புனத்தில் குஞ்ஞப்துல்லாவின், மத்திய மற்றும் மாநில சாகித்ய அகாதமி விருது பெற்ற “ஸ்மாரக சிலகள்” என்னும் நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பு ஆசிரியரின் முதல் மொழிபெயர்ப்பு நாவல் ஆகும்.
“ஊரில் காலரா பரவியபோது புதியதாகக் கட்டியிருந்த கல்லறைகளை இடித்துத் தோண்டி அதற்குள் உயிரோடும் உயிரற்றதுமான உடல்களைப் புதைத்து மூடிய பள்ளிவாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை” (ப.1) என்று மூலநூலாசிரியரும், “மீஸான் கற்களின் ஜீவன் மனிதர்கள்தான். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவற்றையும் அற்புத ஒளி பகரும் கதாப்பாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல்” (பின் அட்டை) என்று மொழிபெயர்ப்பு ஆசிரியரும் இந்நூலைப் பற்றிய அறிமுகத்தைத் தருகின்றனர். இந்நாவலில், கதைநிகழ்வுகளை மையமாகக் கொண்டு வரையப்பட்ட ‘வாசுதேவன் நம்பூதிரி’யின் கோட்டோவியங்களும், பின்னிணைப்பில், ‘நாவலில் இடம்பெற்றிருக்கும் சில வழக்குச் சொற்கள்’ என்ற தலைப்பில் இந்நாவலில் பயின்று வந்துள்ள சில வழக்குச் சொற்களுக்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த ஆண்களின் மனநிலை, பெண்களின் வாழ்க்கை நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே இந்நாவலாகும். சமூகத்தின் பல்வேறு வாழ்க்கை நிலைகளில்/சூழல்களில் வாழும் ஆண்களின் மனநிலையை ஒருங்கே காட்டுகிறார் ஆசிரியர். மனிதனை விலங்குகளுக்குச் சமமாக நடத்துகின்ற அதிகாரவர்க்கத்தினரிடையே ஒரு குதிரையின் உணர்வுகளைக்கூட புரிந்து கொள்ளும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதும் இங்கே காட்டப்படுகின்றது.
சமூகத்தில் தன்னை மிகவும் உயர்ந்தவனாக/முதன்மையானவனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு மனிதன் (‘தங்ஙள்’) பிற மனிதர்களிடம் சில நேரங்களில் கருணையுடன் நடந்து கொள்வதாகத் தோன்றினும் மறைமுகமாகத் தான் செய்யும் எந்த ஒரு செயலுக்குப் பின்னாலும் தனது ஆசையையும், அதிகாரத்தையும் நிலைநாட்டுபவனாகவே காணப்படுகிறான். தன்னுடைய இல்லத்தில் வேலை செய்யும் பெண்களைத் தன்னுடைய அடிமைகளாகவே நடத்துகிறான். பிறர் செய்யும் தவறுகளுக்கு அவர்களைத் தண்டிக்கும்போதும் தானும் அதே தவற்றைச் செய்கிறான். பணவசதி படைத்த மனிதன் செய்வது தவறில்லை என்பதும் ஏழையால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் தவறாகவே தெரிவதும், அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் நிலவும் சமூக நிலைமைகளாக இருக்கின்றன.
பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமைகளாகவே எல்லாக் காலங்களிலும் நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தில் பெண்களின் நிலை மிகவும் தாழ்ந்து காணப்பட்டது. அவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. வீட்டின் முன்புறம் வருவதோ, ஆண்களோடு பேசுவதோ தவறு என்பது அக்காலத்தில் எழுதப்படாத சட்டமாக இருந்து வந்தது. ஆண்கள் தங்களின் விருப்பத்தையே பெண்களின் மீது திணித்துக் கொண்டிருந்தார்கள். ‘சமையலறையில் வேலைக்காரப் பெண்கள் கோழி கூவுவதற்கு முன் எழுந்து நடுச்சாமம் வரை வேலை செய்வார்கள். இப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் என்பது கூட வெளியே தெரியாது. வேலைக்காரர்களாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் அடிமைகள்தான். பூக்கோயா தங்ஙள் விரும்பினால் எந்தப் பெண்ணையும் அவர் வீட்டில் வேலைக்காரியாகச் சேர்த்துக் கொள்ளலாம்’ (ப.108) என்பதும் “இது கூடாது. நீங்க ஒண்ணும் சின்னக் குழந்தைகளில்லை. வளர்ந்த பீவிகள் ஆண்களோட பக்கத்திலே உட்காரக் கூடாது” (ப.262) என்பதும் ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடுகள். பெண்கள் எங்கு உட்கார வேண்டும், எப்படி உட்கார வேண்டும் என்பதும் கூட ஆண்களாலே தீர்மானிக்கப்பட்டன.
ஐந்தாம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் படிக்கக் கூடாது என்பதற்காக அக்குழந்தைகளின் பள்ளிக்கூட ஆசிரியர்களே அவர்களைத் தோல்வியடையச் செய்வது (ப.226) என்பதும் படித்தவர்கள் கூட பெண்களுக்குக் கல்வி அளிப்பதை மறுத்தார்கள் என்பதும் ஆண்களின் மனநிலையை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
பணத்திற்காகவும், பதவிக்காகவும் பெண்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கையை/கனவுகளை எங்கோ ஓர் இடத்தில் அஸ்தமிக்கச் செய்கின்ற சமூகத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் உடைத்து வெளியே வருகின்ற பூக்குஞ்ஞி பீவி முஸ்லீம் சமூகத்தின் ஒரு புரட்சிப் பெண்ணாகவே காட்சி அளிக்கிறார்.
பள்ளிவாசலையும், அதன் சுற்றுப்பகுதிகளையும் மையப்படுத்தி இந்நாவல் எழுதப்பட்டிருப்பினும் முஸ்லீம் சமுதாயத்தின் அக்காலச் சமூகச் சூழலையும், பழக்கவழக்கங்களையும், மூடநம்பிக்கைகளையும், அடிமைத்தனத்தையும் எழுத்துகளின் வழியாக வெளிக்கொண்டு வந்துள்ளார் ஆசிரியர். முஸ்லீம் சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த இந்நாவல் விருதுகளுக்குத் தகுதியானதே.