் வேட்டை என்ற பெயரில் நம் கண்முன் தற்போது நடக்கும் அரசியல் படுகொலைகளை அட்டூழியங்களை நாவல் நமக்கு நினைவூட்டுகிறது.

கனிமவளங்களை, விலையுயர்ந்த ரத்தினக்கற்களை தேடிச் செல்லுதலும் அதற்காக போர் தொடுக்கும் முறையும் பழங்காலத்தில் எகிப்து முதற்கொண்டு பல நாடுகளில் இருந்திருக்கிறது. கடற்கொள்ளையர்களுக்கும் அரசிற்கும் இதனால் பல சண்டைகள் நடந்திருக்கின்றன. மத்திய காலத்திலிருந்து ஆப்பிரிக்கா இதில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. இதற்காக பகாசுர நிறுவனங்கள் ஆப்ரிக்காவில் நடத்திய கொலைகள் கொள்ளைகள் பேரழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. கொலம்பஸ்கூட தங்கத்தை அடைவதற்குத்தான் புதிய நாடுகள் தேடிச் சென்றதாக குறிப்பு ஒன்றும் உண்டு.

சிலப்பதிகாரம்கூட இது போன்ற ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைக்கெதிராக போராடிய நிகழ்வுகளை கண்ணகி மூலமாக கடத்தி வருவதாக இருக்கலாம். இன்று அதே போன்றதொரு சூழல் இந்தியாவில் உருவாகிவிட்டது. அதைத்தான் நாவலில் நவீனின் மூலமாக நமக்குக் கூறப்படுகிறது.

“அவர்கள் செயல்படத் தொடங்கி விட்டார்கள்”

“யார்?”

“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரத்தினக் கற்களுக்காகத் தமிழ்நாட்டை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள்” என்கிற இடங்கள் ஆயிரம் பொருள் பொதிந்தவை.

ஜார்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் பொன்ற பகுதிகளில் கிடைக்கும் வைரம், கிரானைட், பாக்சைட், டைட்டானியம் போன்ற கனிம வளங்களுக்காக வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இன்று படையெடுக்கத் தொடங்கிவிட்டன. இதை எதிர்த்துப் போராடும் பூர்வீக பழங்குடியினர், மாவோயிஸ்டுகளை இந்திய ராணுவம், CRPF, ஊர்க்காவல்படை, துணை ராணுவம், சிறப்பு அதிரடிப் படைகள் மூலம் அடக்கி ஒடுக்கின்றது. இதற்கு செயற்கைக் கோள்கள் முதல் ஹெலிகாப்டர்வரை ஏகாதிபத்திய கொள்ளைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது போதாதென்று 2004 இல் சல்வாஜூடும் என்ற கூலிப் படையை அரசே ஏற்படுத்தி, அதன்மூலம் லட்சக்கணக்கான மக்களை பூர்வீக வாழ்விடங்களில் இருந்து விரட்டியும் அதற்கு எதிராகப் போராடுபவர்களைக் கொன்று குவித்தும் வருகிறது. இதற்கு ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தன்னாலியன்ற உதவிகளைச் செய்கின்றன.

கனிமவளங்கள் சுரண்டுவதற்காக மட்டும் இன்று உலகம் முழுவதும் இதுபோன்ற கொலைகார நிறுவனங்களாலும் ஏகாதிபத்திய அடிமை அரசுகளாலும் பல லட்சக் கணக்கான மக்கள் தங்களது பூர்வீக இடத்தை விட்டு துரத்தப்படுகின்றனர். கொல்லப் படுகின்றனர். இதற்கு ஐநா சபையின் அமைதிப்படை முதற்கொண்டு சேவையாற்றி வருகிறது. இது தவிர தங்கம், வைரம் போன்ற சுரங்கங்களில் வேலை செய்து இறந்தவர்கள் லட்சக்கணக்கானோர். இதில் பெரும்பகுதியினர் குழந்தைத் தொழிலாளர்கள். 500 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட சுரங்கங்களில் இது போன்ற சிறுவர்களை இறக்கி விடும் முறை இன்னும் வட மாநிலங்களில் இருக்கிறது.

தங்கம் உற்பத்தி செய்யப்பட்ட முறைகளைப் பற்றி பிளினி இவ்வாறு வர்ணிக்கிறார்-

“பூமியின்கீழ் பாடுபட்டவர்கள் பல மாதங்களுக்கு வெளிச்சத்தையே பார்க்கவில்லை. இந்த வேலையில் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆயிரக்கணக்கானோர் செத்து மடிந்தார்கள். கடினமான பாறைகளைக் காட்டிலும் அதிக கடினமானது தங்கத்தின் மேலுள்ள ஆசை”

இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்பதைத்தான் நாவலில் தோழர் முருகவேள் இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகிறார்.

ராமன் ஒவ்வொரு நாளும் 77 கற்களுக்குப் பட்டை தீட்டினார். ஒரு வாரத்துக்கு 462 கற்கள். வருடத்திற்கு 24,000 கற்கள். இப்படி இருபது ஆண்டுகளில் ஐந்து லட்சம் கற்களுக்குப் பட்டை தீட்டினார். அவரது நுரையீரல்களை சிலிக்கா பொடி தின்று விட்டது. ஒரு நாளைக்கு பதினான்கு மணிநேரம், தான் பணிபுரிந்த அந்த காற்றோட்டமில்லாத அறையிலேயே படுத்தப் படுக்கையாகக் கிடந்து உயிர்விட்டார். அவர் ஒரு நாளைக்கு எழுபது ரூபாய் ஊதியம் ஈட்டினார். ரத்தின வியாபாரியிடம் முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடைசி வரை அவரால் அந்தக் கடனை அடைத்து விடுதலை பெற முடியவில்லை. அவர் மரணப்படுக்கையிலிருந்தபோது இருபது ஆண்டுகளாக யாருக்காக உழைத்தாரோ அந்த வியாபாரி ஒருமுறை கூட வந்து பார்க்கவில்லை…

…. ராமன் சிறந்த ஓவியரும் கூட. முதல் முதலாக பட்டை தீட்டும் தொழிலாளர்களுக்காகப் போராட முன் வந்தவர்களில் அவரும் ஒருவர். கூடவே தலை முதல் கால்வரை வெள்ளைப் புழுதி படிந்த சில சிறுவர்கள் வேலைசெய்துகொண்டிருக்கும் படங்களும் வெளியிடப் பட்டிருந்தன. ஒரு குழந்தையின் தகப்பன்: ‘இந்த வேலையிலுள்ள ஆபத்துகள் தெரியும். ஆனால் நாங்கள் நிலமில்லாத விவசாயிகள். எங்களுக்கு வேறு வழியில்லை’ என்றார் என்று அந்த அறிக்கை சொன்னது. நமது ஸ்ரீகுமார் சார் சொல்லும் அகேட், ரூபி, சஃபையர்போன்ற செமி பிரஷியஸ் கற்களால் இதயங்களும், மணிகளும், டேவிட் டின் நட்சத்திரங்களும், காதணிகளும், பிரெஸ்லெட்களும், வளையல்களும் செய்யும் வேலையில் ஈடுபட்டவர்கள் இவர்கள். இந்தத் தொழிலாளர்கள் தரையில் உட்கார்ந்து கல்லாலான சுழலும் சக்கரங்களில் இந்தக் கற்களை உரைப்பதன் மூலம் அதை வடிவமைக்கின்றனர். இதனால் அவர்களின் உடலெங்கும் சிலிக்கா தூசி படிகிறது. தொழிலாளர்கள் 12, 13 வயதில் வேலை செய்யத் தொடங்குகின்றனர். 30 சதவீதத் தொழிலாளர்கள் சிலிக்கோஸீஸ் நோயால் இறந்து போகின்றனர். இந்தத் தூசியை சுவாசிக்கும் அனைவருக்கும் இந்நோய் வருகிறது. உயிர் பிழைத்தவர்கள் எலும்பும் தோலுமாகி நடக்க முடியாமல் தீராத மூச்சுத் திணறலால் அவதிப்படுகின்றனர். ஏழைத் தொழிலாளர்கள் இந்தக் கற்களை சப்ளை செய்யும் வியாபாரியிடம் கடன் வாங்குகின்றனர். அதன் மூலம் கொத்தடிமையாகின்றனர். தொழிலாளி இறந்தால் அவனது மனைவி அந்த வேலையைச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவளும் இறந்தால் அவர்களது குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகள் இந்தப் பணியில் ஈடுபடுவதை வைர வியாபாரிகளும் விரும்புகின்றனர். மலிவான சின்னஞ்சிறு கற்களையும் வைரங்களையும் பட்டை தீட்ட சிறுவர்களின் பிஞ்சுக் கரங்களும் கண்களும் ஏற்றவை என்று இவர்கள் கருதுகிறார்கள். வைரத் தொழிலில் ஈடுபட்டுள்ள குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகளும் முதுகுவலியும் சிறுநீரகப் பிரச்சினைகளும் வருகின்றன. சிலிக்கோஸிஸ் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோயாகும். ஆனால் தொழில் பாதுகாப்புகள் இல்லாததால் நூறு சதவீத இழப்புகள் நேரிடுகின்றன. ஷகாப்பூர் என்ற கிராமத்தில் மட்டும் இருநூறு தொழிலாளர்கள் இந்நோயினால் மரணமடைந்துள்ளனர். காற்றோட்டமான ஜன்னல்களை ஏற்படுத்துவதன் மூலம் தூசியைக் குறைத்து இறப்பைத் தடுக்கலாம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2008 இல் இந்தியா 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கற்களை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்துள்ளது…

பன்னாட்டு நிறுவனங்களின் இது போன்ற உலோகங்கள் வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் மனிதர்களின் உழைப்பை உறிந்து அவர்களைப் பிழிந்து எடுத்து சவக்குழியை நோக்கித் தள்ளும் இடமாகவே இருக்கின்றன. முதலாளித்துவத்தின் இந்தப் பேராசை முதலாளித்துவ சமூகம் நீடித்துக் கொண்டிருக்கும் வரை அடங்காது.

முதலாளித்துவத்தின் இதுபோன்ற லாப வெறி மூலதன வெறி சுயநலம் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிறார்: “தங்கமும் வெள்ளியும் பூமியின் அடிவயிற்றிலிருந்து வெளியே வருகின்ற போதே மொத்த மனித உழைப்பின் நேரடியான சொரூபமாக இருக்கின்றன. அதுதான் பணத்தின் மந்திரசக்தி… முதலாளித்துவம் தனக்கு லாபம் என்று கருதினால் தனக்கான சவக்குழியைக் கூட அது தோண்டிக் கொள்ளும்”

ஆனால், இந்தியாவிலோ இதுபோன்ற கனிமவளக் கொள்ளைக்காக ஏகாதிபத்திய நிறுவனங்களுடன் 20-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதுவரை போடப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பன்னாட்டு உள்நாட்டுப் பெரு நிறுவனங்கள் ஒரு புறமென்றால் அமைச்சர்கள் முதல் கந்து வட்டிக்காரன் வரையிலான கொடுமைகள் இன்னொரு புறம். இது போன்ற கனிமவளக் கொள்ளைக்காக விஜயமல்லையாக்களும், வைகுண்டராஜன்களும், பி.ஆர்.பழனிச்சாமிக்களும், ரெட்டி சகோதரர்களும் அடிக்கும் லூட்டிகளை நினைவூட்டிக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற, மக்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறையை அதற்கான மூலவேரை இனம்கண்டு கொண்டு முன்னேற அதற்கான செயல் உத்திகளை வேலைத் திட்டங்களை வகுத்து முன்னேறிச் சென்று செயல்படும் போக்கு புரட்சிகர இயக்கங்களிடையெ குறைவாக இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

நாவலில் 23 ஆம் பக்கத்தில் நவீனுக்கு கட்சியையும் மார்க்சியத்தையும் அறிமுகப்படுத்திய தோழர் ஜோசபிடம் நவீன் கேட்கிறான்: “நாம் ஏன் அந்தத் திட்டம் செயல்படத் தொடங்கி மக்களை வெளியேற்றும் சூழ்நிலை வரும்போது அங்கே போய் நிற்கிறோம்? இப்படியொரு சூழ்நிலை நிலை வரப்போவதை முன்பே ஊகித்து அறிந்து அமைப்பாக்கும் வேலைகளைத் தொடங்கியிருக்க வேண்டாமா?” நாம் எப்போதும் பிரச்சினை வந்த பின்பே அங்கே போய் நிற்கிறோம். அதாவது கரண்ட் இஷ்யூஸ் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்”.

நாம் எந்த இடத்தில் சறுக்குகிறோம் என்பதை இந்த இடம் நமக்கு உணர்த்தி விடுகிறது.

நடக்கப்போகும் போராட்டத்தை அரசியல் சூழ்ச்சியை முன்னுணர்ந்து செயல்பட வேண்டுமென்ற ஏக்கம் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

தோழர் லெனின் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. “போர்த்தந்திரங்களை மாற்றிக் கொள்வதற்கு முதலில் போர்த்தந்திரங்களை வகுத்திருக்க வேண்டும். கோட்பாடு ரீதியில் தீர்வு காண்பது எவ்வளவு முக்கியமோ அதே போல நடை முறை ரீதியான தீர்வும் முக்கியம். திட்டம் வகுப்பதின் மூலமே கட்சியை கட்டியமைக்கும் வேலையை எல்லாத் திசைகளிலும் தொடங்க முடியும்.

ஆனால் நம்மிடம் ஓராயிரம் வேலைத் திட்டங்கள் இருக்கின்றன. நாம் முன்னோக்கி வைப்பதாக கருதும் ஒவ்வொரு அடிகளும் நம்மை பல அடிகள் பின்னோக்கி இழுத்துவிடுகிறது.”

நவீனின் தோழர் ஜோசப்: “ஆள்பற்றாக்குறை தோழர். நாம் ஓடிக்கொண்டெ இருக்கிறோம். தொடர்ந்து பிளவுகள், நெருக்கடி, கூடவே அடக்குமுறை. விரைவில் இந்தச் சூழலைக் கடந்து நாம் முன்னேறத் தொடங்கி விடுவோம்” என்கிறார். நாமும் அந்தச் சூழலைத்தான் விரும்புகிறோம்.

ஆனால், தோழர் ஜோசபின் இந்தப் பதிலுக்கு முன்பாகவே நவீன் அவரிடம் ஒரு கேள்வி எழுப்புகிறான். இந்த விமர்சனத்தை எழுத என்னைத் தூண்டிய கேள்வியும் அதுதான். தோழர் முருகவேள் அவர்கள் புரட்சிகர இயக்கங்களை நோக்கி வர்க்க எதிரிகளை வரையறுப்பது பற்றி முன் வைக்கும் அதிமுக்கியமான கேள்வி இது என்றே எனக்குப் படுகிறது. “1890 இல் ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்: 1933, 34 இல் ஸ்டாலின் இரண்டாம் உலகப் போர் வருமென்றார். தமிழகத்தின் அரசியல் பொருளாதாரம், முதலாளித்துவம் இயங்கும் முறை பற்றிய நமது புரிதலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது”

கம்யூனிஸ்டுகள் சமூக விஞ்ஞானிகள் என்பதை ஆசான்கள் நிரூபித்தனர். மார்க்சும் ஏங்கல்சும் 1882 ஆம் ஆண்டில், “இன்று ஐரோப்பாவின் புரட்சிகர நடவடிக்கைகளின் முன்னணிப்படையாக ரஷ்யா விளங்குகிறது” என்று கூறி விடுகின்றனர். அதன்பிறகு முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறுவதை முன்னுணர்ந்த ஏங்கல்ஸ் முதல் உலகப் போரைப்பற்றி மேலும் இவ்வாறு கூறுகிறார். “ஒரு கோடி சிப்பாய்கள் இந்தப் போரில் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள். இதற்கு முன் 30 ஆண்டுகள் நடந்த போரில் ஏற்பட்ட சேதங்கள் வரக்கூடிய உலகப் போரில் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுவிடும். பசியிலும் பஞ்சத்திலும் மக்கள் வாடிவதங்குவார்கள். மன்னர்களின் மகுடங்கள் டஜன் கணக்கில் தரையில் உருளும்” இத்தோடு ஏங்கல்ஸ் நிறுத்தி விடவில்லை. மேலும் கூறுகிறார். “ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயமாக நடக்கும். தொழிலாளி வர்க்கத்தின் இறுதி வெற்றிக்கு வழி வகுக்கும் சூழ்நிலைகள் நிச்சயமாக உருவாகியிருக்கும். அதன் வெற்றி தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கும்.” ஆம், அதை பாட்டாளி வர்க்கம் தோழர் லெனின் தலைமையில் ரஷ்யாவில் 1917 இல் நிகழ்த்திக் காட்டியது.

அதேபோல தோழர் லெனினும் 1912 முதல் 1915 வரை நடக்கப்போகும் முதல் உலகப்போரை பற்றி தெளிவாக வரையறுத்துக் கூறிக்கொண்டே இருந்தார். அது எப்படி ஏகாதிபத்திய போராக, நாடு பிடிக்கும் போராக, பிடித்த நாடுகளைத் தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்ளும் போராக இருக்குமென்று முன் கூட்டியே கூறுகிறார். அதன்படி அந்த ஏகாதிபத்திய போரை எப்படி உள்நாட்டுப் போராக மாற்றி, ஆளும் முதலாளிவர்க்கத்தை தூக்கி எறிந்து அரசு அதிகாரத்தை எப்படி பாட்டாளிவர்க்கம் கைப்பற்ற வேண்டும் என்பதையும் அதன் அவசியத்தையும் அவர் மட்டுமே வலியுறுத்தினார்.

எனவேதான் முதல் உலகப்போரில் சமூக ஜனநாயகவாதிகள் தாய்நாட்டைக் காக்க முதலாளி வர்க்கத்திற்கு, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, பிரச்சாரத்தை முறியடிக்க தோழர் லெனினால் முடிந்தது. புரட்சிக்காகக் காத்திருந்தது சூழலைப் புரிந்துகொள்ளாமல் செயல் திட்டம் இல்லாமல் இருந்திருந்தால் ரஷ்யப் புரட்சி சாத்தியமாக இருந்திருக்க முடியாது.

அதுபோல்,, 1921 இல் தோழர் லெனின்: “உலகம் முழுவதும் நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே மீண்டும் ஒரு உலகப்போர் தவிர்க்க முடியாது” என்று இரண்டாம் உலகப் போரைப் பற்றி கூறி விடுகிறார். தோழர்கள் மாவோவும் ஸ்டாலினும் அதுபோல் இரண்டாம் உலகப் போரைப் பற்றி சரியாகக் கணித்து வைத்திருந்ததால்தான் அவர்களால் அதை முறியடிக்கவும் முடிந்தது. மூன்றாவது அகிலமும் லெனினும் பின்தங்கிய கீழ்த்திசை நாடுகளில் பாட்டாளிவர்க்கம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் அணுகுமுறை குறித்தும் போர்த்தந்திரம் குறித்தும் வைத்த கோட்பாட்டு முடிவுகள் சீனப்புரட்சி, வியட்நாம் புரட்சிகளை சாத்தியமாக்க முக்கிய பங்காற்றின என்பது நம் படிப்பினைகள்.

1931 ஆம் ஆண்டு, தான் தூக்கிலேற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், பகத்சிங், போலி சுதந்திரத்தைப் பற்றி அதனைத் தொடர்ந்து ஏற்படப்போகும் சிக்கல்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “பிரிட்டிஷார் நிலைகுலைந்து நிற்கின்றனர். அவர்களின் ஆணிவேர் ஆட்டங்கண்டு விட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் ஒப்பந்தம் ஏற்படும். அவர்கள் தேசத்தை விட்டு வெளியேறுவார்கள். அதற்குப்பிறகு பல ஆண்டுகள் குழப்பத்தினூடே செல்லும். அப்போது மக்கள் என்னை மீண்டும் நினைவுகூர்வார்கள்.” வரலாறு பகத்சிங் சொன்னதை அப்படியே நிகழ்த்திக் காட்டியது.

1920 களில் சிறு சிறு கம்யூனிஸ்ட் குழுக்களாக உருவாகி இன்றுவரை பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துவரும் புரட்சிகர இயக்கங்கள் விரைவில் ஒன்றுபட்டு எழுந்து நிற்கும் என்பதை நாவல் ஜோசப்பின் மூலம் நம்பிக்கையளிக்கிறது. அரசும், கார்ப்பரேட் அதிகாரவர்க்கமும், மந்திரியும், அடியாட்படையும் பல்வேறு இடையூறுகளை செய்கிறபோதும் அவற்றையெல்லாம் மிகநுட்பமாக கையாண்டு இலக்கை நோக்கி பயணிக்கும் கதாபாத்திரங்கள் நமக்கு இந்த நம்பிக்கையை கூடுதலாக்குகிறது.

1845 இல் எழுதிய ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் நாம் 11 ஆவது ஆய்வுரையை தான் அடிக்கடிச் சொல்லி வருகிறோம். ஆனால், 2 ஆவதாகவே ஒன்றை மார்க்ஸ் சொல்லி விடுகிறார்.

“புறப்பொருளான உண்மையை மனித சிந்தனைக்கு உரியதாக கருத முடியுமா எனும் பிரச்சினை தத்துவத்துறைப் பிரச்சினை அல்ல. மாறாக அது ஒரு நடைமுறைப் பிரச்சினையாகும். தனது சிந்தனையின் உண்மையை அதாவது அதன் எதார்த்தத்தையும் வலிமையையும் இப்புறத்தன்மையையும் மனிதன் நடைமுறையில் நிரூபிக்க வேண்டும். நடைமுறையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிந்தனையின் எதார்த்தத்தன்மை அல்லது எதார்த்தத்தன்மை பற்றிய வாதாடல் முற்றிலும் ஓர் ஏட்டறிவாதப் பிரச்சினையாகும்.”

அந்த வகையில் ‘மிளிர்கல்’ நாவல் இன்று மிக முக்கியமான ஒரு முன்னேறியப் போக்கை நோக்கி இன்னும் புதிய தெம்புடன் நம்மையும் வரலாற்றையும் கொண்டு செல்ல முயல்கிறது. ஏங்கல்ஸ் பொருள் முதல்வாத ஆய்வுமுறை பற்றி, “வரலாறுகள் அனைத்தும் மீண்டும் ஆராயப்பட வேண்டும். வெவ்வேறு சமூக அமைப்புகளிலிருந்து அவற்றுடன் பொருந்துகிற அரசியல், சிவில், சட்ட, அழகியல், தத்துவ, ஞான சமய இதரக் கருத்துக்களை வருவிக்க முயல்வதற்கு முன்பாக அந்த சமூக அமைப்புகளின் இருத்தல் நிபந்தனைகள் விவரமாக ஆராயப்பட வேண்டும். இதுவரை இங்கே செயல்பட்டிருப்பது மிகவும் குறைவு. ஏனென்றால் அதில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் மிகவும் சிலரே” என்று கூறுவதைப்போல் வரலாறுகள் அனைத்தும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் எழுதப்பட வேண்டிய அவசியத்தையும் மிளிர்கல் உணர்த்துகிறது. புரட்சியானது பண்பாட்டு ரீதியாகவும் நிகழ்த்த வேண்ழய தேவையையும் நம்முன் வைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பசியையும் கொடூரத்தையும் அதற்காக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களின் குரல்வளையை முதலாளித்துவம் நெறிப்பதையும் பழங்குடியினர் தங்களது பூர்வீக வாழ்விடங்களை விட்டுத் துரத்தப்படுவதையும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதையும் உணர்ந்த முல்லை, நவீனிடம் கடைசியில் இப்படிக் கூறுவது நம்மை நோக்கி அறைகூவல் விடுவதைப்போல் உள்ளது. “கொடுங்கல்லூருடன் படம் முடிகிறது என்று யார் சொன்னது? எந்தச் சிலம்பைக் கொண்டு மாணிக்கப் பரல்களைக் கொண்டு கண்ணகி நீதியை நிலைநாட்டினாளோ அந்த மாணிக்கம் இப்போது ஏழை மக்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதைக் காட்ட வேண்டாமா? இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் உண்மை முகங்களைக் காட்ட வேண்டாமா? பல்லாயிரம் மக்கள் வாழ்வையும் நிலங்களையும் இழப்பதற்கான சூழல் இருக்கும்போது, மக்களுக்காகச் செயல்படுபவர்கள் வேட்டையாடப்படும்போது, உண்மையில் கண்ணகி இருந்தாளா இல்லையா என்று ஒரு ஆவணப்படம் எடுப்பதா நமது நோக்கம்?”

மக்களை திசைத்திருப்பி கொள்ளையடிக்க இனவாத – சாதிவாத அரசியல் செல்வாக்கு செலுத்துகிற இன்றைய நிலையில் இடதுசாரிக் கண்ணோட்டத்தில் வெளிவந்துள்ள இந்நாவலை இயக்கங்கள்தான் கொண்டாட வேண்டும்!

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp