இருபத்தைந்து வயது சுரேஷ் பிரதீப்பின் முதல் நாவல் 'ஒளிர்நிழல்'. சுரேஷ் பிரதீப் என்பவர் 'ஒளிர்நிழல்' எனும் நாவலை எழுதிவிட்டு பின்பு தற்கொலை செய்துகொள்வதாக, அந்நாவலுக்கு உள்ளே வெளியே நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக, அந்நாவலை எழுதும் சுரேஷ் பிரதீப்பின் எண்ணப் பதிவுகளாக என ‘மெட்டா ஃபிக்ஷன்’ பாணியில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலுக்குள்ளேயே இந்நாவலைப் பற்றிய விவாதம் நிகழ்கிறது. நாவலுக்கு வெளியே இருக்கும் மாந்தர்கள், இந்நாவலை வாசிக்கும் வாசகனுக்கு மற்றுமொரு கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய தன்மை நமக்கு சுவாரசியமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
இந்நாவல் ஆண்கள், பெண்களின் மன வெளிப்பாடுகள், மரணங்கள் - குறிப்பாகக் கொலை, தற்கொலை - காமம், சாதியம் என அடர்த்தியான விஷயங்களை நிதானமான தொனியில் மிகையுணர்ச்சியற்று விவாதிக்கிறது. இப்படியான தன்மைக்கு நாவலின் வடிவமும் காலத்தைக் கலைத்துப்போட்டிருக்கும் விதமும் உறுதுணையாக இருக்கின்றன. வாசகரின் நுட்பமான வாசிப்பைக் கோரும் வடிவ ரீதியிலான இந்த அம்சம், உணர்வுக்குள் சிக்கிவிடாமல் பேசுபொருளில் நமது கவனத்தை நிலைக்கச்செய்கிறது. அரசியல், சாதியம் சார்ந்த பகுதிகளும், முதன்மைப் பாத்திரங்கள் தவிர பிற சம்பவங்களும் விரிவாக விவரிக்கப்படுவதற்கான இடம் நாவலுக்குள் இருந்தபோதும் அவை சிறுசிறு குறிப்புகளாக, சம்பவங்களாகச் சுருங்கிப் போயிருப்பது மட்டுமே ஒரே குறை. அவை விரிவாக எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில் நாவலுக்குள்ளேயே ஒரு பெரும் விவாதம் நிகழ்ந்திருக்கும். நாவலின் அநேக பக்கங்கள் மரணங்களால் நிரம்பியிருக்கின்றன. பெரும்பாலும் அவை தற்கொலைகளாகவோ கொலைகளாகவோதான் இருக்கின்றன. இத்தகைய துர்மரணங்கள் குறித்த சித்தரிப்புகளில் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு வெளிப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால், அவற்றைக் கையாண்டிருப்பதில் ஆசிரியரின் மொழியும் சித்தரிப்பின் லாவகமும் அசாத்தியமான முதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, கட்டிட வேலை நடக்கும் இடத்தில் ‘வாட்ச்மே’னாகப் பணிபுரியும் சுந்தரம் தாத்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி. சுந்தரம் தாத்தா தூக்கு மாட்டிக்கொள்ளும் சமயத்தில், கட்டிடத்தின் மேலே சிறுவன் ஒருவன் விளையாடச் செல்கிறான். அந்த அத்தியாயம் இப்படி முடிகிறது: ‘சுந்தரம் கயிற்றை மாட்டித் தொங்கியபோது மேலே ‘ஜிங்ஜிங்’ என குணா குதித்துக்கொண்டிருப்பதைத் தன் உடலில் உணர்ந்தார்.’
காதலியை அன்னையோடு ஒப்பிடும் வழக்கம் தேய்வழக்காகிப்போன நிலையில் '... வேம்பு தடவிய அன்னையென என்னை விலக்கினாள்' என அவ்வுறவினையும் அப்போதைய அவர்களது மனநிலையையும் துல்லியப்படுத்தியிருப்பதும், 'முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் சிறுவனை அன்னையின் சமாதானம் அழவைப்பது போல' என அழகுற எழுதப்பட்டிருக்கும் வரிகளும் ரசிக்கும்படி உள்ளன.
அசோகமித்திரனின் முதல் நாவலான ‘கரைந்த நிழல்க’ளைப் போல ‘ஒளிர்நிழ’லிலும் எண்ணற்ற பாத்திரங்கள். சிறுசிறு பாத்திரங்களும் மிக நேர்த்தியாக வார்க்கப்பட்டிருக்கின்றன. வடிவரீதியிலான அம்சங்கள், கதாபாத்திர வார்ப்பு, மொழி என தனது முதல் நாவலிலேயே சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார் சுரேஷ் பிரதீப். பக்க அளவில் மிகச் சிறியது எனினும் நுட்பமான படைப்பு. 'ஒளிர்நிழல்' தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு நல்வரவு!
(நன்றி: தி இந்து)