இதயதெய்வம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், டாக்டர்… என்றெல்லாம் மக்களால் கொண்டாடப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் இதற்கெல்லாம் தகுதியுடையவர்தானா? இல்லை என்கிறது பிம்பச்சிறை. திராவிட இயக்க வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய, ‘Iamge Trap’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம்.
தமிழக அரசும், எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க.வும் அவரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் குதூகலித்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்த நூலை படிப்பது நிச்சயம் ஒரு நகைமுரண்தான். வாரி வழங்கும் வள்ளலாக, ஏழைகளின் தோழனாக, பெண்களின் காவலனாக என எல்லா வகையிலும் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் அனைத்துமே போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலின் ஆசிரியர்.
‘ஏழைகளின் தோழன்’ எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், ஏழைகளின் நிலை எப்படி இருந்தது, ஏழைகள் எப்படி நடத்தப்பட்டார்கள், நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகளுக்கு எம்.ஜி.ஆரின் பதில் என்ன, வாழும் கடவுளாக சித்தரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் வரலாறு எப்படி கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டுபோய் சேர்ந்தது போன்ற விவரங்களை, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் இருந்தே புரியவைக்கிறது இந்தப் புத்தகம். தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் செல்ல காரணமாக இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் ‘அந்த’ ஒரு உதவி, அந்த பிம்பம் ஆண்டாண்டு காலம் நிலைக்க காரணமாக இருந்த தி.மு.க.வின் பிரசாரம் ஆகிய இரண்டுமே சுவாரஸ்யமான வரலாற்று முரண்.
சினிமாவிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி; இரண்டிலுமே எவ்வித புரட்சியையும்…ஏன்… அதற்கான முயற்சிகளைக்கூட செய்யாத எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் எனப் பட்டம்கொடுத்து மெச்சியதுதான் நம் சமூகத்தின் தோல்வி. இதனைத் திட்டமிட்டுக் கச்சிதமாக செய்ததுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி. எம்.ஜி.ஆரின் தலைப்பாகையில் இருந்து ‘தவவாழ்வு’ வரை, எதுவுமே அவரின் கட்டுப்பாட்டை மீறி நடந்ததில்லை. எம்.ஜி.ஆரின் சாகசக்கதைகளை மக்களிடம் கொண்டுசேர்த்த மலிவுவிலை சுயசரிதைகள், எளிய மக்கள் வாழ ஆசைப்பட்ட கனவுலகைத் தாங்கிவந்த திரைப்படங்கள், எம்.ஜி.ஆரை மக்கள் நாயகனாகிய சினிமா பாடல்கள் போன்ற அனைத்துமே யதேச்சையாக நடந்தவை அல்ல என்பதனை புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உறுதிப்படுத்துகிறார் பாண்டியன்.
உதாரணமாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். இருவர் படத்தில் மோகன்லாலின் முதல் மனைவியான புஷ்பாவும், அடுத்துவரும் கல்பனாவும் (ஐஸ்வர்யா ராய்) ஒரே முகச்சாயலில் இருப்பார்கள். கல்பனா, புஷ்பாவின் முகச்சாயலில் இருப்பதாலேயே, அவர்மீது மோகன்லால் காதல்வயப்பட்டதாகக் காட்டப்படும். எம்.ஜி.ஆரின் நிஜவாழ்வில் இருந்தே எடுக்கப்பட்டது.
திரையில் பெண்களின் காவலனாக வரும் எம்.ஜி.ஆர், அன்றைய சமூகம் பெண்களின் மீது விதித்திருந்த எல்லா கட்டுப்பாடுகளையும் சினிமாவில் காட்சிப்படுத்தினார். நகரத்து பெண்கள் கணவனுக்கு கீழ்ப்படிய மாட்டார்கள், புடவையில் வரும் பெண்கள் மட்டுமே குடும்பப்பாங்கானவர்கள், கணவனின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனைவி மட்டுமே மதிக்கப்படுபவள் போன்ற எல்லா கோட்பாடுகளும் அவரின் திரைப்படங்களில் தொடர்ந்து காட்டப்பட்டன. இப்படி பெண்களின் காவலனாக, நியாயவானாக இருக்கும் எம்.ஜி.ஆர் எப்படி முதல்மனைவி உயிரோடு இருக்கும்போதே, இன்னொரு பெண்ணை திருமணம் செய்வார்? மணந்தால் மகராசன் மதிப்பு என்னாவது?
இதற்காகத்தான் ரத்தத்தின் ரத்தங்கள் இன்னொரு ரூட் பிடிக்கின்றனர். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் பெரும்பாலான புத்தகங்களில் ஜானகியை அவர் மணமுடித்த செய்தியே இடம்பெற்றிருக்காது. கதையின் போக்கில் எம்.ஜி.ஆரின் மனைவியாக ஜானகி இருப்பாரே தவிர, முதல் மனைவி இருக்கும்போதே ஜானகியுடன் எம்.ஜி.ஆர் இணைந்துவாழ்ந்தார் என்ற செய்தியே இருக்காது. இது சிலரின் வேலை. இன்னும் சிலரோ இன்னும் ஒருபடி மேலே போய், ஒரு கதையை ஜோடித்தனர். அது இதுதான்.
“எம்.ஜி.ஆர். மந்திரிகுமாரி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும்போது, தன் மனைவியின் முகசாயலை ஒத்த ஒருபெண்ணை, செய்தித்தாளில் காண்கிறார். அதிர்ஷ்டவசமாக அவருடன் படத்திலும் நடிக்கிறார். முதல் மனைவியின் சாயலிலேயே அந்தப் பெண் இருப்பதால்தான் எம்.ஜி.ஆர். அந்தப் பெண்ணை விரும்பினார். பின்னர் திருமணமும் செய்துகொண்டார்.”
தன்னுடைய பிம்பம் சிதையாமல் இருக்க, எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்கள் கட்டமைத்த பிம்பம் இது. கொடுத்தே சிவந்த கரங்கள் என வள்ளலாக காட்டிக்கொண்டது, அரசின் சத்துணவுத் திட்டத்தை தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து செய்வது போலவே உருவகப்படுத்தியது, நிர்வாகத்தின் மீது சீர்கேடுகளுக்கு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிமன்றங்களைக் குற்றம் சாட்டியது, தன் தொப்பியின் மீது கைவைத்த தொண்டரை அறைந்தது என ஏகப்பட்ட அலப்பறைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்தபோது இந்த ‘நல்லவர்’ பிம்பத்தைக் கட்டமைக்க தி.மு.க தலைவர்களே உதவினார்கள். பின்பு அவர் தனிக்கட்சி தொடங்கியதும், அதனை நடிகர் கட்சி என்றார்கள்; அவர் நடிக்கிறார் என்றார்கள்; அவரின் சாகசங்கள் அனைத்தும் நாடகங்கள் என்றார்கள்; ஆனால் இந்த முயற்சிகள் எதுவுமே அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. அந்தளவிற்கு மக்கள் மத்தியில் ‘மாசற்ற மாணிக்கமாக’ நடித்திருக்கிறார் வாத்தியார். புனிதனாகவே வாழ்ந்துமறைந்த எம்.ஜி.ஆரின் பிம்பத்தை இப்படி சுக்குநூறாக உடைப்பது என்பது வரலாற்றுக்கு நாம் செய்யும் நியாயம் மட்டுமல்ல; வரலாற்றை இனி படிப்பவர்களுக்கு நாம் செய்யும் உதவியும்கூட.
மொழியாக்கம் செய்வதற்கு பூ.கொ.சரவணன் தேர்ந்தெடுத்த நூல், மொழியாக்கம் செய்தவிதம், இரண்டுமே அருமை. இறுதியாக எம்.ஜி.ஆரின் வார்த்தைகளுடனேயே இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். புத்தகத்தின் ஜீவனே இதுதான்.
“நீங்கள் நல்லவராக இருக்கலாம்; ஆனால், அதைவிட முக்கியம் நீங்கள் நல்லவர் என்ற பிம்பத்தை உருவாக்குவது. நீங்கள் உயர்ந்த இடங்களுக்குச் செல்லும்போது, உங்களைவிடவும் உங்கள் பிம்பமே முன்னால் வந்துநிற்கும்.”
(நன்றி: சூலூர் சுதாகர்)