ஆரியர் யார்? எங்கிருந்து வந்தனர்? வந்தனரா? இல்லை சென்றனரா? என்ற விவாதம் பலகாலமாக நடைபெற்று வருகின்றது. இந்த வினாக்கள் திராவிடர் பற்றியும் எழுப்பப்பட்டவைதான். மீண்டும் மீண்டும் எழுப்பப்படுபவைதான். சமீபகாலத்தில் இந்தப் பிரிவினையே தவறாக்கும் என்று சில விவாதங்கள் முளைத்துள்ளன. சரி, ‘எல்லோரும் சகோதரர்கள்; குலத்தில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்ற நோக்கில் வந்துள்ளது; நல்லதுதானே என்கிறீர்களா. அப்படியல்ல அவ்வளவு எளிதாக அதெல்லாம் நடந்துவிடுமா? அது இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்களையும், தந்தைப் பெரியாரையும் குறிவைத்து வந்ததுதான். யார் எங்கிருந்து வந்திருந்தாலும் சமத்துவத்தின் அடிப்படையில் ஜனநாயக முறைப்பாட்டில் வாழ்ந்தால் சரிதான். ஆனால் நமது ஒற்றுமைக்காக நான் சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்; உன் தலைவர்கள் எல்லோரும் மூடர், அயோக்கியர் என ஏற்றுக்கொள்; நாம் அனைவரும் சமத்தாக ஒற்றுமையாக சாதிய வர்க்கச் சமூகத் தட்டுகளில் அவரவர் இருக்கும் இடத்தில் அமைதியாக இருப்போம் என்றால் அது நடக்கப்போவதில்லை.
யார் எங்கிருந்து வந்தார்கள்? வரலாறு என்ன? என்ற உண்மை தெரிந்துகொள்ளப்பட வேண்டும். அந்த வினாக்கள் எந்த காரணம் கொண்டும் இல்லாது போய்விடப்போவதில்லை. வளர்ந்து வரும் மானுட அறிவுப்புலங்கள் இந்த வினாக்களை, மற்ற எல்லா வினாக்களையும் போல முன்னெப்போதும் இருந்ததைக் காட்டிலும் தெளிவாக பதிலளிப்பவையாகவே இருக்கின்றன. பெர்டோல்ட் பிரக்ட் சொல்லியதுபோல அறிவியல் என்பது அளவற்ற ஞானத்திற்கான கதவைத் திறந்து விடுவது இல்லை; அது அளவற்ற மூடத்தனத்திற்கு வரம்பிடுகின்றது. இன்னும் அறிந்துகொள்ளப்பட வேண்டியை ஏராளமாக உள்ளன. ஏராளமாக உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளவே அறிவியல் தேவைப்படுகின்றது. நவீன தொல்பொருளாய்வுகள், மொழியியல் ஆய்வுகள் ஆகியவற்றோடு மரபணு ஆய்வுகளும் மானுட வரலாற்றையும் பரிணாமத்தின் வரலாற்றையும் தெளிவாக்குகின்றது. மற்ற அறிவுப்புலங்களை தேவையற்றதாக்கிவிட்டது என்பதல்ல. அவை கூற முடியாத பல உண்மைகளை அவை அளிக்க முடியாத வெளிசங்களை மரபணுவியல் அளிக்கின்றது. இப்போதும் முழு உண்மை என்பதை அல்லது அதை நெருங்கிய ஒன்றை எல்லா அறிவியல் புலங்களும் இணைந்துகாட்டும் ஒரு சித்திரத்தின் மூலம்தான் பெறமுடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் மேலே சொன்ன ஆரியர் யார்? அவர்கள் எங்கிருந்து இந்தியாவிற்கு வந்தார்கள் எனும் வினாவிற்கு மரபணு சில விளக்கங்களை அளிக்கின்றது. முழுமையான கருத்தொற்றுமை இல்லையென்றாலும் சில அம்சங்களில் கருத்தொற்றுமை உள்ளது; சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவை தமிழில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. இந்த வினாக்களையும் அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்களையும் அதனை ஒட்டிய செய்திகளையும் குறித்து விவாதிக்கும் நூல்தான் ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ எனும் இந்த நூல். நூலாசிரியரான த.தங்கவேல் ஒரு பொறியாளர். இந்த விவகாரம் குறித்த ஆர்வத்தினால் மிக நீண்டகாலம் ஆழமான வாசிப்பு, தேடல், விவாதம் ஆகியவற்றில் இருந்துள்ளார் என்பது நூலை லேசாகப் புரட்டினாலே தெரிய வந்துவிடும். விருப்பு வெறுப்பற்று முன் தீர்மானம் இன்றி தன்முன்னால் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக தன் வாதங்களை முன்வைக்க முயன்றுள்ளார். இவற்றுக்காக நாம் அவரைப் பாராட்டுதல் தகும்.
இனி நூலின் உள்ளே செல்வோம். முதலில் நூலில் கடைபிடிக்கப்படும் சில பொதுவான முறைபாடுகள் குறித்துப் பார்க்கலாம். ‘எல்லா உண்மைகளையும் பொதுப்புத்தி (common Sense) கொண்டே அறிந்துகொள்ள முடியும் என்றால் அறிவியல் என்ற ஒரு மானுட அறிவுப்புலமே உருவாகி வளர்ந்திருக்காது. மாமேதைகளான மார்க்ஸ், ஐன்ஸ்டீன் ஆகிய இருவருமே வேறு வேறு சொற்களில் இதனைக் கூறியுள்ளார்கள். பொதுப்புத்தி என்பது தேவையற்ற ஒன்று என்பதல்ல; அது போதாது என்பதே. சிக்கலான, இன்றைக்கும் வளர்ந்து வரக்கூடிய அறிவுப்புலமான மானுட மக்கட்தொகுதி மரபணுவியல் (Population Genetics) என்பதை நாம் பொதுப்புத்தி பொதுவான தர்க்கம் என்பதன் மூலம் எதிர்கொள்வது என்பது அறிவியலுக்கு மாறான அணுகுமுறை ஆகும். அத்தகைய அணுகுமுறைக்கு தங்கவேல் ஆட்பட்டுவிடுவது நடந்துள்ளது. அந்தத் துறையின் வல்லுணர்களின் கருத்துகளை எடுத்துக் கூறுவதும் அதில் வல்லுணர்களிடையே முரண்பட்ட கருத்துகள் இருந்தால் அதனை வெளிச்சமிட்டு காட்டுவதும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத சந்தேகங்களை பகிர்ந்து கொள்வதும்தான் நம்மைப் போன்ற ஆர்வமுள்ள ஆனால் அந்தத் துறையில் முறையான கல்வியும் பயிற்சியும் இல்லாத ஒருவருக்கு இருக்கும் வரம்பாக இருக்க முடியும் அது அங்காங்கே மீறப்பட்டு ஸ்பென்ஸர் வெல்ஸ் போன்றோரின் கருத்துகள் மீது அவர்களது துறை சார்ந்த விசயங்களில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அத்தோடு அப்படி முரண்படும்போது அவரை திடீரென்று ’ஐரோப்பிய அறிஞர்’ என்பதும் ஏற்புடையது அல்ல. அவர் ஐரோப்பியர் அல்ல என்பது வேறு விசயம். சொல்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் கருத்தில் ஒரு தன்னனலம் சார்ந்த நோக்கம் (Vested Interest) இருப்பதாக சந்தேகம் வந்தால் அதை வெட்டு ஒன்று துண்டு இரண்டென சொல்வதுதான் சரியாக இருக்கும்.
இரண்டாவதாக ‘இனம்’ என்ற பதம். ஆங்கிலத்தில் ரேஸ் – race ஒருகாலத்தில் இது உயிரினம் (Species) என்பதன் ஒரு உட்பிரிவாகக் (Sub Species) கூறப்பட்டது. அத்தகைய வகை பிரிப்பில் எந்தவித அறிவியல் உண்மையுமில்லை என்று ஆகிவிட்டது. மரபணு குறித்த ஆங்கில இலக்கியங்களில் ’பாப்புலேஷன்’ (Population) என்ற பதம் பயன்படுத்தப் படுகின்றது. தமிழில் ‘மக்கள்தொகுதி’ எனலாம். இனம் என்ற பதத்திற்கு இன்றைக்கு சமூகவியல்ரீதியான பயன்பாடுதான் இருக்க முடியும். தந்தை பெரியார் ‘நான் ஆரியர், திராவிடர் எனும் பதங்களை ரத்தப் பரிசோதனை செய்து பயன்படுத்தவில்லை; பொருளாதாராம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பயன்படுத்துகின்றேன். மற்றும் நான் மட்டும் அப்படிப் பயன்படுத்தவில்லை…’ என்று 1936 ஆம் ஆண்டே கூறியதுபோல அல்லது ’தேசிய இனம்’ என லெனின், ஸ்டாலின், புகாரின் பயன்படுத்தியது போல மட்டுமே இன்றையப் பயன்பாடு இருக்கவியலும். அந்தக் கருத்தும் விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் உயிரியல்ரீதியான ‘இனம்’ என்பதற்கு எந்தப் பொருளும் இல்லை என்றானதற்குப் பிறகு நூல் முழுவதும் இனம் எனும் சொல் உயிரியல், மரபணுவியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது சரியல்ல.
இதுபோன்ற ஒரு நூலில் வேறுபல நூல்களில் இருந்தும் ஆய்வறிக்கைகளில் இருந்தும் தரவுகளை எடுத்தியம்புவது (Citation) தவிர்க்கவியலாலது. ஆனால் நூலை பரந்துபட்ட வாசகர்களுக்கு எழுத முயற்சிக்கும்போது இதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நூல் மிகப்பெரிதாக ஆகிவிடும், வாசிப்பு பழக்கம் அதிகம் இல்லாதவர்கள் வாசிக்க இயலாது போன்றவற்றை புரிந்துகொள்ளலாம். ஆனால் பல முக்கியமான செய்திகள் கருத்துகள், ‘அறிஞர்கள் சொல்கின்றார்கள்’, ‘வல்லுணர்கள் கருதுகின்றார்கள்’ என்றரீதியில் எடுத்துக் கூறப்பட்டு விளக்கங்கள் வாராந்தர மாதாந்தர பல்சுவைப் பத்திரிக்கையின் ஒன்னரை பக்க கட்டுரையின் அளவிற்கு காத்திரம் இழந்து விடுகின்றன. அதுவும் ஆசியருக்கு ஏற்புடைய கருத்துகள் மாற்று கருத்துகளே இல்லாது சகலரும் ஏற்றுக் கொண்ட கருத்து என்பது போன்ற மயக்கம் தருவதாகவும் இருக்கின்றது.
இது போல இன்னும் சிலவற்றைக் கூறலாம். அதைவிடுவோம். நூல் கூறும் கருத்துகள் அல்லது முடிவுகள் குறித்துப் பார்ப்போம்.
உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஆப்பிரிக்கவிலிருந்து சுமார் 70,000 ஆண்டுகள் முன்பு வெளியேறி பரவியவர்கள்தான் எனும் ‘சமீபத்திய ஆப்பிரிக்க மூலம்’ ( Recent African Origin) என்ற கருத்து இன்றைக்கு பெரும்பான்மையான ‘மக்கட்தொகுதி மரபணுவியல்’ வல்லுணர்களால் ஏற்கப்பட்டுள்ளது அந்த அடிப்படையில்தான் நூலின் வாதங்கள் நகர்கின்றன. அது அறிவியல்ரீதியாக சரியானதே. அத்தோடு ஏனைய மொழியியல் மற்றும் தொல்பொருள் அகழ்வாய்வு முடிவுகள் ஆகியவையும் இணைத்துப் பார்க்கப்படுவதும் சரியானதே. ஆனால் அதில் சமீப காலத்தில் பெரிதும் வழக்கொழிந்துபோன உருவவேறுபாட்டு அளவைகள் போன்றவை பயன்படுத்தப்படுவது நெருடலாக இருக்கின்றது. அது ஆசிரியரின் வாதங்களுக்கு வலுவூட்டுவதாகவும் தெரியவில்லை.
மக்கட்தொகுதி மரபணுவியலின் பிதாமகன் என அறியப்படுபவர் இத்தாலிய அமெரிக்கரான லூயி லுக்கா காவேலி ஸ்ஃபோர்ஸா. அவர் மரபணுரீதியான பிரிவுகள் மற்றும் மொழியில் ரீதியான பிரிவுகள் ஆகியவை குறித்து செய்துள்ள ஆய்வுகள்தாம் இந்த ஒன்றின் மேல் ஒன்று தோயும் (Overlapping) புலத்தில் தீர்க்கமானவை. அவரது கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை. இது நவீன இயற்பியலை ஐன்ஸ்டீனின் கருத்துகள் இல்லாமல் அணுகுவது போன்றது.
உலக மானுடப் பரவல் குறித்து Y குரோமோசோமில் உள்ள டி.என்.ஏக்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் (எ.கா : ஸ்பென்ஸர் வெல்ஸ்) போல, மிட்டாகோன்றியா டி.என்.ஏ அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் (எ.கா : பிரயன் சைக்ஸ்) முக்கியமானவை. ஏனென்றால் முன்னது ஆணின் கொடிவழியைக் கூறுகின்றது என்றால் பின்னது பெண்ணின் கொடிவழியைக் கூறுகின்றது. அது பெருமளவுக்கு விடுபட்டுள்ளது. ஆணின் வரலாறு மட்டும் என்றால் அது 50 சதவீத வரலாறுதான். அது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் எனலாம்.
அதுபோல இந்த விவாதம் குறித்து சமீபத்தில் வந்துள்ளதும் பரவலாக விவாதிக்கப் பட்டதுமான இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. இங்கிலாந்திலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற அறிவியல் வாரஏடு நேச்சர் (Nature). இதன் செப்டம்பர் 2009 தேதியிட்ட இதழில் ஒரு முக்கியமான கட்டுரை வந்துள்ளது. ‘இந்திய மக்கட் பரப்பு வரலாற்றின் மரபணு அடிப்படையிலான மறுகட்டமைப்பு’ (Recconstructing Indian Population History) என்பது அதன் தலைப்பு. இந்தியாவில் ஹைதராபாத் நகரிலுள்ள இந்திய மூலக்கூறு உயிரியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த தங்கராஜ், லால்ஜி சிங் என்ற ஆய்வாளர்களும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த டேவிட்ரீச், நிக்பேட்டர்சன், அகிஸ் பிரைஸ் ஆகியோரும் இந்த கட்டுரையின் இணை ஆசிரியர்கள். இந்தியாவின் பல்வேறு இனங்கள், ஜாதிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மக்களின் மரபணு வேறுபாடு என்பது ஆய்வுக் கட்டுரையின் மையம். இது குறித்து வந்த முதல் கட்டுரை இதல்ல. மரபணு அடிப்படையில் சாதி, மொழி, இனம் ஆகியவற்றை இதனைக் காட்டிலும் ஆழமாக கையாண்ட ஆய்வுக் கட்டுரைகள் பல இதற்கு முன்னே வந்துள்ளன. ஆனாலும் இந்தக் கட்டுரை பரவலான கவணத்தை ஈர்ப்பதும், விவாதத்திற்கு உள்ளாவதும் வியப்புக்கு உரியதல்ல.
இதைத் தொடர்ந்து மானுட மரபணுவியலுக்கான அமெரிக்க சஞ்சிகை (The American Journal of Human Genetics) என்ற அறிவியல் ஏட்டின் டிசம்பர் 9, 2011 தேதியிலும் ஒரு முக்கியமான கட்டுரை வந்துள்ளது. தெற்காசியாவில் தேர்வு நடந்ததற்கான சமிக்ஞைகளும் மானுட பரப்புக் கட்டமைப்பின் தனித்துவமானதும் பகிரப்பட்டதுமான கட்டுப்பொருட்கள் ( Shared and Unique Components of Human Population Structure and genome-Wide Signals of Positive Selection in South Asia) எனும் நீண்ட சிக்கலான தலைப்பில் இந்தக் கட்டுரை வந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் மெய்ட் மெட்ஸ்பலு என்ற ஆய்வாளரோடு முந்தைய கட்டுரையின் ஆசிரியர்களான குமாரசாமி தங்கராஜ், லால்ஜிசிங், ஞானேஷ்வர் சௌபே, ராமசாமி பிட்சப்பன் ஆகிய இந்திய ஆய்வாளர்களும் இன்னும் பல சர்வதேச ஆய்வாளர்களும் இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது.
ஆரியர்கள் என யாரும் இந்தியாவிற்குள் வரவில்லை என்ற கருத்தை இவை இரண்டும் ‘சந்தேகத்திற்கிடமின்றி நிறுவிவிட்டன’ என பொதுவான ஊடகங்கள் கூவிக் களித்த கட்டுரைகள் இவை. கட்டுரை ஆசிரியர்கள் கட்டுரையில் அப்படி எதனையும் திட்டவட்டமாகக் கூறவில்லை என்றாலும் இந்தப் பொதுத்தள கருத்துகள் அரசியல் நோக்கத்துடன் சற்றுத் திரிக்கப்பட்டு வந்தபோது தலையிடவும் இல்லை. இன்னும் மோசமாக ஆசிரியர் குழுவில் இருந்த சிலரே அதுபோன்ற திரித்தல் வேலைகளுக்கு ஆதரவாகப் பேசினர். இந்தக் கட்டுரைகள் தங்கவேல் நூலில் கூறும் முன்மொழிதலுக்கு நேர்மாறான கருத்தைக் கூறுகின்றன. அதனை எதிர்கொள்ளாது இது குறித்து எழுதப்படும் நூல் முழுமையானதாக இருக்க முடியாது.
அதனைப் போல இன்றைக்கு முன்வந்திருக்கின்ற பி.எம்.ஏ.சி (BMAC – Bactria–Margiana Archaeological Complex ) என அழைக்கப்படும் முந்தை இந்தோ இரானிய கலாச்சாரத் தளம் குறித்த தொல்பொருள் ஆய்வுகள் – ஜே.பி.மல்லோரி போன்றவர்கள் பிரதிநித்துவம் செய்வது – அந்தப் பகுதியின் மொழி குறித்த ஆய்வுகள் -மைக்கேல் விட்ஸல் பிரதிநிதித்துவம் செய்வது -போன்றவையும் எதிர் கொள்ளப்படவில்லை.
இதுபோன்ற குறைபாடுகள் போதாமைகளையோடு தங்கவேல் ஆரியர்களின் பூர்வீகம் முன்னர் ஸ்பென்ஸர் வெல்ஸ் உள்ளிட்ட “ஐரோப்பிய” ஆய்வாளர்கள் கூறியதுபோல மத்திய ஆசியா அல்ல அவர்கள் இன்றைய துருக்கியின் அனடோலியா பகுதியில் இருந்து வந்தவர்கள் என முன்மொழிகின்றார்.
ஆசிரியர் இந்த விவாகாரம் குறித்து அறிந்துகொள்ள எடுத்துக் கொண்டுள்ள் முயற்சியும் கடின உழைப்பும் மிகவும் அதிகம். அத்தகைய உழைப்பையும் அக்கரையையும் கோரும் ஒரு முக்கியமான வரலாற்று விவாதம்தான். ஆனால் அந்த அக்கரை உழைப்பு ஆகியவற்றில் ஒரு சதவீதத்தையாவது நூலின் உருவாக்கத்தில் அதனை அத்தியாயங்களாகப் பிரிப்பதில், அதன் வடிவமைப்பில் அச்சாக்கத்தில் பிரதியின் செம்மையாக்கத்தில் செலவழித்திருக்கலாம் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
மிக முக்கியமான ஒரு தலைப்பில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டுள்ள நூல். அதன் குறைபாடுகளைத் தாண்டி கனத்த விவாதங்களை துவக்கி வைக்கும் நூல். தமிழில் முன்னுதாரணம் இல்லாமல் ஆழமான அறிவியல் வரலாற்றுக் கூறுகளை எளிய தமிழில் விளக்கும் நூல். அந்த வகையில் இந்திய வரலாற்றை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் இன்றைய சமூக அரசியல் பரப்பில் அறிவியல் அடிப்படை இல்லாமல் மிகக் குறுகிய அரசியல் நோக்குடன் வலம் வரும் கருத்துகளை அடையாளம் காணவும் உதவும் நூல் என்ற வகையிலும் வரவேற்கப்பட வேண்டிய நூல். வாசித்து விவாதிக்கப்பட வேண்டிய நூல்.
(நன்றி: புத்தகம் பேசுது)