இந்தியாவின் அண்டை நாடாகவும், தமிழகத்தோடு மிக அதிகமான நெருக்கம் உடைய நாடாகவும் திகழும் இலங்கையில் 1976க்கும் முன்பே துவங்கியது தமிழர்கள் – சிங்களர்கள் ஆகியோருக்கு இடையேயான இனப்போர். 1983இல் துவங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையின் இனப்போரினை, ஆயுதப் போராட்டத்தினைக் குறித்த தன்னுடைய கருத்துகளையும், அனுபவங்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். 12.04.2008இல் தொடங்கிய எஸ்.மகாதேவன் மற்றும் சிஸில் க்ளாரன்ஸ் என்னும் இரு ஊடகவியலாளர்களின் இலங்கை நோக்கிய பயணம் 26.04.2008 அன்று முடிவடைகிறது. இக்கால அளவில் அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களை ஒரு சில புனைவுகளோடு இந்நூலாசிரியர் விவரித்துள்ளார்.
“இலங்கையில் நடக்கும் சண்டையில் உயிர்ப்பயத்துடன் தப்பியவர்களில் பாதிப் பகுதியினர்கூட இந்தியக் கடலோரப் பகுதிகளுக்கு வந்து சேருவதில்லை. இவர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள்? என்னவாகிறார்கள்? இந்த ரகசியத்தையும் உயிர்ப்பிழைத்தோடலின் உறைவிடத்தையும் தேடிப் புனைவிற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான மெல்லிய வரம்புகளினூடேயான ஒரு பயணம்தான் இந்தக் குறுநாவல்” (முன் அட்டை) என்று இந்நூல் பற்றிய அறிமுகத்தினைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். ‘வரலாறு என்னும் இரு வழிப்பாதை’ என்னும் தலைப்பில் சா. அனுஷ், கே.சி. நசீர் என்னும் இருவர் எழுதிய பதிப்புரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில், தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இடங்களுக்குச் சுயாட்சி வேண்டும் என்ற கோரிக்கையுடன் எல்.டி.டி.ஈ (Liberation Tigers of Tamil Elam – தமிழீழ விடுதலைப் புலிகள்)யினர்க்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட போரினால், மக்கள் சந்திக்க நேரிட்ட துயரங்களையும், இழப்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்குறுநாவல்.
தங்களையும், தங்கள் இனத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகக் குறைந்த விலைக்கு உடைமைகளை விற்று, இரவோடு இரவாகப் படகேறி இந்தியாவிற்குச் செல்ல முயற்சிக்கும் மக்களை அப்படகிலேயே வைத்துத் தீக்கிரையாக்குவதையும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதையும், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத மக்களின் அவலநிலையையும், இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரினைத் தங்களுக்குச் சாதகமாக்கி, அதைக்கொண்டு அரசியல் நடத்தும் ஒருசில மனிதர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது இந்நாவல்.
எந்தச் சமூகத்தைச் சார்ந்த மக்களாக இருப்பினும், பிற சமூகத்தை அடிமைப்படுத்துவதற்காகவோ, தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காகவோ ஆயுதத்தைக் கைகளில் ஏந்திக் கொள்ளும்போது, அவர்கள் தங்கள் தலைமுறைக்கான அழிவுப்பாதையைத்தான் வகுத்துக் கொள்கிறார்கள் என்பது அன்று முதல் இன்றுவரை வரலாற்று நிகழ்வுகளினூடேயாக நாம் காணும் உண்மை. பிறரை அழிப்பதற்காகத் தங்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றிக்கொள்ளும் மனிதர்கள்; தன்னுடைய காதலிக்கு எந்தத் துன்பமும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன்னுடைய மூன்று சகோதரிகளை இழப்பதற்குத் தயாராகும் சகோதரன்; பிஞ்சு உடல்களைக்கூட விட்டுவைக்காத மனிதமிருகங்கள்; குண்டுமழையில் கருகிப்போகும் ஆயிரக்கணக்கான உயிர்கள் ஆகிய இவைதான் இந்நாவல் முழுக்க நிறைந்து காணப்படும் நிகழ்வுகள். இவற்றை வைத்துப் பார்க்கும்போது, “இன்று மிகப்பெரிய பின்னடைவையும், இழப்பையும் எதிர்கொண்டிருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பு அல்ல, அங்குள்ள மக்கள்தான்” (பக்.5-6) எனக் கூறுகிறது இந்த நாவல்.
இலங்கையில் நடக்கும் இனப்போர் குறித்த தமிழ் மக்களின் பார்வையிலிருந்து, வேறுபட்டக் கண்ணோட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் இப்பிரச்சினையைக் காண்கிறார்கள் என்பதை நாவலாசிரியராகவும், மலையாளப் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றிய இந்நூலாசிரியரின் இந்நாவலின்வழி அறிந்து கொள்ளலாம். 1983இல்தான் இவ்வினப்போர் இலங்கையில் தொடங்கியதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே (அதாவது 1970களில்) இப்பிரச்சினை தொடங்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தோமேயானால், நாவல் முழுக்க ஆசிரியரின் அரசுச் சார்பு மனோபாவத்தைக் காண முடிகிறது. ஏறக்குறைய 1948முதல் முப்பது ஆண்டுகள் அஹிம்சை முறையிலும் அதன்பின்பு 1983முதல் ஆயுதம் ஏந்திய வன்முறைப் போராகவும் தொடர்ந்து நடந்து வந்த ஈழப் போராட்டத்தில் சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லமுடியாத கொடுமைகளை இந்தக் குறுநாவல் எந்த ஒரு இடத்திலும் கோடிட்டுக்கூடக் காட்டவில்லை என்பதுதான் இந்நாவலில் காணப்படும் பெரும் குறை.