‘மீண்டும் ஆரியரைத் தேடி‘ புத்தக வெளியீட்டு விழா:
‘திராவிட, ஆரிய வரலாறுகளை நிரூபிக்க, போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை’ என, நுால் வெளியீட்டு விழாவில், தமிழ் அறிஞர்கள் கூறினர். சமூக இயங்கியல் ஆய்வு மையம் சார்பில், த. தங்கவேல் எழுதிய, ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்ற நுால், சென்னை நிருபர்கள் சங்க அரங்கில், நேற்று முன்தினம் 23-09-2015 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் நுாலை வெளியிட்டார். ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்[1]. எழுத்தாளர் இனம்-மொழி இரட்டைக் குழப்பத்திலிருந்து மீளவில்லை என்று தெரிகிறது. மொழி வேறு, இனம் வேறு என்பதைப் புரிந்து கொண்டால் தான், தமிழர்கள் ஆரிய-திராவிட மாயைகள், கட்டுக்கதைகள், புராணங்கள் இவற்றிலிருந்து விடுபட முடியும்.
ஆதாரங்கள் இல்லை : விழாவில், தமிழறிஞர்கள் பேசியதாவது[2]: இந்தியாவின் இன, பண்பாட்டு வரலாற்றை பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள், அவர்களின் பார்வைக்கேற்ப, இந்து, முஸ்லிம், பிரிட்டிஷ் நாகரிக வரலாறாக பிரித்து எழுதினர்[3]. அதில், இந்தியாவில், ஆரிய, திராவிட இனங்கள் இருந்தன; ஆரியர்கள், மத்திய ஆசியாவில் இருந்து வந்து, திராவிட நாகரிகத்தை அழித்து, தங்கள் நாகரிகத்தை பரப்பினர்; வேளாண்மை உள்ளிட்ட நாகரிகங்களை அவர்களே கற்பித்தனர் என, சொல்லி இருக்கின்றனர். ஆரியர்கள் என்போர், இந்தோ ஐரோப்பிய கூட்டு மொழிகளை பேசுவோர், உயரமாக வெள்ளை தோல் கொண்டோர் என்றும் கூறினர். குறிப்பாக, ஆரியர்கள், இந்து மதத்தின் வேதங்களை தோற்றுவித்தவர்கள் என்றும், அதன்படி வாழ்க்கை அமைத்துக்கொண்டவர்கள் என்றும் கூறினர். வேதங்களை தற்போதும் பயின்று வரும் பிராமணர்களே, ஆரியர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், வேதங்களில் கூறப்படும் காலக்கட்டத்தில், இரும்பு, செம்பு உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களோ, மற்ற அறிவியல் கூறுகளோ, இதுவரை கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர், ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை[4]. மொழி பரவக்கூடியதாகவும், இனங்களில் கலக்க கூடியதாகவும் உள்ளது. வடஇந்திய தொல் குடிகள், தென் இந்திய தொல் குடிகள் என்ற இனங்கள் இருந்திருக்க வேண்டும் என, கூறுகின்றனர்[5]. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை. அடுத்தகட்ட ஆய்வுகள், மானுடவியல், தொல்லியல், அறிவியல், மரபியல் சார்ந்து செய்ய வேண்டி உள்ளது.
தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தெளிவாக வெளியிட பயப்படுகின்றனர். வெவ்வேறு நாகரிகங்கள் கொண்ட, எகிப்து, இஸ்ரேல், மெசபடோமியா, இந்தியா உள்ளிட்ட இடங்களில், ஒரே மாதிரியான கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி, புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இந்திய வரலாற்றை பற்றி, இன்னும் பாகிஸ்தானில் உள்ள ஹரப்பாவை, உதாரணமாக சொல்லும் நம் ஆய்வாளர்கள், தற்போது வரை, தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தெளிவாக வெளியிட பயப்படுகின்றனர். இனக்கூறின் அடிப்படையில், ஆரிய, திராவிட நாகரிகம் குறித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பும், ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்ற நுால், ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகள் என்ன என்பதனையே அவர்கள் குறிப்பிடவில்லை. அவற்றின் முடிவுகளை தெளிவாக வெளியிட வேண்டும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அப்படியென்றால், தெளிவாக இல்லாமல் என்ன இருக்கிறது. செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தாராளாமாக வெளியிடலாமே, இதிலென்ன பயம் இருக்கிறது? இப்பொழுது இவர் ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்று வெளியிட்டிருக்கிறாரே!!
ஓய்வு பெற்ற பிறகு மாற்றுக் கருத்துகளை வெளியிட இவர்கள் முன்வந்திருப்பது ஏன்?: விழாவில், தொல்லியல் அறிஞர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ர. பூங்குன்றன், இந்திய அரசு தொல்லியல் துறை, துணை கண்காணிப்பு கல்வெட்டு ஆய்வாளர் க.கருப்பையா, இந்திய அரசு தொல்லியல் துறை தென்மண்டல, துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் க.மூர்த்தீஸ்வரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படி ஓய்வு பெற்ற விற்பன்னர்கள், திடீரென்று மாற்றுக்கருத்துகளை சொல்லுவது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது. பிஜேபி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் இப்படி திடீர் என்று, சில கோஷ்டிகள் கிளம்புகின்றன. அவை இந்துத்துவா சித்தாந்தத்திற்கு துணை போவது போலக் காட்டிக் கொள்கின்றன. ஆனால், ஆட்சி மாறியதும், மறுபடியும், அத்தகையோர் மாறிவிடுகின்றனர். திராவிட சித்தாந்தத்திலிருந்து அவர்களால் விடுபட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள், இருப்பினும் சபலம் இருக்கத்தான் செய்கிறது.
ரோமிலா தாபர்[6], ஆர். எஸ். சர்மா[7] போன்றோர் ஆரியர்களைப் பற்றி தங்களது கருத்துகளை மாற்றிக் கொண்டுள்ளது: ரோமிலா தாபர், ஆர். எஸ். சர்மா போன்ற சரித்திராசிரியர்கள் ஆரியர்களைப் பற்றி தங்களது கருத்துகளை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அதாவது இனரீதியில் ஆரியர்கள், ஆனால், அம்மொழி பேசுபவர்கள் இருந்துள்ளார்கள், என்ற அளவிற்கு கருத்து மாறியிருக்கிறது. எம். ஜி. எஸ். நாராயணன் போன்றோர் ஆரியர் என்ற இனமே இல்லை என்ற அளவுக்கு பேச ஆரம்பித்துள்ளார். ஒருதடவை அவர் அவ்வாறு தனது கருத்தை சென்னையில் நடந்த தமிழக வரலாற்றுப் பேரவை மாநாட்டில் பேச, உடனே பி. ஜகதீசன் என்ற அந்த அமைப்பின் தலைவர், அதனை மறுத்து பேசினார். திருச்சியிலும் ஐராவதம் மஹாதேவவன் ஆரியர் / திராவிடர் இனமல்ல! தன்னுடைய பேச்சை முடித்தப் பிறகு, ஆராய்ச்சியாளடர்கள் “ஆரியர்” மற்றும் “திராவிடர்” என்ற இனவாதச் சர்ச்சைப் பிடிகளுக்குள் சிக்கிவிடாமல், மொழிரீதியிலான அலசல்களுக்கு மட்டும் உட்பட வேண்டும் என்று எச்சரித்தார்[8]. ஆனால், பி. ஜகதீஸனோ சிந்துகுறியீடுகள் தமிழ்தான் என்று மஹாதேவன் முடிவு செய்து விட்டார் என்று அறிவித்து விட்டார். அதுமட்டுமல்ல, இப்பொழுது, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாட்டில், இவ்வாறு இவர் பேசுவதும், அதற்கு பி. ஜகதீஸன் போன்றோர் ஆமாம் போடுவதும் வேடிக்கையாக உள்ளது[9]. திராவிடர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய நாகரிகம், கலாச்சாரம், என்று தனியாக இருக்கிறது…..என்றெல்லாம் பேசியபோது, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், அவர்கள் திராவிடர்கள் உள்ளார்கள் என்று தான் நம்புகிறார்கள். திராவிடர்கள் இருக்க வேண்டுமானால், ஆரியர்களும் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்பொழுதுதான், இரு இனங்களுக்கிடையில் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும். திராவிட கழகம், பெரியார் திராவிட கழகம், பெரியார் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், போன்றவை மேடைகளில் பேசிக்கொண்டே இருக்க முடியும். அரசில் நடத்த முடியும்.
அத்தகைய போலி சித்தாந்தங்களை நம்புகிறவர்கள் தமிழகத்தில் தான் இன்னும், இன்றும் இருக்கிறார்கள்: ‘திராவிட, ஆரிய வரலாறுகளை நிரூபிக்க, போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை’ என்று நூலாசிரியர் சொல்வதே வேடிக்கையான விசயம். ஏனெனில், இனவாத சித்தாந்தமே போலித்தனமான-விஞ்ஞான முறையில் தான் உருவாக்கப்பட்டது என்பது தெரிந்த விசயமாக இருக்கிறது. அதனால் தான் 1950களிலேயே, இனம் என்ற வார்த்தை பிரயோகம் இருக்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சங்கம் முடிவெடித்து, அறிவித்தது. போஇலி-விஞ்ஞானத்தினால் உருவாகிய இனவெறி சித்தாந்தத்தினால், இரண்டு உலக யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால், கோடிக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், வீடுகளை-உடமைகளை இழந்துள்ளனர்,……ஆனால், அத்தகைய போலி சித்தாந்தங்களை நம்புகிறவர்கள் தமிழகத்தில் தான் இன்னும், இன்றும் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
(நன்றி: வேதபிரகாஷ்)
25-09-2015
[1] தினமலர், திராவிட, ஆரிய வரலாற்றுக்கு அறிவியல் சான்றுகள் இல்லை‘, செப்டம்பர்.25, 2015 21.34.
[2] http://www.dinamalar.com/district_detail.asp?id=1349360
[3] சுதந்திரம் பெற்றபிறகு என் அத்தகைய பிரிப்பு முதலியவை மாற்றப்படவில்லை? அப்படியென்றால் அன்றிலிருந்து ஆதிக்கத்தில் உள்ள சரித்திராசிரியர்கள், அதனை ஏற்றுக்கொண்டே அவ்வாறு செய்தார் என்றாகிறது.
[4] இச்சித்தாந்தத்தையும் தமிழாரிசியர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
[5] இனரீதியில் மக்களைப் பிரிக்க வேண்டும் என்பவர்கள் தொல்குடிகளையும் பிரிக்கத்தான் செய்வார்கள். அதனை திசைக்கு என்று பிரித்தாலும், உடல் நிறம் மூலத்தாலு ஒன்றுதான்.
[6] Romila Thapar, Which of us are Aryans?, Seminar, New Delhi.
[7] R. S. Sarma, In search of Aryans, Orient Longman Publications, Hyderabad, 2001.
[8] திராவிட அழக வீரமணியும் விடவில்லை, விடுதலையில் விளாசித் தள்ளிவிட்டார் – ஆரியரும் திராவிடரும் வெவ்-வேறு இன மரபுகளைச் சேர்ந்-தவர்கள். வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆரியர் வாழ்வியல் முறை வேறு; திராவிடர் வாழ்வியல் முறை வேறு; ஆரியக் கலாச்-சாரம் வேறு; திராவிடப் பண்பாடு வேறு; இவை இரண்டும் எதிர் எதிர் நிலையில் நிற்பவை. எக்காலத்தும் இவை இரண்டும் ஒன்று கலப்பதற்கு வாய்ப்பே இல்லை!