இந்நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனின் கவிதை இது....
ஒரு சொட்டுக் கண்ணீரேனும் சிந்தாமல்
ஒரு நாளும் பள்ளிக்குப் போவதில்லை
என் மகன்
அவனுக்கான பள்ளியை
எப்படி சிருஷ்டிப்பதென
யோசித்துக் கொண்டிருந்த நாளில்
வீட்டிற்குள் அவனோர்
அற்புதநகரம் உருவாக்கியிருந்ததைக் கண்டேன்.
கண்விரியப் பார்த்த என்னை
அந்நகரத்திற்குள் அழைத்துச் சென்றான்.
கரிய கட்டிடங்கள்
மிதக்கும் சாலைகள்
விளையாட்டுத்திடல்கள்
எல்லாம் சுற்றி முடித்த நான்
“எங்கே உன் பள்ளிக்கூடம்?” என்றேன்.
வினோதமாக
என்னைப் பார்த்த அவன்
முகம் சுருங்கச் சொன்னான்
“இது பள்ளியில்லா நகரம்.”.....
இக்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளியை எவ்வாறு வெறுக்கிறார்கள் என்பதை இக்கவிதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இக்கவிதை உணர்த்த வருவதைத் தான் இந்நூலும் உணர்த்துகிறது. கல்வி என்பது அறிவு பெறுவதற்கான நுழைவாயில். ஆனால் இன்று கல்வியே அறிவு என்று சுருங்கிவிட்டது. அதேபோலக் கல்வியும் வேலைவாய்ப்பும் இணைத்தே பார்க்கப்படும் நிலை. இவையே பல்வேறு சிக்கல்களுக்கும் அடிப்படை என்கிறது இந்நூல்.
தொடக்கக் கல்வி சில சிந்தனைகள் என்னும் தலைப்பில் நூலாசிரியர் விவாதித்துள்ள இருவேறு உலகங்கள் என்னும் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி வேறுபாடுகள், ஆசிரியர் மாணவர் விகிதம், பல்வகுப்புக் கற்பித்தல், பாடத்திட்டம், கல்வியில் தரம் போன்றவை முக்கியமானவை.
தொடக்கக் கல்வி சீர்பெற நூலாசிரியர் பின்வரும் வழிமுறைகளைக் கூறுகிறார்.
இதே போல புத்தகங்களை உருவாக்கக்கூடிய ஆசிரியர்குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என நூலாசிரியர் கூறியுள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.
குழந்தைகளை புரிந்து கொள்வோம் என்னும் தலைப்பில் நூலாசிரியர் பிரச்சினை ஏற்படுத்தும் குழந்தைகளை சமூகச் சிக்கல், பாலியல் சிக்கல், உளவியல் சிக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் அணுக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
போகிற போக்கில் நூலாசிரியர் அறிமுகப்படுத்திய தி.ஜானகிராமனின் அனுகூலசாமி ஆசிரியர் கதை. பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி சிறுகதை, பெருமாள் முருகனின் சிருஷ்டி கவிதை போன்றவை மிகவும் பொருத்தமானவை.
40 பக்கங்களே கொண்ட சிறு நூல் இது. இதனை ஒரே மூச்சில் படித்துவிடலாம் ஆனால் இதிலுள்ள தகவல்களை புரிந்து கொள்ள நமது நல்ல முயற்சி தேவை. நிச்சயம் இப்புத்தகம் கல்வி பற்றிய நமது புரிதலை மேம்படுத்தும்.