எங்கோ படித்த ஒரு சம்பவம் இப்புத்தகத்தைப் பற்றி எழுதும்போது நினைவுக்கு வருகிறது.
அது சிறு குழந்தையுள்ள குடும்பம். அக்குழந்தை இன்னும் பள்ளி செல்லா சிறுகுழந்தை. அக்குடும்பத்தினர் ஒருமுறை சுற்றுலாவாக விலங்குக் காட்சிச்சாலைக்கு செல்கின்றனர். அங்கு சென்றவுடன் அந்தக் குழந்தை அங்குமிங்கும் ஓடியாடி விளையாடுகிறது. மிகவும் மகிழ்வுடன் இருக்கிறது.. அந்த ஒருநாள் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவக்கிறது. சில வருடங்கள் கழிகிறது. மீண்டும் அந்தக் குடும்பம் அதே வனவிலங்குக் காட்சிச் சாலைக்கு சுற்றுலா செல்கிறது. இப்போது அந்தச் சிறுமி பள்ளி மாணவி. ஆரம்பத்தில் ஆசையாய் ஓடி விளையாடப்போனவள், திரும்பி வந்து அம்மாவின் தோளில் ஏறிக்கொள்கிறாள். ஏறியவள், ஏறியவள்தான். அந்த வனவிலங்குக் காட்சிசாலையைவிட்டு வெளியேறும்வரை அவளது அம்மா தோளைவிட்டு அவள் இறங்கவேயில்லை.. அவளது அம்மா, அப்பா எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்தக் குழந்தை இறங்க மறுத்துவிடுகிறது..
சரியென்று அவ்விடத்தைவிட்டு வெளியேறியதும் அந்தக் குழந்தை இறங்கி நடந்து வருகிறேன் என்கிறது. அச்சிறுமியின் தந்தைக்கு இப்போது கோபம் வருகிறது. ஏன் இவ்வளவு நேரம் இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்தாய் என்கிறார். “இல்லப்பா உள்ள பயமா இருந்துச்சிப்பா ” என்கிறது குழந்தை. “ஏன் போனமுறை இங்கே வந்தபோது நீ இறங்கி, இங்கே அங்கே என ஓடியாடி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாயே.. இப்ப என்ன வந்தது?” எனக்கேட்கிறார். அதற்கு அந்தக் குழந்தை “அப்பா! அங்க ஒரு போர்டுல இங்குள்ள விலங்குகள் ஆபத்தானவை. மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவும் என எழுதி இருந்திச்சிப்பா” என்கிறது. அப்போது அவள் அப்பா, “போனமுறை இங்கு வந்தபோது நீ அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாயே, அப்போது உனக்கு பயமில்லையா!” என்கிறார். அதற்கு அந்தச் சிறுமி , “இல்லப்பா போனவாட்டி வந்தப்பதான் எனக்குப் படிக்கத் தெரியாதே!” என்கிறது. இந்தக் கதை பல ஆண்டுகளுக்கு முன் படித்தும் என் நினைவை விட்டு அகலாத கதை. உளவியல் ரீதியாக நமது கல்வி முறை குழந்தைகளிடம் பயத்தை விலக்குகிறதா? அல்லது பயத்தை வளர்க்கிறதா? என்பது பற்றி அழகான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் கதை இது.
இதைப்போல இந்நூலில் குழந்தைகளின் பல்வேறு உளவியலைப் பற்றி விளக்கும் பத்துக் கட்டுரைகள் உள்ளன. பத்தும் எளிய மொழியில் மிக இயல்பாக, அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்ட முத்தான கட்டுரைகள்.
“உங்களிடம் இருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால் நீங்கள் பார்க்கும் பொருட்கள் எல்லாம் ஆணியாகவே இருக்கும்” என்ற ஆப்ரகாம் எச்.மாஸ்லோ அவர்களின் வாழ்க்கை மொழியை இந்நூலின் வழியாகவே நான் முதன் முறை அறிந்து கொள்கிறேன். இச்சொற்றொடர் கல்விப்புலத்தில் மிகச் சிறந்த உளவியல் சார் நடைமுறைகளை விவரிக்கிறது. இச்சமூகத்தில் ஒழுக்கம் என்னும் பெயரில் ஒவ்வொருவரும் சுத்தியல் ஏந்தி வலம் வருகின்றனர். இதில் எல்லோரும் எளிதாக ஆணியடிக்கும் இடமாகத் திகழ்வது குழந்தைகளே!
பேராசிரியர்.ஆர்.இராமானுஜம் அவர்களின் அழகான முன்னுரையுடன் தொடங்குகிறது இந்நூல். முதல் கட்டுரை “புரிதல்கள் பலவிதம்” என்பதாகும். இதில் குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்றும், இதில் ஒருவரின் அனுபவம் அடுத்தவருக்குப் பொருந்தாது என்கிறார். அதேபோல் ஒரே விஷயம் குழந்தைக்கு ஒருவிதமாகவும், குழந்தைக்கு இருப்பதையும் மாம்பழம் உதாரணம் கொண்டு விளக்குகிறார். இதை நான் ஒருநாள் தஞ்சை ஸ்டேசனில் ரயிலில் அமர்ந்திருந்தபோது நடந்த சம்பவத்தின் வழியே புரிந்து கொள்கிறேன். எதிரே ஒரு தம்பதியின் சிறு குழந்தை ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஊர்பெயர் எழுதப்பட்டு குத்தாக வைக்கப்பட்டுள்ள வெள்ளை போர்டைப் பார்த்துவிட்டு பட்டம் என்றது.. அக்குழந்தையின் அம்மா அது பட்டமில்லை எனக்கூற, அச்சிறுமி மீண்டும் மீண்டும் பட்டம் என்றே தனது மழலை மொழியில் கூறினாள்... அவர்களும் அதை ஆமோதித்து “ஆமாமா… அது பட்டம்தான்…” என சிரித்துக் கொண்டனர்.
இரண்டாவது கட்டுரை “அறிவை வளர்க்கும் அனுபவங்கள்” என்பதாகும். இக்கட்டுரையின் பின்னுள்ள, “குழந்தைகளுக்கான இலக்குகளை நாம் நிர்ணயிக்கும்போது அவர்களைத் தவிர்க்க இயலாத தோல்வியிலும் ஏமாற்றத்திலும் தள்ளுகிறோம்” என்ற டாக்டர். ஜெஸ் லே அவர்களின் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை உருவாகி இருக்கிறது. மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்ட தற்போதையக் கல்வியின் அபத்தங்களை விட்டுவிட்டு, மாணவர்கள் மதிப்பெண்ணோடு சேர்த்து பல்வேறு வகையான நண்பர்கள் வழியே பலவிதமான நல்ல அனுபவங்களைப் பெற வேண்டும் என இக்கட்டுரை வலியுறுத்துகிறது. இக்கட்டுரையின் கடைசியாக உள்ள மார்கரெட் மீட் அவர்களின் “குழந்தைகளுக்கு என்ன சிந்திக்க வேண்டுமென்பதைவிட எப்படி சிந்திக்கவேண்டுமென்றே கற்றுத்தர வேண்டும்” என்ற கருத்து மிகச் சிறப்பானது.
குழந்தைகளுக்கும் நமக்கும் சில நேரங்களில் முரண்கள் உருவாகலாம், அந்தச் சமயங்களில் குழந்தைகளிடம் நாம் தோற்க வேண்டி வரலாம். ஆனால் நமது தோல்விகளால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வெற்றிகளே அவர்களின் சிந்தனை வளர்ச்சிக்குப் படிக்கட்டுகள் என மூன்றாவது தலைப்பான “தோற்கப் பழகுவோம்” என்பதில் நூலாசிரியர் ஐயா என்.மாதவன் அழகுற விளக்குகிறார்.
“ஒரு குழந்தை வெற்றியாளனாவதோ, வெறியாளனாவதோ அடிப்படையில் பெற்றோரின் மனநிலையில்தான் உள்ளது. தவறுகளும் தோல்விகளும் கற்றலில் தவிர்க்க இயலாதவை. தவறுகளே செய்யாதவர்கள் எதிலும் ஈடுபடாமல் இருப்பர். அல்லது எதனையும் கற்க ஆர்வமில்லாதவர்களாகவோ, கற்காதவர்களாகவோ இருப்பர். பெரும்பாலும் குழந்தைகள் தாங்கள் தோல்வியடைவதைவிட தங்கள் தோல்வியினை அடுத்தவர்கள் கவனிக்கும்போதுதான் அதிக அளவில் வருத்தமடைகின்றனர்” என்று நான்காவது கட்டுயில் கூறும் நூலாசியர் மாணவர்களின் கற்றல் சுயமரியாதைச் சூழலில் நிகழ வேண்டும் என வலியுறுத்துகின்றார் நான்காவது கட்டுரையில்.. இதற்கு “தொடர் முயற்சிகளின் மூலமாகவே நல்வழிப்படுத்த வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளால் அல்ல” என்ற டெரன்ஸ் அவர்களின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுகிறார்.
“பொறாமை என்பது மனத்தின் மலம்..
பொறாமை என்பது மரணத்தின் கருப்பை..
தன்னம்பிக்கை அழிந்தவன் எவனோ அவனே பொறாமையின் புத்திரன்..
அவனே பொறாமையின் பிதா..
பொறாமை என்பது தோல்வியின் தொடக்கம்!
தோல்வி என்பது பொறாமையின் முடிவு!”
என்பார் வைரமுத்து தமது சிகரங்களை நோக்கி என்னும் நூலில்.. அதைப்போல போட்டி, பொறாமை என்பன நமது கண்களிலிருந்து யதார்த்தத்தை மறைக்கின்றன. இதனாலேயே பெற்றோரும், குழந்தைகளும் அடுத்தவர்களுடன் தம்மை ஒப்பிட்டு வேதனை அடைகின்றனர் என ஐந்தாவது கட்டுரையில் ஒப்பிடலின் தீமைகளை “யாருடன் போட்டியிடலாம்?” என்ற கட்டுரையில் விளக்குகிறார்.
“Imagination rules the world” என்பார் ஒரு அறிஞர். கற்பனை கல்விக்கு அவசியமானது. கற்பனை அதிகம் உள்ளவர்களாலேயே இவ்வுலகில் வளம் பெற்றிருக்கிறது. இல்லையெனில் நாம் எல்லோரும் நகலாகவே இருந்திருப்போம். கற்பனையாளர்கள் மட்டுமே அசலானவர்கள். மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்த்தெடுத்து கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரையான “ கல்வியும் கற்பனையும்” என்ற கட்டுரையில் விளக்குகிறார். குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்த்தெடுக்க பண்த்தைவிட, நாம் அவர்களுடன் செலவிடும் நேரமே மிக முக்கியமானது என்கிறார்.
“குழந்தைக்குத் தேவையாக இருப்பது வழிகாட்டுதலும் பரிந்துணர்வுமே தவிர போதனைக் குறிப்புகள் அல்ல” என்ற ஆனி சுலிவனின் மேற்கோளுடன் இருக்கும் ஏழாவது கட்டுரையான “வாசிக்க உதவும் சுவாசம்” மிக ஆழமான கட்டுரை. போட்டி போட்டி. வேகம் வேகம். என குழந்தைகளை விரட்டி விரட்டி நாமும் மூச்சிரைத்து அவர்களையும் மூச்சிரைக்க வைக்கிறோம். பெரியவர்களுக்குத்தான் எதிர்காலம், நல்ல வாழ்க்கை என்பதெல்லாம்… குழந்தைகளுக்கு நிகழ்காலம்தான். போட்டி நிறைந்த உலகம் இது. நாம் வேக வேகமாக ஓடவேண்டும் என விரட்டி வெற்றி பெற்றால் கொண்டாடுவதும், தோல்வி அடைந்தால் தண்டிப்பதும் எவ்வளவு மோசமானது என்பதை அழகாக அலசுகிறது இக்கட்டுரை.
ஆஸ்கார் வைல்ட் சொல்வதுபோல, “குழந்தைகளை நல்லவர்களாக மாற்ற அவர்களை மகிழ்ச்சியாக்குவதே ஒரே வழி” என்பதை விட்டுவிட்டு, கண்டிப்பு,தண்டனை, கண்காணிப்பின் கேடுகளை,. அடி, உதை என்பது குழந்தைகளைத் திருத்த, படிக்கவைக்க உதவுகிறது என்பது போலியான கருத்தேட்டம் என்பதைப் பற்றியும் எட்டாவது கட்டுரை அலசுகிறது.
பசங்க 2 படத்தில் ஒரு வசனம் வரும். “குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்” என்று. அதைப்போல நம் ஒவ்வொரு செயலையும் உற்று நோக்கி குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அதனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்வதுபோல, “முன்மாதிரியாக நடப்பது ஒரு முக்கியமான வழியல்ல, அது ஒன்றே வழி” என்று கூறி குழந்தைகளின் நடத்தையை நம் நடத்தைகளே தீர்மானிக்கின்றன என்பதை “இன்றைய தேவை என்ன?” என்ற ஒன்பதாவது கட்டுரையில் விளக்குகிறார்.
இறுதிக்கட்டுரையான, “சமூகமயமாகட்டும் குழந்தைமை” என்பதில் ஒட்டுமொத்த இந்நூலின் நோக்கமான, “சமூகம் குழந்தைகளையும், இளைஞர்களையும் நடத்துவதில் தேவையான கூடுதல் புரிதல்களை அடைய வேண்டும்” முடிவுரையாச் சொல்லி இந்த மனித சமூகத்தின் மீதான தமது காதலை, நேசத்தை அன்புற வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர் ஐயா முனைவர் என்.மாதவன் அவர்கள்.
இந்நூலில் வரையப்பட்டுள்ள படங்கள் அழகாகவும், பொருத்தமாகவும் உள்ளன. நிச்சயம் இந்நூலை வாசிக்கும்போது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குழந்தைகள் மீதான நேசமும், குழந்தைகளைப்பற்றிய உளவியல் ரீதியான புரிதலும் மேம்படும்.