‘மீஸான் கற்கள்’ என்ற நாவலின் மூலம் புகழ்பெற்ற குஞ்ஞப்துல்லாவின் மற்றுமொரு நாவல் ‘மஹ்ஷர் பெருவெளி’ ஆகும். பரலோகம் எனப் பொருள்படும் இந்த நாவலில் பூமிப் பெருவெளியில் நடக்கும் அனைத்துமே பரலோகத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்குகிறது.
அல்காரா குன்றின் அடிவாரத்திற்குப் பனாரஸ் பட்டு, காஷ்மீர் சால்வை முதலானவற்றை விற்பனை செய்வதற்காகப் பத்தானியர்களான நான்கு சகோதரர்கள் வந்துசேர்கிறார்கள். பெருங்குன்றுகளின் அடிவாரத்தையொட்டிச் செல்லும் நீண்ட ரயில் பாதை, அங்கிருந்து தொடங்கும் சமவெளி, சமவெளியை ஒட்டிச் செல்லும் பேராறு. அழகிய இந்த அடிவாரத்தில் தன் மனைவி கபரா’விற்காகப் பெருமாளிகையை அமைக்கும் மூத்த சகோதரர் யாக்கோபு, தன் இளையவர்கள் இஸ்மாயில், சக்காயி, சிமயோன் மற்றும் வேலைக்காரப் பரிவாரங்களோடு அம்மாளிகையில் குடியேறுகிறார். அரண்மனை என்றழைக்கப்படும் இந்த வீட்டையும் குடும்பத்தையும் தவிர, அஞ்சல் நிலையக்காரரான யோகன்னான், எப்போதோ ஒரு நாளைக்கு இருமுறை வந்துபோகும் ரயிலுக்காக ஒரு நிலையமும், அதையொட்டி வாழும் ஸ்டேஷன் மாஸ்டர் கபிரியேலும் அவர் மனைவி சாராவும், பெரிய மூலிகைத் தோட்டத்தில் வாழும் மருத்துவரான செய்கு முஹ்யித்தீன் மற்றும் அவரது மக்கள் ஏலியாவும் மாமோனும் ஆகிய இவர்கள் மட்டுமே வசிக்குமொரு பெருவெளிதான் அல்காரா குன்றின் அடிவாரம்.
ஏலியா இஸ்மாயிலை மணக்கிறாள்; அரண்மனைக் குடும்பத்தினர் அனைவராலும் விரும்பப்படுகிறாள். ஏலியாவுக்கு ஒரு குழந்தை பிறந்ததும், பக்தி மார்க்கத்தில் அதிகம் ஈடுபாடு கொண்ட இஸ்மாயில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஏலியா கடைசிவரை அந்தக் குடும்பத்தோடே வாழ்கிறாள். யாக்கோபு மற்ற இரு சகோதரர்களுடன் பர்மா சென்று அனைவரும் பெரிய வியாபாரிகளாகி பணக்காரர்களாகிறார்கள். ஏலியாவின் சகோதரனான மாமோன் பிழைப்பு தேடிப் பர்மா சென்று கடைசியில் யாக்கோபுவிடம் வந்துசேர்கிறான். யாக்கோபுக்குப் பர்மாக்காரி மூலம் பிறந்தவர்கள் மூஸாமேனும் ஜூலியாவும் ஆவர். ஒழுக்கக்கேட்டின் உச்சத்திற்கே செல்லும் மூஸாமேனைத் திருத்த முடியாத யாக்கோபு அவனையும் ஜூலியாவையும் அல்காரா குன்று மாளிகைக்கு அனுப்பி வைக்கிறார். மாமோன் ஜூலியாவை மணந்து இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெறுகிறான். இவர்களில் இளையவன் கண்ணோட்டத்தில் கதை நகர்கிறது. இந்த நாவல் ஒரு பெருங்குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்வது போலத் தோன்றினாலும் ஊர் திரும்பிய மூஸாமேன் நடத்தும் சீரழிந்த ஒழுக்கக்கேடான வாழ்க்கையைச் சொல்வதாகவே அமைந்துள்ளது. ஏலியாவைத் தவிர இந்த நாவலில் வரும் எந்தப் பெண்ணும் பால்வெறி உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்களாக இல்லை. இதுவே பரலோகம்.
அல்காரா குன்றுவுக்கு வந்துசேரும் மூஸாமேன் தான் தொடர்புகொள்ளும் பெண்கள் – கபரா’வின் தனிப்பட்ட வேலைக்காரி மரியம், ஸ்டேஷன் மாஸ்டர் மனைவி சாரா, தன் உறவினனான ‘தாலி’ என்பவனைக் காணும்போது உறவு ஏற்பட்ட பெண்கள், தமிழ் நாட்டுக்காரியான சிவசங்கரி, இறுதியில் கம்மாளப் பெண்ணான அம்மாளு – அனைவரையும் தான் அனுபவிப்பதற்கே உரிய பெண்களாகக் கருதுகிறான். தன் கணவன் கபிரியலோடு வாழும்போதே மூஸாமேனோடும் உறவுகொள்ளும் சாரா, பின்னர் தாலி, ரிச்சர்டு என்பவர்களோடெல்லாம் உறவு கொண்டு, அவள் இலட்சியவதியான “கர்பவதியாகி” மீண்டும் கணவனோடு வந்துசேர்கிறாள்.
இந்த நாவலில் முன் வைக்கப்படும் அல்லது தலைதூக்கி நிற்கும் உணர்ச்சிகள்/ கருப்பொருள்கள் இரண்டுதான்: காமவெறியும் குடிவெறியும். நாவலின் கதை சொல்லும் போக்கால் ஏலியாவின் அன்புள்ளம், மாமோனின் ஒழுக்க வாழ்க்கை என அனைத்தும் பின்னுக்குச் செல்கிறது. நாவலாசிரியர் இந்தப் ‘பெருவெளியில்’ காட்ட விரும்பும் வாழ்க்கைதான் என்ன என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. பரிவு மிக்க கபராவும் கூட, தன் வேலைக்காரி மரியத்தைக் குளியலறையில் கட்டித் தழுவுகிறாள். மாமோனின் பெரிய மகன் காமப் புத்தகங்களிலும் கம்யூனிசத்திலும் பற்றுக் கொள்கிறான். இறுதியில் இ.எம்.எஸ். முதன் முதலாக ஆட்சி ஏற்பதோடு நாவல் முடிகிறது.
இடையிடையே இறைவனை, ஆன்மீகத்தைக் குஞ்ஞப்துல்லா இழுத்துக் கொண்டுவந்து காட்டுகிறார். திரைப்படத்தில் சம்பந்தமில்லாமல் வரும் ‘காமெடி சீன்’ போல இவை உள்ளன. “இறைவன் நினைத்தால் மனித ஆத்மாவை, அவனது சிதறிப்போன பருப்பொருள்களோடு சேர்த்து மறு உற்பத்தி செய்துவிட முடியும். கண்மூடித்தனமாக எதையும் நம்பவேண்டும் என்று எந்த மதமும் சொல்வதில்லை” எனக் கூறுகிறார். இறை நம்பிக்கையில் பொதுவாகத் தலையீடு இல்லை. “ஆனால் கண்மூடித்தனமாக ஒன்றை அறிவுக்குப் பொருத்தமில்லையென்று பகுத்தறிவாளர்கள் நிராகரித்துவிடுகிறார்கள்” என்கிறார். அப்படிக் கண்மூடித்தனமாக நிராகரிப்பவன் பகுத்தறிவாளன் இல்லை என்பதுதான் நடப்பு. ஆசிரியரின் இந்தப் பார்வை, இறுதியில், கம்யூனிஸ்டுகளைக் கொள்ளைக்காரர் களாகக் காட்டுவதில் சென்றுமுடிகிறது.
ஸ்டேஷன் மாஸ்டரையும் அவர் மனைவி சாராவையும் தன் வீட்டுக்கு அழைத்து, குடியில் மயக்கி, பன்றி இறைச்சி சாப்பிட்டு, சாராவோடு உறவுகொள்வதில் குடும்பத்தின் மூத்தவளாகிய கபரா காணும் குற்றம் பன்றி இறைச்சி சாப்பிட்டது மட்டுமே; மரியத்தோடு உறவு கொண்டது தவறில்லை, பெண்ணுறுப்புகளைக் கேவலமாக உபயோகிப்பதுதான் தவறு என்று அறிவுரை கூறுகிறாள் கபரா.
சாராவுக்கோ ஆண்களோடு உறவுகொள்வது முக்கியமில்லை; எப்படியாவது கர்ப்பப் பேறு பெறவேண்டும். தாலியும் மூஸாமேனும், கர்பவதியாகிவிட்ட சாரா’வைத் தேவதூதனைப் போன்ற அவள் கணவனிடமே சேர்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கபரியேலிடம் சேர்க்கின்றனர்.
“நான் உங்களை வேதனைப்படுத்தி விட்டேனா” என்கிறாள் சாரா. “இல்லை. நீ உடல் மீதான ஆர்வம் கொண்டவளல்ல, எனக்குத் தெரியும். பாலுணர்வைவிட தாய்மை உணர்வுதான் உன் நோக்கம். அதை நீ நிறைவேற்றிக் கொண்டாய். நன்றி, ஓராயிரம் முறை நன்றி” என்கிறான் கணவன் கபிரியேல். இடையில் வரும் இன்னொரு பெண் சிவசங்கரி. மூஸாமேனிடம் கடன்பட்ட வரதராஜ முதலியார் வேறுவழி/ பொருளின்றி தன் மூன்றாவது மனைவி சிவசங்கரியை அடைமானப் பொருளாகத் தருகிறான். ‘ஜின்’ மட்டுமே குடிக்கும் “சிவசங்கரி எல்லாத் தமிழ் பண்பாடுகளுமுள்ள ஒரு பெண்” எனக் கூறுகிறார் – அங்கங்களை வர்ணிக்கிறார் ஆசிரியர்.
குஞ்ஞப்துல்லா கூறவரும் வாழ்க்கை, விழுமியங்கள், கம்யூனிசத்தின் எழுச்சி என யாவும் எந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கும் பொருந்துவதுமன்று; ஏற்புடையதுமன்று என்ற உணர்வே இந்த நாவலை வாசிக்கும்போது ஏற்படுகின்றது.
“பரலோகம் (மஹ்ஷர் பெருவெளி) என்ற இந்தப் புதிய நாவலில் புதிய கற்பனைகள் எதுவுமில்லை. வாழ்க்கையில் நான் அனுபவித்ததும், படித்ததும், கேள்விப்பட்டதுமான எல்லா நாவல்களிலும் இருப்பதைப் போன்ற விஷயங்களே இதிலும் இருக்கின்றன” என்ற ஆசிரியர் குறிப்பு உண்மை வாக்கானால், புதிய கற்பனைகளும் செய்திகளுமற்ற இந்த நாவல் படைப்புலகில் வீணானது என மென்மையாகவும்; அற்பத்தனமானது என வன்மையாகவும் தான் கூறமுடியும்.
“யதார்த்த வாழ்க்கையிலும் சமூகம் சார்ந்தும் இதுபோன்ற பொறுமையின்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். களங்கமற்ற மனிதர்களுக்கு இப்படி நிகழ்வதுண்டு. அதனால் தான் திடீரென்று ஒருநாள் குஞ்ஞப்துல்லா பி.ஜே.பி.காரனாக அவதாரமெடுத்தார்... கவிழ்த்து வைத்த குடத்தின் மீது தண்ணீரை ஊற்றுவதுபோல்தான் குஞ்ஞப்துல்லாவிடம் தத்துவ சாஸ்திரங்கள் எதுவுமே அண்டாது. தாமரை இலைத் தண்ணீரைப் போல எல்லாமே உருண்டோடிப் போய்விடும்” என்னும் சக்கரியாவின் கூற்று குஞ்ஞப்துல்லாவை நியாயப்படுத்தும் விதமாக இருக்கிறதேயொழிய, இந்த நாவலுக்குள் இதன் சுவடு எங்குமில்லை. படைப்பாளன் கவிழ்த்து வைத்த குடமல்ல; கைகள் முளைத்த, நிமிர்த்தி வைக்கப்பட்ட குடம்.
“புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் மாந்த்ரீக யாதார்த்தமும் நேர்கோட்டுத் தன்மையிலானவை” என்னும் குளச்சல் மு.யூசுப் கூற்று இந்த நாவலைப் பொறுத்தவரைக்கும் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. இது நவீனத்துவத்திற்கு எதிரானது; பின் நவீனத்துவம் என்றால் வெறும் வரையறையற்ற புணர்ச்சி வெறி எனக் கூறுவது, நேர்க்கோட்டுத் தன்மைக்கு எதிரானது.
கம்யூனிஸ்டுகளைப் பற்றிய படப்பிடிப்பு, அதுவும் இ.எம்.எஸ். முதன்முதலாக முதன் மந்திரியாவதற்கு முன்பிருந்த கம்யூனிச இயக்கம் பற்றிய வரைபடம் மிகவும் மோசமானது அல்லது எழுத்தாளனின் உள்ளாளுமையைக் காட்டுவது.
‘கம்யூனிஸ்டுகள், வீடுகளுக்குள் – செல்வந்தர் வீடுகளுக்குள் – அராஜகமாக நுழைவார்கள். பெண்களை மானபங்கப் படுத்துவார்கள். ஆண்களைச் சிறை வைப்பார்கள். குழந்தைகளைக் கொல்வார்கள். எல்லா ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையடிப்பார் கள்... கொட்டாரங்களை மட்டுமல்ல, விவசாய பூமிகளையும் அவர்கள் கைப்பற்றுவார்கள். அல்காரா குன்றையும் அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். புதிய வானத்தையும் புதிய பூமியையும் தேடி நாம் எல்லோரும் போக வேண்டியதுதான்’. முன்னோர்கள் காலம் முதல் இன்றைய காலம் வரையிலும் கம்யூனிச எழுச்சியை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றக் காலத்தில் இப்படிப்பட்ட வன்முறை எப்போதும் நடைபெற்றதில்லை. குஞ்ஞப்துல்லா கருத்துக் குருடரா, கருத்துக் குழப்பவாதியா என வாசகர்தான் முடிவு செய்ய வேண்டும்.
கம்யூனிஸ்டுகளைக் கொடும் மனிதாபிமானமற்ற கொள்ளைக்காரர்களாகக் கதை நெடுகக் காட்டிவிட்டு இறுதியில், “இஸ்லாத்தின் வருகைக்குப் பிறகு உருவானவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு கம்யூனிஸம்” எனக் குறிப்பிட்டு விடுவதாலேயே குஞ்ஞப்துல்லா நியாயவானாகிவிட முடியாது. கம்யூனிசத்தையும் ஒரு மதமாக்கிக் காட்டும் சூழ்ச்சியும் – சூட்சுமமும்தான் இந்த இறுதி முடிவு.