திருநெல்வேலி, பாளையங்கோட்டை கல்லூரி மாணவர்களின் வாழ்வில் 1960 களில் தொடங்கி தொண்ணூறுகளின் பிற்பகுதி வரையிலும், ஓர் அங்கமாய் விளங்கியது மரியா கான்டீன். அகம் சார்ந்தும், புறம் சார்ந்தும். அறுபதுகளில் நடந்த மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு ‘ஆடிப்பாவைபோல’ எனும் நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழவன். களம் பாளையங்கோட்டை. கதாபாத்திரங்கள் மரியா கேன்டீனில் அவ்வப்போது கூடுகிறார்கள்.
நாவலில் வரும் இந்த மரியா கான்டீன் வரலாறு சுவையானது. 125 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டையில் இருந்த வெள்ளைக்காரர்கள், சவேரியார் பள்ளிக்கு மேல்புறம் பேட்மின்டன் மைதானத்தில் விளையாட வருவார்கள். (தற்போது அது, மாவட்ட மைய நூலகம் ) விளையாடி விட்டு, தேநீர் அருந்த இந்த மரியா கேன்டீனுக்கு வருவார்கள். வெள்ளைக்காரர்களுக்கு என்றே பிரத்தியேகமாக கட்டப்பட்ட தேநீர் விடுதி இது. வட்ட வடிவில் பூங்காவுடன் அமைந்த மரியா கான்டீன் வசீகரமானது. வெள்ளைக்காரர்கள் சென்றபின், அது மாணவர்களுக்கான கான்டீன் ஆனது.
பொதுமக்களும் செல்லலாம் என்றபோதும், தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி மாணவர்களே அதிகம் ஆக்கிரமித்திருப்பார்கள். அங்கே தான் மாணவர்கள் போராட்ட தேதி நிச்சயிக்கப்படும். அது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் காவல் துறையால் விரட்டியடிக்கப்பட்டு, ஆற்றில் குதித்து இறந்து போன சேலம் செவ்வாய்ப்பேட்டை லூர்துநாதனுக்காக நடத்தப்பட்ட போராட்டமாக இருந்தாலும் சரி, மாணவர்கள் குழுவாய்க் கூடி, திட்டமிடும் இடம் மரியா கான்டீன். இன்னொரு புறம், பதின்பருவக் காதல் கனவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் இதே மரியா கான்டீன் இருந்திருக்கிறது. மாணவர்களின் காதல் காவியங்களை இங்குள்ள புங்கை மரங்கள் சொல்லும்.
நெல்லையில் 150 வருட பாரம்பரியம் கொண்ட இந்து கல்லூரி, சவேரியார் கல்லூரி மாணவர்களின் அகம், புறம் சார்ந்த கதைகளை ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை அத்தியாயங்களில் இரு வேறு களங்களில் மாற்றி மாற்றிச் சொல்கிறார் தமிழவன் இந்த நாவலில். நாவலை எப்படிப் படிக்க வேண்டும் என்றும் முதலிலேயே சில அபிப்பிராயங்களையும் சொல்கிறார்.
மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அன்றைய ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எப்படித் தங்களுக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை நாவல் சொல்கிறது. திராவிட இயக்கத்தை அதிகமாகவே விமர்சனம் செய்கிறது. கொஞ்சம் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரையும். இதற்கு முன்பு எளிதில் புரியாவண்ணம் எழுதிய தமிழவன், தற்போது இந்த நாவலை நா.பா.பாணியில் எழுதத் துணிந்த காரணம்தான் தெரியவில்லை.
நெல்லையில் அறுபதை கடந்த ஆசாமிகள், பேருந்தில் பயணிக்கும்போது, " மரியா கான்டீன் ..ஸ்டாப் இறங்குங்க " என்ற கண்டக்டரின் உயர்ந்த சத்தத்தில், ஒரு நிமிடம் தனது கடந்த காலத்துக்குச் சென்று திரும்புவார்கள். தற்போது அந்த நவீன ஸ்கேன் சென்டர் இருக்கும் இடத்தில்தான், புகழ்பெற்ற மரியா கான்டீன் இருந்தது என்பதும், அது இடிக்கப்பட்டு வரலாற்றின் சிதைவுகளுள் முடங்கிக் கிடக்கிறது என்பதும் தற்போதைய திருநெல்வேலி,பாளையங்கோட்டை கல்லூரி மாணவர்கள் அறிந்திராத செய்தி.
(நன்றி: தி இந்து)