ஜெ. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் கோயிலுக்கு யானையைத் தானமாக அளிக்கும் படலம் தொடங்கிவிட்டது. கூடவே இந்த யானைகளுக்கு முதுமலையில் புத்துணர்ச்சி முகாமும் நடத்துகிறார்கள். சிங்காரச் சென்னை என்று சொல்லி பிச்சைக்காரர்களை ஒழித்துக் கட்டும் இந்த ஆட்சியாளர்கள் கோயில், பக்தி என்ற பெயரால் யானைகளை பிச்சையெடுக்க அனுமதிப்பதுதான் வேதனை.
வன விலங்காகிய யானையை முதல்வரே கோயிலுக்கு தானமாக வழங்குகிறார். தமிழகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான கோயில் யானைகள் அன்றாடம் தெருத் தெருவாக பிச்சையெடுக்க வைக்கப்படுகின்றன. இந்த நாட்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், விலங்குவதை தடுப்புச்சட்டம் போன்றவை இருக்கின்றதா என்று கேள்வி எழுவது இயற்கை. பல்வேறு நோய்ப் பாதிப்பிற்குள்ளான இந்த கோயில் யானைகளை முதுமலை புத்துணர்ச்சி முகாமில் கொண்டுபோய் வைக்கும்போது அங்குள்ள காட்டு விலங்குகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து சூழியலாளர்களின் எச்சரிக்கையை அரசும், நீதிமன்றமும் புறக்கணித்து இந்த முகாமை நடத்துகின்றன. பல்வேறு கொடுமைகளுக்கு இந்த யானைகள் மூலம் இயற்கையான சூழலில் வாழும் எண்ணற்ற கானுயிர்கள் பாதிக்கப்படுவது மிக மோசமான நிலையாகும்.
ச. முகமது அலி, க. யோகானந்த ஆகியோர் இணைந்து எழுதிய அழியும் பேருயிர் : யானைகள் என்ற நூல் 2004-இல் பொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. அதன் அடுத்த பதிப்பு 2009இல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகம் கவனிப்பைப் பெறாத இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூல் யானைகள் பற்றிய பல்வேறு தகவல்களைத் தருகிறது. இன்றைய இந்தியாவில் யானைகளின் நிலையைக் கூறும் இந்நூலில் யானை ஆய்வாளர்கள் சிலரைப் பற்றி குறிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக சில சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளும் இதழ்களில் வெளியான முதல் பதிப்பின் விமர்சனங்கள் சிலவும் உள்ளது. இவை ஒன்றும் அதிகம் விற்பனையாகும் வெகுஜன இதழ்களில் வெளியானவை அல்ல. தீவிர வாசிப்பு, இலக்கியம் என்பவை சிறுபத்திரிகை சார்ந்தவை என்பதைப் போல சுற்றுச்சூழலும் வெகு சிறுபான்மையோரால் மட்டும் பேசப்படும் விஷயமாக மாறிப் போனதுதான் இங்குள்ள கெட்ட சேதி.
இன்றைய வளர்ச்சி சாமான்ய மக்களையும் இயற்கையையும் பெரிதும் பாதிக்கிறது. காட்டின் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. காட்டின் குறுக்கே தொடர் வண்டிப் பாதைகள் சுற்றுலாவை மேம்படுத்த அமைக்கப்படுகின்றன. இங்கு யாருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் என்ன? வருமானம் வந்தால் சரி என்ற கொள்கையில் நமது அரசுகள் பீடுநடை போடுகின்றன. இவற்றில் முதல் பலி வன விலங்குகளே.
யானைகளில் வாழிடப் பரப்பிலுள்ள காடுகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றிற்கு மாற்றப்படுகின்றன. இவற்றிற்கு மின்சார வேலியும் அமைக்கப்பட்டு விடும் போது பல யானைகள் ஆண்டு தோறும் மாண்டு போகிறது. யானைகளின் இடங்களை நாம் கைப்பற்றிக் கொண்டு அவை விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதாக நாம் கூறிக் கொள்கிறோம். இது போன்ற மனிதர்களின் போலித் தனத்தை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
இந்நூலில் ரேடியோ காலர் கருவி பொருத்தி யானைகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்வது குறித்து எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் ரேடியோ காலர் பொருத்த முயற்சிக்கையில் விபத்தில் சிக்கி ஒரு யானை சில நாட்கள் கழித்து மரணமடைந்தது நினைவிருக்கலாம். மேலும் தற்காலத்திலுள்ள அதி நவீன வசதிகள் மூலம் இந்த ரேடியோ காலர் சமிக்ஞைகளளை யானைகளை வேட்டையாடும் கும்பல்களும் பெற்று விடக் கூடிய வாய்ப்புள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
முன்னுரையில் ஆசிரியர், ஆதிவாசிகளை காட்டை விட்டு வெளியேற்றி சமூக நீதியுடன் பகுத்தறிவு வழிகாட்டுதல்களோடு நம்முடன் குடியமர்த்தி கல்வி – வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்கிறார். நல்ல கோரிக்கைதான். ஆனால் அரசு பழங்குடியினரை வெளியேற்றத் துடிப்பதும் அதற்குப் பல்வேறு சட்டங்களைப் போடுவதும் உண்மையில் அவர்கள் மீதான அக்கறையினால் அல்ல. காட்டைவிட்டு பழங்குடியினரை வெளியேற்றுவதன் மூலம் காட்டிலுள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வேலைதானே இங்கு நடக்கிறது. அதற்குத் தடையாக இருக்கும் பழங்குடிகள்தான் அரசின் பார்வையில் தீவிரவாதிகளாகத் தெரிகிறார்கள். சுற்றுச்சூழலியர்கள் இப்பிரச்சினயை பரந்த கண்ணோட்டத்துடன் அணுக வேண்டிய தேவை இருக்கிறது.
புதிய வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுவதால் காடுகள் அழிந்த கதைகள் ஏராளம். சபரிமலை, திருப்பதி, திருவண்ணாமலை, அமர்நாத், பண்ணாரி, பத்ரகாளியம்மன், அனுபாவி கோயில் போன்ற இடங்கள் காடுகளை அழிக்க பெரும்பங்கு வகித்ததையும் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாத கடப்பா நல்லமலைக் காட்டில் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருவதையும் குறிப்பிட்டு காட்டின் அழிவை கழிவிரக்கத்துடன் இந்நூல் நினைவுப்படுத்துகிறது.
யானைகள் மட்டுமல்ல, காட்டுயிர்கள் அனைத்தும் பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடப் பரப்பு சுருங்குவதேயாகும். நமது அரசியல்வாதிகள்தான் காட்டை அழிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆனால் பழியை பழங்குடியினர் மீது போடுகின்றனர். அரசு – அரசியல்வாதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள், தரகர்கள், அதிகார வர்க்கத்தினர் என்ற பல்வேறு கண்ணிகளில் சிக்கிக் காடுகளும் காட்டுயிர்களும் அழிந்து வருகின்றன. சுற்றுச்சூழல் பேசும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் வேறு பல மறைமுகக் கொள்கைகள் உண்டு. இவற்றிலிருந்து மாறுபட்டு இயற்கையோடிணைந்த சுற்றுச்சூழல் கொள்கைகளை ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.
யானைகள் இங்கே மதம், பக்தியோடு தொடர்புப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவைகளின் வாழ்க்கை நிலைபெறும். இங்கு புலிகளைப் பாதுகாப்பதற்கென இருக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், செயல் திட்டங்கள், விளம்பர உதவிகள் யானைகளைப் பாதுகாப்பதற்கு இல்லை. இவற்றைப் போல அழிவுறும் அனைத்து காட்டுயிர்களும் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் உருப்பெற வேண்டும். அதற்கு இம்மாதிரியான நூற்கள் வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்த நூலைப் படிக்கும்போது நானறிந்த உண்மைச்சம்பவம் ஓன்று நினைவுக்கு வருகிறது. கோயில் யானையிடம் ஆசி பெறுவதற்கு தன்னுடைய பெண் குழந்தையை அளித்த எனது அண்டை ஊர்க்காரர் ஒருவரின் கதை மிகவும் துன்பகரமானது. யானை அக்குழந்தையைத் தூக்கி வீசியடிக்க இன்னும் அக்குழந்தை நடைபிணமாகத்தான் வாழந்து கொண்டுள்ளது. இந்த மாதிரி பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தாலும் இன்னும் நூற்றுக்கணக்கான கோயில் யானைகளிடம் ஆசிபெற மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதத் தவற்றினால் ஏற்படும் இழப்புகளை யானை மீது சுமத்தி என்ன பலன்?
(நன்றி: மு. சிவகுருநாதன்)