எனது பொழுதுபோக்கு ஏற்கனவே பதவியிலிருந்த அமைச்சர்களை நீக்கிவிட்டுப் புதிய அமைச்சர்களை நியமிப்பது. மறுநாள் அரசிதழ்களில் நீக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்களைக் காண்பது எனக்குக் குதூகலம் தரும் - முசோலினி
இந்தப் புத்தகம் தமிழ், இந்திய சினிமாக்காரர்கள் கையில் கிடைக்காமல் இருக்கவேண்டும். இளம் இயக்குநர்களின் பார்வையில் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டால் அவர்களில் பலர் பல கோடிகளையும், பேரும் புகழும் சம்பாதிக்கப்போவது நிச்சயம்.
வரலாறு என்பது ஒரு புனைவு. புனைவு என்பது ஒரு வரலாறு.
இந்தக் குறிப்பை எங்கேயோ படித்த ஞாபகம் வந்தது. நாம் படிக்கும் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்வதுமில்லை. அல்லது படித்தது சரிதானா என்பதை உரசிப்பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைவதும் வெகு அபூர்வம். அப்படி ஒரு அபூவர்மான சந்தர்ப்பமாக அமைந்ததுதான் மகாராஜா என்கிற இந்தப் புத்தகம். திவான் ஜர்மானி தாஸ் என்பவர் பாட்டியலா,கபூர்தலா மாகாணங்களில் அமைச்சராகப் பணிபுரிந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
எண்பதுகளில் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது மிகவும் பிரபலம். அந்தப் புத்தகத்தைத் தமிழில் இப்போது சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள். இந்த நுலைப் பொன்.சின்னத்தம்பி முருகேசன் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.
வரலாற்று நாவல்கள் யாவும் மிகவும் விறுவிறுப்பான பாணியில் ஒரு மர்ம நாவலைப் படிப்பது போலவும்,அல்லது அந்தப்புர இளவரசிகளின் காதலைக் காமரசம் சொட்டச்சொட்ட எழுதிவற்றைதான் வாசித்து பழகியிருக்கிறோம். வேறு வகையில் நமக்கு வரலாறு அறிமுகமாகியிருக்கவில்லை. கிட்டத்தட்ட அதே பாணியில்தான் இந்த உண்மையான வரலாறும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு வரலாற்றின் பக்கங்களைப் படிக்கும் உணர்வு இல்லாமல் ஒரு புனைகதையைப் படிக்கும் அனுபத்தைக் கொடுக்கும் வகையில் புனைவின் வலிமையோடு எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தின் பல பக்கங்ளை வாசிக்கும்போது இந்தப்பக்கங்கள் வரலாறா அல்லது புனைவின் பக்கங்களா என்ற கேள்வி எழாமல் இருக்க வாய்ப்பு இருக்காது என்கிற வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி ஒரு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பது நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த நிகழ்வுகளின் சாட்சியாக உடன் இருந்த ஒருவரே இந்த விஷயங்களை அப்படியே பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார் என்பதுதான் இதில் விஷேஷம். அதுவே இவற்றின் நம்பகத்தன்மைக்கும் சாட்சியமாக இருக்கிறது.
எழுத்தாளர் எந்தவிதமான சார்புமின்றியும் விமர்சனமுமின்றி எழுத வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஜர்மானி தாஸ் இதைக் கடைபிடித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். மகாராஜாக்களின் வாழ்க்கையை மட்டும் எழுதாமல் தன்னைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் எந்தவிதமான ஒளிவுமறைவும் இன்றியும் எழுதியுள்ளார் என்பதையும் நிச்சயம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..
***
2
புபேந்தர் சிங் மகாராஜாவுன் அந்தப்புர லீலைகள், அவரின் பாலியல் ஆராய்ச்சிகள், அவருக்காக வேலை செய்த பிரெஞ்ச் மருத்துவர்கள் மற்றும் பிற நாட்டு ஆங்கில மருத்துவர்கள் அவர்கள் கண்டுபிடித்த மருந்துகள், அவற்றை அவர் நடைமுறைபடுத்திப் பார்த்த விதங்கள் ஆகியன வியப்பூட்டும் வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
காமலீலைகளை அரங்கேற்ற வசதியாக தந்த்ராவை மாற்றியமைக்க முற்படும் மகாராஜாவும் அவருக்கும் அவர் கொடுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு மாற்றி அமைக்கவும் முயலும் ஒரு குரு.
குழு புணர்ச்சிக்கான பின்னணியைக் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் வலிந்து திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டதையும், இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டவர்களுக்கு அந்த உண்மை இறுதிவரை தெரியாமல் பக்தி என்கிற போர்வையிலேயே அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்கிறது ஒரு பதிவு.
இவை எல்லாம் காலந்தோறும் அதிகாரத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு மக்களை எப்படி ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கான சான்று. இந்த நடவடிக்கைகள் இன்றுவரை வேறு வேறு வடிவங்களில் ஆட்சியாளர்களார்காளல் மாற்றி மாற்றி சூழலுக்கேற்ப அமைத்துக்கொள்ளும் அடிப்படைசூத்திரங்களின் பகுதிகாளாகவே அமைந்துள்ளன என்பதுதான் உண்மை. இன்றுவரை ஆட்சியாளர்கள்தான் மாறியுள்ளார்கள். மேலும் ஆட்சிமுறைதான் அதாவது பெயர்தான் மாறியுள்ளது . மற்றபடி அரச நடவடிக்கைகளில் மக்களை ஏமாற்றும் விதங்களில் ஆட்சியாளர்களள் அப்படியேதான் உள்ளார்கள்.
இந்தப் புத்தகத்தில் பல விசயங்களை நிகழ்கால அரசியல் வரலாற்றோடும் பொருத்திப் பார்க்க முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம், புபேந்தர் சிங் முசோலினியைச் சந்தித்து உரையாடிபோது அவர் கூறிய வார்த்தைகள் அப்படியே இன்றைய நிகழ்கால அரசியல் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கலாம். இதோ அந்தப் பகுதி மகாராஜா எனது பொழுதுபோக்கு ஏற்கனவே பதவியிலிருந்த அமைச்சர்களை நீக்கிவிட்டுப் புதிய அமைச்சர்களை நியமிப்பது. மறுநாள் அரசிதழ்களில் நீக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்களைக் காண்பது எனக்குக் குதுகலம் தரும்.
தமிழகத்தின் இன்றைய செய்தித்தாள்களில் அடிக்கடி அமைச்சர்களின் மாற்றங்களோடு நீங்கள் இந்த விஷயத்தை தொடர்புபடுத்திப் பார்த்ததால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. இவற்றை சொன்னவர் முசோலினி. அவரோடு மற்றவர்களைப் பொருத்தி ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்வது அவரவர்களின் கற்பனை வளத்தைப் பொறுத்து அமையலாம். இவற்றிற்கு நான் பொறுப்பேற்க முடியாது.
இதுபோன்ற விஷயங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அல்லது எத்தனை தலைமுறைகளுக்குத் தொடர்கிறதோ அத்தனை தலைமுறைகளுக்கு இந்தப் புத்தகம் பொருந்தி வந்தால் அந்த எழுத்தாளரின் தீர்க்க தரிசனம்தான் காரணம். நிச்சயம் அவர் ஒரு நல்ல மந்திரியாக இருந்தது மட்டுமே காரணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்பது என் மூடநம்பிக்கையாக அமையட்டும்.
***
3
அதே போல கிரிக்கெட் விளையாட்டில் மகாராஜாவின் மகனுக்கு மேட்ச்பிக்ஸ் செய்ய முயற்சிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது என்பதற்கான நிகழ்கால நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கவும் முடிகிறது,. பல விஷயங்கள் திட்டமிட்டுதான் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இது ஒரு அரசியல் பாராம்பர்யத்தின் தொடர்ச்சியாகவே நிகழ்ந்து வருகின்றன என்பதையும் நாம் அறியலாம்.
ராஜாக்கள் பலரும் வெள்ளையர்களின் கைப்பாவைகளாக மட்டும் இல்லை. அவர்களின் கலாச்சாரத்தைக் காப்பியடிப்பவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கான நிறைய சான்றுகள் இந்தப் புத்தகத்தில் அங்கங்கே உள்ளன. அவற்றிற்கு உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டு.,போலோ விளையாட்டு, கார்கள் வைத்துக்கொள்வது.உயர்குடியினருக்காக விருந்துகளும் நடனமும் ஏற்பாடு செய்வது இப்படி ஏராளமான விஷயங்கள் வெள்ளையர்களின் வாழ்விலிருந்து நம் ஆட்கள் கற்றுக்கொண்டு அவற்றை மேன்மைபட்டதாக மாற்றிக்காட்ட முயற்சித்துள்ளார்கள்.
இந்தப் புத்தகம் தமிழ்,இந்திய சினிமாக்காரர்கள் கையில் கிடைக்காமல் இருக்கவேண்டும். ஏனெனில் இந்த வரலாற்றுப்பக்கங்களில் படிந்துள்ள பல காம விஷயங்களும் சரி, சதி ஆலோசனைகளும் சரி,சாமியார்களின் நிகழ்வுகளும் , தந்த்ரா விஷயங்கள்.
சதிஆலோசனையால் ஒரு முதலமைச்சரைப் பதவியிலிருந்து தந்திரமாக விரட்டி அவர் மனநலமில்லாதவர் என்ற பேரில் விரட்டியடிக்கப்படும் பரிதாப நிகழ்ச்சிகள், அந்தப்புர இளவரசிகளின் காதல் கதைகளும் காம கதைகளும் அவர்களின் முடிவுகளும் சினிமாக்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன,
இளம் இயக்குநர்களின் பார்வையில் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டால் அவர்களில் பலர் பல கோடிகளையும் , பேரும் புகழும் சம்பாதிக்கப்போவது நிச்சயம்
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையின் முடிவைப் போல் முடித்திருக்கும் விதத்திலிருந்து இதை எழுதியவருக்குப் பெரும் படைப்பூக்கமிருந்துள்ளது என்பதை அறிய முடியும். இன்னும் சில அத்தியாயங்களில் அவர் முடித்திள்ளவிதம் ஒரு நாவலின் தொடர்ச்சிக்காகப் பேணப்படும் முடிவுகளைப் போன்று அமைந்துள்ளன என்பதை நிச்சயமாக குறிப்பிட வேண்டும்.
இந்த நுலை ஒரு வரலாறாகப் படிக்காமல் ஒரு நாவலைப் போல நினைத்துப் படிப்பதற்கான எல்லாத் திறப்புகளையும் கொண்டிருக்கிறது. எந்த அத்தியாயத்திலிருந்தும் தொடங்கி எங்கே வேண்டுமானாலும் முடிக்கலாம்.
ஜர்மானி தாஸை வெறும் வரலாற்று ஆசிரியனாகவோ அல்லது அவரின் டைரிக்குறிப்புளாகவே இவற்றை நாம் நிச்சயமாக ஒதுக்கிவிட முடியாது.
***
4
ஆனால் அவரின் இளவரசி கோபிந்த் கௌர் பற்றிய பதிவையும் அவரின் அந்தக் கால ஆணாதிக்க பார்வையையும் நிச்சயம் இந்தக்கால பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாது.
பல அரசர்களின் பாலியல் விளையாட்டுகளையும். அவற்றிற்கான பதிவுகளுக்கு எந்த நியாயத்தையும் சொல்லாதவர் இளவரசி கோபிந்த் கொளரின் காம விளையாட்டுகளை விஸ்தாரமாக சொல்லியிருக்கிறார்.
அவருக்கும் முதலமைச்சருக்கும் உள்ள காதல் விளையாட்டுகள். சபை நடக்கம்போதே காம விளையாட்டுகள் நடப்பது, இளவரசி காம வயப்பட்டு குதிரைக்குப் போடும் புல்குதிர்களில் பயணத்தவாறே காம விளையாட்டுகளில் ஈடுபடுவது,கிணற்றில் ஒரு தோண்டி போல அமைத்து அதில் தளபதியை அந்தப்புரத்திற்குள் கொண்டு வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது,அவளின் அதீத காமத்தைத் தீர்க்க விதவிதமான ஆள் தேடுகிறாள்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் யாராவது ஒரு அமைச்சர் கண்டுபிடித்து அதற்குத் தடைபோட முயற்சிப்பதையும், இவற்றிலிருந்து அவளைக் காப்பாற்றி இளவரசிக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்தும் அவளின் காம பசிக்கு அந்தக் கணவனால் தீனி போட முடியாததையும் விரிவாக எழுதப்பட்டுள்ளது,
இந்த அதீத காம பசி அல்லது காதல் பசிக்கு இளவரசி கௌர் அடிக்கடி ஆள் மாற்றிக்கொண்டேயிருபப்பாள் என்பது எல்லாம் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடைசியில் தளபதியுடன் அவள் செய்த காம லீலைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பி வேறு மாகாணத்தில் போய்க் குடியேறுகிறார்கள் எனவும், இறுதியில் அவர்கள் வயிற்றுப்பாட்டிற்காக விவசாயம் செய்து பிழைக்கிறார்கள்,இளவரசி கடைசியில் உணவைச் சமைப்பதற்காக வறட்டி தட்டும்ளவிற்கு அவளின் நிலைமை மாறுகிறது.
இவற்றிற்கெல்லாம் அவளின் அதீத காம வெறிதான் காரணம். அதுதான் கடைசியில் அவளுக்கு இந்த முடிவினை ஏற்படுத்துவதாக முடிக்கிறார். இது அந்தக் கால ஆண்களின் பார்வையைக் காட்டுகிறது, அந்தப்புரத்தில் 352 பெண்களை மனைவியாகக் கொண்ட அரசர்களைப் பற்றிய பதிவு செய்யும்போது அவருக்கு இது போன்ற எந்த விதமான விமர்சனங்களும் எழவில்லை.விதி அவர்களின் காம விளையாட்டிற்கு எந்த தண்டனையும் கொடுத்ததாக எந்தப்பதிவும் செய்யப்படவில்லை. இளவரசி ஒரு பெண் என்பதால் அவளின் காமலீலைகளைப் பதிவுசெய்து விட்டு அவள் அரச குடும்பத்துப் பெண்ணேயானாலும் அவளும் பெண்தானே என்கிற குரலை இந்தப்பதிவின் வழியாக நாம் கண்டுபிடிக்கலாம்.
***
5
புபேந்தர் சிங் மரணப்படுக்கையில் படுத்துள்ளபோது அவரின் ஆணைப்படி ஒரு சாமியாரைத்தேடி காசியில் அலைவதும் பின் ஏதோ ஒரு சாமியாரைப்பிடித்து வந்து அவர் மாயஜாலங்களை நிகழ்த்திவிட்டு போகும் இடங்கள் புனைகதையின் உச்சம்போல இருக்கிறது. சாமியாரின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்த ஒரு காவல் அதிகாரியின் நாட் குறிப்பிலிருந்து பின்நாட்களில் இந்த உண்மையைக் கண்டுபிடித்ததாகவும். இது தெரிந்தவுடன் அந்த சாமியார் தப்பிப்போய்விட்டார் என்ற செய்தியை அறிந்த மகாராஜா அன்றிரவு இறந்து போய்விட்டார் என்று எழுதி அந்த அத்தியாயத்தை முடிப்பது அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் இருந்த கேலியுணர்வைப் பதிவுசெய்துள்ளார்.
இந்த நிகழ்வுகளைப் போன்றே ஏராளமான சம்பவங்கள் விறுவிறுப்பான சினிமா தன்மையில் சொல்லபப்பட்டுள்ளன. இப்போது சினிமாக்காரர்களுக்குத் தொழில்நுட்ப சாத்தியங்கள் இருப்பதால் இந்தக் காட்சிகளை எல்லாம் விளையாட்டுப்போலப் படம்பிடித்து ரசிகர்களை மிரட்டி அவர்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளலாம்
இந்தப் புத்தகத்தை ஒரு நெடும்பயணத்தின் துணையாகத்தான் எடுத்துக்கொண்டு போனேன். வழக்கம்போலப் பயணத்தில் காணும் காட்சிகளைக் கண்டு ரசிக்கவிடாமல் , முழுக்கவனத்தையும் இந்தப்புத்தகத்தின் பக்கங்களிலேயே பதிந்து ஒரே மூச்சில் படித்துவிட முடிந்தது.
இந்த நுலை மொழிபெயர்த்திருக்கம் பொன்.சின்னத்தம்பியைக் குறித்தும் ஒரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும். அவரின் மொழிபெயர்ப்பினைப் பற்றிச் சொல்வதென்றால் நல்ல சரளமான நடையில் வாசிப்பிற்குத் தடையேதுமின்றி அமைந்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். எந்த இடத்திலும் நம் முழிபிதுங்கவில்லை.ஆனால் அங்கங்கே பண்டுவம் பார்த்தல்.,ஆண்டை என்று மொழிபெயர்த்திருப்பதை மட்டும் அவர் கவனமாகத் தவிர்த்திருக்கலாம்.
39ஆம் பக்கத்தில் மாணிக்கவாசகரின் நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ அதற்கு நாயகமே என மொழிபெயர்ப்பாளரின் உணர்ச்சிவசப்படுதல் நேர்ந்திருக்கிறது,.போலவே 394 ஆம் பக்கத்தில் சுல்தான்கள் செய்த கொடுமைகளைப் பற்றிக் குறிப்பிட வந்தவர் கண்ணீர்த் திவலை கணிணித் திரையை மறைக்கிறது என எழுதியிருக்கிறார். நிச்சயமாக அந்தக்காலத்தில் கணிணி இருந்திருக்க வாய்ப்பில்லை. மூலத்தில் இல்லாத ஒன்றை மொழிபெயர்ப்பாளர் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருப்பதாகவே நினைக்க தோன்றுகிறது. இ,துபோன்ற குறைகளைக் களைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
சமீப காலமாக சந்தியா பதிப்பகத்தார் பல நல்ல வரலாற்று புத்தகங்களைத் தமிழுக்கு வழங்கி வருகிறார்கள். குறிப்பாக அசோகர், அக்பர், பாபர், யுவான் சுவாங்கின் பயணக்குறிப்புகள் 3 தொகுதிகள், பெர்னியரின் பயணக்குறிப்புகள் போன்ற பல நல்ல புத்தகங்களின் வரிசையின் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு முக்கியமான புத்தகத்தைச் சிறந்த முறையில் அழகாகப் பதிப்பித்திருக்கிறார்கள். அவர்களின் வரலாற்று புத்தகங்களின் வரிசையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த புத்தகமாக நிச்சயம் சேர்க்கலாம்.
போலவே நல்ல புத்தகங்களைத் தேடிப் படிப்பவர்கள் கட்டயாமாக வாசிக்கலாம். இல்லையெனில் கொஞ்ச நாள் பொறுத்து ஒரு சினிமாவில் இடம் பெறும் காட்சிகளில் இந்தப் புத்தகத்தின் பக்கங்களிலிருக்கும் விஷயங்களைக் காட்சிகளாகப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு சர்வ நிச்சயமாகக் காத்திருக்கிறது.
(நன்றி: சிபிச்செல்வன்)