இது பேராசிரியரின் சமீபத்திய நூல். இந்நூல் நாம் ஏற்கனவே பார்த்த ஆளுக்கொரு கிணறு என்ற நூலின் தொடர்ச்சி ஆகும். ஆளுக்கொரு கிணறில் உள்ள 9 கட்டுரைகளோடு மேலும் 5 கட்டுரைகளைச் சேர்த்து மொத்தம் 14 கட்டுரைகளைக் கொண்டு இந்நூல் வெளியாகி உள்ளது.
இந்தப் புத்தகத்தை சமீபத்தில் தஞ்சையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கியபோது விற்பனையாளர் கேட்டார் , “ஆளுக்கொரு கிணறு படித்திருக்கிறீர்களா?” என்று. நான் படித்திருக்கிறேன் என்றேன். “அப்போது இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவைப்படாது” என்றார் அவர். புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். ஆளுக்கொரு கிணறைத்தாண்டி மேலும் ஐந்து கட்டுரைகள். பேராசிரியரின் ஒவ்வொரு எழுத்தையும் விடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான். வாங்கினேன். வாசித்தேன். இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆளுக்கொரு கிணறில் இல்லாத கட்டுரைகள் ஐந்து இந்நூலில் உள்ளன.
முதலாவது கட்டுரை, குழந்தைகளின் நூறு மொழிகள். இந்தக் கட்டுரையில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட ரெக்கியோ என்னும் பள்ளி பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதன் முதல் ஆசிரியரான லோரிஸ் மாலகுஸ்ஸி கூறியுள்ள கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் கூறுகிறார், "குழந்தைகள் பேச நூறு மொழிகள் இருக்கின்றன. குழந்தைகள் கண்டுபிடிக்க நூறு உலகங்கள் இருக்கின்றன, ஆனால் பள்ளிகள் குழந்தையின் 99 மொழிகளைத் தடைசெய்துவிட்டு, ஒரே ஒரு மொழியை மட்டும் கேட்க விரும்புகின்றன. குழந்தையின் 99 உலகங்களை மறைத்துவிட்டு ஒரே ஒரு உலகை மட்டும் காட்ட விரும்புகின்றன”. இது உண்மை தானே!
அவருடைய நீண்ட கவிதையில் இருந்து சில வரிகள்,
"குழந்தையிடம் நூறு மொழிகள்!
நூறு சிந்தனைகள்!
குழந்தைகள் விளையாடுவதும்
கற்றுக் கொள்வதும் நூறு வழிகளில்!
அவர்களின் ஆச்சரியம்
நூறு விதம்!
மகிழ்ச்சி நூறு விதம்!
புரிந்து கொள்ள
கண்டுபிடிக்க
கனவு காண
அவர்களுக்கு நூறு உலகங்கள்!”
ஒரு நூறு மட்டுமா ? இன்னும் பல நூறு உலகங்கள் குழந்தைகளுக்கு உள்ளன. அதை எல்லாம் தடை செய்து விட்டு “ தெரியுமா? தெரியாதா? என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடக்கப்படும் குழந்தைகளுக்கான குரலாக பேராசிரியரின் குரல் அவரது மனதின் அடி ஆழத்தில் இருந்து ஒலிக்கிறது.
மேலும் இந்த ரெக்கியோ பள்ளியில் வலியுறுத்தப்பட்ட கூட்டாகச் செய்யும் ஆய்வுத்திட்டம் என்பதுதான் பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுக்கும் “ தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு” செயல்திட்டம் என்று நினைக்கிறேன். இதனையே தமிழக பள்ளிக்கல்வித்துறையும் தற்போது செயல்படுத்த விழைவது ஆரோக்கியமான செயல்பாடு.
இரண்டாவது கட்டுரை “கண்களை உங்களைத்தான் கவனிக்கின்றன” என்ற தலைப்பில் உள்ளது. இதில் உங்கள் என்பது ஆசிரியரைத்தான் குறிப்பிடுகிறது.
ஆசிரியரை பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்!
ஆனால், இளங்கண்கள் – எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் இவரால் கண்டுபிடித்துக் கொடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை – இந்தக் கண்களும்…. கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்! என்று கூறி சிலிர்க்க வைக்கிறார் ச.மாடசாமி.
இந்நூலின் 12 வது கட்டுரையான இணைக்கவா? விலக்கவா? எதற்காக ஆசிரியர்கள்?... என்ற கட்டுரை.. இன்றும் 6 -14 வயதில் 80 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குள் வராமல் விலகி வெளியே நிற்கும் இந்தியாவில் , தற்போது உள்ள நடைமுறையான எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத்தேர்ச்சி என்பது மாற்றப்படலாம் என்ற செய்தியைப் பற்றிப் பேசுகிறது. இதில் நமது ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கலாம், ஆனால் ச.மா இந்நடைமுறை குழந்தைகள் இடைநிற்றலை அதிகரித்து மிகப் பெரிய சமூகப் பிரச்சினைக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறார்.
அடுத்து 13வது கட்டுரையில் வகுப்பறைக்குப் பொருந்துமா பாலோ பிரையர் கல்விமுறை? என்று கேள்வி எழுப்புகிறார். இதில் பாவ்லோ பிரையர்(1921-1997) என்பவர் பிரேசில் நாட்டுக் கல்வியாளர். எழுத்தறிவற்ற கரும்புத் தோட்டத் தொழிலாளிகள் 300 பேருக்கு 45 நாட்களில் சரளமாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார். எழுத்தறிவு தர 30 மணி நேரம் போதும் என்பதை நிரூபித்தார்.. பாலோ பிரையர் முன் வைத்த கல்வி முறையின் அடிநாதம் விவாதம். விவாதம் என்பது அனைவரும் உரையாடுவதற்கான வாய்ப்பு. இதில் உரையாடலுக்கு சில முன் நிபந்தனைகளைபாலோ பிரையரின் கருத்துக்கள் மிக முக்கியமானது. இது கல்வி குறித்த உரையாடலுக்கு மட்டுமல்ல பொதுவான எல்லா உரையாடலுக்கும் இதுவே அடிப்படை. “உரையாடலுக்கு முதலாவது முன் நிபந்தனை அன்பு, உரையாடுபவர்க்கிடையேயான அன்பு;வாழ்கையின் மீதான அன்பு. அடுத்தது – தன்னடக்கம். தன் மண்டைக்கணத்தால் பிறரை அவமதிக்காத தன்னடக்கம்; பிறரின் அறியாமை வெளிப்படுகையில் பூரித்துக் குதூகலிக்காத தன்னடக்கம். அடுத்தது – நம்பிக்கை.உரையாடுபவர் மீதும் உரையாடலின் மீதும் வைத்த நம்பிக்கை! கைகட்டிக் காத்திருக்கும் நம்பிக்கை அல்ல; தொடர்ந்து சிந்தித்து – போராடி – யதார்த்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை! இறுதியாக – தைரியம்! பலமுறை தோற்று விழுந்த பின்னும், பழகிய பாதையிலேயே தொடர்ந்து நடக்காமல், விலகி நடப்பதற்கான தைரியம்” இந்த ஒரு பத்தியில் உள்ளதை கடைபிடித்தால் போதும், இந்த உலகில் நாம் நல்லபடியாக அடுத்தவரிடம் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஏனெனில் ஒவ்வொருவரின் வாழ்க்கை என்பதும் சமூகத்துடனான உரையாடல் தானே! . ஜனநாயக வகுப்பறையின் அடிப்படைத் தகுதி விவாதம் என்னும் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறார். ச.மா.
14 வது கட்டுரை “நியாய வகுப்பறை” என்பதாகும். இங்கு நியாயம் என்பதற்கு கோர்ட் அர்த்தம் இல்லை. நியாயம் என்பதற்கு வகுப்பறை அர்த்தம் அன்பு என்பதுதான். பாரபட்சமற்ற அன்பு! பாடம் மறக்கிற பிள்ளையையும் பூரணமாய் நேசிக்கும் அன்பு! மறதி என்பது குறையல்ல; அது கற்றலின் பாதை – என்ற புதிய புரிதலால் கனிந்து பிறக்கும் அன்பு! இந்த அன்பு வகுப்பறைகளுக்கு மிக அவசியமானது என்கிறார் ச.மா.
இவ்வாறு நாம் ஏற்கனவே விவாதித்துள்ள ஆளுக்கொரு கிணறு நூலில் உள்ள கட்டுரையோடு மேலும் ஐந்து பயனுள்ள கட்டுரைகளைச் சேர்த்து வெளிவந்துள்ள இந்த நூலானது எனது புரிதலை மேம்படுத்தியது. உங்களுக்கும் பயன்படலாம் என அறிமுகம் செய்கிறேன்.