"வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே…
தினங்கள் கொண்டாடுவதை
விட்டு விட்டு
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகின்றீர்கள்?"
என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையை இந்நூலில் மேற்கோள் காட்டும் நூலாசிரியர், இக்கவிதையின் வழியே குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை இந்நூலின் நோக்கமாக 19 கட்டுரைகளின் வழியே கூறுகிறார். இக்கட்டுரைகள் தினமணி, புதிய வெளிச்சம், தாமரை, ஆரூர் மணியோசை, உழைப்பவர் ஆயுதம் போன்ற இதழ்களில் 2000 முல் 2007 வரையான ஆண்டுகளில் வெளிவந்தவை. அனைத்து கட்டுரைகளும் குழந்தைகளை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவை குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், கல்வியில் மனிதப் பண்புகளை வளர்த்தல், குழந்தைகளுக்கான இலக்கிய எழுத்துக்களை உருவாக்குதல், பள்ளியில் மாணவர்களைத் தக்க வைப்பதற்கு ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் தேவை, தமிழகத் தொடக்கக் கல்வியில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் அணுகுமுறை , சமத்துவக் கல்வி, வேலை வாய்ப்பின்மை என கல்வித்துறை சார்ந்த பல்வேறு தளங்களில் விரிகின்றன.
இதில் முதலாவது கட்டுரையான “தோட்டக்காரர்களாய் இருப்போம்” என்பதில் குழந்தைகள் உலகம் பற்றி மிக அழகாகக் குறிப்பிடுகிறார். “குழந்தைகள் உலகம் அலாதியானது. அவர்களின் உலகம் கனவுகளால் நிரம்பியது. அவர்களின் உலகில் பெரியவர்களின் உலகச் சிக்கல்கள் இல்லை. எதையும் நிதர்சனமாக அணுகும் இயல்பு குழந்தைகளுடையது. வயதானவர்களின் “Ego”க்களை , நெளிவு சுளிவுகளை பிளவுண்ட பார்வைகளைத் திணிக்காமல் விட்டாலே போதுமானது. குழந்தைகள் நல்ல தோட்டத்தின் பூச்செடிகள். நாம் ஆசிரியர்களானாலும், பெற்றோர்களானாலும் நல்ல தோட்டக்காரர்களைப் போல் செயல்படுவோம். கால்நடைகளாகி குழந்தைகளைக் கடித்து குதறிவிட வேண்டாம்”. குழந்தைகளைப் பற்றிய மிக உன்னிப்பான உற்றுநோக்கல்கள் இவை.
“பயன்பட்டு வாழும் மனிதப்பண்பாடு புறந்தள்ளப்பட்டு, எதையும் பயன்படுத்தி வாழும் நுகர்வுப் பண்பாடு முன்னெழும் இவ்வேளையில் கல்வியில் மனிதப் பண்பியல் கவனம் பெற்றாக வேண்டும்” என்பதை “கல்வியில் மனித மாண்புகள்” என்னும் கட்டுரையில் வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.
குழந்தைகளுக்கான எழுத்துக்களின் தேவையைப் பற்றி விளக்கும் கட்டுரையில், குழந்தைகள் பற்றிய எழுத்துக்களை மூன்று வகையாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர், அவையாவன,
1. குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுவது
2. குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது
3. குழந்தைகளைப் பற்றி எழுதுவது.
அடுத்து குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற கட்டுரையில், “குழந்தைகள் பிரபஞ்சம் அலாதியானது. அவர்களுக்கு என நீங்கள் வாங்கித் தரும் திண்பண்டங்கள், விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், மருந்து மாத்திரைகள், சொத்து சேமிப்புகள், கல்விப் பட்டங்கள் எல்லாவற்றையும் விட மேலானது – குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுவது. உங்கள் பேச்சை நிறுத்தி குழந்தைகளின் வாயசைப்புகளுக்குக் காது கொடுங்கள். குழந்தைகளோடு உரையாடுங்கள். அந்த உரையாடல்கள் வழி கனத்த மௌனங்கள் உடையும். புது வாழ்க்கை பிறக்கும்” என்று குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல எல்லா நாளும் குழந்தைகளைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும், வழி முறைகளையும் கூறுகிறார்.
“பள்ளியை ஒரு பூந்தோட்டம் மாதிரியும், பிள்ளைகளை வண்ணத்துப் பூச்சிகள் மாதிரியும், ஆசிரியரை தோட்டக்காரர் மாதிரியுமாக மாற்றிடும் சூழலே குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்வி மீதான அச்சத்தைப் போக்கும். இதற்கு ஆசிரியர்களின் அணுகுமுறை இன்றியமையாததாக அமைகின்றது” என பல்வேறுபட்ட சமூக பொருளாதார பிண்ணனியிலிருந்து வரும் மாணவர்களை வகுப்பறையில் தக்க வைத்தலில் ஆசிரியரின் பங்கு பற்றி தக்க வைத்தலில் ஆசிரியரின் அணுகுமுறை என்ற கட்டுரையில் நூலாசிரியர் விவரிக்கிறார்.
குழந்தைத் தொழிலாளர் முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றியும், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட செயல்வழி கற்றல் முறையினைப்பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் ஆசிரியர் தொழிலில் உள்ளவர்களுக்கு பழக்கமானவையாக இருந்தாலும் மிக முக்கியமான கட்டுரைகள்.
கல்வியில் தரம் என்னும் கட்டுரை தொடக்கக் கல்வியில் தரத்தை எட்டுவதற்கான நமது வழிமுறையில் தடைகளான குறைவான நிதி ஒதுக்கீடு, ஆசிரியர் மாணவர் விகித முரண், பல் வகுப்பு கற்பித்தல், போதுமான கட்டிட வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் இன்மை போன்றவற்றைப் பற்றி பேசுகின்றன.
“கல்வி என்பது வேலைக்கான திறவுகோல் என்பது மாறி கல்வியறிவும் வேலைவாய்ப்பும் எதிர்நிலைகளாகி விட்டன. இன்றைய நிலையில் கல்வி என்பது மனிதர்களிடையே, சமத்துவப் போக்குகளை உருவாக்குவதையே தலையாய கடமைகளாகக் கொள்ள வேண்டும்” என சமத்துவத்துக்கான கல்வியின் அவசியம் பற்றி சமத்துவக்கல்வி என்னும் தலைப்பில் குறிப்பிடுகிறார்.
“ இன்றைய உலகமயமாக்கல் சூழலில் கல்வி என்பது ‘அறிவு பெறும் முறைமை’ என்பதிலிருந்து ஒரு பண்டம் என்னும் அளவில் சுருங்கிவிட்டது. இச்சூழலில் வேலைவாய்ப்புக்கான கல்வி என்பதோடு மரபு, பாரம்பரியம், பண்பாடு சார்ந்த விழுமியங்களுடன் மொழித்தேர்ச்சி என்பதும் இணைக்கப்பட்டால் ஒழிய ஈரமும் சாரமும் மிக்க மனிதர்களை உருவாக்க முடியாது. கருவிகள் பெருத்துவிட்ட உலகத்தில் பிள்ளைகளையும் உயிருள்ள கருவியாக மாற்ற முயல்வது ஆபத்தானது” என படிப்பைத் தேர்வு செய்தல் என்னும் கட்டுரையில் மனிதப்பண்புகளோடு கூடிய படிப்பைத் தேர்வு செய்வதன் அவசியத்தை நூலாசிரியர் விளக்குகிறார்.
கூட்டுக்குடும்ப சிதைவினால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாகிப்போனதை பின்னங்கள் என்னும் கட்டுரை வழியாகவும், பரஸ்பர அன்பு, விட்டுக் கொடுத்தல், கருத்துப் பரிமாற்றம், கூட்டு முடிவு, மறத்தல் மன்னித்தல் போன்ற ஜனநாயகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கூறும் மனவளம் என்னும் கட்டுரையும், வாழும் ஒவ்வொரு கணமும் முக்கியமானவை, இதில் அல்லதை நீக்கி நல்லதை வளர்த்து மனிதத்துடன் வாழச்சொல்லும் கல்வியும் ஞானமும் கட்டுரையும், “பெண்ணைப் பேச பெண்ணே எழு” என்னும் கவிஞர் அறிவுமதியின் வரிகளுக்கிணங்க பெண்கல்வியின் அவசியம் சொல்லும் கட்டுரையும், அறிவியல் தொழில்நுட்பம், கணினி மயம், விண்ணியல் ஆய்வு பற்றி பேசும் அதே சமயம் ஜோதிடம் பற்றியும் பேசும் முரண் உலகளவில் நகைப்பையே தரும் என்னும் கட்டுரையான கல்வியில் ஜோதிடம் என்பதும் என சமகாலத்தில் குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் பல முக்கியமான தகவல்களைப் பற்றி பல்வேறு கட்டுரைகளில் விவாதித்துள்ளார்.
வேலையின்மை என்னும் முக்கிய சமூகப் பிரச்சினையை நம்பிக்கை இழக்கும் இளைஞர்கள், சும்மா இருக்கும் சோகம் என்னும் இரண்டு கட்டுரையில் வலியுடன் விவரிக்கிறார். இதில் “வேலையின்மை என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமன்று. உளவியல் பிரச்சினை, பண்பாட்டு பிரச்சினை. கையிருந்தும், காலிருந்தும், படிப்பிருந்தும், உழைக்க மனமிருந்தும் வேலையில்லாத நிலை என்பது மோசமான மனநோயாளி மனோபாவத்தையே உண்டுபண்ணும்” என்று குறிப்பிடுமிடம், இதைவிட வேலைவாய்ப்பின்மையின் வலியை எப்படிச் சொல்ல முடியும்.
“படைப்பு வெளியில் குழந்தைகள்” என்னும் கட்டுரை தமிழில் வெளிவந்துள்ள சில குழந்தை இலக்கியப் படைப்புகளைப் பற்றி பேசுகிறது. இதில் விஷ்ணுபுரம் சரவணனின்,
“குழந்தைகளுக்கு மட்டுமே
அருகில் வந்துவிடுகிறது
வானம்”
என்னும் கவிதை அத்தனை அழகு.
கவிஞர் கு.ரா என்பவரின் கவிதையான,
“இரவில் தூக்கம் கலைகிறது
உடன் உறங்கியவள்
உட்கார்ந்து
பாலூட்டிக் கொண்டிருக்கிறாள் குழந்தைக்கு
கண்களை மூடியவாறு” என்பதும் சிறப்பு.
கடைசி கட்டுரையான “பெரிதினும் பெரிது கேள்” வாழ்வியல் பேசுகிறது. வீடுதான் நமது வாழ்க்கையின் ஆதாரம். நடுத்தர வர்க்க வாழ்வில் உழைப்பு சுருங்கி, உள்ளச் செழுமையும் சுருங்கி, மனபாரமும், மனப்புழுக்கமும் அதிகரித்துவிட்டது. பொருள் தேடும் வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்திருக்கும் நேரம் குறைந்து விட்டது. வீடு என்பது சாப்பிடவும், தொலைக்காட்சி பார்க்கவும், தூங்கவுமான இடமாகச் சுருங்கிவிட்டது. இச்சூழலில் குடும்ப ஆதாரமான குழந்தைகள் மட்டும் எவ்வாறு நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். இதனை மாற்ற நூலாசிரியர் “சகமனித பாசம், அக்கறை, மரியாதை, பரிமாறல் இல்லாத சமூகம் அழுகுணிச் சமூகமாக நாற்றமடிக்கவே செய்யும். உலகம், உயிர்கள், மரபுகள், பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு….என எதைப்பற்றியும் கவலைப்படாத வெறும் இருப்பு சார்ந்த ஜீவன்களாக நமது நாளைய தலைமுறை உருவாவதை அனுமதிக்கக் கூடாது. பெரிதினும் பெரிது கேள் என்னும் பாரதியின் வாக்கை அன்பு, அறிவு ஆகிய மனிதப் பண்புகளுக்கு அடிப்படையாக்கி வளப்படுத்துவோம். வாழ்க்கையைப் பொருள் பொதிந்ததாக்குவோம்” என்று நூலை நூலாசிரியர் நிறைவு செய்கையில் நமது மனதும் ஒரு நல்ல நூலைப் படித்த திருப்தியில் நிறைகிறது.
குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற நூலின் வழி நூலாசிரியர் முனைவர் இரா.காமராசு பல தகவல்களை நமக்குக் கடத்துகிறார். ஆரம்பத்தில் உள்ள கவிக்கோவின் கவிதைப்படி தினஙகளை விட்டுவிட்டு குழந்தைகளைக் கொண்டாட குழந்தை அணுகுமுறையிலும், புறச்சூழலிலும் நாம் செய்ய வேண்டிய மாறுதல்களை இந்நூல் அழகுற எடுத்தியம்புகிறது.