மார்க்சிய கலை இலக்கியக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட படைப்பாளி பொன்னீலன். அறுபதுகளின் பிற்பகுதியில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி வாசகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர். தன் படைப்புகளின் விவாதப் பொருளாக சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தொடர்ந்து ஆர்வம்காட்டிவருபவர். கடந்த நூற்றாண்டுகளைப் பற்றிய வரலாற்று நூல்களில் படித்துத் தெரிந்துகொண்ட சாதிமோதல்களைப் பற்றிய செய்திகளையொட்டிய தேடலும் எண்பதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த மண்டைக்காடு வகுப்புக்கலவரத்தை நேருக்குநேர் பார்த்த அனுபவமும் இணைந்து உருவாக்கிய அகநெருக்கடி பொன்னீலனின் நெஞ்சில் மறுபக்கம் நாவலுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது. ஆய்வின் வழியாகத் தனக்குக் கிட்டிய செய்திகளையெல்லாம் சீர்தூக்கிப் பிரச்சினையின் மறு பக்கத்தின்மீது படிந்திருக்கும் இருளை விலக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சும் உழைப்பைப் பொன்னீலன் முழு அளவில் மேற்கொண்டிருக்கிறார். மோதல் அல்லது கலவரம் என்பது ஒரு சமூகத்தில் திட்டமிட்டோ தற்செயலாகவோ நிகழ்வதால் உருவாகும் கறை. அந்தக் கறையின் மறு பக்கத்தில் இயல்பாகவே கலைஞனின் ஆர்வம் குவிகிறது. என்றும் அணையாத நெருப்புப் பந்தத்தை எப்போதும் நெஞ்சிலேயே ஏந்திக்கொண்டிருக்கிற மனத்தின் இயக்கங்களை அறிந்துகொள்ள மேற்கொள்ளும் முயற்சியால்தான் அந்தக் கறையை முழு அளவில் புரிந்துகொள்ள இயலும். நெருப்புப் பந்தம் மானுட வாழ்வுக்குத் துணையா அல்லது அழிவை விளைவிப்பதா? காட்டிலும் மேட்டிலும் கடலோரத்திலும் வாழ்ந்தவர்கள் பந்தத்தை ஏன் உருவாக்கினார்கள்? அதை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டார்கள்? இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகளை நோக்கி அந்தப் புரிதல் நம்மை அழைத்துச் செல்லக்கூடும். பொன்னீலனின் நாவலாக்கத்தில் அத்தகு விருப்பமொன்று இயங்குகிறது.
சேர்ந்து வாழ்வதற்கான ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பிரிந்து வாழத் தேவையான பத்துக் காரணங்களையாவது தேடித் தேடி உருவாக்கிவைக்கிறது மனம். இயல்பான ஒன்றாக, பிரிவுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைச் சமூகம் பழக்கித் தருகிறது. இருப்பவன், இல்லாதவன் என்பது ஒருவகைப் பிரிவுச் சுவர். சாதிகள், மதங்கள் என்பவை அடுத்தடுத்த பிரிவுச் சுவர்கள். இவையனைத்தையும் தாண்டிப் புரிந்துகொள்ள முடியாத கோபங்கள், வெறுப்புகள், பழிவாங்கல்கள், வன்முறைகள் என ஏராளமான சுவர்கள் பயணத்துக்குத் தடையாக நிற்கின்றன. முன்னோக்கி நகர வேண்டிய தேர்ச் சக்கரங்கள் சகதியில் அமிழ்ந்திருக்கின்றன. வாழ்க்கையை ஆயிரம் கூறுகளாகத் துண்டாடிச் சிதைத்துக்கொண்டிருக்கிற இந்தப் பிரிவுகளை அலசி ஆய்வை மேற்கொள்கிற அக்கறை பொன்னீலனிடம் இருக்கிறது. கலவரங்கள் உருவாகத் தூண்டுகோலாக இருந்த காரணங்கள், மக்கள் உணர்வுநிலைகள், அழிவுகள், தீராத பகையுணர்ச்சி, உயிர் பற்றிய அச்சம், தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களைக் காப்பாற்றும் மனிதாபிமான உணர்ச்சி ஆகியவற்றை உணர்த்தும் பொருட்டு ஏராளமான உரையாடல்கள் வெவ்வேறு பின்னணிகளில் வெவ்வேறு பிரிவு மனிதர்களுடன நிகழ்த்தப்படுகின்றன. சற்று அதிகமோ என்று எண்ணவைக்கிற இந்த உரையாடல்கள் கலவரத்தின் ஒரு பக்கத்தை உணர்த்திவிட்டு முற்றுப்பெறுகின்றன.
மறுபக்கம் நாவலில் நான்கு இழைகள் உள்ளன. மண்டைக்காடு வகுப்புக்கலவரத்தின் பின்னணியைப் பற்றிய தகவல்களை ஆய்வுக்காகத் திரட்டும் பொருட்டுத் தஞ்சையிலிருந்து பனைவிளைக்கு வந்திருக்கும் இளைஞன் சேகரிக்கிற செய்திகள் முதல் இழை. அந்த இளைஞனுக்கு உதவும் ஆசிரியர் வெங்கடேசன் பாதுகாத்துவைத்திருக்கிற மூதாதையர் குறிப்பேடுகள் வழியாகக் குமரிமாவட்டத்துக்குக் கிறித்துவம் வந்த வரலாற்றை முன்வைக்கும் செய்திகள் இன்னொரு இழை. அழகின் காரணமாக உருவான ஈர்ப்பையும் பின்னால் தெரிந்துகொண்ட சாதியின் காரணமாக உருவான அருவருப்பையும் ஒருசேரச் சுமந்திருந்த தன் தந்தையின் வன்முறையால் காலமெல்லாம் வதைபட்டு மாண்டுபோன தாயின் வேர் மூலத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் என்பது இன்னொரு இழை. காலத்தைச் சிறிதளவு பின்னோக்கி நகர்த்திச்சென்று போதையின் உச்சத்தில் குமரிக் கடற்கரை மணலில் மயங்கி விழுந்திருந்த தருணத்தில், இன்று வெவ்வேறு வகுப்பினராக மாறி ஒருவரையொருவர் வதைத்துக்கொள்ளும் மக்கள் பிரிவினர் புராணகாலத்தில் சபிக்கப்பட்ட சகோதரர்களாக வாழ்ந்தவர்கள் என உணர்த்தும்வகையில் துண்டுதுண்டாக மனத்தில் நகரும் காட்சிகளின் உருவாக்கம் என்பது நான்காம் இழை. இப்படி நான்கு இழைகளைக் குறுக்கும் நெடுக்குமாகப் பரவவிட்டு மறுபக்கம் நாவலை நெய்திருக்கிறார் பொன்னீலன். இவற்றுக்கிடையே திருவிதாங்கூர் சமஸ்தான வரிவிதிப்புக் கொடுமைகள், தோள்சீலைப் போராட்டம் என அறியப்பட்ட சாணார்கள் போராட்டம், வைகுண்டசாமி அய்யாவழி இயக்கம், குமாரகோவில் அக்கினிக்காவடிப் போராட்டம், பிரம்ம சமாஜ இயக்கம் பற்றிய செய்திகள் உள்ளிட்ட எல்லா வரலாற்றுக் குறிப்புகளுக்கும் மண்டைக் காட்டு அம்மன் வரலாறு, பத்ரகாளி அம்மன் வரலாறு, குமரி அம்மன் வரலாறு எனப் புராணச் செய்திகளுக்கும் இந்த நாவல் இடம்தருகிறது.
மண்டைக்காட்டில் தொடங்கிய கலவரம் ராஜாக்கமங்கலம், பள்ளம், ஈத்தாமொழி, புத்தன்துறை, முட்டம், குளச்சல், மணக்குடி என மேற்குக் கடற்கரையோரப் பகுதியில் உள்ள ஊர்களெங்கும் மிக வேகமாகப் பரவி மனிதர்கள் கொலை வெறியுள்ளவர்களாக மாறிப்போய்விடுகிறார்கள். ஒரே நாளில் மனித குணம் மாறிவிடுகிறது. இருவேறு சமூகத்தினரிடையே நிலவும் பதற்றத்தை மூலதனமாக்கிக் கொலைவேட்கை நிகழ்த்துவதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் மையங்களாக மாறிவிடுகின்றன மதநிறுவனங்கள். மனித அக்கறையோ இரக்கமோ கிஞ்சித்தும் இல்லாத உலர்ந்த எந்திரங்களாக நிறுவனங்கள் உருமாறிவிடுகின்றன. முடுக்கிவிடப்பட்டவர்கள்போல ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாகிறார்கள். மரணங்களுக்கும் பொருளிழந்துபோன வாழ்வின் அறங்களுக்கும் இடையே தத்தளிக்கிறது பொன்னீலனின் கலைமனம்.
ஒரு சம்பவம். கூடையில் மீன்சுமந்து தெருத்தெருவாக மீன்விற்றுப் பிழைக்கிறாள் ஒருத்தி. வாடிக்கையாளர்கள் அவள்மீது உறவுமுறை கொண்டாடி அன்புசெலுத்திப் பழகும் அளவுக்கு நல்ல பெண்மணி. பிள்ளைத்தாய்ச்சியாக உள்ள வாடிக்கைக்காரப் பெண்ணொருத்தியை அவள் தாய்வீட்டுக்கு மெனக்கெட்டுச் சென்று பார்க்கும் அளவுக்குப் பாசம் உள்ளவள். பயண விவரத்தை அந்தப் பெண்ணின் கணவனிடம் மகிழ்ச்சியோடு சொல்லிப் பகிர்ந்துகொள்கிறாள். கூடை வியாபாரியான அவளுக்கும் தெருக்காரர்களுக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்துவதற்காக இந்தச் சம்பவத்தை எடுத்துரைக்கிறார் பொன்னீலன். ஆனால் கலவரம் வெடித்த தினத்தில் அந்த மகிழ்ச்சி உடைந்து நொறுங்கிவிடுகிறது. மானசீகமாக அவள் பொழிந்த அன்பு ஒரு துளியும் மதிப் பில்லாமல் போகிறது. அவளுடைய அடையாளம் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு அவள் துரத்தித் தாக்கப்படுகிறாள். அவமானப்படுத்தப்படுகிறாள். அன்பொழுகப் பேசினவனே அவளை அவமதிக்கிறான். தன் இனத்தின் செல்வத்தைச் சுரண்டவந்த சக்தியாக அவன் அவளைச் சுட்டிக்காட்டுகிறான். ஒரே கணத்தில் வாடிக்கைக்காரனுடைய அன்பு, வெறுப்பாகவும் வெறியாகவும் மாறிவிடுகிறது.
இப்படி வளர்ததுவிடப்படும் வெறியால் இந்தியா முழுதும் இன்று ஏராளமான மண்டைக்காடுகள் உருவாகிவிட்டன. ஒவ்வொருவரும் தருணத்துக்குக் காத்திருந்து அடுத்த மதத்துக்காரர்களைத் துரத்துத் துரத்தித் தாக்கியழிப்பதில் முனைப்புகொள்கிறார்கள். ஒரு பிரச்சினையின் மூலம் என்ன என்பதை ஆய்ந்தறிவதற்கு முன்னரேயே மத அடையாளமும் இன அடையாளமும் முன்வந்து நின்றுவிடுகின்ற இந்தியச் சூழலில் இப்படிப்பட்ட பதற்றங்களுக்கு ஒருபோதும் குறைவே இல்லை. அடையாளத்தை வரையறுப்பதில் உள்ள அவசரத்தன்மை எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றித் தீயின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.
சாதி மதம் பற்றிய பார்வையைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதை இன்றைய காலத்தின் முக்கியமான பணியென்றே குறிப்பிட வேண்டும். சாதியும் மதமும் ஒரு போதையென்றால் அந்தப் போதைக்கு அடிமையாகி, சுயநினைவற்றுப் போக வேண்டிய அளவுக்கு மானுடனை வாட்டியெடுக்கும் வலிகள் எவை? அந்த வலிகளுக்கான காரணங்கள் எவை? அந்தக் காரணங்களுக்கும் சமூக அமைப்புக்கும் உள்ள தொடர்பு என்ன? போதையை உதறிவிட்டு வலிகளை நேருக்குநேர் எதிர்கொள்வதில் மானுடனுக்குள்ள தயக்கங்கள் என்ன? எந்தத் தயக்கத்துக்கும் இடம்தராமல் துணிவையும் தெளிவையும் கவசங்களாகக் கொண்டு வலிகளை எதிர்கொள்கிறவர்களால் அவற்றைச் சுக்குநூறாக உடைத்துத் தூள்தூளாக்கிவிட முடியாதா? அவர்கள் எதிர்பார்த்த நிவாரணத்தை அவர்கள் தம் வாழ்வில் அடைய முடியுமா? கறாரான கேள்விகள்மூலம் நம்மை நாமே மதிப்பிடுவதன் மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். எவ்விதமான ஆயத்த விடைகளும் முன்தீர்மானங்களும் இல்லாமல் இந்தப் பயணத்தை மேற்கொள்ளும்போது மட்டுமே நாம் புத்தம் புதிய அனுபவங்களை எதிர்கொள்ள முடியும். புதிய வெளிச்சங்களும் புதிய உண்மைகளும் நம் பார்வையில் தட்டுப்படக்கூடும். அடையாளங்களின் வேர்களைத் தேடிச் செல்லும் நம் பயணம் அடிப்படை ஒற்றுமையென்னும் மாபெரும் கடலின் கரைவரைக்கும் நம்மைக் கொண்டுசெல்லும். மானுடக்கூட்டம் ஒன்றே என்னும் எளிய உண்மை அப்போது தெளிவாகும். விண்ணையும் மண்ணையும் காற்றையும் இயற்கையையும் அஃறிணையையும் உயர்திணையையும் ஒன்றாக்கி இயக்கும் பிரபஞ்சமே மானுடகுலத்தையும் இழுத்துவைத்து இயக்குவதை ஒரு கணம் நம்மால் உணர முடியும். கலை மட்டுமே கண்டுரைக்கக்கூடிய மகத்தான உண்மை இது.
சாதியாக இருந்தாலும் சரி, மதமாக இருந்தாலும் சரி, அந்த அடையாளங்களைத் தாண்டி அடிப்படையில் எல்லாரும் மனிதர்களல்லவா? அந்த எளிய உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அடையாளங்களுக்காக ஏன் வெறிகொண்டு மோதி ஒருவரையொருவர் அடித்துக்கொள்கிறார்கள் என்று உருவாகக்கூடிய கேள்விதான் மறுபக்கம் நாவலை வாசித்து முடித்ததும் எஞ்சி நிற்கக்கூடிய கேள்வி. அதற்குரிய விடையாக அடையாளங்களில் அடைக்கலம் தேடி ஆறுதல் தேடிக்கொள்ளும் அளவுக்கு வாழ்வில் உருவான அக, புற நெருக்கடிகளின் சம்பவத் தொகுப்புகளை நம்முன் காட்சிகளாகச் சித்தரித்துக்காட்டிவிட்டு முடிவடைந்துவிடுகிறது நாவல். வரலாற்றைத் துளைத்துக்கொண்டு ஒரு பெரும்விவாதமாக அக்கேள்வி வெடிக்கவில்லை. மதத்தை உதற முடியாத அளவுக்கு மதத்திலிருந்து மனிதன் பெறுவது என்ன, மதத்துக்காக உயிரையே துறக்கும் அளவுக்கு அல்லது உயிரையே பறிக்கும் அளவுக்கு எழுச்சி வேகம் ஏற்படுவது ஏன், வாழ்வில் மதத்துக்கான இடம் என்ன, மதத்தை உருவாக்கியவனே மதத்துக்குப் பலியாவது எவ்வளவு அபத்தம் எனப் பல திசைகளில் விரிவடைய வேண்டிய விவாதம் நாவலில் நிகழவே இல்லை. மனித வன்முறையின் பின்னாலிருக்கிற மனநிலையைக் கண்டறிந்து அம்பலப்படுத்துவதற்கு மாறாக, வன்முறைச் சம்பவங்கள் உருவாகும் விதத்தையும் மரணங்களையும் மாற்றி மாற்றி அடுக்கி விவரத்தொகுப்பாக மாற்றிவிடுகிறது நாவல். எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் வேகத்தில் மனிதன் முக்கியமானவனா அல்லது அவன் மத அடையாளம் முக்கியமானதா என்னும் திசையை நோக்கிய பயணத்தின் வேகம் குறைந்துபோய்விட்டது துரதிருஷ்டவசமானது.
(நன்றி: காலச்சுவடு)