உலகம் முழுவதும் பெண்களின் நிலை, துயரம் நிறைந்ததாகவே இருக்கிறது. மதங்களின் பெயராலும் சடங்குகளைக் கைமாற்றும் நீட்சியாலும் பெண்களைத் தங்களின் உடமையாகக் கருதும் ஆண்களின் ஆதிக்கம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் காணப்படுகிறது. பெண் கைவிட்டுப் போய்விடக் கூடாதென்னும் சொந்தம்கொள்ளும் மனோபாவத்தால் தங்கள் மீது சுமத்தப்படும் அத்தனை விதிகளையும் கடவுளுக்காகவும் தங்களின் சந்ததிகளுக்காகவும் சிலுவை போலச் சுமப்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். எங்கோ, யாரோ ஒரு சில பெண்கள் வெகுண்டெழுந்து அதிலிருந்து மீற முயலும்போது, அவர்களை நோக்கி எல்லாத் திசைகளிலிருந்தும் வீசப்படும் அடக்குமுறைக் கயிறுகள், பெண்ணுடலையும் எண்ணங்களையும் தளைகளாய்ப் பிணைத்துக்கொள்கின்றன. அப்படியொரு தளையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர், வாரிஸ் டைரி.
நாலாயிரம் ஆண்டுகாலமாக ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் இருந்துவந்த, பெண் உறுப்புச் சிதைப்பைத் தடைசெய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய வாரிஸ் டைரியின் சேவையைப் பேசுகிறது Desert Flower என்னும் புத்தகம். தனது சுயசரிதையான இந்தப் புத்தகத்தை வாரிஸ் டைரி, கேத்லீன் மில்லருடன் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் தமிழாக்கம், ‘பாலைவனப் பூ’ என்னும் பெயரில் வெளிவந்திருக்கிறது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் சோமாலியப் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பழங்குடியின நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் வாரிஸ் டைரி. தனது ஐந்து வயதில் வழிவழிச் சடங்கின் பெயரால், பாலுறுப்புச் சிதைப்புக்கு உள்ளானவர். பெண்ணின் அந்தரங்க இச்சையை மட்டுப்படுத்தி, பாலியல் உரிமையைச் சிறு வயதிலேயே இழக்கச் செய்யும் உறுப்புச் சிதைப்பு சடங்கின் பெயரால் சோமாலியாவிலுள்ள 80 சதவீதப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உறுப்புச் சிதைப்புக்குப் பின்பு அதிர்ச்சி, தொற்று, மூத்திர ஒழுக்குக் குழாய் சிதைப்பு, ஆறாத வடுக்கள் போன்றவை தொடங்கி மரணம்வரை வேதனை தொடர்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு இஸ்லாமிய நாடுகளில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் சிறுமிகள், இந்த ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
சிறுநீர் கழிக்க முடியாத வேதனையாலும், மாதவிடாய்க் கால அவதியாலும் வேதனைக்குள்ளான வாரிஸ் டைரியின், உடன்பிறந்த சகோதரியொருத்தி திடீரென்று ஒருநாள் காணாமல் போகிறாள். இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருத்தியும் காணாமல் போகின்றாள். அவர்களுக்கு என்ன நேர்ந்ததென்று அறியும் சிறுமி வாரிஸ் டைரியின் அடிமனதில் உறுப்புச் சிதைப்பு சடங்கின் அவலங்கள் தங்கிப்போகின்றன.
ஐந்து ஒட்டகங்களுக்குப் பகரமாக, அறுபது வயதுக் கிழவனுக்கு பதிமூன்றே வயதானத் தன்னை திருமணம் செய்துவைக்க முயலும் தந்தையை ஏமாற்றிவிட்டு, பாலைவனம் வழியாக, பலநூறு மைல்கள் நடந்தும் ஓடியும் தப்பிப்பிழைக்கிறாள் வாரிஸ் டைரி. பிறகு வீட்டுவேலை செய்பவளாக, பன்னாட்டு உணவகத்தில் தரைப் பெருக்கும் தொழிலாளியாக வயிற்றுப்பாட்டைக் கழுவி, பின்னர் மாடலாகவும், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் நாயகியாகவும் வளர்ந்து, புகழ்பெறுகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு நேர்காணல் அவரை வேறொரு தளத்துக்கு இட்டுச்சென்று விடுகி்றது. அடிமனதில் அவசமாய்த் தங்கிப்போன அழுக்கைத் துடைக்கும் முயற்சியாக, ஐ.நா சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கான பிரிவு, பெண் உறுப்புச் சிதைப்பு தடுப்பு நடவடிக்கையில் இணைந்துகொள்ள அழைப்பு கிடைக்கிறது.
இந்த உறுப்புச் சிதைப்பு என்னும் கொடுமை குறித்து வாரிஸ் டைரி என்ன சொல்கிறார் தெரியுமா?
“குர் ஆன் இப்படிச் செய்யச் சொல்கிறது என்று பலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள அத்தனை இஸ்லாம் நாடுகளிலுமே இந்த வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றபோதும், அது இப்போது பிரச்சினையில்லை. ஆனால் குர் ஆனோ அல்லது பைபிளோ கடவுள் பெயரால் பெண்களுக்கு ‘அதை வெட்டிவிட வேண்டும்’ என்று எங்கும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கம் மிக எளிதாக, ஆண்களால் நடத்தப்படுகிறது. அவர்கள்தான் இந்தக் கோரிக்கையை வலுவாக ஆதரிக்கிறார்கள். அவர்களின் அறியாமை, சுயநலம் ஆகியவை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களின் பாலின விருப்பத்துக்குத் தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார் கள். தங்கள் மனைவிகளும் உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ள வேண்டும் என்று ஆண்கள் வற்புறுத்துகிறார்கள்.
தாய்மார்களும் தங்கள் மகள் மீது இந்தக் கொடுமையைத் திணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். மகள்கள், தங்களுக்குக் கணவர்களை வைத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் தாய்மார்களுக்கு இருந்துவருகிறது. உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ளாத பெண் மோசமானவள், மாசுற்றவள், காம வேட்கை கொண்டு திரிபவள், திருமணம் செய்துகொள்ளத் தகுதியற்றவள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
நான் வளர்ந்து வந்த நாடோடிக் கலாச்சாரத்தில் திருமணமாகாத பெண் என்ற சொல்லுக்கு இடமேயில்லை. ஆனால் தாய்மார்கள், தங்கள் மகள்களுக்கு சிறப்பான வாழ்க்கைச் சாத்தியங்கள் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பதுபோல, ஆப்பிரிக்கத் தாய்மார்கள் இந்த நடைமுறையைக் கைக்கொள்கிறார்கள். அறியாமையாலும் மூடத்தனம் நிறைந்த நம்பிக்கைகளாலும் ஆண்டுதோறும் பல லட்சம் சிறுமிகள், பிறப்புறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்படுவதற்குத் தகுந்த காரணங்கள் ஏதுமில்லை. உடல்ரீதியான வலி, மனரீதியான வேதனை, உயிரிழப்பு போன்ற காரணங்களே போதும், இதைத் தடுத்து நிறுத்துவதற்கு.
மட்டுமீறிய வன்செயலான பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் என் வேலைக்கு, ஐ.நா.வின் சிறப்புத் தூதர் அந்தஸ்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்திருக்க வில்லை” என்கிறார் வாரிஸ் டைரி.
தெளிந்த நீரோடை போன்ற எழுத்தாக்கம் சுவாரசியம் கூட்டுகிறது. புத்தகம் முழுக்க வாரிஸ் டைரியோடு சேர்ந்து வாசகரும் வலியையும் வேதனையையும் அனுபவித்தாலும், அனைத்தையும் வென்றுவிடும் உத்வேகமும் எழுகிறது. அதுதான் பெண் எழுத்தின், பெண் சக்தியின் வெற்றி.
(நன்றி: தி இந்து)