‘என்ன சொன்னாலும் அதுக்கு எதிர்மறையாத்தான் செய்றான்' 'சொல்ற பேச்சைக் காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்கறா!' குழந்தைகளைப் பற்றி இதுபோன்ற புகார்களைச் சொல்லாத பெற்றோர்களே இல்லை. தான் சொல்வதை, குழந்தைகள் அப்படியே கேட்டு நடக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், இதை ஒரு குழந்தைகூடப் பின்பற்றுவதில்லை. அதுவொன்றும் குழந்தைகளின் தவறில்லை. குழந்தைகள் தாங்களாகவே கற்றுக்கொள்ள விரும்புவர் அல்லது அவர்களுக்குப் பிடித்த விதமாகக் கூறப்படுவற்றை ஏற்றுக்கொள்வர்.
குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் சொல்வதற்கு மிகச் சரியான வழி கதைகள்தான். தொலைக்காட்சிகளில், தாங்கள் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் உள்ள வசனங்களையும் செய்கைகளையும் அப்படியே பின்பற்றும் குழந்தைகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். காட்சி ஊடகத்தின் வழியே வந்தடைந்தாலும் கதைதான் குழந்தைகளை ஈர்த்துப் பார்க்க வைக்கிறது. எனவே, கதைகளின் மூலம் பெற்றோர்கள், குழந்தைகளிடம் கூற நினைக்கும் விஷயங்களைப் பகிரலாம்.
குழந்தைகளுக்கான கதை என்றவுடனே நீதி நெறி கதைகள்தான் பலருக்கும் நினைவில் வரும். தெனாலி ராமன், பீர்பால், ராமாயண, மகாபாரதக் கதைகள் என இந்தப் பட்டியல் நீளும். இந்தக் கதைகளின் முடிவில், இதனால் அறியப்படும் நீதி என முடிக்கும்போது குழந்தைகள் சோர்வடைந்துவிடுகின்றனர். மேலும், அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களை நிஜ வாழ்வில் பார்க்கவே முடியாது. எனவே, அவையெல்லாம் கற்பனைக் கதையில்தான் நடக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடும் சூழல் உண்டு. இதைவிட, மிக முக்கியமான விஷயமும் ஒன்றிருக்கிறது. அப்போதைய பல கதைகள், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்துக் கேள்வி எழுப்பாமல் அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கும். சில வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை இழிவாகச் சித்திரிக்கும் கதைகளும் இருக்கின்றன. அவற்றை நம் குழந்தைகளுக்குச் சொல்லும்போது அவர்களும் அந்தக் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏராளம்.
மனிதர்களுக்குள் பிறப்பால், நிறத்தால், பாலின அடையாளத்தால், மதத்தால், சாதியால், செய்யும் தொழிலால் உள்ளிட்ட எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என, சமூக நீதிக்கான விஷயங்கள் உலகம் எங்கும் பேசப்பட்டு, அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனவே, குழந்தைகளுக்கு நாம் சொல்லும் கதைகளிலும் சமூக நீதியை வலியுறுத்துவது இன்னும் சிறப்பானதாக இருக்கும். ஆனால், அதை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல் மிக இயல்பாக, நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டுவதைப்போல செய்ய, 'பறக்கும் ஹேர் க்ளிப்' எனும் நூல் வழிகாட்டுகிறது. இதை, விஜயபாஸ்கர் விஜய் எழுதியுள்ளார். இது இவரின் இரண்டாவது நூல்.
'பறக்கும் ஹேர் க்ளிப்' எனும் நூல் சிறுவர் கதைகள் அடங்கியது என்றாலும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது. ஏனெனில், குழந்தைகளிடம் நம் அன்றாட வாழ்வின் வேலைகளின் ஊடாக, அந்த வேலையை ஒட்டியபடியே கதைகளை உருவாக்கும் வித்தையைக் கற்றுத்தருகிறார்.
நாம் சில விஷயங்களில் அட்ஜெஸ்ட் செய்துகொள்கிறோம் என்றாலும் அவை நம்மை உறுத்திக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து நாம் எளிதாக விடுபட முடியும் என்றாலும் அதற்கான முயற்சியை எடுக்க மாட்டோம். இதை, 'தயங்காதே' எனும் கதையில் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். முடிவெட்டும்போது, முகத்தில் விழும் முடி அரிக்கும் அல்லவா... அதை எடுத்துவிட்டால் முடிவெட்டுபவரின் வேலைக்கு இடையூறாகுமே என அவ்வாறு செய்யாமல் இருக்கிறார் அப்பா ஒருவர். அவரின் மகளுக்கு மற்றவர்கள் கன்னத்தைக் கிள்ளுவது, முதுகில் தட்டுவது போன்றவை பிடிக்காது. ஆனால், அதைச் சொல்லாமல் அட்ஜெஸ்ட் செய்துகொள்வார். ஆனால், இவர்கள் இருவரும் ஒரே நாளில் இந்த விஷயத்திலிருந்து வெளியே வருகிறார்கள். அதை, இருவரின் காட்சிகளை மாற்றி, மாற்றி எழுதி ஒரு சினிமா பார்க்கும் உணர்வைத் தருகிறார் எழுத்தாளர்.
குழந்தை வளர்ப்பின் அடிப்படையான குணமே குழந்தைகளின் சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து, அவற்றிலுள்ள நேர்மறை, எதிர்மறை அம்சங்களை இனம் கண்டுகொள்வதுதான். எதிர்மறையான அம்சம் இருந்தால், அதைக் குத்திக்காட்டாமல் உணர்த்துவதும் முக்கியம். ஒரு குட்டிப்பெண் நகத்தால், தன் தந்தையை இறுக்கக் கிள்ளுகிறாள். சிறுமிதான் என்றாலும் அந்தக் கிள்ளல் வலிக்கிறது, அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதற்கு, புராணத்தில் சிரவணன், அவரின் அப்பா, அம்மாவைத் தூக்கிச் சுமந்தது, காயிதே மில்லத் அவரின் அம்மாவுக்கு விடியும் வரை கால் அமுக்கி விட்டது எனச் சுற்றி வளைத்து, 'இதுபோல எல்லாம் அப்பாவுக்குச் செய்ய வேண்டாம், கிள்ளாமல் இரு' என்கிறார். அதை அழகாகப் புரிந்துகொள்ளும் மகள், 'கோபம் வந்த கிள்ளி வெச்சிர்ரேன் இல்ல' எனக் குழந்தைமையுடன் கேட்கிறாள். உடனடியான மாற்றம் வராது என்றாலும் விஷயத்தை விதைத்ததுபோலச் செய்துவிடுகிறார். அடுத்த நாளோ/மாதமோ/வருடமோ அது நிச்சயம் முளைத்து பூக்கும்.
பயத்துக்கும் அர்த்தமற்ற பயத்துக்கும் உள்ள விஷயத்தை, ஒரு சிறுமி வரைந்த ஓவியத்தில் உள்ள சூரியனைக்கொண்டே மிக நேர்த்தியாக விளக்குகிறார். அதில் சூரிய ஒளி, பூமியை வந்தடையும் காலம் பற்றியெல்லாம் வருகிறது. ஆனால், படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது. Fearக்கும் Phobiaக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, குழந்தைகளுக்கு உணர்த்த ரொம்பவே உதவும் இந்தக் கதை.
இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை, பாகுபாடு. தன் குழந்தைக்கு இட்லி ஊட்டுகிறார் ஓர் அப்பா. இடையிடையே தண்ணீர் கேட்கிறாள் மகள். அதை மையமாக வைத்தே அம்பேத்கர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லத் தொடங்குகிறார். ஆனால், அதை, மகள் புரிந்துகொள்ளும்விதமாக வகுப்பில் நடப்பதாக ஒரு சம்பவத்தைச் சொல்லி, மனிதர்களுக்குள் பாகுபாடு பார்க்கப்படுவதை மகளின் வாயிலிருந்து வருவதைப்போல அந்தச் சூழலை மிக அழகாக நகர்த்திச் செல்கிறார். 'Discrimination' எனும் சொல், இனி அந்தச் சிறுமிக்கு வெறும் வார்த்தையாக இருக்காது. அதன் பொருளைப் புரிந்தவளாக உச்சரிப்பாள். இந்த மாற்றத்தை இட்லி ஊட்டும் கால இடைவெளியில் செய்துவிட முடியும் எனப் பெற்றோர்களுக்குக் கற்றுத்தருகிறார் எழுத்தாளர். இதுதான் நூலில் மைய விஷயம். இதுபோல இப்புத்தகத்தில் பத்துக் கதைகள், எளிமையும் நேர்த்தியும் கொண்டவையாக உள்ளன.
(நன்றி: விகடன்)