இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் வாழ்க்கைப் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. அவ்வாறு கட்டமைக்கைப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். ‘ஆளற்ற பாலம்’ என்ற கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் சுயசரிதை இதனை மையமாகக் கொண்டது. பொதுவுடமைக் கட்சியின் ஒரு குறிப்பிட்ட கால நிகழ்வை, சமகாலத் தலைவர்களின் நடப்புகளுக்குச் சாட்சி கூறும் நூலாக இது அமைந்துள்ளது. மேலும், அக்காலப்பெண்ணின் முழுவாழ்வும் இந்தத் தன்வரலாற்றில் பொதிந்து கிடப்பதனை வாசிப்பினூடே பயணப்படுகையில் உணரமுடிகிறது. மக்கள் பரப்பில் சமத்துவத்தையும் மறுமலர்ச்சியும் உருவாக்க உழைத்தவர்களின் உண்மைத் தடங்கள்தான் இந்நூல். மேலும், பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கங்களின் வரலாறு இது. தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்த கௌரி கிருபானந்தனின் சிறந்த இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது.
“நான் ஒரு பெரிய ஆளோ, எழுத்தாளரோ இல்லை. நினைவுகளைத்தட்டி எழுப்பினால் கண்ணீர் ஊற்று பொங்கி வரும் வாழ்க்கை என்னுடையது. ஈரமாக இருக்கும் அந்த எழுத்துகளைப் பொருள் பொதிய காகிதத்தின் மீது வடிக்க என்னால் முடியுமா என்று தயங்கினேன். அதனால்தான் இத்தனை நாட்களாக முயற்சி செய்யவில்லை.” என்று, கோடேஸ்வரம்மா தன்வரலாற்று நூலின் முன்னுரையை தன்னடக்கத்தோடு வழங்கியுள்ளார். இவரது எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினால் இறுதி பக்கம் முடிக்கும் வரை இந்நூலினை கீழே வைக்கத் தோன்றாது. அவருடைய இதயத்தின் அடியாழத்திலிருந்து பொங்கி வரும் சோக வெளிப்பாடுகள்; வாசிப்பவர் நெஞ்சை அத்தனை நிலைகுலைய செய்கின்றன.
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற தனியொரு பெண் தன் அரசியல் பயணத்தின் தோழமையாக பல்வேறு பொதுவுடைமை இயக்கங்களையும், அதனைச் சார்ந்த இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அவ்வாறே பாடல்களும் வீதி நாடகங்களும் பல பொதுத்தளங்களில் அவரால் அரங்கேற்றப்படுகின்றன. அவற்றோடு, தன் கனவுகள், அதிகாரத் துரத்துதல்களின் பின்னண்pயில் தலைமறைவு வாழ்வு, பல்வேறு தோழர்களின் நட்பு, காதல், திருமணவாழ்வு, குடும்ப உறவுகள், பொதுகூட்ட நிகழ்வுகள், பெண் இயக்கங்கள், மாதர் சங்கங்கள், பல்வேறு போராட்டங்கள், சிறை வாழ்வு, விடுதி வாழ்வு என தன் வாழ்நாள் நிகழ்வுகளையெல்லாம் இந்நூலில் மிகத்தெளிவாக விவரித்துள்ளார்.
பள்ளி செல்லும் வயதில் தனக்குக் குழந்தைத் திருமணம் நடந்ததுகூட தெரியாத பால்ய வயது நினைவுகளோடு தொடங்குகிறது கோடேஸ்வரம்மாவின் இந்நூல். “நான்கு வயதோ, ஐந்து வயதோ இருக்கும்போது தாய்மாமன் வீராரெட்டிக்கு மணம் முடித்தார்களாம். திருமணமான இரண்டு வருடங்களுக்குள் டி.பி.நோயால் அவன் இறந்து விட்டானாம.;” இத்தகவலை பிற்பாடு பதின்ம வயதில் தன் பாட்டி சொல்லித் தனக்குத் தெரிய வந்ததாக எழுதியுள்ளார் கோடேஸ்வரம்மா. பள்ளிப் படிப்பை குடும்பத்தார் பாதியில் நிறுத்திவிட மகாத்மா காந்தியைப் பிடித்ததால் தேசிய இயக்கத்தில் ஆர்வம் காட்டுகிறார். பின்னர் பல தலைவர்களுடன் ஏற்பட்ட நட்பால், பாட்டு, நாடகம் என கலை நிகழ்வுகளின் வாயிலாக கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் வாழ்க்கையையும் மிக இளம் வயதிலேயே தன்னோடு இணைத்துக்கொள்கிறார்.
தெலுங்கானா போராட்டத்தில் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையில் உதவிக்காக சென்ற பெண்களின் அணிவகுப்பில் கோடேஸ்வரம்மாவும் ஒருவர். அப்போதுதான் 1939 இல் இடதுசாரித் தலைவரான கொண்டபல்லி சீதாராமையாவை மணம்புரிந்துகொள்கிறார். இதன் பயனாக மகள் கருணாவைப் பெற்றெடுக்கிறார். 1940 முதல் தீவிர அரசியல் கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு சுதந்திரப் போராட்டம், கம்யூனிஸ்டு கட்சி, நக்ஸலைட் போராட்டங்கள் ஆகிய இயக்கங்களின் வரலாற்றோடு தன்னை இணைத்துக் கொள்கிறார். பின்னர் தலைமறைவு வாழ்க்கையில் கருவுற்று 6 மாதம் ஆகியிருந்த நிலையில் கட்சித் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க அவர் அனுமதியில்லாமலே கருக்கலைப்பும் நிகழ்ந்துவிடுகிறது. இச்சூழலில் தன்னோடு தங்கியிருந்து தன் இரத்தப்போக்குத் துணியை அலசிப்போட்டு உதவி செய்த ஆண் தோழருக்கு கோடேஸ்வரம்மா தன்நூலில் நன்றிசொல்லி இருப்பது தோழமையின் உண்மை வெளிப்பாடாகச் சொல்லலாம்.
சிறிது காலஇடைவெளியில் மகள் கருணாவோடு, மகன் சந்துவிற்கும் பின்னாளில் தாயாகிறார். மகள் கருணாவும், அவரது கணவர் ரமேசும் மருத்துவர்கள். டெல்லியில் மக்களுக்காக மருத்துவ சேவை செய்தவர்கள். தெலுங்கானா போராட்டம் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தபின்னர் தன் எதார்த்த வாழ்க்கையில் பெரிதும் சிக்கித் தவிக்கிறார். அந்த வாழ்க்கையை மனத் தெளிவோடும், உறுதியோடும், அவர் எதிர் கொண்ட விதம் உண்மையில் ஒவ்வொருவரும் படித்துணர வேண்டிய வாழ்க்கைப்பாடம்.
மக்சிம் கார்க்கி-யின் ‘தாய்’ நாவலில் வரும் அம்மாவை, அதைப் படித்த வாசகர்களால் கட்டாயம் மறக்கவே முடியாது என்பார்கள். அதுபோலவே ‘ஆளற்ற பாலம்’ என்ற இந்நூலினை வாசிப்பவர் எவரும் கோடேஸ்வரம்மாவை நிச்சயம் மறக்கவே மாட்டார்கள். இவரது வரலாற்று நினைவுகளுக்கு தெலுங்கு மொழியின் மிகப் பிரபலமான எழுத்தாளர் ஓல்கா ஒரு அருமையான அணிந்துரையை வழங்கியிருக்கிறார். “கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கண்ணோட்டத்தில் ‘அரசியல்’ என்றால் ஆண்களின் துறை. அதில் பெண்கள் அடியெடுத்து வைத்தால் மனைவியர்களாகவோ, தாய்மார்களாகவோ, சகோதரிகளாகவோ மட்டுமே வருவார்கள். அவர்களுடைய பணிவிடைகளை ஏற்றுக்கொண்டு திரும்பவும் அவர்களை வெறும் அம்மாக்களாக மட்டுமே எஞ்சியிருக்கும்படிச் செய்துவிடுவார்கள். பெண்களின் அரசியல் உறவுகளை வரையறுத்துச் சொல்லுவது மிகவும் கடினம்” என்ற ஓல்காவின் முன்னுரை வரிகள் அப்பட்டமான இந்திய அரசியலை அப்படியே பிரதிபலிக்கின்றன.
மேலும், இந்நூலினை வாசிக்கும்பொழுது தாய்க்கும் சேய்க்குமான தொப்புள்கொடி பந்தத்தின் வலிமை என்னவென்று நிச்சயம் நமக்குப் புரியும். கம்யூனிஸ்டுகளின் மீது தொடர்ந்து அவதூறுகளையும், பழிகளையும் மட்டுமே பொழிந்து கொண்டிருக்கிற நவீன, அதிநவீன இலக்கிய சாம்ராட்டுகளுக்கு சிறிதேனும் மனச்சாட்சி இருக்குமெனில் அவர்கள் கோடேஸ்வரம்மாவின் சுயசரிதையை தன்வாழ்நாளில் ஒருமுறையாவது படித்துப் பார்க்கவேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் ஆந்திர மகாசபை என்ற ஒரு பரந்து விரிந்த மக்கள் மேடையை ஒன்றாக உருவாக்கியது கம்யூனிஸ்ட் கட்சி. இது நிலப்பிரபுக்களாலும், ஹைதராபாத் நிஜாமின் போலீஸ்களாலும் எல்லையற்ற துயரங்களுக்கு ஆளான உழவர்கள் பொங்கியெழுந்து 1946 முதல் 1951 ஆம் ஆண்டுகளுக்கிடையே நடத்திய ஒரு வீரஞ்செறிந்த போராட்டம் தெலுங்கானா பகுதி விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சிப்போராட்டமாகும். இதன் வழிகாட்டுதலில், 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் மூவாயிரம் கிராமங்களிலிருந்து விவசாய மக்கள், சுமார் 30 லட்சம் பேர், நலகொண்டா, கம்மம், வாரங்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் போராடும் கிராமப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதில் முதன்முதலில் மாபெரும் வெற்றியடைந்தார்கள். இதன் பயனாக பத்துலட்சம் ஏக்கர் நிலங்கள் மக்களுக்கே மறுவிநியோகம் செய்யப்பட்டன. மேலும், கட்டாய உழைப்பு (வெட்டி சேவை), அதீத வட்டி வசூல், நில அபகரிப்புக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன. ஆங்கிலேய அரசிற்கு ஆதரவாக இருந்த நிஜாம், இந்திய அரசில் இணைய மறுத்த நிலையில், அப்போதைய பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு இராணுவத்தை அனுப்பியது. காங்கிரஸ் கட்சி, நிஜாமை எதிர்த்த போராட்டத்தில் ஆந்திர மகாசபையுடன் (அடிப்படையில் கம்யூனிஸ்டுகளுடன்) இணைந்து போராடிய போதிலும் மேற்கண்டவாறு கம்யூனிஸ்டுகளின் மக்கள் பஞ்சாயத்துக்கள் அமையத் தொடங்கியதும் விலகி நின்றார்கள். நிஜாம், இந்திய அரசுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில் அனைத்து ஆதிக்க சக்திகளும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்டுகளின் மீது தாக்குதல் தொடுத்தனர். கைத்தேர்ந்த பயிற்சியும், ஆயுத பலமுமிக்க இராணுவத் தாக்குதல்களுக்கு முன் ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாமல் போராட்டத்தை நிறுத்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இப்போராட்டத்தினை மறைமுகமாக தங்கியிருந்து பின்னர் படிப்படியாக வழிநடத்தத் தொடங்கினர்.
மேற்கண்ட இந்த வரலாறுதான் பின்னாளில் பிரபல கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கோடேஸ்வரம்மவின் கணவருமான கொண்டபல்லி சீதாராமய்யா ஆகியோரின் வாழ்க்கைக்குப் பின்னணியாக அமைந்ததுவிடுகிறது. சுந்தரய்யா, சி.ராஜேஸ்வரராவ், சந்திரசேகரராவ் ஆகிய மூன்று பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களால் மகளாகவும், மருகமகனாகவும் பாதுகாக்கப்பட்டவர்கள் சீதாராமய்யாவும், கோடேஸ்வரம்மாவும். பாலிய விதவையான கோடேஸ்வரம்மாவை சீதாராமய்யா திருமணம் செய்துகொண்டதில் இருந்தும், அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளில் இருந்தும் தொடங்குகிறது இந்நூல். இயக்கம்தான் இவர்கள் இருவரையும் வாழ்க்கைத் துணையாக்குகிறது. சீதாராமய்யா ஆயுதப் போராட்ட நாட்களில் தெலுங்கானாவின் கிராமப்புறங்களில் தலைமறைவாக தங்கியிருந்து கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான ‘பிரஜாசக்தி’யையும், பெண்கள் இதழான ‘ஆந்திர வனிதா’வையும் விற்பனை செய்கிறார். இவரது மனைவி கோடேஸ்வரம்மா கால்களில் சலங்கைகள் அணிந்து தாளமிட்டபடி வீரத்தியாகிகளின் வரலாறுகளை ஆந்திர நாட்டுப்புறக்கதையாக (புர்ரகதா) அம்மாநிலத்தின் பல மேடைகளில் நிகழ்த்திக்காட்டுகிறார். தலைமறைவாக இருக்கும் கட்சித் தொண்டர்களுக்கு உதவியாக இரகசிய மறைவிடங்களில் பணிசெய்கிறார். இல்லறவாழ்வில் கணவர் சீதாராமய்யாவின் போக்கில் ஏற்படும் மாற்றம் இவரைக் கவலைக்குள்ளாக்குகிறது. காரணமேதும் சொல்லாமல் அவரிடமிருந்து பிரிந்து செல்கிறார் கோடேஸ்வரம்மா. கணவரிடமிருந்து தனித்துச்சென்று இரண்டு குழந்தைகளுடன் தொடர்ந்து தன் வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் இன்னல்களை சந்திக்கும் இவருக்கு அவரது தாயும் தந்தையும் சற்று உதவுகிறார்கள். இந்நிலையில் சீதாராமய்யா புதிதாக ஒரு நக்சலைட் குழுவை உருவாக்கி மக்கள் யுத்தமாக அதனை செயல்படுத்தத் தொடங்கியதை கேள்விப்பட்டு கோடேஸ்வரம்மா மேலும் கவலைக்குள்ளாகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில் சுந்தரய்யா உள்ளிட்ட தலைவர்கள் காட்டிய அக்கறையையும், அன்பையும் நினைவுகூர்ந்து நூல் நெடுக அகமகிழ்ந்து எழுதிச் செல்கிறார் கோடேஸ்வரம்மா. தனக்குப் பெரும் ஆதரவாக இருந்த தன் தாய் இறக்கும்போது அவரது சேமிப்பாக ஆயிரம் ரூபாயை செங்கொடி கட்சிக்கு’ நன்கொடையாகத் தரும்படிக் கூறிவிட்டுக் கண்களை மூடுகிறார். தாய் அஞ்சம்மாவைத் தொடர்ந்து அவரது தந்தை, மகள் கருணா, மகன் சந்தூ, மருமகன் ரமேஷ் என அனைவரும் அடுத்தடுத்து சில கால இடைவெளியில் இறந்து போகிறார்கள். தாங்கஇயலா இத்தனை துயரங்கள் தொடர்ந்து துரத்தினாலும் கோடேஸ்வரம்மா விரக்தியடையவில்லை. பல வருடத் தலைமறைவு வாழ்க்கை, சீதாராமையாவின் பிரிவு, பிள்ளைகளின் இளவயது மரணம் இவற்றைத் தனியாக எதிர்கொண்டதோடு தனக்கான சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டு, பேரக்குழந்தைகளை ஆளாக்கிய இவர், ஆந்திர மஹிளா சபா, விகாஸ வித்யாவனம் ஆகிய அமைப்புகளோடு இணைந்துகொண்டு ஒரு விடுதிக் காப்பாளராக தொடர்ந்து தன்னால் இயன்ற பணிகளை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் தம்மைப் போன்ற பல்வேறு தோழர்களின் கூட்டு முயற்சியால் கட்டியெழுப்பப்பட்ட மாபெரும் கட்சி பிளவுபட்டதை நினைத்து மிகவும் வருந்தி இந்நூலினை எழுதியுள்ளார் கோடேஸ்வரம்மா. இரண்டு கதைத் தொகுப்புகளையும், ஒரு கவிதைத் தொகுப்பையும் இதுவரை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய சரிவும் குறித்து விருப்பு வெறுப்பற்ற ஆய்வு நூலை எழுத நினைப்பவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான ஆவணங்களை மட்டும் அடிப்படையாக எடுத்துக்கொண்டால் அது முழுமையடையாது. தலைவர்களின் வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், நேர்காணல்கள், கொண்டபல்லி கோடேஸ்வரம்மா போன்றவரின் உண்மைச் சுயசரிதைகள் உள்ளிட்ட எண்ணற்ற பதிவுகளையும் சேர்த்துத்தான் ஆராயவேண்டும். சமகாலத்தில் சகமனிதர்கள் அனைவரும் விழிப்படையும் சூழலில் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற தனியொரு பெண் ‘ஆளற்ற பாலம்’ என்ற தன்வரலாற்றை தனது 92 வது வயதில் இத்தனை நேர்த்தியாக எழுதியிருக்கிறார் என்றால் அவரது வாழ்க்கைச் சம்பவங்களில் இடம்பெற்ற சுகதுக்கங்களை தனியொரு பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல், இலட்சிய நோக்கோடு அரசியல் இயக்கங்களில் கைகோர்த்து அல்லல்படும் அனைத்து பெண்களின் சார்பான ஒருவரின் போராட்டம் என எடுத்துக்கொள்ளலாம். இதனைடிப்படையில், பெண் தன்னிலைகளின் அகப்புற பரிமாணங்களை அறிவதற்கு அவசியமாக இந்நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியதும், விவாதிக்கப்பட வேண்டியதும், இலக்கியங்களுக்கிடையே பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆந்திர மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வீராங்கனையாக வலம் வந்து, தற்போது 92 வயதைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா ‘மனதிற்குள் தன் வாழ்வனைத்தையும் போட்டு மக்கவைத்து செத்துப் போவதே மேன்மை என்று நினைக்கும் பெண்களுக்கிடையில் எத்தடைகளையும் உடைத்துவிட்டு தன் வரலாற்றை ‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பது உண்மையில் அனைவரும் மதிக்கத்தகுந்த ஒரு படைப்பாகும்.’ கலையுள்ளமும், கவிதை மனமும் கொண்ட ஓரு நாடக நடிகை, பாடகி, எழுத்தாளர், களப்பணியாளர், நாட்டுப்புறக் கலைஞர், பரிவும் பாசமும் மிக்க இரண்டு குழந்தைகளின் தாய், கட்டுப்பாடு மிக்க கட்சி ஊழியர், மனிதநேயமிக்க மன்னிக்கவும் தெரிந்த ஒரு ‘மனுஷி’ என வார்த்தைகளால் அளவிட முடியாவிட்டாலும் வாழ்ந்து வருகிற மனித சமுதாயத்தின் ஒரு மகத்தான மனிதருக்கு எத்தனை பாராட்டுக்களையும் நன்றியையும் சொன்னாலும் ஈடாகாது என்பதை மட்டும் இந்நூலின் வழி உறுதியாகச் சொல்லலாம். எனவேதான், ஆந்திர மாநிலத்தில் கடந்த எழுபது ஆண்டுகளாக இயங்கி வரும் இடதுசாரி இயக்கத்தின் வரலாறாகவும், தொண்ணூறு வயது தாண்டிய ஒரு புரட்சியாளரின் சுயசரிதையாகவும், ஒரு போராளிப் பெண்ணின் துயரக் கதையாகவும் எழுத்தாளர் அசோகமித்திரன் இவரது படைப்பை விமர்சனம் செய்துள்ளார்.
தன் வாழ்நாள் முழுவதும் வெறும் துக்கச் சுமைகளுடன் தலைமறைவாக ஊர்ஊராக அலைந்து திரிந்து தனது சொந்த உழைப்பின் மூலமே இறுதி காலங்ளையும் கடக்கும் மனத்திடமிக்க ஒரு பெண் கோடேஸ்வரம்மா. காரணம் கூடக் கூறாமல் பிரிந்துபோய்விட்ட கணவர், ‘புரட்சித் தலைவனாக சர்வதேசப் புகழ் பெற்றிருந்த சீதாராமய்யா முப்பத்தாறு வருடங்கள் கழித்து, நோய்வாய்ப்பட்டு, முதுமையில் இயலாமையுடன் வீடு திரும்புகிறார். ஒரே வீட்டில் மாடியிலிருக்கும் அவருக்கு, கோடேஸ்வரம்மாவைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. உறவினர்களும், தோழர்களும் அவரைப் பார்க்கும்படி கோடேஸ்வரம்மாவிடம் வேண்டுகிறார்கள். மகன் சந்தூவும் கூட தன் மரணத்திற்கு முன்பொரு சமயம் “கணவன் என்று பார்க்க வேண்டாம் அம்மா. ஒரு சக தோழர் என்ற முறையில் பார்க்கலாமே” என தந்தைக்காகப் தாயிடம் பரிந்துரைக்கிறான். ஆனால், கோடேஸ்வரம்மா மென்மையான வைராக்கிய வார்த்தைகளால் ‘எனக்கு அவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கவேண்டாமா’ என பதிலளிக்கிறார். பின்பு, மரணப்படுக்கையிலிருந்த சீதாராமய்யாவைப் போய்ப் பார்த்து அவர் இறக்கும் முன்பு சில நாட்கள் மனைவியாக அல்லாமல், ஒரு நல்ல தோழராக. அவருக்கான பணிவிடைகளை மட்டும் செய்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து போய்விட்டதே என்கிற கவலை ஒரு பக்கம் மனதை வருத்தினாலும், கட்சிகள் பிரிந்ததாலேயே சகநண்பரின் (சீதாராமாய்யாவின் மரணம்) சுக துக்கங்களில்கூட தோழர்கள் பங்கேற்க மறுக்கிறார்களே என்கிற ஆதங்கத்தை மனதில் பட்டவாறு எழுதியதோடு, இதெல்லாம் சரிதானா என்ற கேள்வியையும் தனதுநூலில் எழுப்பியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் பற்றிய கவலையோடு சொந்த வாழ்க்கையில் கணவர் தன்னைவிட்டுப் பிரிந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட மனக்காயம்;, பலஆண்டு தலைமறைவு வாழ்க்கையில் பிள்ளைகள் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருத்தம்;, மருமகன் மரணத்தால் மனமுடைந்து மகளும் (கருணா) தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்ட கவலை, மகன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து காவலர்கள் பிடியில் சிக்கி அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட துயரம் என அடுக்கடுக்கான தாக்குதல்களால் கோடேஸ்வரம்மாவின் வாழ்க்கை சுக்கு நூறாகிப் போகிறது. எனவேதான், “உடைசலிலிருந்து பொறுக்கி அடுக்கிய நினைவுகள்தான் இவை” என நூலின் முகப்பில் எழுதியுள்ள கவிதையின் இறுதி வரிகள் உயிரோட்டமான அவரின் உண்மை வாழ்வை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளன.
கணவரைப் பிரிந்து 36 ஆண்டுகள் கழித்து மரணப் படுக்கையில்கூட பார்க்க விரும்பாத இறுகிய இதயத்துக்காரர் போல் தோன்றினாலும், பார்த்த சமயத்தில் வெளிப்படுத்திய உணர்வு மரணத்துக்குப்பின் மனதின் அழுகை எல்லாமும் அவர் ஒரு கம்யூனிஸ்ட்; மற்றும் சிறந்த மனிதர் என்பதற்கான பதிவுகளாக வாசிப்பினூடே உணரமுடிகிறது. கோடேஸ்வரம்மா தனது நூலின் இறுதியில் 9 கட்டுரைகளையும், முக்கியமான சில கவிதைகளையும் இணைத்ததோடல்லாமல், தனது வாழ்வின் அதிமுக்கியமான தோழர்கள் சுந்தரய்யா, சி.ராஜேஸ்வரராவ், முத்துகூரி சந்திரசேகரராவ், சங்கர சத்திய நாராயணா போன்ற மதிப்புமிக்க தலைவர்களையும் நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார். இது தவிர இவரது சிறை அனுபவங்களும். கலைஇலக்கியப் பார்வையும், பெண் இயக்கங்கள் பற்றிய பதிவுகளும் அக்கால வரலாற்றை அறிவதற்கு உறுதுணை புரிகின்றன. மேலும், கம்யூனிச குணாம்சங்களில் ஏற்படும் மாற்றத்தை சுய விமர்சனம் செய்து கொள்ளவும், எதிர்கால கம்யூனிஸ்ட் வாழ்க்கை நிலை தடுமாறாமல் எப்படி நீடிக்க வேண்டும் என்பதனை அடையாளப்படுத்தவும் கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாற்று நூல் வருங்கால தலைமுறையினருக்கு கட்டாயம் பயன்படும்.
“எழுத்து அழியாதது, ரசனை மிகுந்தது, என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது” என்ற கோடேஸ்வரம்மாவின் வரிகள் அத்தனையும் உண்மை! ஏனெனில், தன்னோடு பிறந்தவர்களை இழந்து, தன்னைப் பெற்றவர்களை இழந்து, தான் பெற்றவர்களையும் இழந்து, தன் பிறந்த வீட்டு, புகுந்த வீட்டு உறவுகள் அனைவரையும் இழந்து, அரசியல் ஆளுமைகளாக தன்னோடு சேர்ந்து நடந்த அனைவரையும் இழந்து, பால்ய வயதிலிருந்து தன்னோடு நடைபயின்ற சக தோழர்கள் அனைவரையும் இழந்து, இருகரைகளிலும் ஆளற்ற பாலமாக நின்றாலும், வருங்காலத் தலைமுறையினருக்கு தன் எழுத்தின் வலிமையால் என்றென்றும் உண்மை ஒளி வீசும் முன்மாதிரியாக நிலைத்திருக்கப் போகிறார் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா. எளிய, அர்த்தம் தரத்தக்க வார்த்தைப் பிரயோகங்களால் உருவான இந்நூலினை உண்மையான கம்யூனிஸ்டுகள் படிக்கிறார்களோ இல்லையோ, கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு சுயசரிதை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.
(நன்றி: இண்டங்காற்று)