இரண்டு நாட்களாக டால்ஸ்டாய்க்குள் அமிழ்ந்து கிடக்கிறேன். அவரது இரண்டு Non Fictions என் சிந்தையை வேறெங்கும் அகலவிடாமல் தடுக்கின்றது. 'Gospel in Brief', 'The Kingdom of God Is with you' கிறிஸ்தவ பீடங்களால் வெறுக்கப்பட்ட நூல்கள். ருஷ்ய ஜார் அரசுகளால் தடைசெய்யப்பட்டவை. காந்தியை மகாத்மா ஆக்கியவை.
"அன்பு, நேசம்..இவை மட்டுமே மனித இயல்புகளாக அமைய வேண்டும்.."
"கடைசி மனிதன் இல்லாமையில் துன்புறும்வரை நீ எதையும் உனக்கென உடமையாக்கிக் கொள்வது எப்படிச் சாத்தியம் .."
இதைக் காட்டிலும் அவர் மனிதர்க்குச் சாத்தியமில்லாதது எனச் சுட்டிக் காட்டும் இன்னொன்று என்னை வேறெதிலும் கவனம் செலுத்த விடாமல் தடுக்கிறது. அது
"தீர்ப்பளிக்காதே.."
"ஏனெனில் தீர்ப்பளிப்பது சாத்தியமே இல்லை.."
அப்படியானால் தண்டனை?
"தீர்ப்பளிப்பதே சாத்தியமில்லை என்கிற போது தண்டிப்பது எப்படிச் சாத்தியம்?"
பின் எதிரியை, பாவியை என்ன செய்வது?
"நேசி.. எதிரியை, பாவியை நேசி..."
நான் முன் குறிப்பிட்ட இரு நூற்களிலும் ('Gospel in Brief' மற்றும் 'The Kingdom of God Is with you' ஆகியன) கிறிஸ்துவத்தின் சாரமாகத் தான் ஏற்பதை விவிலியப் பதிவுகளின் ஊடாகவே, பெரும்பாலும் அதே உரையாடல் வடிவத்திலேயே முன்வைக்கிறார் டால்ஸ்டாய். அவர் நூலில் வரும் நிகழ்வுகள், உரைகள் அனைத்தும் விவிலியத்தில் தட்டுப்படுபவையே.
பின் எதற்கு இனோரு புதிய சுருக்கம்?
டால்ஸ்டாய் தன்னுடையதாக எதையும் புதிதாய்ச் சேர்க்கவில்லை என்றேன். ஆனால் நமக்குக் கையளிக்கப்பட்டுள்ள விவிலியத்திலிருந்து நிறையவற்றை அவர் நீக்கி நமக்குப் புத்தம் புதிதான ஒரு விவிலியத்தைத் தருகிறார். களை எடுக்கிறார் எனச் சொல்லலாமா? சொல்லலாம். இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன் இம் மண்ணில் தோன்றியபோது அவருடைய பணியாக என்ன இருந்தது? அன்றைய மத போதகர்களால் இறைவனால் அருளப்பெற்ற கட்டளைகளிலலேற்படுத்தப்பட்டிருந்த கறைகளை எல்லாம் தூய்மை செய்வதாகவே அவர் பணி அமைந்தது. அதற்காகவே அன்றைய மத அதிகாரமும் அரசதிகாரமும் அவரைச் சிலுவையில் ஏற்றின.
ஆனால் சிலுவையில் ஏற்றப்பட்ட அந்த ஏசுவை இறைவனின் மகனாக ஏற்று உருவான கிறிஸ்தவம், இயேசு எதையெல்லாம் களைந்தாரோ அதையெல்லாவற்றையும் மீண்டும் உள்ளே கொணர்ந்தது.
டால்ஸ்டாய் இப்போது இந்த நூற்களின் வழியாக மேற்கொண்டுள்ள பணி என்ன? அவருக்கு 1800 ஆண்டுகளுக்கு முன் இயேசு மேற்கொண்ட அதே பணியைத்தான் இன்று டால்ஸ்டாய் மேற்கொள்கிறார்.. அந்த வகையில் டால்ஸ்டாயையும் ஏசுவைப் போல ஒரு மெசையாவாகச் சொல்லலாமா? என் சிற்ற றிவுக்குச் சொல்லலாம் என்றே படுகிறது.
ஏசுவின் வரலாறாகவும், உரையாடல்களாகவும் பிந்தைய கிறிஸ்தவ மதத்தால் முன்வைக்கப்பட்ட புனித நூல்களை மீண்டும் தூய்மை செய்து அவற்றைக் கிறிஸ்துவிற்கு உரியதாக ஆக்க முயல்கிறார் டால்ஸ்டாய். அவற்றிலுள்ள இயற்கை அதீதக் கூறுகளை (supernatural elements), மிகைப்படுத்தல்களை, மகத்துவங்களை, புனிதங்களை, சடங்குகளை எல்லாம் களைந்து மீண்டும் கிறிஸ்துவுக்குரிய விவிலியத்தைச் செதுக்குகிறார்.
அப்படியானால் டால்ஸ்டாயை ஒரு நாத்திகர் எனலாமா? இல்லை. இல்லவே இல்லை. அவர் இறைவனை ஏற்கிறார். இறைவனின் கட்டளைகளை முழுமையாக ஏற்கிறார். அவர் இந்த மத அமைப்பை, இந்த வழிபாடுகளை, சடங்குகளை, அரசமைப்பை இவற்றைத்தான் ஏற்கவில்லை. அந்த வகையில் டால்ஸ்டாய் ஒரு அராஜகவாதி. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஒரு கிறிஸ்துவ அராஜகவாதி.
'அராஜகம்' - anarchy எனும் சொல் குறித்து நான் என் பின் நவீனத்துவம் குறித்த கட்டுரைகளில் அடிக்கடி எழுதியுள்ளேன். தமிழ் / இந்திய சூழலில் அது ஒரு கெட்ட வார்த்தை. ஆனால் ஐரோப்பிய மரபில் அப்படி இல்லை. archy என்பது 'ராஜீக' , 'அரசு சார்ந்த' எனும் பொருள்படும் சொல். anarchy எபதை அதற்கு நேர் எதிராக அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவே. கம்யூனிசம் 'பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம்' என்கிற அதி வலுமிக்க, எதிர்க் கட்சிகளுக்கே அனுமதி இல்லாத, ஒரு அரசு வடிவத்தை எடுத்தே வீழ்ந்தது.
அது கிடக்கட்டும். டால்ஸ்டாய் மேலும் என்ன சொல்கிறார்? அவர் மானுட வாழ்வை மாமிசத்திற்குரியவை எனவும் ஆவிக்குரியவை எனவும் இரண்டாகப் பிரிக்கிறார். உடல் சார்ந்த வாழ்வு, ஆன்மா சார்ந்த வாழ்வு என ஒரு புரிதலுக்காகச் சொன்னாலும் அது சரியான மொழி பெயர்ப்பாக ஆகாது. அதோடு 'ஆன்மா' என்கிற இந்தியத் தத்துவங்கள் ஊடாக நாம் உணர்ந்துள்ள கருத்தாக்கம் இங்கு வந்து நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.
எனவே டால்ஸ்டாயின் இந்த நூலை மிக மிகச் சிறப்பாக மொழியாக்கித் தந்திருக்கும் தோழர் வழிப்போக்கன் (சுவிசேஷங்களின் சுருக்கம், பாரதி புத்தகாலயம், பக் 272, விலை ரூ 200- இந்த நூலுக்கான எனது விரிவான அறிமுகம் 'புத்தகம் பேசுது' இதழில் இடம் பெறுகிறது) பயன்படுத்தியுள்ள மாமிசம், ஆவி எனும் சொற்களே பொருத்தம்
ஆக, உடலுக்குரிய வாழ்விலிருந்து மனிதரை மீட்டு ஆவிக்குரிய வாழ்வை நோக்கி ஈர்ப்பதே டால்ஸ்டாயின் நோக்கம்.
அதென்ன?
டால்ஸ்டாய் தன் நூலின் நோக்கம் குறித்து என்ன சொல்கிறார் என்பதை முதலில் தொகுத்துக் கொள்வோம். முதலில், 'சுவிசேஷங்களின் சுருக்கம்' என்கிற தன் நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து சில வரிகள்:
"கிருத்துவத்தை ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகவோ அல்லது தெய்வீகமான வெளிப்பாடாகவோ நான் கருதவில்லை. மாறாக வாழ்வுக்கு அர்த்தத்தினைத் தரும் ஒரு போதனையாகவே நான் அதனைக் காணுகின்றேன். வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த தேடல்களோ அல்லது இறைவனைக் குறித்த தேடல்களோ என்னைக் கிருத்துவத்தில் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மாறாக என்னுடைய ஐம்பதாவது வயதில் நான் கொண்ட 'நான் யார்' என்ற தேடலும், 'என்னுடைய வாழ்வின் அர்த்தம் என்ன' என்ற தேடலுமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது." (பக் 14)
"உயர்ந்தத் தன்மையுடைய கிருத்துவ போதனைகளுடன், அவற்றுக்கு அன்னியமான எபிரேய போதனைகளும் திருச்சபை போதனைகளும் ஒருசேர கலந்து இருப்பதனை நான் கண்டேன்." (பக்.15)
"துர்நாற்றம் வீசக் கூடிய கழிவுகளைக் கொண்டிருக்கும் பையினைப் பெற்றுக் கொண்ட ஒரு மனிதனைப் போன்றே என்னுடைய நிலையும் இருந்தது." (பக்.16)
"கிருத்துவம் என்ற பெயரிலேயே, இயேசுவின் கருத்துக்கு மாறாக இருக்கின்ற திருச்சபையின் கருத்தானது இயேசுவின் கருத்தாகப் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது,... நாம் அனைவரும் இந்தத் தவறான விளக்கங்களைக் கொண்டே வளர்ந்தும் இருக்கிறோம்" (பக்.17)
(இம்மேற்கோள்கள் வழிப்போக்கனின் மொழியாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை.)
டால்ஸ்டாயின் மேற்குறித்த கூற்றுகளிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?
ஏசு குறித்து இரண்டு அணுகல்முறைகள் நிலவுகின்றன. ஒருசாரர் இயேசுவைக் கடவுள், இறை மகன் என ஏற்றுக் கொள்வோர். அவர்கள் இறைமை குறித்த தம் மும்மைக் (Holy Trinity) கோட்பாட்டில் இரண்டாவதாக ஏசுவை நிறுத்தி வணங்குகின்றனர். பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்கள் வழியாகவும் சிரசில் கரங்களை வைத்து ஆசீர்வதிக்கப்படுவதன் ஊடாக பரிசுத்த ஆவியானவர் சமய குருக்களுக்கும் இறக்கப்படுகிறார் எனவும் அவர்கள் கதைகளைப் பரப்புகின்றனர். ஆனால் ஏசு தன் போதனைகளில் எங்கும் இந்தக் கதைகளை எல்லாம் முன்வைத்ததே இல்லை.
ஏசுவின் போதனைகளை அவர்கள் தனியாக எடுத்து முன்வைக்க மாட்டார்கள். மாறாக அவர்கள் ஏதேனும் சில போலியான வெளிப்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுடன் இணைத்தே ஏசுவை முன்வைப்பார்கள். பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் முற்றிலும் வெவ்வேறு நூல்கள். ஆனால் எந்த தர்க்க, வரலாற்று நியாயங்களும் இன்றி ஏசுவின் வரலாறு பழைய ஏற்பாட்டுடன் இணைக்கப்படுகிறது. இப்படிப் பழைய ஏற்பாட்டுடனும், மும்மைக் கோட்பாட்டுடனும் ஏசு இணைக்கப்படுவதன் ஊடாக அவரது மெய்யான கருத்துக்கள் மறைக்கப்படுகின்றன.
இன்னொரு சாரரோ ஏசு ஒரு கடவுள் என்கிற நம்பிக்கையை நிராகரிப்போர். அவரை ஒரு மனிதனாக மட்டுமே காண்பவர்கள். அப்படியானால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் ஏசுவுக்கு மனிதர்க்குரிய உரிமைகளை அளித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் எள்ளளவும் பொறுப்பின்றி ஏசுவுக்குரிய மனித உரிமைகளை மறுக்கின்றனர். இயேசுவை ஒரு மனிதராக மட்டுமே ஏற்போர் அவரது வாயிலிருந்து உதிர்த்த சொற்களுக்கு மட்டுமே அவரைப் பொறுப்பாக்க வேண்டும். ஆனால் இவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்களும் முன்னவர்கள் எதையெல்லாம் ஏசுவின் மீது சுமத்தியுள்ளனரோ அவற்றையெல்லாம் ஏற்று அந்த அடிப்படையில் அவர் மீதான விமர்சனங்களை வைக்கின்றனர். அவரது சொற்களின் மீது திருச்சபை சுமத்திய போலிகளுக்கெல்லாம் அவரை விளக்கம் சொல்லச் சொல்கின்றனர். இந்த அடிப்படையில் திருச்சபை சுமத்திய அபத்தங்களுக்கெல்லாம் ஏசுவைப் பொறுப்பாக்கி அவரை மறுக்கின்றனர்.
ஆக இருசாரருமே ஏசு முன்வைத்த உண்மையான கருத்துக்களை நிராகரிப்பவர்களாகவே உள்ளனர். வரட்டு நாத்திகம் பேசுகிறவர்களும் இறை நம்பிக்கையாளர்களும் இணையும் புள்ளியை இத்தனை அழகாக டால்ஸ்டாயைக் காட்டிலும் யாரும் சொல்லியிருக்க இயலாது என நம்புகிறேன்.
இந்த இருசாரராலும் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்க இயலவில்லை என்பது கவனத்துக்குரியது. அந்தக் கேள்வி இதுதான்:
"ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பரம ஏழையானவன் தோன்றி குறிப்பிட்ட சில கருத்துக்களைக் கூறினான். அதற்காக அவன் சாட்டையால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். அக்காலம் முதல் தங்களின் நம்பிக்கைகளுக்காக உயிர் துறந்த வேறு மனிதர்கள் ஏராளமானோர் இருந்தாலும் கோடிக்கணக்கான மக்கள் அவர்ள்் ஞானிகளாக இருக்கட்டும், அல்லது முட்டாள்களாக இருக்கட்டும், படித்தவர்களாக இருக்கட்டும் அல்லது கல்வி அறிவு இல்லாதவர்களாக இருக்கட்டும், ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அந்த ஒரு மனிதன் மட்டுமே இறைவன் என்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு இருக்கின்றனர், இந்த ஆச்சர்யமான விடயத்தை எவ்வாறு விளக்க முடியும்?" (பக்.25)
இந்தக் கேள்விக்கு டால்ஸ்டாயே பதில் அளித்து விடுகிறார். போராடி மாண்ட ஏசு என்கிற அந்த மனிதன் மீதான இந்த அழியாத நம்பிக்கையின் அடிப்படை அவன் என்ன சொன்னான், என்ன போதித்தான் என்பதிலேயே அடங்கியுள்ளது எனச் சொல்லும் டால்ஸ்டாய் அந்த முயற்சியில், அதாவது ஏசு உண்மையில் என்ன சொன்னார் எனக் காண்பதில் இறங்குவதுதான் Gospel in Brief எனும் இந்த நூல் என முன்னுரைக்கிறார்.
அவ்வாறே ஏசுவின் மீது திருச்சபை சுமத்திய எல்லாப் போலி நம்பிக்கைகளையும், பொருளற்ற மகிமைகளையும் உரித்தெறிந்து எளிய மக்களின் கடைத்தேற்றத்திற்கான வழிகளாக அந்த மனிதன் என்ன சொன்னான் என்பதை எந்தக் கூட்டலும் கழித்தலும் இன்றி நம் முன் வைப்பதுதான் அவர் இந்த நூலின் ஊடாகச் செய்துள்ள பணி.
சுவிசேஷங்களிலிருந்து இயற்கை அதீத கற்பனைகளை, புனிதங்களை, அற்புதச் செயல்களை, இறை மகத்துவங்களை எல்லாம் கவனமாக நீக்கி ஏசு என்கிற மகத்தான மனிதனைப் படைத்துக் காட்டுகிறார் டால்ஸ்டாய் என இத் தொடரில் கூறி வருகிறேன். அவர் இதை எப்படிச் செய்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு:
"இயேசுவின் தாயாரான மரியாளுக்கு யோசேப்புடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.ஆனால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழத் துவங்கும் முன்னரே மரியாள் கர்ப்பவதியாக இருப்பதைப்போலத் தோன்றியது. யோசேப்பு ஒரு நல்ல மனிதனாக இருந்தமையினால் மரியாளின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க அவன் எண்ணவில்லை. எனவே அவளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டு அவள் தன்னுடைய முதற் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை அவளிடன் உறவு கொள்ளாமலேயே அவன் இருந்தான். மரியாள் தன்னுடைய முதற் குழந்தையை ஈன்றெடுத்து அக்குழந்தைக்கு ஏசு என்று பெயரிட்டாள்.ஏசுவின் பிறப்பு இவ்வாறாக இருந்தது."
முந்தைய கட்டளைகளிலிருந்து ஏசு செய்த மாற்றங்களாக டால்ஸ்டாய் சுட்டிக் காட்டுவன..
டால்ஸ்டாயின் நூல் முழுக்க ஏசு என்ன சொன்னார் என்பதைத்தான் பேசுகிறது. ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். அது ஏசுவின் புகழ்பெற்ற மலைப் பிரசங்கம்.
“ஏழைகளும் தங்குவதற்கு இடமில்லாதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்வில் மட்டுமல்ல உள்ளத்திலும் எளிமையாக இருப்போரே எளியோர். அவர்களே கடவுளின் சித்தப்படி வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் பணக்காரர்களுக்கோ அய்யோ. அவர்கள் எல்லாவற்றையும் அனுபவித்துத் தீர்த்துவிட்டார்கள். இனி அவர்கள் பசியோடு இருப்பார்கள்.”
இந்த முன்னுரையோடு, கூடி நின்ற மக்களை நோக்கிய ஏசு அவர்களின் முந்தைய சட்டங்களைச் சொல்லி அவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்களைச் சொல்கிறார். மொத்தத்தில் ஐந்து புதிய கட்டளைகளாக அவர் முன்வைப்பவை:
இனி இவை முந்தைய சட்டங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என டால்ஸ்டாய் எப்படி விளக்கமளிக்கிறார் எனப் பார்ப்போம்.
முந்தைய சட்டத்தின்படி ‘கொலை செய்யாதே’ என்பதுதான் கட்டளை. ஆனால் ஏசு கோபம் கொள்ளுதலே கூடாது என்கிறார். யாருக்கும் உங்கள் செயல் மன வருத்ததை அளிக்கக் கூடாது. அப்படி ஏற்பட்டால் முதலில் அதைச் சமாதானம் செய்ய வேண்டும், பிறகுதான் மற்ற வேலைகள் என்பது டால்ஸ்டாய் அளிக்கும் விளக்கம்.
விபச்சாரம் செய்யாதே என்பதைப் பொறுத்த மட்டில் முந்தைய சட்டம் உங்கள் மனைவியை நீங்கள் கைவிட விரும்பினால் அவளை விவாகரத்து செய்யலாம் என்பது. ஏசு இப்போது பிற பெண்களை இச்சையுடன் பார்த்தாலே விபச்சாரம் செய்தாயிற்று என்கிறார். மாமிச சுகங்களுக்கு ஆட்பட்டு ஆவியின் வாழ்வை நிராகரித்தல் என்கிற பொருளில் இதை டால்ஸ்டாய் விளக்குகிறார்.
எந்த உறுதிமொழியையும் எடுக்காதே (Do not take oath) என்பது அரசுகள் தேசபக்தி உட்படப் பல்வேறு அடையாளங்களை முன்னிறுத்தி உங்களிடம் பணிவிற்கான உறுதிமொழியைக் கோரும், அதை ஏற்காதீர்கள் என்பதுதான். டால்ஸ்டாயை “கிறிஸ்துவ அரசுமறுப்புவாதி” (Christian Anarchist) எனச் சொல்வது இந்த அடிப்படையில்தான்.
‘தீமையை எதிர்க்காதீர்கள்’ என்பதைப் பொருத்த மட்டில் இதன் பொருள் தீமைக்குப் பணியுங்கள் என்பதல்ல. ஏசு வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் அப்படியானதல்ல. தீமையைத் தீமையால் எதிர்க்காதே என்பதுதான். பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பதாக இந்த எதிர்ப்பு அமையக் கூடாது. அதனால் பகைதான் தொடருமே ஒழிய தீமை அழியாது. அன்பு செய்யுங்கள். தீமை தீமையை வளர்ப்பது என்பது போல அன்பும் அன்பை வளர்க்கும்.
நாடுகளிடையே பிளவுகளை ஏற்படுத்தாதீர்கள் என்பதைப் பொருத்த மட்டில் முன்னதாக இருந்த கட்டளை அவரவர் நாட்டை அவரவர் நேசிக்க வேண்டும் என்பது. எனவே இது உன் நாட்டவரை மட்டும் நேசித்தால் போதாது, பிற நாட்டவரையும் நேசி என்கிற வகையில் மீண்டும் ஒரு அரசெதிர்ப்பு அராஜகச் சிந்தனையாக அமைகிறது. இங்கே நாடு என்பது மொழி, சாதி, மதம் ஆகியவற்றால் பிளவுறுத்தப்பட்ட எல்லா மக்கள் திரள்களையும் உள்ளடக்கும்.
ஆறாம் அத்தியாயம் முழுவதையும் ஆவிக்குரிய வாழ்வு என்பதையும் மாமிசத்துக்குரிய வாழ்வு என்பதையும் விளக்கும் முகமாக டால்ஸ்டாய் அமைத்துள்ளார். ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் அவற்றை விளக்குகிறார். சுருங்கச் சொல்வதானால் மாமிசத்திற்கான வாழ்வு எனில் இவ்வுலகப் பெருமைகள், இன்பங்கள், இச்சைகள், சுகங்கள், சொத்துக்கள் ஆகியவற்றுக்கான வாழ்க்கை. ஆவிக்குரிய வாழ்வு எனில் அது மேன்மைப் படுவதற்கான ஒரு வாழ்வு. தந்தை, அதாவது இறைவனுக்கான வாழ்வு. எனில் அது என்ன? இதையும் சுருங்கச் சொல்வதானால் முன் கூறிய அனைத்தின் மீதான பற்றுக்களையும் துறந்த வாழ்வு. இந்தப் பற்றுக்களில் குடும்பப் பற்றும் அடங்கும். ஏசுவின் வாழ்வையே அதற்கொரு சான்றாக முன்வைக்கிறார் டால்ஸ்டாய். அவரைப் பார்க்க அவரைச் சுமந்து ஈன்ற அன்னையும் அவரது சகோதரர்களும் வந்து காத்திருக்கும் செய்தி அவருக்குக் கவனப்படுத்தப்பட்ட போதும் ஏசு அவரது மக்கள் பணியையே முதன்மைப் படுத்தி அகல்கிறார்.
எல்லாப் பற்றுக்களைக் காட்டிலும் சொத்துக்கள் மீது பற்றுக் கொள்ளும் மூடத் தனத்தை ஏசு எள்ளி நகையாடும் இடங்களை டால்ஸ்டாய் இந்த அத்தியாயத்தில் தொகுத்துத் தருகிறார். அதோ மரணம் வாசற் கதவருகில் காத்து நிற்பதை அறியாமல் சொத்து சேகரிப்பில் லயித்திருப்போரைப் பார்த்து நகைக்கிறார். “ஊசி முனைக் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது” எனும் ஏசுவின் புகழ் மிக்க வாசகத்தை டால்ஸ்டாய் இந்த அத்தியாயத்தில்தான் பயன்படுத்துகிறார். “ஒருவன் தனக்காக சொத்துக்களை வைத்துக் கொண்டு தந்தையின் சித்தத்தின்படி வாழ முடியாது என்கிறார். அதாவது சொத்துடையோருக்கு ஆவிக்குரிய வாழ்வு சாத்தியமே இல்லை என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்.
அது மாத்திரமல்ல, எல்லா இறைக் கட்டளைகளையும் சிறுவயது முதலே நிறைவேற்றி வருகிறேனே எனச் சொல்லி அவர்முன் நின்றவனின் மேனியை அலங்கரித்த விலையுயர்ந்த ஆடையைப் பார்த்துவிட்டு, கொலை செய்யாதிருப்பாயாக, இச்சை கொள்ளாதிருப்பாயாக, பொய் சொல்லாதிருப்பாயாக, தன்னைப்போலப் பிறரையும் நேசிப்பாயாக என்கிற கட்டளைகளையெல்லாம் நீ உண்மையிலேயே நிறைவேற்றுகிறவனாக இருந்தால் முதலில் இங்கிருந்து கிளம்பிச் சென்று உன் சொத்துக்கள் எல்லாவற்றையும் பங்கிட்டுக் கொடுத்துவா எனச் சொல்லி சொத்துக்களைப் பகிர்ந்தளிப்பதை அடிப்படை நிபந்தனை ஆக்குகிறார்.
ஆவியினைப் பாதிக்கும் நோய்களிலேயே மிகவும் கொடியதானது பணக்காரனாக வேண்டுமென்று பொருளினைச் சேர்க்கும் ஆசையே என முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடிக்கிறார்.
நூலின் இறுதி அத்தியாயத்தில் பயம், கோபம் முதலான பண்புகளும் தீமைக்கு இணங்குவதிலேயே போய் முடியும் என்பதனை ஏசுவை மரண தண்டனைக்கெனக் கைது செய்யும் தருவாயில் அவரது முக்கிய சீடர்களின் எதிர்வினைகளைக் கொண்டு சுட்டிக் காட்டுவார் டால்ஸ்டாய்.
ஐம்பது வயதில்தான் டால்ஸ்டாய் கிறிஸ்தவத்தைத் தழுவினார் என்று சொல்வதுண்டு. இதன் பொருள் அவர் பிறக்கும்போது கிறிஸ்தவ மதத்தில் பிறக்கவில்லை என்பதல்ல. இதற்கு முன அவர் இவற்றையெல்லாம் சிந்தித்ததில்லை என்பதுதான். ஐம்பது வயதில் அவரை ஆட்கொண்ட மரணம் குறித்த சிந்தனைகள் அவரை விவிலியத்தின் உண்மைப் பொருளின்பால் கொண்டு சேர்த்தன. ஏசு என்கிற புரட்சியாளனை அவர் அப்போதுதான் அடையாளம் கண்டார்.
சுவிசேஷங்களின் சுருக்கம் மட்டுமின்றி The Kingdom of God is within you, A confession முதலான நூல்களும் அவரது பிற்கால வாழ்க்கை மற்றும் தொடர்புகள் அனைத்தும் அவரது இந்த நூலில்வெளிப்படும் கருத்துக்களின் அடிப்படையிலானவையாகவே அமைந்தன.
வழிப்போக்கன் மொழிபெயர்த்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள 'சுவிசேஷங்களின் சுருக்கம்' நூலை (ரூ 200) வாசித்துப் பாருங்கள். உன்னதமான அனுபவமாக அமையும்.
(நன்றி: அ. மார்க்ஸ்)