தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியாகவிருக்கும் இந்திரா பார்த்தசாரதி தன் எழுத்துக்கள் அவரது அரசியல், மற்றும் சமூகப் பொறுப்புணர்வைப் பிரதிபலிக்கவேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர். அவர் 1981-ம் வருடம் வார்சா பல்கலைக் கழகத்துக்கு தமிழ்ப் பேராசிரியராக பணி புரியச் சென்றார். அவர் சமூகப் பொறுப்புணர்வுள்ள எழுத்தாளர் என்றேன். அது பல பரிமாணங்களில் பொருள் பெறும். அவர் சிறு கதைகளும், நாவல்களும், உடன் நிகழ் கால அரசியல், சமுக நிகழ்வுகளைப் பற்றிப் பேசும். அவ்வாறு பேசுவது, திராவிட கட்சிகளின் அரசியலை மாத்திரம் அல்ல, கல்வி ஸ்தாபனங்களைச் சேர்ந்தோரின் பந்தாக்கள், சுரணையின்மை, பழமைவாதங்களின் வேஷதாரித்தனம் போன்ற, அவரது பரிகாசத்துக்கு எளிதில் இரையாகும் எதையுமே தான். அவர் வாழ்க்கைப் பார்வையில் பிறந்த தன் ஆழ்ந்த நம்பிக்கைகளின் உந்துதல்களால், இக்கேலிகள் பிறக்கின்றனவா அல்லது அந்தந்த கணத்தில் தன் கேலிக்கு எவையெல்லாம் சுலபமாக இரையாகின்றனவோ அவற்றைத் தான் கிண்டல் செய்கிறாரா என்றால் அது நம்மை யோசிக்க வைக்கும்
சுமார் இருபது வருடங்களுக்கும் மேலான அவர் தம் எழுத்து வாழ்க்கையில் அவர் தாண்டி வந்த கட்டங்கள் பல. மார்க்ஸிசத்துக்கு எதிரான ஒரு காலம், பின் ஃப்ராய்டிஸம், பின் எக்ஸிஸ்டென்ஸியலிஸம், பின் இப்போது ஒருமாதிரியான, நன்கு வரையறை செய்யப்படாத, அல்லது ஏதோ தன் போக்குக்கு வரையறை செய்து கொண்ட ஒரு மார்க்ஸிஸம், இப்படியான அவரது பயணம். அவர் போலந்துக்குச் செல்வதற்குச் சற்று முன் வரை, போலந்தில் லெக் வாலென்ஸாவின் (Lech Walesa) தலைமையில் நடந்து கொண்டிருந்த தொழிலாளர் போராட்டத்திற்கு சாதகமான அபிப்ராயங்களை அவர் கொண்டிருக்கவில்லை. அவருடனான நேர் பேச்சுக்களில் அவர் அப்படித்தான் தெரிய வந்தார். இதற்கெல்லாம் மேலாக, அவருடனான உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். கேலியும் கிண்டலுமாக உதிரி கதைகள், சம்பவங்கள் நிறைய உதிரும்.
எது எப்படியானாலும், இப்படி எதையும் பரிகாசம் செய்யும் எழுத்து கிடைக்குமானால், நிகழ் கால தமிழ் இலக்கியத்துக்கு வேறென்ன வேண்டும்? ஒரு மார்க்ஸிய வாதி, அது எந்த நிறம் கொண்ட மார்க்ஸியமாக இருந்தால் தான் என்ன, தன் சிறுகதைகள், நாவல்களில், தன் உடன் நிகழ் கால அரசியல் சமூக நிகழ்வுகளைக் களமாகக் கொள்ளும் இயல்பினர் என்பது எல்லோரும் அறிந்தது, போலந்து நாடே கொந்தளிப்பில் இருக்கும் இந்த சமயத்தில் வர்ஷாவா (Warsaw) போகிறார், அங்கு சில வருஷங்கள் தங்குவார், அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுகளை, நேரில் இருந்து சுய அனுபவமாக பார்த்து அறிவார், அந்த பரபரப்பும், கொந்தளிப்புமான நிகழ்வுகளின் சாட்சி பூர்வமான பாதிப்புகளை அவர் கட்டாயம் பதிவு செய்யப் போகும் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைக்கும். இந்த பாக்கியம் பெறாத வேறு எந்த மொழியின் இலக்கியத்தின் பொறாமைக்கல்லவா தமிழ் ஆட்படும்!
இதெல்லாம் போக, அங்கு போலந்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வரலாற்றை, கோபெர்னிக்கஸ் (Copernicus) செய்த புரட்சிக்கு ஒப்பான ஒன்றை, மார்க்ஸிய வாய்ப்பாட்டின் படி நிகழ்ந்திருக்க வேண்டிய சரித்திரத்தின் கதியையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்ட வரலாற்றை, ஹேகலையே (Hegel) தலைகீழாக நிற்க வைத்துவிட்டதாகச் சொன்ன மார்க்ஸையே தலைகீழாக நிற்க வைத்துக்கொண்டிருக்கும் வரலாற்று கதியை, நேரில் காணும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்க விருக்கிறதே. எல்லாம் வேடிக்கையாகத் தான் இருக்கிறது. நினைத்துப் பார்க்க. தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை முன்னெடுத்துச் செல்லும் கம்யூனிஸ்ட் கட்சியையே எதிர்த்து நிற்கும் தொழிலாளி வர்க்கம். நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மக்கள் தம் புரட்சி உணர்வுகளை மறந்து போதையில் ஆழ்த்தி வந்த அபினி அல்லவா இந்த கத்தோலிக்க சர்ச்சுகள்? அப்படித்தானே மார்க்ஸ் நமக்குப் போதித்தார்! தொழிலாளி வர்க்கத்தின் நல்ல காலம், தோழர் ஸ்டாலின் தன்னால் முடிந்த சுமார் ஐம்பது ஆண்டு காலம் இந்த சர்ச்சின் அபினி மயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி வந்தார். இப்போது நாசம்போன அந்த கத்தோலிக்க சர்ச் அல்லவா இப்போது தொழிலாளி வர்க்கத்தோடு தோளோடு தோள் உரசி அதன் புரட்சி உணர்வுகளைத் தூண்டி நிற்கிறது! பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக விளங்கும் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியுள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு துணையாக அல்லவா இப்போது அந்த சர்ச் திரும்பிவிட்டது! மார்க்ஸ் விதித்த சோஷலிஸ வாய்ப்பாடுகள் அனைத்துக்கும் அல்லவா ஒவ்வொன்றாக சவால் விடப்பட்டுள்ளன! இந்திரா பார்த்தசாரதி மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர் தான். மார்க்ஸையும் வரலாற்றையுமே புரட்டிப் போட்டு புது வரலாறு படைக்கும் நிகழ்ச்சிகளுக்கு நேர்முக சாட்சியாக நிற்கப் போகிறாரே.
நிச்சயமாக ஐந்து ஆண்டு காலம் போலந்தில் கழித்த பிறகு, கொஞ்ச காலம் ஹாலந்திலும், கேனடாவிலும் (Canada) கழிந்தது போக, இந்தியா திரும்பிய இந்திரா பார்த்த சாரதி போலந்தில் தான் சாட்சிபூதராக இருந்த நிகழ்ச்சிகளை ஆதாரித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார் தான். அது தான் ஏசுவின் தோழர்கள்; ஆனால் ஒரு ஆச்சரியமான விஷயம், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது ஆச்சரியம் அளிக்கும் விஷயமே இல்லைதான். நமக்கு ஏற்கனவே பரிச்சயமாகியுள்ள இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தின் குணங்கள் எல்லாம் எந்த மாற்றமும் இல்லாது இதிலும் அப்படியே பதிந்துள்ளன தான். இதுகாறும் அவரது நாவல்கள் எல்லாவற்றிலும் காணும் கதை சொல்லும் பாங்கும், கட்டமைப்பும் இதிலும் எவ்வித மாற்றமும் குறையுமின்றி அமைந்துள்ளது.
நாவலில் வரும் பாத்திரங்கள் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். பிறகு அவர்கள் கலைந்து போக காட்சி வேறு இடத்துக்கு மாறுகிறது அங்கு வேறொரு செட் மனிதர்கள் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். இந்த செட் மனிதர்கள் தமக்குள் கலைந்து வேறு செட்டாக மாறி வெவ்வேறு இடங்களில் சந்திக்கிறார்கள். பேசிக்கொள்கிறார்கள். ஒரு அதிசயம் என்னவென்றால், இந்திரா பார்த்த சாரதியின் முத்திரை தரும் அதிசயம், இவர்கள் எல்லோரும் கேலி செய்கிறார்கள். ஜோக் சொல்கிறார்கள். சாமர்த்தியமாகப் பேசுகிறார்கள். அவர்கள் பேச்சில் காணும் உடனடி பதில்கள். தயக்கமின்மை. சட் சட் என பதில்கள் வரும். கிண்டல் இருக்கும். யார் எந்த ஜோக் சொல்கிறார்கள். யாரை நோக்கி என்பதெல்லாம் பிரசினையே இல்லை. தமாஷாக, சிரித்துப் பேசி பொழுது போகவேண்டும். யாரிடமிருந்தும் எந்த ஜோக்கும் வரலாம். கடைசியில் நோக்கம் என்ன? அவை ஜோக்காக இருக்கவேண்டும். நாம் சிரிக்க வேண்டும். அவ்வளவே போலும்.
இப்பேச்சுக்களில் காணும் திருப்பங்கள், சாமர்த்தியங்கள், கேலிகள் எல்லாம் வாசகன் சோர்வின்றி படிக்க ஏதுவாகின்றன பேசப்படும் விஷயத்துக்கு ஏதும் புது விளக்கம், அர்த்தம் கொடுப்பதற்கோ, பேசுபவனின் குணத்திற்கேற்பவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லோருமே ஜோக் அடிக்கிறார்கள். சாமர்த்தியமாகப் பேசுகிறார்கள். இந்திரா பார்த்த சாரதியின் எழுத்தின் பொது குணம் இது. இந்த நாவல் ஏதும் வித்தியாசமாக இல்லை.
சரி. இந்திரா பார்த்தசாரதிக்குள்ளிருக்கும் மார்க்ஸ் என்ன ஆனார்? அவரும் மிக பத்திரமாக எவ்வித கஷ்டமும் இன்றி இருந்து கொண்டிருக்கிறார் தான். விலாங்கு மீன் எங்காவது யார் கையிலாவது சுலபத்தில் சிக்கி விடுமா? நழுவிக்கொண்டேயிருப்பது தானே அதன் குணம்? God That Failed எழுதிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒரு காலத்தில் மார்க்ஸிஸத்தை நம்பி பின் அனுபவித்த மனவேதனைகளும் மனசாட்சி உறுத்தல்களும் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றமும் நாம் சர்ச்சித்துக் கொண்டிருக்கும் மார்க்ஸிஸ்டின் கிட்டக் கூட நெருங்கவில்லை. அல்லது ஒரு கெட்டிப்பட்ட சித்தாந்தியிடம் காணும், எந்த முரண்பட்ட நிலையிலும் சற்றும் சலனமடைந்து விடாத பாறையென கெட்டித்த முகமும் இல்லை. அந்த கெட்டித்த முகத்தின் மனம் மார்க்ஸின் வேதாகமத்தில் கொண்ட நம்பிக்கையை இன்னும் கெட்டியாகப் பிடித்திருக்கும். ஆனால் நாம் இங்கு கேட்பதோ ஒரு நடு நிலை. முதலாளித்துவ மேற்கும் சரி, கம்யூனிஸ்ட் கிழக்கும் சரி, இரண்டுமே, போலந்தின் ஸ்திரமற்ற கலவர நிலையை தம் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்கின்றன.
சரி. அப்படியே இருக்கட்டும். போலந்தில், வர்ஷாவாவின் தெருக்களில், கெடாய்ன்ஸ்க் (Gdańsk) கப்பல் கட்டும் துறையில் காணும் உண்மை நிலவரம், புறவயமாகக் காணும் யதார்த்தம், மேற்கும் கிழக்கும் தம் நோக்கத்திற்குப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படும் அந்த யதார்த்தம் தான் என்ன என்று இந்திரா பார்த்த சாரதி சொல்கிறார்? விலாங்கு மீன், ஐயா, விலாங்கு மீன். நான் தான் சொன்னேனே? அது முதலில் உங்கள் வலையில் எங்கே சிக்கும்? சிக்கினால் அல்லவா பின் அதைப் பிடித்து ஆராய்வதற்கும், வேறு எதுவும் செய்வதற்கும்? ஒரு சின்ன சிராய்ப்புக் கூட அதற்கு நேராது.
மார்க்ஸிய சித்தந்த விளக்கங்கள் இருக்கட்டும். புறவயமாகக் காணும் உண்மை நிலவரத்தை அறிய, வர்ஷாவா தெருக்களில் கால்கள் அல்லவா பதியவேண்டும். அலைய வேண்டும். கெடாய்ன்ஸ்க் கப்பல் கட்டும் துறைக்குப் போக முடிகிறதோ இல்லையோ. தெருவில் இறங்கி ஒரு சாதாரண மனிதனை, ஏதும் ஒரு தொழிலாளியை, அல்லது தெருவில் காணும் எவனையாவது சந்திக்க வேண்டும். இதையெல்லாம் தன் வகுப்பறையில் அடைந்து கிடக்கும் ஒரு பல்கலைக் கழக பேராசிரியரிடம் அதிகம் எதிர்பார்க்க இயலாது என்று சொல்லலாம். சரி. ஒப்புக்கொள்ளலாம்.
ஆக, எவ்வளவு தான் மார்க்சிய சிந்தனைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராக இருந்தாலும், ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் எழுதும் நாவலில் அறிவு ஜீவிகளையும், மாணவர்களையும், மாணவர் சங்கத் தலைவர்களையும் தான் கதா பாத்திரங்களாக எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லலாம். சரி. அதையும் ஒப்புக்கொண்டாயிற்று.
ஆனால் நாவலைப் படித்த நமக்கு இந்திரா பார்த்த சாரதி, பல்கலைக் கழகக் கட்டிடத்தின் வெளிக் கதவுகள் வரை கூடச் சென்றதாகத் தடயம் இல்லை. அவரது நேரம் எல்லாம் வர்ஷாவாவில் உள்ள இந்திய தூதருடனும், இந்திய தூதரைக் காண வருவோருடனும் தூதரக அலுவலர்களுடனுமே பேசுவதில் செலவழிந்துள்ளதாகத் தெரிகிறது. நாவல் முழுதும் சந்திப்புகளும் பேச்சுக்களும் கோர்க்கப்பட்ட சங்கிலியாகவும் அந்த சந்திப்புகள் அத்தனையும் தூதரகத்தில் அல்லது மதுபான விருந்துகளில் நிகழ்வனவாக இருக்கின்றன
இந்த நாவலில் ஒரு பெண் மாணவியைச் சந்திக்கிறோம். அவள் நம் ப்ரொஃபஸர்/நாவலாசிரியரிடம் பத்திரப்படுத்தி வைப்பதற்காக சில காகிதங்களைக் கொடுக்கிறாள். அவற்றை நம் ப்ரொஃபஸர் இந்திய தூதரகத்திடம் கொடுக்கிறார். தூதரகம் அவ்வப்போது தில்லி சௌத் ப்ளாக்கில் இருக்கும் இந்திய அரசின் வெளியுறவு இலாகாவுக்கு அனுப்பும் அறிக்கைகள் தயாரிக்க இந்த காகிதங்கள் உதவும். போலந்தில் ஏற்கனவே தங்கியிருக்கும் இன்னொரு ப்ரொஃபஸரை நம் ஆசிரியர்/ப்ரொஃபஸர் சந்தித்திருக்கிறார். இரு ப்ரொஃபஸர்களும் சந்தித்தது வர்ஷாவா பல்கலைக் கழகத்தில் அல்ல, இந்திய தூதரகத்தின் மதுபான விருந்துகள் ஒன்றில். நாம் இந்த நாவலில் ஒரு சாதாரண மனிதனையும் சந்திக்கிறோம். அவன் இந்திய தூதரக வாசல் காப்போன்.
அடிக்கடி இந்த நாவலின் கதையோட்டத்தில் வோட்கா அல்லது கொன்யாக் (Cognac) கண்ணாடிக் குப்பிகளின் ’ணங் ணங்’ என்ற ஓசைகள் கேட்டவண்ணம் இருக்கும். அது தான் இந்த நாவலின் பின்புலத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும் தம்புரா ஸ்ருதி மாதிரி. இந்த மாதிரியான காட்சி அமைப்பில், போலந்து வாழ்க்கை இந்த நாவலில் எங்காவது காணக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது அதிக பட்சம். முதலில் வர்ஷாவா பல்கலைக் கழகத்தையே கூட இந்த நாவலில் கண்டுபிடிப்பது அரிதான ஒன்றாகியுள்ளது. இவ்வளவுக்கும் கிட்டத் தட்ட ஐந்தாண்டுகள் நம் ஆசிரியர் அங்கு தங்கியிருந்த போதிலும்.
சிறுமலை நரஸிம்ஹாச்சாரி தாத்தாச்சாரி தான் (சுருக்கமாக டி.என்.டி. என்று அழைப்பார்கள்)வெகு ஆண்டுகளாக போலந்திலேயே தங்கிவிட்ட ப்ரொஃபஸர். அவர் ஒரு போலிஷ் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டவர். இந்த ப்ரொஃபஸர் தன் போலிஷ் மனைவியுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஒரு சமயம், அவரது மனைவி கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலையும் செய்யப்பட்டவள் என்று கதையில் சொல்லப்படுகிறது. இந்தக் காரணத்தால் தான் ப்ரொஃபஸரின் பெண் ஆஷாவுக்கு இந்தியா என்று சொல்லக் கேட்டாலே, ஒரே வெறுப்பு. பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆஷா இந்தியாவுக்கு வருகிறாள். ப்ரொபஸரின் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வந்து ப்ரொஃபஸரின் குடும்பத்தினருடன் பரிச்சயம் கொள்கிறாள். ஆஷா தங்கியிருந்த அந்த இரண்டு மாத காலத்தில், கும்பகோணத்தில் வசிக்கும் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் செல்கிறாள். இந்த இரண்டு மாத கால வாசத்தில் ஆஷா, அந்த வைஷ்ணவ ஆசாரம் நிறைந்த குடும்பத்தில் புழங்கும் தமிழைக்கூட கற்றுக்கொண்டு, ப்ரொஃபஸரின் விதவை மூத்த சகோதரியுடன் சம்பாஷிக்க முடிகிறது. ப்ரொஃபஸரின் இந்த விதவை மூத்த சகோதரி தன் வாழ்க்கையில் கும்பகோணத்தை விட்டு வேறு எங்கும் நகர்ந்தவள் இல்லை. போலந்திலேயே பிறந்து வளர்ந்த அந்த ஆஷாவுக்கு, இந்தியாவையே வெறுத்த அந்த ஆஷாவுக்கு வைஷ்ணவ ஆசாரம் மிகுந்த இந்த அத்தையை மிகவும் பிடித்துப் போகிறது. அந்த ஆசாரம் மனித நேயத்தில் தோய்ந்திருப்தையும் உணர்கிறாள் ஆஷா.
அந்த குடும்பத்தில் இன்னுமொரு விதவைப் பெண் இருக்கிறாள். அது அந்த அத்தையின் பெண். அவளைத் தவிர வைஷ்ணவ ஆசாரம் மிகுந்த அந்த குடும்பத்திலும் வெளியிலும் உள்ள அத்தனை பேரும் ஆஷாவிடம் மிகுந்த வாத்ஸல்யமும் ஒட்டுதலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவள் போலந்திலிருந்து வந்திருக்கிறவள். எப்போதோ தூர தேசத்துக்குப் போய் பிறகு ஒரு தலைமுறைக்கும் மேலாக கும்பகோணத்தைத் திரும்பிக் கூட பார்க்காத, டி.என்.டி. கட்டிக் கொண்ட போலந்து காரியின் பெண் அவள். இதெல்லாம் நாவலில் தான் நிகழ்வது சாத்தியம். நிஜ வாழ்க்கையில் ஒரு தென்கலை வைஷ்ணவன் வடகலை வைஷ்ணவ குடும்பத்தில் பெண் எடுத்தால், இரு தரப்பினருமே ஜாதி ப்ரஷ்டம் செய்யப்படுவார்கள். முதலில் அவர்கள் இது பற்றி நினைத்தும் பார்க்கமாட்டார்கள். அவ்வளவு தீவிரமாக தம் பழம் ஆசாரங்களை அனுஷ்டிப்பவர்கள் அவர்கள்.
நாவலாசிரியரின் குரலை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆஷா மிகுந்த பாசத்துடன் அணைத்துக்கொள்ளும் ஆசாரம் ஒர் மார்க்ஸிஸ்டின் தொண்டையில் சிக்கி மிகவும் வேதனைப்படுத்துவே செய்யும். அதிலும் ஆசிரியரின் இன்னொரு படைப்பான நந்தன் கதை என்னும் நாடகத்தில் அந்த ஆசாரம் தான் ஆசிரியரின் தீவிர கண்டனத்துக்குள்ளாகிறது. ஒரே ஒரு வித்தியாசம். ஒன்று வீர வைஷ்ணவ ஆசாரம். மற்றது வீர சைவ ஆசாரம்.
சிலர் வாதிடலாம்: நாவல் என்பது என்ன? அது தனி மனித உறவுகளைப் பற்றியதல்லவா? அதில் வர்க்க ரீதியான அலசல்களுக்கும் பொதுமைப்படுத்தலுக்கும் எங்கு இடம்? எங்கு மனித உறவுகளில் நேசமும் பாசமும் துளிர்க்கின்றனவோ, அங்கு அவற்றிற்கு எதிராக அரசியல் சார்ந்த, மதம் சார்ந்த சித்தாந்தக் கெடுபிடிகள் நிற்க முடியுமா என்ன? உதிர்ந்து தவிடு பொடியாகிவிடாதா? என்று கேட்கலாம். கேட்கலாம் தான். ஆனால் இந்தக் கேள்விகள் இந்திரா பார்த்தசாரதியிடமிருந்து வரக் காத்திருக்கிறேன். அது நிகழ்ந்திருக்கக் கூடுமானால், இந்த நாவலில் போலிஷ் வாழ்க்கை காணக் கிடைத்திருக்கும். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ, சாமர்த்தியான உரையாடல்கள், ஜோக்குகள், வோட்கா மதுக் குப்பிகள் உரசிக்கொள்ளும் ‘ணங்’, ‘ணங்’ ஓசைகள்.
(நன்றி: சொல்வனம்)