இது முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான வாழ்க்கை வரலாறு. தனிமனித வாழ்க்கையின் அகம் புறம் சார்ந்த அனுபவங்களின் ஊடே நிகழ்த்திய அனுபவங்களின் அடுக்கடுக்கான தொகுப்பு அல்ல. நவீன உலகின் நிகழ்வுகளையும் மாற்றங்களையும், உள்வாங்கிக் கொண்டு அதன் வளர்ச்சிப் போக்கை இனம்கண்டு அடையாளப்படுத்தும் ஒரு தனிமனிதனின் வரலாறாக இது வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. மனித வரலாற்றுப் போக்கில் தன்னைக் கரைத்துக் கொண்டு அறிவியல் ரீதியாக அந்த வரலாற்றை மதிப்பீடு செய்த ஒரு மனிதரின் வரலாறு இது. விருப்பு, வெறுப்புகளைக் கடந்து வரலாற்றின் இயக்கப் போக்கை உணர்ந்து சிந்தனா ரீதியாக இயங்கிய ஒரு மனிதரின் சாதனைகள் அடங்கிய ஒரு தொகுப்பாக இது உள்ளது. அதனால், ரஜனி பாமிதத்தின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகள் மிகமிகக் குறைவாகவே உள்ளன.
இவர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கட்டத்தில் 1886-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் நாளன்று பிறந்தார். இவருடைய தந்தையான உபேந்திர கிருஷ்ணா ஒரு வங்காளி. இலண்டனில் ஒரு மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு பெண்மணியை அவர் மணம் புரிந்து கொண்டார். இலண்டனில் பிறந்தவரான ரஜனி பாமிதத்தின் மூத்த சகோதரர் கிளெமன்ஸ் பாமிதத். இவர்களுடைய தந்தை, தாய்நாட்டை நேசிக்கவேண்டும் என்ற உணர்வை இவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே ஊட்டி வந்தார். கூர்மையான அறிவைச் சிறுவயதிலேயே இயல்பாகப் பெற்றிருந்த ரஜனி பாமிதத் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த காலத்தில் மார்க்சிய அரசியலில் ஈடுபட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னாளில், தேர்வில் அமர்வதற்கு ஆக்ஸ்போர்டால் அனுமதிக்கப்பட்டார். அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்தார்.
ஆழ்ந்த உணர்வுடைய வரலாற்று மாணவராக இருந்துவந்த இவர், சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்களைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டார். பின்பு அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து 1914-இல் ஆக்ஸ்போர்டு பேலியல் கல்லூரியில் இருந்தபோது சுதந்திரத் தொழிற்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அது, ஒரு தீவிரமான அரசியல் இயக்கமாக இருந்தது.
முதல் உலகப் போரின் போது இவர் கட்டாய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது, போர் எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு, விடுதலை செய்யப்பட்டார். திரும்பவும் இவர் ஆக்ஸ்போர்டுக்கு வந்து சேர்ந்தார்.
அதற்குப் பின் அவருடைய அறிவுத்துறைப் பயணம் ஒரு நீண்ட நெடும் பயணமாக உருமாறியது. ஆழ்ந்த ஈடுபாடும், துணிச்சலான கண்ணோட்டமும், அயராத முயற்சியும் அவருடைய வாழ்க்கைத் தளத்தை விசாலமானதாக மாற்றின. உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விமோசனத்துக்குரிய ஒரே வழி மார்க்சியம்தான் என்பதால் அது அவருடைய சிந்தையை ஈர்த்தது.
ஒவ்வொரு மனிதனும் புறநிலை சார்ந்தே உயிர்வாழ வேண்டியது இயற்கையின் நியதி. அவனுடைய அகநிலை புறநிலையை நுகர்ந்து வாழ்வது என்பதுதான் உண்மை. அந்த நுகர்வில் அவனுடைய அகநிலை இயங்கும் விதத்தில்தான் அவனுடைய வாழ்க்கை வடிவம் பெறுகிறது. அந்த விதத்தில் அவர் தன்னிலிருந்து உலகை மாறுபட்ட கோணத்தில் கூர்ந்து நோக்கினார். மனித சமுதாய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இரஷ்யப் புரட்சிக்கு முன்பே மார்க்சியச் சிந்தனைக்கு உள்ளானவர் ரஜனி பாமிதத். பிரிட்டனில் கம்யூனிச இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே அவர் சுயேச்சை தொழிற்கட்சியில் பணியாற்றினார். அதன் வாயிலாக அவர் கம்யூனிச இயக்கத்திற்கு வந்து சேர்ந்தார்.
அடுத்து 1917-இல் வி. இ. லெனின் மற்றும் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் நடைபெற்ற இரஷ்யப் புரட்சி அவருடைய சிந்தனையைத் தூண்டிவிட்டது. முதலாவது சோசலிச ஆட்சியை ஒரு புதிய நாகரிகத்தின் தொடக்கமாக அவர் கருதினார். அடிமை நாடுகளின் தேச விடுதலை இயக்கத்தின் மீதும், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மீதும் இரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தை ஏகாதிபத்திய வல்லரசுகள் அதற்கு முன்பே தெளிவாக ஊகித்திருந்தன. சோவியத் ஆட்சியின் கழுத்தை நெரித்துக்கொல்வதற்கும், அதைத் தகர்ப்பதற்கும் வல்லரசுகள் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
சோவியத் எதிர்ப்பு வெறித் தாக்குதல்கள் நிகழ்ந்து வந்த அந்த நாட்களில், அவரும், அவருடைய நண்பர்களும் புரட்சிகர சோசலிச இரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கும் வகையில் பலவகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உலகின் முதலாவது தொழிலாளர், விவசாயிகளின் அரசு குறித்த உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டினார்கள். தொடர்ந்து 1918-இல் ‘மக்கள் இரஷ்யத் தகவல் கழகம்’ என்ற ஓர் அமைப்பைத் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர்.
முதலாவது உலகப்போரின்போது, இரண்டாவது அகிலத்தின் வலதுசாரி - சோசலிஸ்ட் தலைமையின் துரோகத்தின் விளைவாகத் தொழிலாளி வர்க்கம், மற்றும் புரட்சிகர இயக்கம் போன்றவை சீர்குலைக்கப்பட்டன. அவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு, அகில உலக அளவிலான ஓர் அமைப்புத் தோற்றுவிக்க வேண்டிய வரலாற்றுத்தேவை தோன்றியது. அதன் விளைவாக 1919-இல் கம்யூனிஸ்ட் அகிலம் அல்லது மூன்றாவது அகிலம் வி. இ. லெனினின் முன்முயற்சியால் மாஸ்கோவில் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டு நெறிகள் பின்வரும் நோக்கங்களை உள்ளடக்கியிருந்தன. “ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கும், காலனிகளிலும், அரைக்காலனிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தேசவிடுதலை இயக்கத்திற்கும் இடையில் ஒரு நிலையான மற்றும் நெருக்கமான பந்தத்தை நிறுவுவதும், ஏகாதிபத்திய உலக அமைப்புக்களை இறுதியாக உடைத்து நொறுக்குவதற்கு வகை செய்வதற்கான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதும் தமது கடமைப் பொறுப்பான பணியாகும் என்று கோமின்டர்ன் கருதியது.”
உலக வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் இந்தக் காலகட்டத்தின் முன்னேயும், பின்னேயும் இயங்கியவர் ரஜனி பாமிதத். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதுமாக ஓயாமல் உழைத்தார். அவர் தொடர்ந்து நடத்திவந்த ‘லேபர் மந்த்லி’ இதழில் 1925 ஜூலை இதழில் இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதிய இரண்டு கட்டுரைகளை வெளியிட்டார். ஒன்று. ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’ இன்னொன்று ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வருங்கால விளைவுகள்’.
“மூத்த இந்திய மார்க்ஸிய வரலாற்றாளரும், அரசியல் தலைவருமாகிய கே. எம். அஷ்ராஃப் அவருடைய பங்களிப்புக்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு” மார்க்சியத் தத்துவ நூல்களை, மார்க்ஸ், எங்கல்ஸ், மற்றும் லெனினுடைய படைப்புக்களை ரஜனி பாமிதத் போன்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளுடைய விரிவுரைகளுடன் நாங்கள் படித்தோம்.”
கம்யூனிச இயக்கம் இந்தியாவில் தோன்றுவதற்கும், அதை ஊக்குவிப்பதற்கும் வளர்ப்பதற்கும் ரஜனி பாமிதத்தின் சிந்தனைகள் விதைகளாக அமைந்தன. ரஜனி பாமிதத்தின் சிறிய வெளியீடுகளும் அவருடைய ‘லேபர் மந்த்தி’லியும் இந்தியச் சிந்தனையாளர்களுடைய சிந்தனைகளைப் பாதித்தன.
“இந்தியாவின் சுதந்திரத்திற்கு அவர் ஆற்றியுள்ள முக்கிய பணிக்காக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன். இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் இது மிகவும் பாராட்டப்படும்” என்று ஜூலியஸ் சில்வர்மேன் இவரைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜூலியஸ் சில்வர் மேன் காமன்ஸ் சபையின் பிரிட்டிஷ் தொழிற்கட்சி உறுப்பினர். மேலும், இந்திய லீகின் தலைவர்.
“இந்தியா விடுதலை பெறுவதன் அவசியத்தை ஒளியிட்டுக் காட்டுவதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் ரஜனி பாமிதத் தவறவிடவில்லை. இந்தியாவின் விடுதலையை, பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ சுரண்டலிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்கு ஓர் அவசியமான முன் நிபந்தனையாகும் என்று எடுத்துக் காட்டுவதற்கு அவர் முயன்றார்.”
“இந்தியாவில் பிரிட்டிஷ் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அம்பலப்படுத்துவதற்கு ரஜனி பாமிதத் எப்போதும் ‘ஒர்க்கர்ஸ் வீக்லி’யைப் பயன்படுத்தினார்.”
இந்திய மக்களின் எதிர்ப்பையும், போராட்டங்களையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடக்கி ஒடுக்கிய சூழ்நிலைகளில் ரஜனி பாமிதத் தன்னுடைய துணிச்சலான விமர்சனங்களைத் தன்னுடைய எழுத்துக்களின் வாயிலாக முன்வைத்தார். ‘இன்றைய இந்தியா’ என்ற அவரது மிகச் சிறந்த நூலின் வாயிலாக அவர் இந்தியச் சமுதாயத்தின் அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்க்கையைத் துல்லியமாக விளக்கிக் காட்டினார்.
இவர் தனக்கே உரிய தார்மீகக் கண்ணோட்டத்தை முன்வைத்து ‘லேபர் மந்த்லி’ என்ற பத்திரிகையை 1921-இல் தொடங்கி ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் பொறுப்பில் இருந்து நடத்தினார்.
அன்றைய இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், தத்துவவாதிகளின் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களையெல்லாம் தன்னுடைய பத்திரிகையில் தொடர்ந்து எழுதச் செய்தார். ‘மாதாந்தரக் குறிப்புக்கள்’ என்ற பகுதியில் அவர் தொடர்ந்து இறுதிநாள் வரை எழுதினார்.
‘லேபர் மந்த்லி’ இதழில் உலகம் தழுவிய அளவில் இருந்துவந்த கம்யூனிசச் சிந்தனையாளர்கள் எழுதினார்கள். இந்தியாவைப் பொருத்தவரை, மகாத்மா காந்தி, எம். என். ராய், எவ்லின் ராய், வீரேந்திரநாத் சட்டோ பாத்யாயா, வி. கே. கிருஷ்ணமேனன், எஸ். ஏ. டாங்கே, எம். ஜி. தேஷாய், என். எம். ஜோஸி, ஷேக் அப்துல்லா, பி. ஸி. ஜோஸி, எஸ். ஜி. சார் தேஷாய் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
இந்தியாவிலிருந்த அன்றைய அரசியல் இயக்கங்களில் காணப்பட்ட உள்முரண்பாடுகளையும், வெளிமுரண்பாடுகளையும் அடையாளம் காட்டியதோடு சரியான வழிமுறைகளையும் நடைமுறைகளையும் அடையாளம் காட்டினார். அமெரிக்காவின் இராணுவத் தலைமைச் செயலகமாகிய ‘பென்டகன்’ குறித்து அவர் எழுதியுள்ள கருத்து இன்றளவும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.
இந்தியாவின் இருபெரும் தேசிய விடுதலை இயக்கங்களான இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு இடையில் அடிப்படையாக இருந்த போக்குகளை விளக்குகிறார். அந்தந்த இயக்கங்களுக்குள் இருந்துவந்த உள்முரண்பாடுகளை வெளிப்படுத்தியதோடு அவை குறித்த தன்னுடைய ஆக்கரீதியான விமர்சனத்தைத் தெளிவுபடுத்தினார். சமுதாய அறிவியலான மார்க்சியத்தின் துல்லியமான பார்வையுடன் அவருடைய விமர்சனங்கள் இருந்தன. ஏகாதிபத்தியச் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு விமர்சித்ததைப் போலவே அவர் ‘பாஸிஸத்தையும்’ விமர்சனம் செய்தார். வியட்னாமில் ஆக்கிரமிப்பைச் செய்த அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்தார்.
“அரசியல் நடவடிக்கைகளிலும், ‘லேபர் மந்த்லி’ யைப் பதிப்பிப்பதிலும் ரஜனி பாமிதத் ஈடுபட்டிருந்த போதிலும்கூட, அதே சமயத்தில் பல முக்கியமான நூல்களையும் எழுதியுள்ளார். “மாடர்ன் இந்தியா (1926) உலக அரசியல் 1918-35, பாஸிஸமும் சமூகப் புரட்சியும் (1934) இந்தியா டுடே (1940) பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் பேரரசின் நெருக்கடி (1949) சமகால வரலாற்றின் பிரச்சினைகள் (1963) அகிலம் (1964)” போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.”
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனிப்பட்ட செல்வாக்குப் பெற்றிருந்த மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹார்லால் நேரு போன்ற ஆளுமைகளின் தன்மைகளைக் குறித்துத் தார்மீகமான கருத்துக்களை அவர் முன்வைத்தார். அவர்களுடைய கருத்துக்களுக்குத் தன்னுடைய பத்திரிகையில் இடமளித்தார். அவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.
இந்திய - முஸ்லிம் பிரச்சினைகளைக் குறித்தும் அதன் பின்னணியைக் குறித்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடு பற்றியும் ரஜனி பாமிதத் தனது கருத்துக்களின் வாயிலாக விமர்சித்தார்.
இந்திய விடுதலையின் பின்னணியில் ஒவ்வொரு அரசியல் இயக்கத்தின் நிலைப்பாட்டையும் தனித்தன்மையையும் அடையாளப்படுத்துகிறார்.
“மனித உரிமைகளை ஸ்டாலின் மோசமாக மீறினார், ஒடுக்குமுறை ஆட்சியைத் தொடங்கிவைத்தார் என்று குருஷ்சேவ் அம்பலப்படுத்திய பிறகும்கூட சோவியத் யூனியனுக்கு ஆதரவு தருவதற்குப் பாமிதத் முயன்றார். “அகிலம்” என்ற தனது புத்தகத்தில் ஸ்டாலின் காலத்தை நியாயப்படுத்துவதற்கும் கூட பாமிதத் முயன்றார்.”
சீனப் புரட்சியை "ரஷ்ய சோசலிசப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது மகத்தான சோசலிசப் புரட்சி” என்று அவர் புகழ்ந்து பாராட்டினார்.
அடுத்து, 1962-இல் நிகழ்ந்த இந்திய சீன எல்லைப் போர் குறித்து அவர் மிகவும் வேதனையடைந்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் போர் பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியங்களால் இந்திய - சீன நட்புறவின் எதிரிகளால், இந்தியாவில் பிற்போக்கு ஏகபோகவாதிகளின் ஒத்துழைப்புடன் தூண்டிவிடப்பட்டதாக அவர் கருதினார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றிய தன்னுடைய ஆழமான கருத்துக்களை முன்வைத்தார். ‘வங்காள தேசம்’ தோற்றத்தை வரவேற்றார்.
தொடர்ந்து இயங்கியபடியே மாறிக்கொண்டும், வளர்ந்துகொண்டும் இருக்கும் உலகின் போக்கைச் சரியாகக் கணிப்பதற்குரிய மார்க்சியத்தின் அடிப்படையான இயல்புகளில் ஒன்றை அவர் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார். “மார்க்சியமானது, குறிப்பிட்ட சமுதாயத்தில் ஆதிக்க நிலையில் உள்ளதும், பிறகு சரிந்து போவதுமான ஒன்றின் மீது மட்டும் எப்போதும் கவனம் செலுத்தக்கூடாது என்றும், மாறாக, எது புதிதாகத் தோன்றி முன்னேறுகிறது. வருங்காலத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறதோ அதன்மீது பிரதான கவனம் செலுத்தவேண்டும் என்றும் எப்போதும் போதிக்கிறது.”
“சோவியத் யூனியன், சீனா ஆகிய இரு கம்யூனிசப் பெருநாடுகளுக்கு இடையிலான மோதல் அவரைப் பெருமளவுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.” இதைக் குறித்தும் ரஜனி பாமிதத் விமர்சனங்களை வைத்தார்.
உலகமயமாதல், தாராளமயம், சந்தைப் பொருளாதாரம் போன்ற நடைமுறைகள் நிகழ்ந்துவரும் இன்றைய சூழலில் ரஜனி பாமிதத் போன்ற மார்க்சியச் சிந்தனையாளர்கள் செயல்படவேண்டிய தேவையை அவருடைய வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது.
ஒரு நாட்டின் தனித்தன்மையைக் காப்பாற்றும் நோக்கத்திலேயே இன்றைய நடைமுறைகள் இருக்க வேண்டும். வரலாற்றில் இயற்கைச் செல்வங்களை தொடர்ந்து கையகப்படுத்திவரும் ஏகாதிபத்தியங்களின் நடைமுறைகளையும், தந்திரங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய நிலைமை மார்க்சியச் சிந்தனையாளர்களுக்கு இன்றைய கடமையாக இருக்கிறது.
மனிதகுலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு இயற்கை வளங்களையும், சுற்றுப்புறச் சூழ்நிலைமைகளையும், வளமான கலாசாரப் பண்பாட்டையும் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உலகெங்கும் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இந்தப் பயங்கரவாதப் போக்குகளின் பின்னணி என்ன? சமுதாய அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது. காரணம், மனிதகுலத்தை முன்னோக்கி வழி நடத்திச் செல்வது கம்யூனிஸ்டுகளின் தொடர்ச்சியான முயற்சிகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.
நவீன காலனியாதிக்கம் உலகம் முழுவதுமாகப் பரவி வருவதைப் போன்ற ஒரு தோற்றம் இருந்து வருவதால் உலக மக்களிடையே ஒரு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
காலனியாதிக்கக் காலகட்டத்தில் இருந்து வந்த சுரண்டலும், அடக்குமுறையும் வரலாற்றில் தொடரக் கூடும். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இயற்கையைப் பாழ்படுத்தி வருவதோடு, மனிதகுலத்தை உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தி வருகிறது. பின்தங்கிய, வளரும் நாடுகளின் செல்வ வளங்கள் ஏகாதிபத்திய நாடுகளால் கையகப்படுத்தப்படும் சூழல் உருவாகிவருகிறது. வளரும் நாடுகளின் இயல்பான வளர்ச்சி சிதைக்கப்பட்டு ஏகாதிபத்திய ஆதிக்கம் படிப்படியாக நிறுவப்படும் பயமும் சிந்தனையாளர்களிடம் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மார்க்சிய அடிப்படையில் உலகை முன்னெடுத்துச் செல்ல உலகம் முழுவதுமான ஓர் இடதுசாரிக் கண்ணோட்டம் வளர வேண்டும். அதற்கேற்ற விதத்தில் ஓர் எடுத்துக்காட்டாக ‘ரஜனி பாமிதத் வாழ்க்கை வரலாறு’ அமைந்திருக்கிறது. ‘இந்தியாவின் ஒரு மெய்யான நண்பராக’ வாழ்ந்த அவர் உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களைப் பற்றியே சிந்தித்தார். அவருடைய வாழ்க்கை ஓர் இயக்கம் அவருடைய வெற்றியும் சாதனையும் மார்க்சியத் தத்துவத்திற்கே உரியது.
உலக அளவிலான மார்க்சியச் சிந்தனையாளர்களை உருவாக்கிய பணி அவருடையது. இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணியிலும், சோசலிசப் புரட்சிகளின் பின்னணியிலும் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த ரஜனி பாமிதத் உலக கம்யூனிச இயக்கங்களுக்கு வழிகாட்டும் ஒரு பேரொளியாய் விளங்குகிறார். அந்த ஒளியில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரலாற்றில் அவர் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருப்பார்.
ஆழமான அரசியல், சித்தாந்த, தத்துவக் கண்ணோட்டங்களை முன்வைத்துப் பேசும் இந்த வாழ்க்கை வரலாற்றைத் தெளிவான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார், திரு.வி.ராதாகிருஷ்ணன். அழகான அச்சுப் பதிவு வடிவில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்.சி.பி.எச்.
(நன்றி: கீற்று)