மிளிர் கல்: ஒரு வாசிப்பு

மிளிர் கல்: ஒரு வாசிப்பு

ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக தன்னை உயர்த்திக் கொள்ளும் போது அது தன் வரலாற்றை தெரிந்து கொள்வதிலும் தன்னை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் கொள்கிறது. மரபினை ஒரு பொதுப் புரிதலுக்கு உள்ளாக்க ஆர்வம் உடைய ஒருவருக்கு பாட்டிக் கதைகளும் திரைப்படங்களும் வீரக் கதைகளும் ஒருவித திருப்தி அளிக்கவே செய்கின்றன. ஆனால் தீவிரத்துடனும் கல்வியின் பலனாய் அடைந்த புறவயமானப் பார்வையுடனும் தேடலை நிகழ்த்தும் யாரும் வரலாற்றின் மாவீரர்களோடு தங்களை ஒப்பிட்டுக் கொண்டும் "இம்மண்ணில் அவர்கள் வாழ்ந்தார்கள்" என்று பெருமை பட்டுக் கொண்டும் நின்று விட முடியாது. உண்மையை அறிதலின் வழியாகவும் உணர்தலின் வழியாகவும் மேலும் நெருங்கித் தொட விரும்பும் மனம் சாகசக் கதைகளில் திருப்தி கண்டுவிட முடியாது. லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் அதற்கு ஒரு சரியான உதாரணம். ஒழுகி நகரும் வாழ்வின் பிரம்மாண்டத்தை கண் முன் கொண்டு வரும் படைப்பது. அதன் ஒரு பகுதி ""வரலாற்று நாயகனாக" உருவகிக்கப்படும் நெப்போலியனின் பிம்பத்தை கட்டுடைக்கும்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ அதன் பின்னர் உருவான பெரும் படைப்புகள் (புனைவு மற்றும் அபுனைவு) இத்தகைய பிம்பக் கட்டுடைப்புகளை செய்த வண்ணமே இருக்கின்றன. தமிழிலும் அத்தகைய நவீனங்கள் உருவாகி வருகின்றன. கறாரான புறவயமான வரலாற்றுப் பார்வையினூடாக மரபின் கூறுகளையும் நன்கறிந்து அகவயமான உணர்வு நிலைகளை உருவாக்கக்கூடிய தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான மறு ஆக்கம் ஜெயமோகனின் கொற்றவை. சிலப்பதிகாரத்தை ஒட்டி எழுதப்படும் அனைத்து ஆக்கங்களும் கொற்றவையை தாண்டிச் செல்வதை ஒரு அறைகூவலாக ஏற்றால் எழுதப்படும் அப்படைப்பு தன் தரத்தில் உயரும் என்பது என் எண்ணம்.

மிளிர் கல் கண்ணகி நடந்த பாதையினூடாக இன்று வரைத் தொடரும் ரத்தினங்களின் வணிகத்தை அதன் அரசியலை மரபுடனும் சமகாலத்துடனும் தொடர்புபடுத்த முயலும் படைப்பு. டான் பிரவுன் படைப்புகளில் ராபர்ட் லாங்டன் என்ற பேராசிரியர் குறியீடுகள் குறித்து பெருந்திரையில் விளக்குவது போன்ற காட்சிகள் இடம்பெறும். அது போலவே ஸ்ரீகுமார் என்ற ஐம்பது கடந்த பேராசிரியர் தமிழ்நாட்டில் ரத்தினங்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து விளக்குவதோடு தொடங்குகிறது மிளிர் கல்.

வட இந்தியாவில் வாழும் தந்தையால் சிலப்பதிகாரம் அறிமுகம் செய்யப்பட்ட பத்திரிக்கையில் வேலை செய்யும் முல்லை எனும் ஒரு தமிழ் பெண் அவளுடைய இடது சாரித் தோழன் நவீனுடன் சிலப்பதிகாரம் குறித்து ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக பூம்புகார் முதல் கொடுங்கலூர் வரை பயணிக்க விரும்புகிறாள். இது போன்ற நேரடித் தொடக்கமே ஒரு வித சோர்வினை உருவாக்குகிறது. முல்லை சினிமாவில் நடிக்கும் அளவுக்கு அழகானவள் என்று சொல்லி மறைவதற்காக சுரேஷ் சபாபதி என்ற ஒருவர் அறிமுகமாகி மறைகிறார்.

கூகுள் மேப்பில் அவர்கள் திட்டத்தை விளக்கும் போதே ஆசிரியர் நவீனையும் முல்லையையும் ஆர்வம் கொண்ட குழந்தைகள் என்ற நிலையில் நிறுத்தி விடுவதாக எண்ணம் தோன்றுகிறது. பெரும் கனவுகளோடு பூம்புகார் நுழையும் முல்லை ஏமாற்றம் அடைகிறாள். அதே நேரம் ஜேகே டைமண்ட்ஸ் எனும் ரத்தினங்கள் விற்பனை செய்யும் பெரு நிறுவனத்தால் அழைத்து வரப்படும் பேராசிரியர் ஸ்ரீகுமாரை நவீனும் முல்லையும் சந்திக்கின்றனர். நவீன் கடற்கரை மீனவர் நிலை நினைத்து வருந்துகிறான்.

இன்னொரு புறம் சிலப்பதிகார காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தில் மறைமுகமாகத் தொடரும் ரத்தினங்களின் வணிகத்தை விளக்கும் ஒரு சித்திரம் விரிகிறது. ஜேகே டைமண்ட்ஸுக்கு உதவுவதாக நினைத்து ஸ்ரீகுமார் கடத்தப்படுகிறார். விடுவிக்கப்பட்ட பின்பு முல்லையுடனும் நவீனுடனும் பயணிக்க ஒப்புக் கொள்கிறார். அவர்கள் விவாதங்களின் வழியே அறிவதையும் நிறுவிக் கொள்வதையும் மையச் சரடாகக் கொண்டு பயணிக்கிறது மிளிர் கல்.

கதாபாத்திரங்களின் ஒற்றைப்படைத் தன்மை தொடக்கம் முதலே பெரும் நெருடலைக் கொடுக்கிறது. கொற்றவை தன் கதைப் போக்கினூடாக சொல்லாமல் சொல்லிச் செல்லும் ஒரு கண்டடைதலை மிளிர் கல் தன் இறுதி தரிசனமாக முன் வைப்பது அயர்வினையே கொடுக்கிறது.

முல்லை நவீன் ஸ்ரீகுமார் கண்ணன் என ஒரு சில பாத்திரங்கள் மட்டுமே கதையை நகர்த்திச் சென்றாலும் அவர்களில் ஒருவரின் உளநிலையும் ஆராயப்படவில்லை. பழமையை நினைத்து அங்கலாய்க்கிறார்கள் வேதனைப்படுகிறார்கள் கொதிக்கிறார்கள் மாற்றங்களை முன் வைக்கிறார்கள் இருந்தும் அனைவருமே இடது பக்கம் சரிந்தபடியே அனைத்தையும் செய்கிறார்கள். மரபினை முழுமையாக வெளியேயிருந்தும் பார்க்காமலும் முழுதும் உள் நுழையாமலும் ஆசிரியர் தத்தளிப்பது ஒவ்வொரு உரையாடலிலும் தெரிகிறது. மாணிக்க கற்களின் வியாபாரம் குறித்து ஒரு உலகளாவிய வரைபடைத்தை உருவாக்கியிருப்பது புதுமையானது. ஆனால் அதனை கண்ணகியுடன் இணைப்பதில் உயிர்ப்பில்லாமல் போகிறது.

அடிக்கடி வரலாற்றாசிரியர்கள் இந்தியவியலாளர்கள் என பலரின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. இந்தப் பயணத்தின் வழியில் அல்லாமல் சில "அறிவுஜீவிகள்" ஒன்றிணைந்து அவற்றை ஒரு அறையில் அமர்ந்தே விவாதிக்க முடியும். பயணிக்கும் போது கண் முன் தெரியும் மக்களின் நிலை கொண்டு அவர்களின் முன்னோர் நிலையை ஊகிப்பது வகையான கண்டடைதல்கள் ஏதுமில்லாமல் பேராசியரும் "நிதானமான" தோழர் கண்ணனும் சாந்தலிங்கனாரும் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

கண்ணகியின் மீதான சிலப்பதிகாரத்தின் மீதான பிம்பங்களை உடைத்து மறு கட்டுமானம் செய்யும் முயற்சியாகவோ உணர்வு ரீதியாக சம காலத்தில் சிலப்பதிகார நிலங்களை அறிமுகம் செய்யும் முயற்சியாகவோ அல்லாமல் ரத்தினங்களுக்காக நடந்த யுத்தங்களையும் சமகால வியாபார உத்திகளையும் இணைக்க முயற்சிக்கிறது இப்படைப்பு.

கோவலன் மாணிக்கம் கிடைக்கும் காங்கேயம் நிலத்தவனாக இருக்க வாய்ப்பிருக்கிறதென்றும் ஒற்றனாக மதுரை அடைந்திருக்கலாம் என்றும் இப்படைப்பு ஒரு பார்வையை முன் வைக்கிறது. இக்கால அரசியல் சதிகளை கொண்டு பழங்காலத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காயிர்ன் சர்க்கிள்கள் கண்கானிப்பின்றி வீணாவதை சுட்டிக் காட்டுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் காங்கேயம் பகுதியில் கடை விரித்து மாணிக்க கற்களை அள்ளப் போவதை இரு தோழர்கள் கைது செய்யப்பட்டதிலிருந்து நவீன் கண்டறிகிறார். பிற தோழர்களை எச்சரிக்கிறார். இதற்குள்ளாக கண்ணகியின் வரலாற்றினூடாக சம காலத்தில் வட இந்தியாவில் ரத்தினங்களை பட்டை தீட்டுவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை உணர்ந்து பொங்குகிறாள் முல்லை. கொடுங்கலூரில் முடிக்க நினைத்த பயணத்தை ஆசிரியரின் கூற்றுப்படி "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தவர்களை" நோக்கி வட இந்தியா வரை தங்கள் ஆவணப்படத்தை விரித்தெடுக்க நினைக்கிறார்கள். முல்லைக்கு கண்ணகியின் அக தரிசனம் கொடுங்கலூரில் கிடைப்பதோடு முடிவடைகிறது.

முதலில் புரட்சிகர இளைஞன் ஆர்வமுள்ள தமிழ்பெண் அனைத்தும் அறிந்த பேராசிரியர் என அனைவருமே ஒரு வார்ப்புக்குள் நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் பின்னர் அந்த வார்ப்புகளை திருப்தி செய்யும் பணியையே ஒவ்வொருவரும் செய்கின்றர். முற்போக்கு புரட்சி என மரபினை ஆய்வுப் பொருளாக கையாள்கின்றனர். ஆங்கிலக் கலைச் சொற்களைக் கொண்டு அதற்கு தொடர்பே இல்லாதிருந்த ஒரு காலகட்டத்தை புரிந்து கொள்ள நினைக்கின்றனர். தமிழகத்தில் கிடைக்கக்கூடிய கற்கள் குறித்த "விழிப்புணர்வை" இப்படைப்பு உருவாக்குமேயன்றி வாசகன் உணர்வுரீதியாக வளர்த்தெடுத்துக் கொள்ளவதற்கான இடைவெளியை இப்படைப்பு உருவாக்கவே இல்லை.

(நன்றி: சுரேஷ் பிரதீப்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp