அமெரிக்க நாவலாசிரியரான சேலிஞ்சர் 1951ஆம் ஆண்டு “தி கேட்சர் இன் திரை” என்ற தனது முதல் நாவலைப் படைத்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்திரெண்டு. ஆங்கில நாவலில் அது ஒரு அற்புதம் என்று ஒரு விமர்சகர் எழுதினார். முதல் தரமான நாவல்கள் வரிசையில் இடம்பெறும் “தி கேட்சர் இன் தி ரை” பல மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது இதனை “குழந்தைகளின் ரட்சகன்” என்ற பெயரில், தமிழில் தந்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.
அமெரிக்கப் பதின்ம வயது இளைஞன் ஒருவன் தனது கதையைத் தானே சொல்வதாக நாவல் அமைந்திருக்கிறது. அவன் நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தனக்கு நிகழும் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறான். ஹோல்டன் கால்ஃபீல்ட் என்ற அந்தச் சிறுவன் - இளைஞன், தன்னைச் சுற்றியுள்ள குழப்பங்களில், போலித்தனத்தில், பொய் முகங்களில் வாழ்க்கையின் பொருளைத் தேடுகின்றான்.
ஹோல்டனுடைய கதையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி ஹோல்டன் தனது வரலாற்று ஆசிரியரைச் சந்திப்பதில் தொடங்கி நியூயார்க் விடுதியில் பாலியல் தொழில் தரகனுடன் சண்டை போடுவதில் முடிவடைகிறது. இரண்டாவது பகுதி ஹோல்டன் சாலி என்ற தன் முன்னாள் தோழியைச் சந்திப்பதையும், பிறகு அவனுடைய வீட்டுக்குப் போவதையும் விவரிக்கும். மூன்றாவது பகுதியில் வீட்டிலிருந்து போய் அன்டோலினியைச் சந்தித்துவிட்டு ஹோல்டன் தனது தங்கை ஃபீபியுடன் தனது நேரத்தைக் கழிப்பதைப் படிக்கிறோம். இந்தக் கடைசி நிகழ்வுகளுக்கு மத்தியில் ஹோல்டன் சமுதாயத்தின் பலவகை மனிதர்களை எதிர்கொள்கிறான்.
கிறிஸ்துமசுக்கு முன்னால் டிசம்பர் குளிரில் கதை தொடங்குகிறது. ஹோல்டன் ஆங்கிலத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோற்றதால் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுகிறான். அதற்கு முன்னர் தனது வரலாற்று ஆசிரியரைச் சந்திக்கிறான். பிறகு அவனுடைய விடுதியில் உடன் வசிப்போரான ஸ்ட்ராட்லேட்டர், அக்லே ஆகியோருடன் அவனுடைய உரையாடல்கள், மோதல்கள் அவர்கள் பற்றிய அவனுடைய கணிப்புகள் ஆகியவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். அவனுடைய முன்னாள் காதலியான ஜேன் கால்கெருடன் ஸ்ட்ராட்லேட்டர் சுற்றிவிட்டு வருவதாகச் சொல்வது இவனுக்கு எரிச்சல் மூட்டுகிறது. அவனிடம் அடி வாங்கி மூக்கு உடைகிறது.
விடுதியை விட்டுத் தனது பெட்டி படுக்கையுடன் தொடர் வண்டி நிலையத்திற்கு நடக்கிறான். தனது அண்ணன் டி.பி., தங்கை ஃபீபி, ஜேன், சாலி இவர்களில் யாரையாவது தொலைபேசியில் அழைக்க வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் அழைக்கவில்லை. தொடர் வண்டியில் பயணித்து, இறங்கி எட்மன்ட் ஹோட்டலை அடைகிறான்.
விடுதியில் அவனைத் தனிமை வாட்டுகிறது. தூக்கம் வரவில்லை. வரவேற்பறைக்குச் செல்கிறான். அவனுக்கு மது தர மறுக்கிறார்கள். ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி ஊர் சுற்றுகிறான். அறைக்கு வந்து லிஃப்ட் இயக்குபவனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விலை மாதுவைச் சந்திக்கிறான். அவன் பாலுறவில் ஈடுபடாவிட்டாலும் 10 டாலரை அவனிடமிருந்து அவர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள். காலையில் உணவின் போது இரண்டு கன்னியர்களைச் சந்திக்கிறான். இரண்டு மணிக்கு சாலி வருகிறாள். அவளும் போலித்தனத்தின் ஓர் அடையாளம் தான் என்று இவனுக்குத் தெரியும். சலிப்புத் தட்டுகிறது.
பிறகு அவனுடைய நண்பன் லூசுடன் நேரம் போக்குகிறான். குடிக்கிறான். ஆனால் மன அழுத்தமும் தனிமையும் போகவில்லை. பூங்காவிற்கு நடக்கும்போது ஃபீபிக்கு வாங்கி வைத்திருந்த இசைத்தட்டு உடைந்து விடுகிறது. இவன் மனம் உடைந்து போகிறான். குளிர் வாட்டுகிறது. நிமோனியாவில் இறந்து விடுவோமா என்ற அச்சம். வீட்டிற்குப் போய் ஃபீபியைப் பார்க்கிறான். இவன் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டது தெரிந்துவிட்டால் அப்பா அவனைக் கொன்று விடுவார் என்று ஃபீபி பயப்படுகிறாள். ஹோல்டன் இப்போது ஆயிரக்கணக்கான குழந்தைகள் கம்புத் தோட்டத்தில் விளையாடுவதும் அவர்கள் உச்சியிலிருந்து விழப்போகும் போது இவன் அவர்களைக் காக்க நினைப்பதுமான ஒரு காட்சியை மனதில் கற்பனை செய்கிறான்.
ஹோல்டன் வீட்டை விட்டு மேற்கே போக முடிவு செய்த போது ஃபீபியும் கூடச் செல்ல விரும்புகிறாள். பிறகு தன்னிடமிருக்கும் பணம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்து விடுகிறாள். அவளுடைய அன்பு அவனை நெகிழ வைக்கிறது. அவனுடைய முன்னாள் ஆசிரியர் அன்டோலினியைச் சந்திக்கிறான். ஓரினச்சேர்க்கை வக்கிர புத்தியுள்ளவர் அவர். மனிதர்களின் நடத்தையால் குழம்பி அங்கிருந்து புறப்படுகிறான். பிறகு ஃபீபியின் பள்ளிக்குச் சென்று அவளை அழைத்துக் கொண்டு ராட்டினம் ஆடச் சொல்கிறான். கீழே விழுந்தால் அவளைப் பிடிக்க வேண்டும் என்று கற்பனை செய்கிறான்.
கடைசியில் ஹோல்டன் ஒரு மனநல மருத்துவமனையில் இருக்கிறான். கதையின் கட்டமைப்புப் பின்னல் ஒரு வட்டமாக இருக்கிறது. தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருவது போலத் தோன்றுகிறது. ஹோல்டன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் புறப்பட்டு அதே நிலையிலேயே இருக்கிறானா, மனநிலையில் இன்னும் மோசமாகிறானா, அல்லது ஃபீபியின் மாசற்ற தன்மையால் குணமடைகிறானா என்பது புதிராகவே உள்ளது.
பாத்திரப் படைப்பில் சேலிஞ்சரை மிஞ்ச யாராலும் முடியாது. ஹோல்டனிடம் அவருடைய சுய சரித்திரத்தைத் திறனாய்வாளர்கள் பார்க்கிறார்கள். வரலாற்று ஆசிரியரும் - அன்டோலினியும், ஜேனும் - ஃபீபியும், ஸ்ட்ராட்லேட்டரும் - லூசும் இணைகளாக நம் கண்முன் வலம் வருகிறார்கள். தன்மை கதை சொல்லும் யுத்தி இந்த நாவலுக்கு மிகப் பொருத்தமானது. சேலிஞ்சரின் நடையைப் பற்றிப் பல திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஹோல்டன் நம்மிடம் நேரடியாகவே பேசுகிறான். விடலைப் பருவத்து அமெரிக்க இளைஞர்களின் சிறப்பு மொழி அவர்களுடைய சிந்தனைக் குழப்பத்தை வெளிக்கொணர்வதைக் கேட்கிறோம்.
கதையின் கருப்பொருள் பற்றிப் பல கருத்துக்களை முன் வைக்கிறார்கள். முதலாவதாக மாசற்ற தன்மை தான் சிறப்பாகக் கூறப்படுகிறது. மார்க் டிவைனின் ஹக்கிள்பரி ஃபின் போல ஹோல்டன் இருக்கிறான். தனது கன்னித் தன்மையைக் கடைசி வரையில் இழக்கவில்லை. ஜேனின் கைகளை மட்டும் தான் பிடித்திருக்கிறான். மாசற்ற தன்மைக்கு இன்னொரு அடையாளம் ஃபீபி. இளமை, ஒழுக்கம், தனிமைப்படுத்தப்படுதல், சோகமும் மன அழுத்தமும், சாவும், முக்கியமாக போலித்தன்மையையும், பொய்யும், முட்டாள்தனமும் கதை முழுவதும் விரவி நிற்கின்றன. சமுதாயமே - இரண்டாம் உலகப் போருக்கும் பிந்தைய அமெரிக்க சமுதாயமே - சோகத்தின் உறைவிடம். நாவலின் தலைப்பும், குழந்தைகளின் மாசற்ற தன்மையை உலகம் பொய்மையிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியத்தைத்தான் உணர்த்துகிறது.
தமிழாக்கம் செய்திருக்கிற சித்தார்த்தன் சுந்தரம் மூலத்தின் சுவை குன்றாமல், சேலிஞ்சரின் நடை கெடாமல் அருமையாக நாவலைத் தந்திருக்கிறார். உரையாடல்கள் மூலம் தான் கதை நகர்த்தப்படுகிறது. அமெரிக்க ஆங்கில உரை நடையை - குறிப்பாக அந்தக் காலத்து இளைஞரின் சிறப்புச் சொற்களைத் (Slang) தமிழில் கொண்டு வருவது எளிதில்லை. சித்தார்த்தன் இந்தப் பிரச்சினையை இலாவகமாகக் கையாண்டிருக்கிறார்.
எதிர்வெளியீடு, நூலைப் பாராட்டத் தக்க வகையில் பதிப்பித்திருக்கிறது.
(நன்றி: கீற்று)