இலக்கிய உலகில் இரண்டு வகை எழுத்துக்கள் உள்ளன, “கலை கலைக்காக, கலை மக்களுக்காக”. தோழர் சம்சுதீன் ஹீராவின் மௌனத்தின் சாட்சியங்கள் மக்களுக்கான நாவல். மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் அரசியலையும் சொல்லும் நாவல். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகம் பற்றி பேசுகிறது. ஆதிக்க அடையாள அரசியல் அம்மக்கள் கருத்தியல் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம், மதவெறியின் மகிமை, சிறுபான்மை மதத்தினர் அரசியல் பார்வை, இந்துத்துவ சக்திகளால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் பரப்பபடும் போலி இந்து மத கருத்தியல் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு, வர்க்கப் பிளவை பிற்போக்கு சக்திகள் நடைமுறைப்படுத்தும் முறை தான் நாவல் பேசும் முக்கியமான கதைக்களம். இடது, ஜனநாயக சக்திகள், தொழிற்சங்கங்கள் மையமாக இருந்த தொழில்நகரம் கோவை எப்படி மதவெறிக்கு பலியானது.
கோவை குண்டுவெடிப்பு நடக்கும்போது எனக்கு வயது ஆறு தான் இருக்கும் என நினைக்கிறன். சாதிக் கலவரங்களுக்கு பெயர்போன தென்மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் பிற்காலத்தில் கூட கோவை கலவரம் பற்றி பெரிதாக தெரியாது. அரசியல் தெரிய ஆரம்பித்த பின்புதான் இந்துத்துவ அரசியல் படிக்கும்போது கோவை குண்டுவெடிப்பு, கலவரங்கள் பற்றி செய்திகள் படித்துள்ளேன். ஆனால் நாவல் கோவை குண்டுவெடிப்பு, கலவர கட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
பகுதி 2ன் அத்தியாயங்கள் நவம்பர் கலவரம், கோட்டைமேடு துப்பாக்கி சூட்டு காட்சிகளையும், பகுதி 3 கோவை குண்டுவெடிப்பு காட்சிகளையும் நேரடியாக காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் உயிருக்காக கெஞ்சும் கதாபாத்திரங்களும், பிணவறை காட்சிகளும் மதவெறியின் கோரத்தை காட்டுகிறது. சிதைந்து போன உடல்களில் உதிரும் உதிரங்களை அடுத்தடுத்த பக்கங்களை திருப்பும்போது நமது கைகளும் தொட்டுணர்வதாக உள்ளது. கலவர துப்பாக்கி சூட்டிலும், குண்டுவெடிப்பிலும் சாதாரண மக்கள் பலியாவதை விவரித்த முறை வலி ஏற்படுத்தும் உணர்வு. ஒன்றும் அறியாத உழைக்கும் மக்களே காலம் காலமாக மதவெறி, ஆதிக்க அரசியல் கலவரங்களுக்கு பலியாகிவருகின்றனர். அடுத்தடுத்த பக்கங்களில் எந்த அமைப்பு யாரை கொல்லப் போகிறார்களோ என்ற யாசரின் பயம் வாசகர்களையும் பற்றிகொள்கிறது. முஸ்லிம்களின் கோதா குடியிருப்பைத் தாக்க வரும் இந்துத்துவவாதிகளை எதிர்த்து நிற்கும் உழைக்கும் இந்து மக்கள் மத நல்லிணக்கத்தின் அடையாளம்.
கோவை குண்டுவெடிப்பு பற்றி பேசும் போது நாம், நவம்பர் கலவரங்கள் பற்றியும் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். நவம்பர் கலவரங்கள் நடக்கும் முன்பே கோவையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அரசு கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தாதது பற்றி நாவல் அலசுகிறது. குண்டு வெடிப்பிற்கு முன்னர் நடந்த குண்டுகளுடனான கைதுகள், உளவுத்துறை எச்சரிக்கை இருந்தும் குண்டுகள் வெடித்தது, அரசு அமைப்பின் மீது சந்தேகத்தை வாசகர் மத்தியில் எழுப்புகிறது.
இந்துத்துவ சக்திகளின் ஆதிக்க அரசியலின் பலி கெடா தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற அரசியல் ஒரு புறமும், இஸ்லாமிய வஹாபிய இயக்கங்கள் இஸ்லாமிய மக்களை வெகுஜன அமைப்புகளில் இருந்து தனிமைபடுத்தும் செயல்கள், அந்த அமைப்புகளின் எதிர் வன்முறையால் இஸ்லாமிய மக்கள் படும் கஷ்டங்களும், பொய் வழக்குகளில் மக்கள் படும் விவாதங்களும் நாவல் பேசும் மைய அரசியல் ஆகும். முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் மௌனத்தையும் நாவல் விமர்சிக்கிறது.
இந்துத்துவ சக்திகளின் ஆதிக்க அரசியலுக்கு உழைக்கும் மக்கள் மதம் என்ற கருத்தியலில் திரட்டபடுவதை பின்வரும் ஒரு பத்தியே அழகாக விளக்குகிறது. ”இங்கு ஒற்றை ஆதிக்க அடையாளத்துக்கான சூழ்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்து மதத்துக்குள்ள இருக்கிற ஒற்றை ஆதிக்கத்துக்கு எதிரா தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சிந்திக்க கூடாதுன்னுதான் முஸ்லிம்களையும் கிருஸ்துவர்களையும் பொது எதிரியா சித்தரிக்கிறாங்க. சாதிய ரீதியா ஒடுக்கப்பட்ட மக்கள் மேலே இருக்கிறனவனுக்கு எதிரா திரும்பிட கூடாதுன்னுதான் முஸ்லிம் எதிர்ப்புன்னு பொது புத்திய அவர்களுக்குள் உருவாக்குறாங்க”.
இஸ்லாமிய மக்களின் அரசியலை தேட வேண்டிய அவசியத்தையும், அது எங்கு என்பதையும் யாசர் பேசுகிறான். “இஸ்லாம் எனக்கான வாழ்க்கை நெறி. என் தனிப்பட்ட வாழ்கையை கண்ணியமாக வாழ இஸ்லாம் காட்டிய கோட்பாடுகளை நான் ஈமானோடு இறையச்சத்தோடு பின்பற்றுகிறேன். ஆனால் சமூகத்தோடு என்னை தொடர்புபடுத்தி கொள்ள எனக்கு அரசியல் பார்வை தேவைபடுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்க சிந்தாந்த வலிமையுள்ள அரசியல் தேவை. ஒரு இஸ்லாமியனாக இங்கு நான் அச்சமின்றி வாழ நிச்சயமாக ஒரு அரசியல் தேவை,
வாப்பா கூட சில விசயங்களில் இன்னும் பழமைவாதியாக இருக்கிறார். குரான், ஹதீஸை தாண்டிய அரசியல் இஸ்லாமியர்களுக்கு தேவை இல்லை என்றே இன்னும் ஆழமாக நம்பிக்கொண்டு இருக்கிறார். இஸ்லாமியர்களின் இன்றைய சிக்கல்களுக்கு இஸ்லாத்தை காரணம் சொல்ல முடியாது. அதற்க்கு சமூகத்தில் நிலவும் புற சூழல் தான் காரணம் எனும்போது அதற்கான தீர்வுகளை புறசூழலில் தேடாமல் குரான், ஹதீஸில் தேடுவது எப்படி சரியாகும்”.
இஸ்லாமியர்களுக்கான அரசியல் என்ன என்பதை தோழர் வைஷ்ணவியின் வாதம் வைக்கிறது. “தீர்வை எல்லாரும் சேர்ந்து யோசிப்போம்னு சொல்லுறேன். ஆனா அல்ஜிகாதி போன்ற வன்முறை அமைப்புகளில் சேர்ந்து எதிர் வன்முறை இறங்கினால் உங்களுக்கு வேல்யு இருக்காது. உங்க எதிர்ப்பு இஸ்லாமிய அடையாளத்தோடு தனிமைப்பட்டு போகும். அது எதிர்மறை விளைவாகக்கூடும். எளிமையா சொல்லனும்னா “இந்து மதவெறிக்கு தீர்வு இஸ்லாமிய மத வெறி கிடையாது”.
இஸ்லாமிய வஹாபிய மற்றும் மற்ற இயக்கங்கள் மீதான விமர்சனங்களை பொதுவுடைமை தோழர்களாக வரும் தோழர்கள் வைஷ்ணவி, பெரோஸ், மகேந்திரன், வாசு கதாபாத்திரங்கள் விளக்குகின்றன. அந்த இயக்கங்களின் பத்திரிக்கைகள் மீதான விமர்சனமும் இங்கு வைக்கபடுகின்றன. உதரணமாக தோழர் பெரோஸின் பதில் “நாளிதழ்களில் இஸ்லாமிய பண்பாட்டு நிகழ்வுகளுக்கு தான் முக்கியத்துவம் தராங்க. மொத்தத்துல அந்த நாளிதழ்கள் மக்கள்கிட்ட இஸ்லாத்தை தாண்டிய பார்வையை கட்டுவதே இல்லை”. மேலும் தனது அரசியல் பார்வையை இவர்கள் மூலம் நாவலாசிரியர் பேச வைத்துள்ளார்.
யாசர் மற்றும் பொதுவுடைமை இயக்க தோழர் வைஷ்ணவி இடையேயான உரையாடல்கள் சிறுபான்மை, தாழ்த்தபட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் அடையாள அரசியல் இயக்கமாக இல்லாமல், உழைக்கும் வர்க்கமாக இணைய வேண்டிய அவசியத்தைக் கூறுகின்றன.
பொதுவுடைமை இயக்க தோழர்களின் கருத்துக்களை இன்னும் ஆழமாக நாவல் அலசி இருக்கலாம். இந்துத்துவ சக்திகள் எப்படி மக்களை மத ரீதியாக அணி சேர்கின்றன அவர்களின் பின்புலம் பற்றியும் இன்னும் விவாதித்து இருக்கலாம்.
“ஒரு சமூக பிரச்சனையில் முற்போக்கு சக்திகள் தலையிடத் தவறினால் பிற்போக்கு சக்திகள் தலையிட்டு அந்த இடத்தை நிரப்பிவிடும் என்ற ஆசான் மாவோவின் வரிகளை குறிப்பிட்டு” இடது, முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஒரு பரந்துப்பட்ட மேடை அமைக்கவேண்டிய அவசியத்தை நாவல் வலியுறுத்துகிறது.
மதவெறி சக்திகள் தங்கள் அதிகாரப் பரவலை அதிகரித்து வரும் வேளையில் அதற்க்கு எதிராக இடது, முற்போக்கு ஜனநாயக சக்திகள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு ஒன்றிணைந்து ஐக்கிய முண்ணனி அமைக்க வேண்டிய அவசியம் இங்கு நிலவுகிறது. மீண்டும் ஒரு கலவர கோவையை மதவாதிகள் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற கோரிக்கையை நாவல் முன்வைக்கிறது. மேலும் சிறந்த அரசியல் விவாதத்தையும் துவங்கிவைத்துள்ளது.
மௌனத்தின் சாட்சியங்கள் – மதவெறியில் மரித்துப்போன ஆன்மாக்களின் குரல்கள்.
(நன்றி: மாற்று)