மலாலாவை உருவாக்கிய மாயக்காரர்!

மலாலாவை உருவாக்கிய மாயக்காரர்!

“மலாலா… நீ ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாய் என எனக்குப் புரியவேயில்லை. அப்படி நீ என்ன செய்துவிட்டாய்?” – ஐ.நா. சபையில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த மலாலாவிடம், இந்தக் கேள்வியை கேட்டது வேறு யாருமல்ல; அவருடைய இளைய சகோதரன் அடல்தான்.

“நோபல் பரிசைப் பெறும் முதல் பாஷ்டூனாக, பாகிஸ்தானியாக, மிகவும் குறைந்த வயதில் இந்தப் பரிசை பெறுபவளாக நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். தன் சகோதர்களுடன் இன்னும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண், நோபல் பரிசு பெறுவது இதுதான் முதல்முறையாக இருக்கும். உலகெங்கும் அமைதி நிலவவேண்டும் என நான் நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், அதற்காக என் வீட்டில் சகோதரர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்” – அமைதிக்கான நோபல் பரிசு பெற்றபின் மலாலா பேசியது இது. கல்வி உரிமைப் போராளியாக, தாலிபான்களின் தாக்குதலில் இருந்து மீண்டுவந்தவராக, பாகிஸ்தானில் இருந்து உலக அமைதிக்காக குரல் எழுப்புபவராக மட்டுமே அறியப்பட்ட மலாலாவின் இன்னொரு பக்கம், இப்படித்தான் சராசரி குடும்பங்களுக்கே உரிய சந்தோஷங்களால் நிரம்பியது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் 1997-ல் ஒரு மகள் பிறக்கிறாள். மகன் பிறந்தால் மட்டுமே கொண்டாடக்கூடிய ஊரில் ஒரு மகளாகப் பிறக்கிறாள். ஆனால், மூன்று தலைமுறைகளாக பெண் குழந்தைகளே பிறக்காத அந்தக் குடும்பத்தில், தனக்கு பேத்தி பிறந்திருப்பதை எண்ணி மகிழ்கிறார் அந்த தாத்தா. மைவான்ட் பள்ளத்தாக்கின் சாகச நாயகியான ‘மலாலை’-யின் பெயரை அவளுக்குச் சூட்டுகிறார். அதற்கு துன்பங்களை சுமப்பவள் என்று பொருள். அதில் கொஞ்சம் மகிழ்ச்சியை சேர்க்கும் பொருட்டு,’மலாலா’ எனப் பெயரிடுகிறார். உலக மேடைகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த மந்திரச் சொல், இப்படித்தான் பிறந்தது.

மலாலாவின் குடும்பம் பாஷ்டூனியக் குடும்பம். பாகிஸ்தானில் இருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்குதான் இவர்களின் பூர்விகம். காஷ்மீருக்கு சற்றும் குறையாத எழிலோடு விளங்கிய பள்ளத்தாக்கு அது. அதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாத அந்த இடத்திற்கு அமெரிக்காவின் மூலம் வருகிறது முதல் பிரச்னை. பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானை எண்ணெய் வளங்களுக்காக ஆக்கிரமிக்க நினைக்கிறது அமெரிக்கா. ஆனால், ரஷ்யாவின் கொடி அங்கே பறந்துகொண்டிருப்பதால், நேரடியாக களமாட முடியாத சூழல். அதற்காக கையிலெடுத்த அடுத்த ஆயுதம், மதம். நாத்திகர்களான ரஷ்யர்கள், இஸ்லாமிய மண்ணான ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஆப்கானிஸ்தானிய இளைஞர்கள் மீது தூவியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக, பாகிஸ்தானுக்கு ஓடிவந்த இளைஞர்களுக்கு பாகிஸ்தானின் உதவியுடன் ராணுவ பயிற்சிகளை அளித்தது. இஸ்லாமிற்கு ஆபத்து என்ற எண்ணம் பரவவே, பல இளைஞர்களும் ஆயுதம் ஏந்திக்கொண்டு காந்தகார் நோக்கி ஓடினர். பல இஸ்லாமிய நாடுகளும் பொருளுதவி செய்தன. விளைவு, தாலிபான்கள்.

ஜிஹாதியாக ஆப்கானிஸ்தான் சென்று போரிடுவது என்பது இஸ்லாமிய இளைஞனின் ஆறாவது கடமை என்றே, பாகிஸ்தான் மதராஸாக்களில் போதிக்கப்பட்டது. ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திக்கொண்டு, போரிட புறப்பட்டனர். மலாலாவின் அப்பாவான ஜியாவுதீனுக்கும் அழைப்பு வருகிறது. அவரும் இந்தக் கதைகளை நம்பி, துப்பாக்கியை ஏந்தியிருக்கலாம். ஆனால், அவரோ சண்டையை விடவும் மக்களுக்கு கல்விதான் முக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். “கல்விதான் அறியாமையை நீக்கும்; தம் மக்கள் கல்வியைப் பெற்றுவிட்டாலே போதும்; பழமைவாத சிந்தனைகளில் இருந்து வெளியேவந்துவிடலாம்” என நம்பினார். தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு, உடனே பள்ளி ஒன்றையும் துவங்குகிறார். ஆண், பெண் அனைவருக்கும் கல்வி; மதம் கற்றுத்தந்த மதராஸாக்களுக்கு மாறாக் அறிவியலையும், வரலாறையும் போதிக்கிறார். இந்தக் கல்விப் பணிகளோடு சேர்த்து, அந்தப் பகுதியில் தொழிற்சாலைகளால் மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலுக்காகவும் போராடுகிறார். விரைவில் அந்தப் பகுதியில் மதிக்கத்தக்க நபராக மாறுகிறார். ஆனால், பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்கள் வரவில்லை. செலவு கையைக் கடிக்கிறது. இருந்தாலும்கூட, தன்னைப் போலவே தன் மக்களும் கல்விபெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தொடர்ந்து பள்ளியை நடத்துகிறார். சிறிது சிறிதாக உயர்கிறது மாணவர்களின் எண்ணிக்கை. இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொருபக்கமோ ஸ்வாட்டை முழுவதுமாக தாலிபான்கள் ஆக்கிரமிக்கத்தொடங்குகின்றனர்.

ஷரியத் சட்டத்தை பள்ளத்தாக்கில் அமல்படுத்த நினைக்கும் தாலிபான்களின் பணி, மதராஸாக்களில் இருந்தே துவங்கியது. மேற்கத்திய கல்விமுறை எனச் சொல்லி கல்விக்கு எதிராக நடத்திய பிரசாரங்களுக்கு பள்ளிகள் இரையாயின. நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் பள்ளத்தாக்கின் பல பள்ளிகள் சேதமடைந்தன. இந்த விஷயம் மலாலாவையும், ஜியாவுதீனையும் வருத்தமடையச் செய்தது. ஏற்கெனவே பல முல்லாக்கள், ஜியாவுதீனிடம் பள்ளியை மூடும்படியும், பெண்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கக்கூடாது என்றும் கூறிவந்தனர். அவற்றையெல்லாம் இவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், பள்ளத்தாக்கிற்கு இன்னொரு இடியாக வந்து சேர்ந்தது ஒரு வானொலி நிலையம். அதன் பெயர் முல்லா ரேடியோ.

ஃபசுலுல்லா என்ற தாலிபான் நடத்திய வானொலி நிலையம் அது; தினந்தோறும் அதில் ஃபசுலுல்லா உரையாற்றுவான். முதலில் இஸ்லாமின் பெருமைகளையும், மேன்மைகளையும் எளிய மொழியில் விளக்கவே ஸ்வாட்டின் பெரும்பாலான மக்கள் ஃபசுலுல்லாவின் பேச்சுக்கு ரசிகர்களாக மாறினர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உரையில் நஞ்சு கலக்க ஆரம்பித்தான் ஃபசுலுல்லா. புனித நூலில் இல்லாத விஷயங்களைக் கூட, நம்பும்படி மக்களிடம் கூறினான். ஆடல்பாடல், சினிமா டி.வி.டி.க்கள், புத்தகங்கள், தொலைக்காட்சி போன்ற அனைத்திற்கும் தடை விதித்தான். அவனின் உத்தரவுக்கு உட்பட்டு செயல்படுபவர்களை வானொலியில் தினமும் பாராட்டினான். மக்களுக்கு உடைக்கட்டுப்பாடுகள் விதித்தான். கேளிக்கைகளை முழுவதுமாக தடை செய்தான்.இந்த வானொலி உரைகள் மக்கள் மத்தியில் வெகுவிரைவில் பிரபலம் அடைந்தன. அப்படி, திடீரென ஒருநாள் மலாலாவுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டான். ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குப் பின்னர் எந்தப் பெண்ணும் பள்ளிக்கு செல்லக்கூடாது என்பதுதான் அது. ஜியாவுதீனுக்கும், மலாலாவுக்கும் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

பாகிஸ்தான் நாட்டு அரசு, தாலிபான்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தாலிபான்களுக்கு எதிராக பள்ளிக்கு செல்வது என்பது பெண்களுக்கு பாதுகாப்பானதில்லை என்பது ஜியாவுதீனுக்குத் தெரியும். இறுதியாக, ஒருநாளில் மலாலாவின் பள்ளிவாழ்வு முடங்கியது. எப்படியும் தாலிபான்கள் விதியைத் தளர்த்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தாள். ஆனால் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. இந்தக் கட்டுப்பாடுகள் குறித்தும், தாலிபான்களின் படுகொலைகள் குறித்தும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிடம் ஜியாவுதீன் பேசி வந்தார். அப்போது அவரின் நண்பரும், பி.பி.சி.,யின் நிருபருமான அகமதுகான் ஒரு கோரிக்கை விடுத்தார். தாலிபான்களால் எப்படி ஸ்வாட்ட்டின் பள்ளிவாழ்க்கை முடங்கியது என்பதுகுறித்து ஏதேனும் ஒரு சிறுமி எழுதமுடியுமா என்று கேட்கிறார். பலகூட்டங்களுக்கு ஜியாவுதீனுடன் சென்றிருப்பதால், அவருக்கு மலாலாவை ஏற்கெனவே தெரியும். உடனே யோசனை மூளையில் உதிக்கவே, ஏன் மலாலாவே எழுதக்கூடாது எனக்கேட்கிறார் அகமதுகான். மலாலாவும் ஓகே சொல்ல, உடனே உருதுமொழியில் ஒரு வலைப்பூ தயாராகிறது.

மலாலா என்ற பெயரிலேயே எழுதினால், தாலிபான்களால் பிரச்னை வரலாம் என்பதால், ‘குல்மக்காய்’ என்ற பெயரில் எழுதுகிறாள் மலாலா. இதுவும் நாட்டுப்புறக்கதையில் வரும் ஒரு வீராங்கனையின் பெயர். ஸ்வாட் பள்ளத்தாக்கில் பள்ளிகளுக்கு செல்ல பெண் குழந்தைகள் படும்பாடு, தாலிபான்களின் அடக்குமுறைகள், இராணுவத்தின் அலட்சியம், பெண்களின் நிலை எனத் தொடர்ந்து அந்த வலைப்பூவில் எழுதுகிறாள். முல்லா ரேடியோ போலவே, விரைவில் இந்த குல்மக்காயின் டைரி குறிப்புகளும் பிரபலமடைகின்றன. மலாலாவின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும், இது மலாலா எழுதுவது என்பதே தெரியாது. இதைத்தொடர்ந்து உலகின் பல்வேறு ஊடகங்களும் பள்ளத்தாக்கின் நிலைமை குறித்து பேச, மலாலாவையும், ஜியாவுதீனையும் அழைக்கின்றன. ஸ்வாட்டிலும், அதற்கு வெளியேயும் தாலிபான்களுக்கு எதிராக சளைக்காமல் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர் இருவரும். பாகிஸ்தானின் தேசிய அமைதி பரிசு, ஐ.நா. சபையில் உரை என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறார் மலாலா. இவையெல்லாம் நடந்துகொண்டிருந்த போது மலாலாவின் வயது வெறும் 15.

இதற்கிடையே பலதடவை, ராணுவத்தின் மூலம் தாலிபான்களை அச்சுறுத்தி வந்தது பாகிஸ்தான் அரசு. இருந்தாலும் தாலிபான்களின் வெறியாட்டம் ஓய்வதாக இல்லை. ஜியாவுதீனின் நெருங்கிய நண்பர் ஒருவரை தெருவில் வைத்தே சுடுகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பின்னர் கொஞ்சம் ஆடிப்போகிறது மலாலாவின் குடும்பம். காரணம், பலரும் அடுத்த இலக்கு மலாலாவின் தந்தைதான் என எச்சரித்துக் கொண்டிருந்ததால், அந்தப் பதட்டம் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. தலையணையின் அடியில் கத்தியை வைத்துக்கொள்வது, வீட்டின் பின்புறம் ஏணியை தயார் நிலையில் வைப்பது, அனைத்து ஜன்னல்களையும் முழுவதுமாக சோதித்துவிட்டு தூங்கப்போவது என முழு அலர்ட்டில் இருக்கிறது இவர்களின் குடும்பம். இதே அச்சுறுத்தல் மலாலாவுக்கும் இருந்தாலும், அவள் ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினாள்; தாலிபான்கள் சிறுமிகளை ஒருபோதும் கொல்லமாட்டார்கள் என்பதே அது. ஆனால், இதனைப் பொய்யாக்கிவிட்டனர் அவர்கள். தேர்வு எழுதிவிட்டு, தன் தோழிகளுடன் வீடுதிரும்பிக்கொண்டிருந்த மலாலாவின் பேருந்து முன்பு திடீரென ஒருவன் வந்து நிற்கிறான். மொத்தம் மூன்று குண்டுகள் சரமாரியாகப் பாய்கின்றன. முதல் குண்டு, மலாலாவின் இடது கண்ணில் பாய்கிறது. இரண்டாவது குண்டு, உடனிருந்த தோழியானா ஷாசியாவின் மீது; மூன்றாவது குண்டு, மற்றொரு தோழியான கைனத்தின் மீது உரசிச் செல்கிறது. மலாலா மயங்கி சரிகிறாள்.

விஷயம் வெகுவேகமாக ஊடகங்களிடம் பரவுகிறது. பாகிஸ்தான் தாண்டியும் எதிரொலிக்கின்றன மலாலாவிற்கான பிரார்த்தனைகள். ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த மலாலாவின் அப்பா, உடனே மருத்துவமனைக்கு ஓடிவருகிறார். செய்தி காதில் விழுந்த அடுத்தநொடியே, வீட்டில் ஓதத்துவங்குகிறார் அம்மா. சிகிச்சை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நிலைமை கைமீறிப் போனதை உணர்கிறார்கள் மருத்துவர்கள். ராணுவம் களத்தில் இறங்குகிறது. அங்கிருந்து ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கேயும் முழு சிகிச்சை அளிக்கமுடியுமா எனத் தெரியவில்லை. அதிநவீன சிகிச்சை வசதிகள் கொண்ட மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். ம்ஹூம்… உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மொத்தம் 6 நாட்கள் கழிந்துவிட்டன. இனிமேலும் இங்கிருந்தால் ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். வெளிநாட்டிற்கு சிகிச்சையளிக்க அழைத்துச் செல்லலாம்; ஆனால், “அது தேசத்திற்கு அவமானமாச்சே?” தயங்குகிறது பாகிஸ்தான். “எங்கள் விமானத்தை தருகிறோம். உடனே வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” – கைகொடுக்கிறது சவூதி. சமயம் பார்த்து உதவவருகின்றனர் மருத்துவர் ஃபியானோவும், மருத்துவர் ஜாவித்தும். பிர்மிங்காமில் இருக்கும் மருத்துவமனையில் இருவரும் மருத்துவர்கள். உடனே தங்கள் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதி கேட்கிறார்கள். அனுமதியளிக்கிறது நிர்வாகம். பாஸ்போர்ட், விசா, இன்னபிற சிக்கல்களை பாகிஸ்தான் கவனித்துக்கொண்டது. உடனே விமானம் மூலம் பிர்மிங்காம் கொண்டுசெல்லப்படுகிறார் மலாலா. அத்தனை ஏற்பாடுகளும் மின்னல் வேகத்தில் நடக்க, திடீரென முளைக்கிறது ஒரு சிக்கல். மலாலா மற்றும் அவரது அப்பா ஆகிய இருவருக்கும் மட்டுமே பாஸ்போர்ட் கிடைக்கிறது. அம்மாவுக்கும், சகோதரர்களுக்கும் கிடைக்கவில்லை. “மகளுக்காக பிர்மிங்காம் செல்லலாம். ஆனால் இங்கிருக்கும் நம் குடும்பத்திற்கு தாலிபான்களால் ஆபத்து வந்தால் என்ன செய்வது?”- அலை அலையாய் எழுகின்றன கேள்விகள்; யோசித்தபடியே நிற்கிறார் ஜியாவுதீன். “எனக்கு என் மகள் எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே என் குடும்பமும் முக்கியம். நான் இவர்களை விட்டுவிட்டு பிர்மிங்காம் சென்றால், இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை”
நன்கு யோசித்து முடிவெடுக்கிறார் ஜியாவுதீன். இறுதியாக மலாலா மட்டுமே விமானம் மூலம் பிர்மிங்காம் அழைத்துச் செல்லப்படுகிறார். உடனே அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறுகிறது. சில நாட்களுக்குப் பின்னர் இறுதியாக கண்விழிக்கிறார் மலாலா. ஊடகங்கள் மருத்துவமனையின் வெளியே தவமிருக்கின்றன. மலாலாவின் குடும்பம் பலநாட்களுக்குப் பின்னர் பிர்மிங்காம் வருகிறது.

அவ்வளவுதான்; அதன்பின் அத்தனையும் சுபம்.

சிகிச்சையில் இருந்து மீண்ட மலாலா இன்று பிர்மிங்காமிலேயே வசித்துவருகிறார். அவருடைய இலக்கான “அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி” என்ற இலட்சியத்தையும் அடையப் போராடிவருகிறார்.

மலாலாவின் கதையிலிருந்து இரண்டு விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

முதல் விஷயத்தை மலாலாவின் உரையில் இருந்தே குறிப்பிடுகிறேன்.”சிலர் என்னை தாலிபான்களால் தாக்கப்பட்ட சிறுமி என அழைக்கின்றனர்; சிலர் என்னை கல்விக்காகப் போராடும் சிறுமி என அழைக்கின்றனர். ஆனால், இந்த உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் கல்வி கிடைக்கப்போராடும் பெண் என அழைக்கப்படவே விரும்புகிறேன்.” தன் அடையாளம், எதிரிகளால் அல்ல; தன் செயல்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. தன்னுடைய செயல்பாடுகளால், அதனை நிரூபித்துவிட்டார் மலாலா. இந்த எண்ணமும், திண்ணமும்தான் மலாலாவிடம் இருந்து இன்றைய சிறுவர்கள் கற்கவேண்டிய விஷயம்.

இரண்டாவது, மலாலாவின் அப்பா ஜியாவுதீன். பாகிஸ்தானின் தேசிய அமைதிப் பரிசை வாங்கிவிட்டு, பள்ளிக்குள் நுழையும்போது தோழிகள் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். அப்போது மலாலா சொல்லும் விஷயம் இதுதான். “எனக்குக் கிடைத்த தந்தையைப் போலவே, இவர்களுக்கும் கிடைத்திருந்தால், இவர்கள் அத்தனை பேருமே மலாலாக்கள்தான்.” இது முழு உண்மையும் கூட. ஜியாவுதீன் மட்டும், மற்ற பெற்றோர்களைப் போல, மலாலாவிற்கு கல்வியளிக்காமலோ, சுதந்திரம் அளிக்காமலோ போயிருந்தால், மலாலாவின் சிறகுகள் விரிந்திருக்காது; வெட்டப்பட்டிருக்கும். அதற்காகவே அவருக்கு ஒரு சல்யூட்!

ஆம். மலாலாக்கள் பிறப்பதில்லை; வளர்க்கப்படுகிறார்கள்!

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp